உமாமோகனின் நூல்
வெளியீட்டு விழா 11/01/2013 மாலை ஆறேகால் மணியளவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட இனிதே
துவங்கியது.
இடம் புதுச்சேரி
81 லப்போர்த் வீதியில் அமைந்துள்ள PMSSS அரங்கு
வெளியிடப்பட்ட
நூல்கள்:-
1.
‘டார்வின் படிக்காத குருவி,’ கவிதை தொகுப்பு -முரண்களரி
படைப்பகம்.
2.
‘வெயில்
புராணம்,’ பயண அனுபவங்கள் - அகநாழிகை பதிப்பகம்.
எங்கள் மண்ணின்
மைந்தரும் புரட்சிக்கவிஞருமான பாரதிதாசன் அவர்களின் மகன், மன்னர் மன்னன் விழாவுக்குத்
தலைமை தாங்கினார்.
முரண்களரி பதிப்பகத்தின்
யாழினி முனிசாமி வரவேற்புரை வழங்க எழுத்தாளர் ‘ஆயிஷா’ இரா.நடராஜன் நூல்களை வெளியிட,
கவிஞர் சுகிர்தராணி அவற்றைப் பெற்றுக் கொண்டார்.
நூல் ஆய்வு செய்தவர்கள்
முனைவர் நா.இளங்கோ & இந்தியன் வங்கி ஊழியர் அசோசியேஷனின் துணை. பொதுச் செயலாளர்
எஸ்.வி. வேணுகோபால் ஆகியோர்.
இரவு ஒன்பதரைக்கு
மேல் விழா நீண்டாலும், அரங்கு நிறைந்த சபையும் இறுதிவரை பொறுமை காத்த அவையோரும் விழாவின்
சிறப்பம்சங்கள்.
இனி விழாவில் பேசியவர்களின்
உரையிலிருந்து முக்கிய சாராம்சம்:
ஆயிஷா நடராஜன்
‘டார்வின் படிக்காத குருவி,’ என்ற தலைப்பை எடுத்துக் கொண்டு அலசினார். டார்வின் படிக்காத குருவி அல்லது குருவியைப் படிக்காத டார்வின் என்று இருவிதமாகப்
பொருள் கொள்ளலாம் என்றவர் சிட்டுக்குருவி டார்வினின்
Fittest of the survival படித்திருந்தால், காக்கையைப் போல் பிழைத்திருக்க வாய்ப்பிருந்திருக்கலாம்
என்றார்.
இந்தத் தொகுப்புக்கு
இந்தத் தலைப்பு வைக்கவேண்டியதன் அவசியம் என்ன என்பதைப் பற்றிப் பேசியவர், உலகளவில் பெண்கவிஞர்கள் சிலர் வைத்த தலைப்புகள்
எப்படி உலகையே புரட்டிப் போட்டன என்று விளக்கினார்.
ஜெர்மனியைச் சேர்ந்த
பெண்கவிஞர் ஆவா என்பவர் ஏசு கிறிஸ்து என்பதை
மாற்றி மரியா கிறிஸ்து என்ற தலைப்பில் கவிதை புத்தகம் வெளியிட்டது பற்றியும், புத்தகம்
தடைசெய்யப்பட்டு வாடிகனால் கைது செய்யப்பட்டதையும் சொன்னார். சாந்தாகிளாஸ் கிறிஸ்துமஸ் தாத்தாவாகத் தான் இருக்க
வேண்டுமா? கிறிஸ்துமஸ் பாட்டியாக ஏன் இருக்கக்
கூடாது என்று கிறிஸ்துமஸ் பாட்டி பெயரில் எழுதப்பட்ட கவிதை பற்றியும் விவரித்தார்.
‘They wont
rape us alive’ ‘Born without Bhardha’ என்ற
தலைப்புகளில் எழுதப்பட்ட கவிதைகளைப் பற்றிப் பேசியவர், பெண்ணின் உடல்மொழி சம்பந்தப்பட்ட
கருத்துக்கள் தாம் இன்றைய பெண்ணியத்தில் முக்கியமாக பேசப்படுவதாகச் சொன்னார். இறுதியில்
டார்வின் படிக்காத குருவியை யாரும் படிக்காமல் இருந்து விடாதீர்கள் என்று சொல்லிப்
பேச்சை முடித்தார் நடராஜன்.
