நல்வரவு

வணக்கம் !

Saturday 1 November 2014

'காதலாவது கத்திரிக்காயாவது' - சிறுகதை விமர்சனம் - 1



திரு வை.கோபு சார் அவர்கள் பத்து மாதங்களாக வெற்றிகரமாக நடத்திய விமர்சனப்போட்டி முடிந்து இப்போது நிறைவு விழா துவங்கியிருக்கிறது.  விழாவின் முதல் கட்டமாக, ஹாட் டிரிக் வெற்றியாளர்களின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது:-

இப்பட்டியலில் என் பெயரும் இடம் பெற்றிருப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. 


இவ்விழாவின் தொடர்ச்சியாக இப்போட்டித்தொடரில் நான் எழுதியவைகளில் பரிசுக்குரியவையாக நடுவர் ஜீ.வி. அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எட்டு விமர்சனங்களை, என் தளத்தில தினமொன்றாக வெளியிட முடிவு செய்துள்ளேன்:-

காதலாவது கத்திரிக்காயாவது’ - (ஆசிரியர் திரு.வை.கோபாலகிருஷ்ணன்)  கதைக்கான இணைப்பு:-
என் விமர்சனம்:-
காதல் ஒன்று மட்டுமே வாழ்வின் முக்கிய பிரச்சினை என்பது போன்ற ஒரு மாயையை இளைஞர்களிடம் உருவாக்கி, காதலில் எத்தனை வகைகள் உண்டோ, அத்தனையையும் அலுப்பில்லாமல் மீண்டும் மீண்டும் அரைத்துக் கொண்டிருக்கும்,  நம் தமிழ்ச்சினிமாக்களைப் பார்த்துப் பார்த்துச் சலித்தும், வெறுத்தும் போயிருக்கும் இச்சமயத்தில், இன்னும் ஒரு காதல் கதை!

மேல்நாட்டுக் கலாச்சாரத்தை அப்படியே இறக்குமதி செய்து காதலர் தினம் கொண்டாடி பொது இடத்தில் கொஞ்சங்கூட கூச்சமின்றி அநாகரிகமாக நடந்து கொண்டு நம்மை முகம் சுளிக்க வைக்கும் இத்தினத்தில், மீண்டும் ஒரு காதல் கதை!

தலைப்பைப் பார்த்து விட்டுக் காதலர் தினத்தன்று காதலுக்கு எதிர்மறையான கருத்தைச் சொல்லும் கதை போலிருக்கிறது என்ற எண்ணத்தில் வாசித்துப் பார்த்தால், திரும்பவும் ஒரு காதல் கதை!

இம்மாதிரியான ஒரு தலைப்பைத் தேர்வு செய்து,  காதலைக் கருவாகக் கொண்ட கதையை வாசிக்க விரும்பாதவரையும், இதனை வாசிக்க வைத்த ஆசிரியரின் உத்திக்கு முதல் பாராட்டு.  தலைப்புக்கு மட்டுமல்ல, இக்கதை நாயகர்களின் காதலுக்கும் கத்திரிக்காய் உதவுகிறது!

பரமுவுக்கும், காமாட்சிக்கும் பருவ வயதில் ஏற்படுகிற காதலைச் சொல்கிற இக்கதையில்,  துவக்கத்தில் காமாட்சியின் அழகு தான் பரமுவைச் சுண்டியிழுக்கிறது.  அவளுக்கு உதவி செய்வதற்கு அவளது அழகு தான் காரணமோ என்ற சந்தேகம் நமக்கு எழாமலில்லை. ஆனால் வங்கி வேலை கிடைத்தபிறகு, அவள் செய்த உதவிகளுக்கு நன்றி சொல்லி, அதற்கீடாக ஒரு சன்மானத்தைக் கொடுத்து விட்டு அவன் பறந்திருக்கலாம்.  ஆனால் அவளைத் தன் மனைவியாக்கிக் கொள்ள விரும்புகிறான் என்றறியும்போது, அவன் அவள் உடலை மட்டும்  நேசிக்கவில்லை,  உள்ளத்தையும் நேசிக்கிறான் என்ற உண்மை நமக்குப் புலப்படுகிறது.

