நல்வரவு

வணக்கம் !

Sunday, 1 July 2012

உண்ணாவிரதம்- சிறுகதை


மேட்டூர் அணையில் தண்ணீர் குறைவாய் இருப்பதால், குறுவை சாகுபடிக்கு அணையைத் திறக்க வாய்ப்பில்லை எனத்  தமிழக அரசு கையை விரித்து விட்டது. 

நடந்து முடிந்திருந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு, அனைத்து இடங்களிலும் டெபாசிட் தொகையை இழந்து மண்ணைக் கவ்வியிருந்த 'அகில உலகத் தமிழர் நலன் காக்கும் கழகம்' என்ற அமைப்பின் தலைவர் மாடசாமிதம் கட்சியின் செல்வாக்கைப் பெருக்க, காவிரி நதி நீர்ப் பிரச்சினை உதவி செய்யும் என்ற நம்பிக்கையில் வேளாண் மக்களுக்கு ஆதரவாகப் போராட்டத்தில் குதிக்க முடிவு செய்தார்.

போராட்டத்தின் முதல் கட்டமாக ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தார். 
"கொலஸ்டிரால் எக்கச் சக்கமாக ஏறியிருக்குது.  உடம்பைக் குறைக்கணும்னு டாக்டர் வற்புறுத்திச் சொல்லிக்கிட்டேயிருக்காரு.  நீங்க என்னடான்னா இந்த வயசிலேயும் வாயைக் கட்டாம எதையாவது தின்னுக்கிட்டேயிருக்கீங்க",என்ற மனைவிமார்களின் இடைவிடாத முணுமுணுப்பு தான் அந்த முடிவுக்குக் காரணம்.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்!  உண்ணாவிரதம் இருப்பதால், வேளாண் மக்களின் ஆதரவு கிட்டும்அதே சமயம், வயிற்றுக்குக் கட்டாய ஓய்வு கொடுப்பதால், உடம்பு எடையும் கொஞ்சம் குறையும்.

நிறைய செலவு பண்ணி மக்கள் கூட்டத்தைக் கூட்டி, பேரணிக்கு ஏற்பாடு செய்தவர், தமது ஒரு நாள் உண்ணாவிரதம் பற்றி அறிவிப்பதற்காக மேடை ஏறினார்.  கூடியிருந்த எழுச்சிமிக்க மக்கள் வெள்ளத்தைக் கண்டு உணர்ச்சி வசப்பட்டு, 'ஒரு நாள் உண்ணாவிரதம்' என்பதற்குப் பதிலாகச் 'சாகும் வரை உண்ணாவிரதம்' என்று வாய் தவறிச் சொல்லி விட்டார். 

"காவிரி மன்ற உத்தரவுப்படி 192 டி.எம்.சி. தண்ணீரைக் கர்நாடகா விடமிருந்து மத்திய அரசு பெற்றுத் தரவேண்டும்; இல்லையேல் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன்" என்ற அவரது அதிரடி அறிவிப்பைக் கேட்டுக் கூடியிருந்த மக்கள் செய்த கரகோஷம் விண்ணைப் பிளந்தது.  அப்போதுதான் தாம் செய்த தவறு, அவருக்குப் புரிந்து என்ன செய்வது என்று தெரியாமல் பேந்தப் பேந்த விழித்தார்.

"தமிழக விவசாய மக்களின் துயர் துடைக்கத் தம் இன்னுயிரை ஈவதற்கு முன் வந்திருக்கும் நம் தலைவரின் தியாகம் மகத்தானது," என்றும் 'தியாகச் செம்மல்' என்றும் அடுத்து வந்தவர்கள் அவரை வானளாவப் புகழ்ந்து பேசவேறு வழியின்றி சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க வேண்டிய தாயிற்று.

இந்த அறிவிப்பைக் கேட்ட மற்றக் கட்சித் தலைவர்கள், ஏதோ நகைச்சுவை துணுக்கைக் கேட்டவர் போல் நகைத்து விட்டு, 'இது வெறும் அரசியல் ஸ்டண்ட்' என்று கிண்டல் செய்தனர்.

