நல்வரவு

வணக்கம் !

Wednesday, 18 July 2012

’அதிர்ஷ்டம்’ - ஒரு நிமிடக்கதை

அன்றைய படப்பிடிப்பில் கதாநாயகனுக்குத் தங்கையாக நடிக்க வேண்டிய நடிகை வராமல் போகவே,  பத்தோடு பதினொன்றாக குரூப் டான்ஸ் ஆடிக் கொண்டிருந்த புவனாவுக்கு அந்த வாய்ப்புக் கிடைத்தது.

அந்தப் படத்தின் டைரக்டர் மாலன் ஏற்கெனவே ஏழெட்டுப் படங்கள் எடுத்துச் சிறந்த டைரக்டர் என்று பெயர் வாங்கியவர்.

"இந்த டைரக்டர் படத்துல, அதுவும் கதாநாயகனுக்குத் தங்கச்சி வேடம், அதிர்ஷ்டக்காரி தான்டி நீ" என்று சக நடிகைகள் வாழ்த்துத் தெரிவிக்கவே, மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றாள் புவனா.

எத்தனையோ நாள் கண்ட கனவு இன்று நனவாகியிருக்கிறது, இந்த வாய்ப்பை மிக நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவளது உள்மனது சொல்லவே, உயிரைக் கொடுத்து நடித்தாள்.

"ம். நல்லா நடிக்கிறியே, இவ்ளோ நல்லா நடிப்பேன்னு நான் எதிர்பார்க்கல" என்று டைரக்டர் பாராட்டியபோது, வசிஷ்டர் வாயிலிருந்து கிடைத்த பாராட்டு எனப் புளகாங்கிதமடைந்தாள் அவள்.

"இந்தப் படம் வெளிவந்தவுடனே  பெரிய ஸ்டார் ஆயிடுவே, எங்களையெல்லாம் கொஞ்சம் ஞாபகம் வைச்சுக்கம்மா"
என்று தோழிகள் கிண்டல் செய்ய, கற்பனை உலகில் சிறகடித்துப் பறக்கலானாள். 

கதாநாயகியாக அவளிடம் கால்ஷீட் கேட்டு, முன்பணம் கொடுக்க அவள் வீட்டு ஹாலில், படத் தயாரிப்பாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பது போல் அவளுக்கு அடிக்கடி கனவு வரத் துவங்கியது.

படம் வெளியான அன்று தம் தோழிகள் புடை சூழ, தியேட்டருக்குச் சென்று, தான் நடித்த காட்சிகள் எப்போது வரும் என ஆவலோடு காத்திருந்தாள்.  ஆனால் படம் முடியும் வரை அந்தக் காட்சிகள் வரவேயில்லை.

எடிட்டிங்கில் அவளது அந்தத் தங்கை பாத்திரமே, கத்தரிக்கோலுக்கு இரையாகி உயிரை விட்டிருந்தது.

6 comments:

  1. உள்ளதும் போச்சி
    அப்படின்னு நம்ம ஊர் பக்கம் சொல்வாங்க
    அதுபோல...

    கனவுலகில் சஞ்சரித்தால்
    நனவுலகில் வாழவில்லை என
    தெள்ளென தெரிவிக்கும்
    அழகிய கதை சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. முதல் பின்னூட்டத்திற்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி மகேந்திரன் சார்!

      Delete
  2. முயற்சி திருவினையாக்கும் ஆனாலும் அவசரப்பட்டு
    கனவுலகில் சஞ்சரிப்பதைத் தவிர்ப்பது நல்லது என
    உணரவைத்த சிறுகதை மிக நன்று!...வாழ்த்துக்கள் சகோதரி
    உங்கள் முயற்சி தொடரட்டும் .

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் நன்று எனப் பாராட்டியமைக்கும் மிக்க நன்றி!

      Delete
  3. என்னதான் திறமை இருந்தாலும் அதிர்ஷ்டத்தின் பங்கு சிறிதாவது இருக்கவேண்டும் போல. பாவம், புவனாவைப் போல எத்தனைத் துணை நடிகைகளின் கனவுகள் இப்படி கத்திரிக்கு இரையானதோ? நல்ல கதை. பாராட்டுகள் அக்கா.

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு மிக்க நன்றி கீதா!

      Delete