சிறுவயதிலிருந்து நிறைவேறாத பட்டுப்பாவாடைக்காக அரும்பாடுபட்டுச் சேர்த்து வைத்த பணத்தைப் பரமுவுக்காக எடுத்துச் செலவு செய்யும் போது காமாட்சிக்கு வருத்தம் துளியுமில்லை.  இத்தனைக்கும் அவன் தன் காதலை இதுவரை அவளிடம் வெளிப்படுத்தவேயில்லை. எதையும் எதிர்பார்த்து அவள் அவனுக்கு உதவவில்லை. 
எல்லாவற்றுக்கும் லாப நஷ்டக் கணக்குப் போட்டுச் செலவு செய்யும் மேல்தட்டு,வர்க்கத்தினர், அடுத்த வேளை கஞ்சிக்கில்லாத இந்த எளிய மக்களிடம் இருந்து, மனித நேயத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும்!

கதையை மேலோட்டமாக வாசிக்கையில், ‘பத்தோடு பதினொன்று, அத்தோடு இதுவொன்று,’ என்று தான் சொல்லத் தோன்றும்.  ஆனால் ஆழமாக வாசிக்கும் போது தான், இக்கதை மூலம் ஆசிரியர் இன்றைய இளைய சமுதாயத்துக்குக் காதலைப் பற்றி ஒரு முக்கியமான உண்மையைச் சொல்லியிருக்கிறார் என்பது  புரியும்.

இன்றைக்குத் திருமண முறிவுகள் அதிகளவில் ஏற்படுவது கவலைக்குரிய விஷயம்.  நாளிதழில் மணமக்கள் தேவை என்ற விளம்பரத்தில் பாதிக்குப் பாதி விவாகரத்து பெற்றோரின் விபரங்கள் தாம் இடம் பெற்றிருக்கின்றன.   
விவாகரத்து பெற்றவர்களுக்கென்றே,  இன்று தனி திருமண சேவை மையங்கள் செயல்படுகின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
 
பிள்ளைகளின் சம்மதம் கேட்காமல், பெற்றோர் பார்த்து வைக்கிற திருமணங்கள் மட்டுமல்ல; பெற்றோரை எதிர்த்துக் ‘காதல், காதல், காதல்; காதல் போயிற் சாதல்,’ என்று சபதமெடுத்து, நட்சத்திர உணவகங்களில்  ஐஸ்கிரீம் சாப்பிட்டு, மணிக்கணக்காக அரட்டையடித்து, இரவு முழுதும் கண்விழித்துக் குறுஞ்செய்தியனுப்பி, கைபேசி நிறுவனங்களுக்கு ஆயிரக் கணக்கில் மொய் எழுதி, சக்திக்கு மீறிச் செலவழித்து விலையுயர்ந்த பொருட்கள் வாங்கிப் பரிசளித்து, ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டோம் என்று சூளுரைத்து, அவசர அவசரமாகச் செய்து கொள்கிற காதல் திருமணங்களும் அல்லவா, அதே வேகத்தில் முறிந்து போகின்றன?

பருவ வயதில் எதிர்பாலாரிடம் ஏற்படும் ஈர்ப்பைக் காதல் என்று எண்ணுவது தான் பெரும்பாலோர் செய்யும் தவறு.  காதலிக்கும் போது நிறைகளை மட்டுமே பார்த்துப் பழகியவர்களுக்குத் திருமணத்துக்குப் பிறகு  மற்றவரின் குறைகள் தெரியத் துவங்க, விரிசல் விழத் துவங்குகிறது.  மோகம் குறையக் குறைய, ‘ஃபூ இதற்குத் தானா இவ்வளவு ஆசைப்பட்டோம்,’ என்ற விரக்தி தோன்ற, விரிசல் அதிகமாகி மணமுறிவில் முடிகிறது.

இன்பத்தில் மட்டுமின்றித்  துன்பத்திலும் பங்கெடுத்துக் கொண்டு, புரிந்துணர்வுடன் ஒருவருக்கொருவர் உதவி செய்து, உண்மையான அன்புடன்  உடலை நேசிக்காமல் உள்ளத்தை நேசிக்கும் காதல் என்றென்றும் நிலைத்து நிற்கும்! அன்பை அஸ்திவாரமாகக் கொண்டு  எழுப்பப்படும் குடும்பம் எனும் கோயில், எத்தகைய இடர்ப்பாடுகளையும் சமாளித்து, நல்லதொரு பல்கலைக்கழகமாகத் திகழும்! என்ற கருத்தை  இக்கால இளைய சமுதாயத்துக்கு வலியுறுத்தும் விதமாக  பரமு & காமாட்சி காதல் கதையைக் காதலர் தினத்தில் வெளியிட்டமை சிறப்பு!

பரமு இரண்டாவது கவரைப் பிரிக்குமுன்பே, அதில் என்ன இருக்கும்  என்பதை நம்மால் யூகிக்க முடிவது ஒரு குறை.  மார்க்கெட் போன்ற பிறமொழிச் சொற்கள், பலவிடங்களில் வருவதைத் தவிர்த்திருக்கலாம்.