துவக்க நாளன்று மூக்குப் பிடிக்கத் தின்று விட்டு, உண்ணாவிரதத்துக்குத் தயாரானார் மாடசாமி.  வயது எழுபதுக்கு மேல் ஆகிவிட்டதால், எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்ற பயத்தில், டாக்டர் குழு ஒன்றை மேடைக்கு அருகில் இருக்கச் செய்தார்.  அக்குழு அவ்வப்போது அவரது உடல் நிலையைப் பரிசோதித்து உண்ணாவிரதத்தை எவ்வளவு நாட்கள் நீட்டலாம் என ஆலோசனை சொல்லிக் கொண்டிருந்தது.
    
உட்கார்ந்திருக்க முடியாமல் மேடையில் ஒரு படுக்கை தயார் செய்து, படுத்துக் கொண்டார் தலைவர்.  அவருக்குப் பணிவிடை செய்ய வலப்பக்கத்தில் ஒருவரும், இடப்பக்கத்தில் ஒருவரும், தலைமாட்டில் ஒருவருமாக அவரது மனைவிமார்கள் வீற்றிருந்தனர்.  

'கிழவனுக்கு ஏதாவது நேருமுன், பாகப்பிரிவினை செய்யாமல் பாக்கியிருக்கும் சொத்துக்களை எழுதி வாங்கி விடவேண்டும்,' என்ற எண்ணத்தில் ஆளாளுக்குத் தனித்தனியே வக்கீல்களை வரவழைத்திருந்தனர்.  

தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்று, இவரது உண்ணாவிரதத்தை நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டிருந்தது.

'எதிர்க்கட்சி சார்புடைய இச்சேனல், இவருடைய உண்ணாவிரதத்தை ஒளிபரப்ப என்ன காரணம்?' என்று எல்லோரும் முடியைப் பிய்த்துக் கொள்ளாத குறை.

உண்மையில், சாகும் வரை உண்ணாவிரதம் அறிவித்தவர், இடை நேரத்தில் எதுவும் சாப்பிட்டால் கையுங் களவுமாகப் பிடிக்கலாம் என்றெண்ணி ஒரு நிமிடம் கூட கண்ணயராமல், பகல், இரவு என 'ஷிப்ட்' முறையில் வேலை செய்தனர், அதன் பணியாளர்கள்.  எனவே இரவு நேரங்களில் யாருக்கும் தெரியாமல் ஏதாவது சாப்பிடலாம் என்ற அவரது நினைப்பிலும் மண் விழுந்தது.

இரண்டாம் நாளிலிருந்து பசி தாங்க முடியாமல் அவதிப்பட்டார் தலைவர்.  மனிதாபிமான முறையில் மற்றக் கட்சித் தலைவர்கள் யாரேனும் வந்து சொன்னால், 'அது தான் சாக்கு' என்று விரதத்தை முடித்துக் கொள்ளலாம் என ஆவலாகக் காத்திருந்தார். தம் தொண்டர்கள் மூலம் தலைவர்கள் சிலரை தம்மைப் பார்க்க வரச் சொல்லி தூது அனுப்பினார்.    ஆனால் இவரது உண்ணாவிரதத்தை யாருமே 'சீரியஸாக' எடுத்துக் கொள்ளாததால், இவரைப் பார்க்க யாருமே வரவில்லை.

மத்திய அரசோ, கர்நாடக அரசோ இவரது உண்ணாவிரதத்தைச் சட்டை செய்யவேயில்லை.

நான்கு நாட்களில் படுத்த படுக்கையாகி விட்டார்.  பசி மயக்கத்தில் பார்வை மங்கியது. எந்தப் பக்கம் திரும்பினாலும் கண்ணெதிரே, எமனின் எருமை வாகனம் வந்து நிற்பது போல் தோன்றவே, பயந்து கொண்டு கண்களைக் கெட்டியாக மூடிக் கொண்டார்.