அடுத்து கவிஞர்
சுகிர்தராணி பேசினார்:-
விழாவில் கலந்து
கொள்வதற்காக தாம் வந்த பேருந்தில், அழுக்கு உடையோடு துர்நாற்றம் வீச மூதாட்டி ஒருவர்
ஏறியதும், அழுக்கு எங்கே தங்கள் மீது ஒட்டிக் கொண்டு விடுமோ என்ற பயத்தில் விலகியோடிய
மக்களைப் பற்றியும், அந்தம்மாளுக்காக எழுந்து தன் இருக்கையைக் கொடுத்தவுடன், ‘மகராசியா
இரும்மா,’ என்று அவர் தம் கன்னத்தை வழித்து நெட்டி முறித்தது பற்றியும் சிலாகித்துப்
பேசியவர், உமாமோகனின் பெரும்பாலான கவிதைகளில் அந்த மனித நேயத்தையும், நெருக்கத்தையும்
தாம் உணர்வதாய்ச் சொன்னார். இதற்கு எடுத்துக்காட்டாக
அவர் சொன்ன கவிதை:-
“அவனுக்கும்
மனிதன்
என்று தான் பெயர்.
மஞ்சளாய் பூத்தாலும்
மஞ்சள் செம்பருத்தி
என்று அழைப்பது
போல்.
பசித்த வயிற்றின்
எரிச்சல் உணராதவனும்
நேசம் சமூகத்தின்
மீது
ஆடைக்கிழிசலின்
அவமானம் உணராதவனும்
ஏக்கவிழிக் குழந்தையின்
சடைத்தலைக்குச்
சலிப்பவனுமான
அவனுக்கும் மனிதன்
என்று தான் பெயர்.”
நூலாய்வு செய்த
முனைவர் நா.இளங்கோவன் ‘நாற்காலிப்பிசின்,’ என்ற குறியீட்டுக்கவிதையைப் பாராட்டிப் பேசினார். ‘நிராகரிக்கப்பட்ட வானவில்,’ அவர் குறிப்பிட்டுப்
பேசிய இன்னுமொரு கவிதை.
“என் கையில ஒரு
காலிப்பையோடு வந்திறங்கினேன்
எனக்கான வானவில்
கிட்டாதாததால்
இட்டு வைத்திருக்கிறேன்
பழைய காகிதம்,
பால்கவர்
உடைந்த பிளாஸ்டிக்,
பாட்டில் மூடி இத்யாதிகளை.”
இக்கவிதையில் வானவில்லை
எதிர்நோக்கியிருப்பவர் வேறு யாருமில்லை, கவிஞர் உமாமோகனே தான் என்று சொன்னவர், ஒரு
கவிஞருக்கே உரித்தான கர்வம் இதில் வெளிப்படுவதாகச்
சொன்னார்.
இறுதியில் வேணுகோபால்
இந்நூலில் தம்மைக் கவர்ந்த கவிதைகள் சிலவற்றை
வாசித்துக் காட்டினார்.
ஆற்றின் மேல் ஒரு
சமாதி (பழைய பாலம்) என்ற கவிதையைப் பற்றிப் பேசும் போது தமக்குத் தெரிந்த
‘பாலத்து மீது
சத்தத்தோடு ரெயில்
கீழே மெளனமாக மணல்,’ என்ற வரிகளை நினைவு கூர்ந்தார்.
தானே புயல் பற்றிய
கவிதையின்
“ஏதுமற்ற வெளியில்
வெளிச்சம் படர்ந்திருக்கிறது
இதில் இருள் நிறைந்திருக்கிறது,”
என்ற வரிகளைச்
சிலாகித்துப் பேசினார்.
அபி உலகம், ஈரமான
ஆரம், சருகு படிந்த கூடுகள் என்ற கவிதைகளையும்
வேணுகோபால் உட்பட அனைவரும் பாராட்டிப் பேசினார்கள்.
இறுதியில் அனைவருக்கும்
உமாமோகன் நன்றி கூற விழா இனிதே நிறைவடைந்தது.
அருமையான கவிதைகள்
நிறைந்த இந்த நூலை அனைவரும் வாங்கிப் படித்து இன்புறுங்கள்.