(போட்டியில் முதல் தடவையாகப் பங்கேற்று, அதற்கு முதல் பரிசும் கிடைத்தது என்பதில், எனக்கு மட்டில்லா மகிழ்ச்சி!) அதற்கான இணைப்பு:-


12 comments:

  1. அன்புடையீர், வணக்கம்.

    தங்களின் இந்த விமர்சனம் வெகு அழகாகவும், படிக்க மிகவும் சுவையாகவும் உள்ளது.

    தாங்கள் முதன்முதலாக இந்தப்போட்டியில் கலந்துகொண்டு அனுப்பி வைத்த இந்த விமர்சனமே ‘முதல் பரிசு’க்குத் தேர்வானதில் நான் அன்று அடைந்த சந்தோஷங்களை என்னால் வார்த்தைகளில் சொல்லிவிட முடியாமல் உள்ளன.

    இந்தத்தங்களின் இன்றைய பதிவு தங்களின் வலைத்தள வாசகர்களையும் அந்த என் சிறுகதையை வாசிக்க வைக்கத் தூண்டுதலாகவும் அமைந்துள்ளது.

    தங்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    என் ’சிறுகதை விமர்சனப் போட்டி’யில் கலந்துகொண்டு சிறப்பித்திருந்ததற்கும் அதை இன்று இங்கே தனிப்பதிவாக வெளியிட்டுள்ளதற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

    அன்புடன் கோபு [VGK]

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. தங்களது வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்கும் மிகுந்த நன்றி கோபு சார்!

      Delete
  2. //திரு வை.கோபு சார் அவர்கள் பத்து மாதங்களாக வெற்றிகரமாக நடத்திய விமர்சனப்போட்டி முடிந்து இப்போது நிறைவு விழா துவங்கியிருக்கிறது. விழாவின் முதல் கட்டமாக, ஹாட் டிரிக் வெற்றியாளர்களின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது:-

    http://gopu1949.blogspot.in/2014/11/vgk-01-to-vgk-40-total-list-of-hat.html

    இப்பட்டியலில் என் பெயரும் இடம் பெற்றிருப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.//

    எனக்கு அதைவிட மகிழ்ச்சியாக உள்ளது.

    தாங்கள் மட்டும் அனைத்து 40 போட்டிகளிலும் கலந்துகொண்டிருந்து, அனைத்துக்கதைகளுக்கும் விமர்சனம் எழுதி அனுப்பியிருந்தீர்களானால், தாங்கள் நிச்சயமாக மிகப்பெரியதோர் இடத்தினை இந்தப்போட்டிகளில் பெற்றிருக்க முடியும் என்பதே என் அபிப்ராயம்.

    எனினும் ஏதோ ஆரம்பத்திலும் இறுதியிலும் மட்டுமாவது கலந்துகொண்டு கலக்கியுள்ளது மிக்க மகிழ்ச்சியாகவே உள்ளது.

    மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.


    >>>>>>

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் மனந்திறந்த பாராட்டுக்கும் மிக்க நன்றி கோபு சார்! என் எழுத்தின் மீது தாங்கள் வைத்துள்ள அபிப்ராயம், எனக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளிப்பதாய் உள்ளது. விமர்சனம் எழுதும் என் முயற்சிக்குக் களம் அமைத்துக்கொடுத்ததோடு, வெற்றிக்குத் தூண்டுகோலாகவும் இருந்த தங்களுக்குத் தான் நான் நன்றி சொல்ல வேண்டும்.

      Delete
  3. //இவ்விழாவின் தொடர்ச்சியாக இப்போட்டித்தொடரில் நான் எழுதியவைகளில் பரிசுக்குரியவையாக நடுவர் ஜீ.வி. அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு விமர்சனங்களை, என் தளத்தில தினமொன்றாக வெளியிட முடிவு செய்துள்ளேன்:-//

    மிகவும் சந்தோஷம். இப்போதுள்ள நேர நெருக்கடிகளில் தினமும் என்னால் இங்கு வருகை தர இயலுமா என்பது சந்தேகமேயானாலும், நிச்சயமாக பிறகு என்றாவது ஒருநாள் எனக்கு நேரம் கிடைக்கும்போது வருகை தருவேன். இதுபோல கருத்துக்களையும் பதிவு செய்வேன்.