"என்னமோ தெரியலடா, கண்ணைத் தொறந்து என்னைப் பார்க்கிறதுக்கே உங்கப்பா நடுங்கிறாரு," என்று முதல் மனைவி தன் பையனிடம் சொன்னபோது தான், நிற்பது எமன் வாகனம் அல்ல என்ற விஷயம் அவருக்கு விளங்கியது.

கஷ்டப்பட்டுக் கண்களைத் திறந்த போது, மனைவிமார்கள் மூவரும் ஏதோதோ பத்திரங்களைக் கொண்டு வந்து கையெழுத்துப் போடச் சொல்லி கட்டாயப்படுத்தினர்.  அதற்குப் பயந்து கொண்டு கண்களை இறுக மூடிக் கொண்டார்.

மாடசாமியின் அரசியல் வாரிசு யார் என்பதிலும், யார் பெரிய தாதா என்பதிலும் அவரது பிள்ளைகளிடையே நடந்த யுத்தத்தில், அப்பாவிகள் சிலர் கொல்லப்பட்டனர். 

இதற்கு மேல் உண்ணாவிரதத்தை நீட்டித்தால், உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று டாக்டர்கள் சொல்லிவிடவே என்ன செய்யலாம் எனத் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தவருக்குத் தொலைக்காட்சியின் அந்த அறிவிப்பு தேனாக வந்து காதில் பாய்ந்தது.

'தமிழ் நாட்டில் பெரும்பாலான இடங்களில் இன்று மழை பெய்துள்ளது.  மேலும் சில இடங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது" என்ற வானிலை அறிக்கை தான் அந்த அறிவிப்பு.

"என் கோரிக்கையையேற்று இயற்கை அன்னையே மழை பெய்யச் செய்துவிட்டாள்.  வறண்டு கிடந்த காவிரியில்  தண்ணீர் வந்து விட்டதால், என் உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்கிறேன்" என்று மகிழ்ச்சிப் பொங்க அறிவித்தார் மாடசாமி!.   
.

(23/11/2009 ல் தமிழ் மன்றத்தில் எழுதியது)

6 comments:

 1. அருமை அருமை
  ரசித்துப் படித்தேன் முடிவு மிக மிக அருமை
  மனம் கவர்ந்த பதிவு.வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ரமணி சார்!

   Delete
 2. //",என்ற மனைவிமார்களின் இடைவிடாத முணுமுணுப்பு தான் அந்த முடிவுக்குக்// அரசியல் வாதிகளின் முக்கியமான அடையாளமா

  //கிழவனுக்கு ஏதாவது நேருமுன், பாகப்பிரிவினை செய்யாமல் பாக்கியிருக்கும் சொத்துக்களை எழுதி வாங்கி விடவேண்டும்,// இது யாரையோ டைரக்ட் ஆவே குத்தி காட்ற மாதிரி இருக்கே...

  நல்ல கதை

  ReplyDelete
  Replies
  1. அரசியல்வாதிகள் அனைவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தாம்! எனவே படிக்கும் ஒவ்வொருவருக்கும் அவருக்குத் தெரிந்த அரசியல் வாதி நினைவுக்கு வருவதைத் தவிர்க்க இயலாது.
   தங்களது வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி!

   Delete
 3. இன்றைய அரசியல் கேலிக்கூத்துகளை அழகாய் படம்பிடித்தக் கதைக்குப் பாராட்டுகள் அக்கா. அரசியல்வாதிகளை நம்பி ஏமாறும் பாமர மக்கள் இன்னும் இருப்பதால்தான் அவர்களும் இதுபோன்ற நாடகங்களை அவ்வப்போது அரங்கேற்றி ஆதாயம் பார்க்கிறார்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஆம் கீதா! மக்கள் ஏமாளிகளாக இருக்கும் வரை அரசியல்வாதிகள் இப்படிப்பட்ட நாடகங்களை அரங்கேற்றிக் கொண்டே தான் இருப்பார்கள். கருத்துக்கு மிக்க நன்றி கீதா!

   Delete