படங்களுடன் தொகுத்து வழங்கியமைக்கு நன்றி... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteகவிதை அருமை...
வாழ்த்துக்கு மிக்க நன்றி தனபாலன் சார்!
Deleteஆஹா அருமையாகப் படங்களுடன் மிக அருமையாகப் பகிர்ந்திருக்கிறீர்கள் மிக நன்றி தோழி நான் இதை முகநூல் மற்றும் நண்பர் வட்டத்திற்கு எடுத்துச் செல்கிறேன்...தற்பெருமைதான்..ஹஹா..
ReplyDeleteதாராளமாக இதை உங்கள் நண்பர் வட்டத்துக்கு எடுத்துச் செல்லலாம். கவிக்குழந்தைகளைப் பாராட்டும்போது அவற்றை ஈன்றெடுத்தவள் என்ற முறையில் த்ங்களுக்குப் பெருமை தானே! படைப்பை முன்னிறுத்திச் செய்யப்படும் விமர்சனங்களால் தற்பெருமை கொள்வதில் தவறேதுமில்லை. பாராட்டுக்கள் உமா!
Deleteஅன்பின் கலையரசி அவர்களுக்கு
ReplyDeleteஅபாரமான நினைவாற்றல், அற்புதமான ரசனை, அன்பின் லயிப்பு இருக்கப் போய்த் தான் இத்தனை கச்சிதமாக ஒரு நிகழ்வு குறித்து சிறப்புற எழுத முடிந்திருக்கிறது, உங்களுக்கு...
உளப்பூர்வமான வாழ்த்துக்கள்....
எஸ் வி வேணுகோபாலன்
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி வேணு சார்! அன்று உங்களை நேரில் சந்திக்க முடிந்ததில் மிக்க மகிழ்ச்சி. உணர்வு பூர்வமாக கவிதை வரிகளில் ஒன்றி நீங்கள் வாசித்த போது தெரிந்த லயிப்பு பிரமிக்க வைத்தது. பரந்துபட்ட வாசிப்புத் திறனும் நல்ல ரசனையும் உள்ளவர் என்பதை நீங்கள் குறிப்பிட்ட கவிதைகள் உணர்த்தின. வாழ்த்துக்கு மீண்டும் என் நன்றி!
Deleteஎன் உளங்கவர் கவிஞர் உமா மோகன் அவர்களின் நூல் வெளியீட்டு விழாவுக்கு வர இயலாத ஏக்கத்தை இனிதே நிறைவு செய்த அருமையான விழாக்குறிப்புகள். சுருக்கமாகவும் நேர்த்தியாகவும், சொல்லவேண்டியவற்றை சொல்லி படங்களுடன் வெளியிட்டமை சிறப்பு. பாராட்டுகள் அக்கா.
ReplyDeleteபாராட்டுக்கு நன்றி கீதா! கைபேசியினால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என்பதால் அவ்வளவு நேர்த்தியாக இல்லை. விழா பற்றிய முக்கிய விபரங்களைச் சொல்லிவிட்டேன் என்பதில் திருப்தி தான்.
Deleteஅருமையான பதிவு.
ReplyDeleteவாழ்த்துகள்.
தங்களது வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நடராஜன் சார்!
ReplyDeleteவாழ்த்துகளும் உமா மோகன் அவர்களுக்குப் பாராட்டுகளும் :)
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி பசுபதி சார்! பாராட்டுக்களை உமாமோகனிடம் சேர்ப்பித்துவிடுகிறேன்.
ReplyDeleteவணக்கம். இன்றைய வலைச்சரத்தில் தங்கள் தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நன்றி.
ReplyDeletehttp://blogintamil.blogspot.com.au/2014/01/blog-post_25.html
வலைச்சரத்தின் என் தளத்தை அறிமுகப்படுத்தியதற்கு மிகவு ம் நன்றி கீதா!
ReplyDeleteநிகழ்வினை மிக மிக சுருக்கமாகவும்
ReplyDeleteநேர்த்தியாகவும் படங்களுடன் பகிர்ந்த விதம் அருமை
பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
தங்களது வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ரமணி சார்!
Deletetha.ma 1
ReplyDelete