நல்வரவு

வணக்கம் !

Saturday, 5 May 2012

உண்மை சுடும் - சிறுகதை

உமாவிற்கு நெஞ்சு வலி வந்து மருத்துவமனையில் சேர்ந்த பிறகு, வீட்டின் நிலைமை தலை கீழாக மாறிவிட்டது.

மனைவிக்கு ‘மைல்ட் ஹார்ட் அட்டாக்’ என்று தெரிந்தபோது ஆடித்தான் போய் விட்டான்,  எதற்கும் கலங்காத கணபதி.

குக்கரில் வேக வைத்த சாதம் அவனுக்குப் பிடிக்காது.  கஞ்சி வடிக்கப்பட்ட சாதம் தான் வேண்டும்.  காலை நேர டென்ஷனில் சிலசமயம் கையில் கஞ்சி கொட்டிக் கொண்டு நின்ற மனைவியைப் பார்த்து ஒரு நாள் கூட அவன் பரிதாபப் பட்டதில்லை.

“சாதம் வடிக்கக் கூடத் தெரியல, என்ன வளர்த்திருக்காங்க ஒங்க வீட்டுல” என்பான் கேலியாக. 

என்றாவது பதம் தவறி சாதம் குழைந்து போனாலோ கோபம் தலைக்கேறி விடும்.  மாவு அரைத்து பிரிட்ஜில் வைக்கக் கூடாது என்பது அவனது கண்டிப்பான உத்தரவு.  தினந்தினம் புதிதாக அரைத்துத் தான் இட்லி ஊற்ற வேண்டும்.

குழந்தைகளைப் பாட்டு வகுப்புக்குக் கொண்டுவிடச்சொல்லி மனைவி கேட்ட போது, ‘வண்டி ஓட்டக் கத்துக்கோ’ என்று சொல்லி ஸ்கூட்டி வாங்கிக் கொடுத்து விட்டு அந்த வேலையிலிருந்து கழன்று கொண்டான்.

“வேலைக்கும் போய்க்கிட்டு வீட்டையும் கவனிக்க முடியல.  கொஞ்சம் ஒத்தாசை பண்ணக்கூடாதா?” என்று அவள் புலம்பும் போதெல்லாம்,
“உன்னை யார் வேலைக்குப் போகச் சொன்னது?  வேணுமின்னா வேலையை விட்டுடு,” என்பான் விட்டேற்றியாக.

குழந்தைகள் நல்ல மதிப்பெண் வாங்கவில்லையென்றாலும் அவளுக்குத் தான் திட்டு விழும்.

“குழந்தைங்க படிக்கிறதைக் கூடக் கவனிக்காம அப்படியென்ன வீட்டுல வெட்டி முறிக்கிறே?” என்பான் கோபத்தோடு.

மனைவி படுத்த படுக்கையான பிறகு வேறு வழியின்றிச் சமையலைக் கற்றுக் கொள்ளத் துவங்கியவன், முதல் வேலையாக அரிசி குக்கர் வாங்கி வந்தான்.  க்டையில் விற்கும் மாவு வாங்கி வந்து இட்லி ஊற்றினான்.

குழந்தைகளுக்கு டியூஷன் ஏற்பாடு பண்ணியவன், பெண் குழந்தையின் முடியைக் குறைத்து ‘பாப்’ வெட்டி விட்டான்.  படிக்க நேரமில்லாததால், பத்திரிக்கைகளை நிறுத்த வேண்டியதாயிற்று.

முதன்முறையாக ரசம் செய்து பரிமாறிய போது,
 ”சே..  இது அம்மா வைக்கிற ரசம் மாதிரியில்ல...” என்று கோபத்தோடு தட்டை நகர்த்தி விட்டான் பையன்.

“எவ்ளோ கொழுப்பு இருந்தா தட்டைத் தள்ளி விடுவே?  ஒண்டியா கஷ்டப் பட்டு வேலை செஞ்சிக்கிட்டிருக்கேன்.  அவ்ளோ நாக்கு ருசி கேட்குதா?” என்றபடி பையன் கன்னத்தில், தன் விரல்கள் பதியும்படியாக அறை விட்டான் கணபதி.

“நீங்க மட்டும் எத்தினி நாள் சாப்பாடு சரியில்லேன்னு தட்டைத் தூக்கி அடிச்சிருக்கீங்க?  அம்மா பாவம்... ஒங்களால தான் ஆஸ்பத்திரிக்குப் போயிட்டாங்க”

மகன் தேம்பிக் கொண்டே சொன்ன வார்த்தைகளிலிருந்த உண்மை, அவனை நெருப்பாய்ச் சுட்டது.     
    

(20-07-2008 தினமணிக் கதிரில் ஒரு பக்கக் கதையாக எழுதியது)

15 comments:

  1. நெருப்பாய்ச் சுட்ட உண்மை,

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் முதல் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி ராஜி மேடம்!

      Delete
  2. அய்யாக்களின் ராஜாங்கத்தை இப்படி ஏதாவது நடந்துதான் அசைத்துப்பார்க்கவேண்டுமோ/

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் உமா! இருக்கும் போது மனைவியின் அருமை கணவர்மார் பலருக்குத் தெரிவதில்லை. கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்து என்ன பயன்?
      தங்களது கருத்துக்கு மிக்க நன்றி உமா!

      Delete
  3. கலை கண்கள் கலங்க வச்சுட்டீங்க.

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் மனம் நெகிழ்ந்த கருத்துக்கும் மிக்க நன்றி விச்சு சார்!

      Delete
  4. ம்ம் என்ன சொல்ல கலைவிழி!ம்ம்ம்

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தனிமரம் சார்!

      Delete
  5. படிக்கிற எங்களையும் சுட்டுத்தான் போகிறது
    தங்கள் பதிவு
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களது ஊக்கமிகு பின்னூட்டம் கண்டு மகிழ்ந்தேன். மிக்க நன்றி ரமணி சார்!

      Delete
  6. நிழலின் அருமை வெயிலில் தெரிகிறது. தெரிந்தென்ன புண்ணியம்? நிழல் வாய்க்கும்போது மீண்டும் மரம்(மனம்) வெட்டும் வேலையைத் தொடங்கமாட்டாரென்பது என்ன நிச்சயம்?

    மனம் தொட்ட கதைக்குப் பாராட்டுகள் அக்கா.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் கீதா! பலருக்கு நிழலின் அருமை கடைசி வரை தெரிவதில்லை. மனங்கவர்ந்த பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி கீதா!

      Delete
  7. ஆமாம் கீதா! பலருக்கு இறுதிவரை நிழலின் அருமை தெரியாமலேயே போய்விடுகிறது. பரிதாபத்துக்குரியவர்கள் அப்பெண்கள்! மனங்கவர்ந்த பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி கீதா!

    ReplyDelete
  8. நல்ல கருத்துள்ள கதை!
    வாழ்த்துக்கள் கலையரசி.

    ReplyDelete
  9. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி அருணா.

    ReplyDelete