    தங்களின் இந்தப்பதிவினில் ஓர் மிகச்சிறிய பிழைத்திருத்தமும் உள்ளது ... அதனையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

    தாங்கள் இதுவரை பரிசினை வென்றுள்ள போட்டிகள் மொத்தம் ஏழு அல்ல. எட்டு ஆகும்.

    VGK-05, VGK-06, VGK-09, VGK-10, VGK-37, VGK-38, VGK-39 and VGK-40

    நன்றியுடன் கோபு [VGK]

    ReplyDelete
    Replies
    1. "தங்களின் இந்தப்பதிவினில் ஓர் மிகச்சிறிய பிழைத்திருத்தமும் உள்ளது ... அதனையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். தாங்கள் இதுவரை பரிசினை வென்றுள்ள போட்டிகள் மொத்தம் ஏழு அல்ல. எட்டு ஆகும்."
      போட்டியில் பங்கு பெற்ற, பரிசு பெற்ற அத்தனை தகவல்களையும் விரல்நுனியில் வைத்திருக்கும், உங்களை நினைத்து மலைப்பாய் உள்ளது! Vgk 10 க்கு எனக்கு மூன்றாம் பரிசு கிடைத்த விபரம், சுத்தமாக எனக்கு நினைவில் இல்லை. தாங்கள் சொன்ன பிறகு, அந்த விமர்சனத்தின் பரிசு விபரங்களைப் போய்ப்பார்த்துத்தான் உறுதிசெய்தேன்.
      ஏழுக்குப் பதில் எட்டு என்பது இன்னும் என் மகிழ்ச்சியை அதிகரிக்கும் செய்தி தான். தவறைச் சுட்டிக்காட்டியமைக்கு என் நன்றி சார்!

      Delete
    2. இந்த 40 போட்டிகளில் 8 போட்டிகளிலாவது [ 20% ] ஏதாவது ஒரு பரிசினை வென்றவர்களை சாதனையாளர்களாகக் காட்டி, “கீதா விருது” என்று அளிக்கத் திட்டமிட்டு வருகிறேன்.

      அதில் இந்த 8ம் வெற்றியே தங்களுக்கும் உதவக்கூடும் என்று நான் நினைத்து மனதுக்குள் மகிழ்ந்து கொண்டிருக்கும்போது, தாங்கள் அதை அதிரடியாக 7 எனக்காட்டியதும், ஒரு நிமிடம் பதறிப்போய்விட்டேன்.

      மீண்டும் என் கணக்குகளைச் சரிபார்த்து உறுதிசெய்துகொண்டே பிறகு தங்களுக்குப் பின்னூட்டமிட்டேன். இது தங்கள் தகவலுக்காக மட்டுமே.

      நன்றியுடன் கோபு

      Delete
  4. சிறப்பான விமர்சனம்.. பரிசுபெற்றதற்குப் பாராட்டுக்கள்.!

    ReplyDelete
    Replies
    1. தங்களது பாராட்டுக்கு மிக்க நன்றி மேடம்! தங்களைப் போன்ற பதிவுலக ஜாம்பவானுடன், இந்த முதல் பரிசினைப் பகிர்ந்து கொண்டதில் மிகுந்த மகிழ்ச்சி மேடம்!

      Delete
  5. முதல் பரிசுக்கு முற்றிலும் தகுதியான விமர்சனம். முதல் தடவையாகப் பங்கேற்ற போதே முதல் பரிசு கிடைத்தது உங்கள் எழுத்துத் திறமைக்கு சான்று. கோபு சார் சொல்வது போல் நீங்கள் தொடர்ந்து பங்கேற்றிருந்தால் இன்னும் பல பரிசுகளை நிச்சயமாகப் பெற்றிருந்திருப்பீர்கள். கடைசியாகக் கலந்துகொண்ட நான்கு போட்டிகளிலும் தொடர்ந்து பரிசு பெற்று ஹாட்ரிக் பரிசும் பெற்றமைக்கு மனம் நிறைந்த பாராட்டுகள் அக்கா.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. விமர்சன வித்தகியிடமிருந்து இத்தகைய பாராட்டு பெறுவதில் மிகுந்த மகிழ்ச்சி! ஏற்கெனவே களத்தில் கீதா மதிவாணன், இராஜேஸ்வரி மேடம், சேஷாத்ரி போன்ற விமர்சன வித்தகர்கள் நின்று எனக்கு tough fight கொடுத்ததால் கடைசியாகக் கலந்து கொண்ட நான்கு போட்டிகளில் நான் மிகுந்த கவனம் எடுத்துக்கொண்டேன். ஹாட் டிரிக் பரிசுக்குக் கோபு சாரின் தொடர்ந்த வற்புறுத்தலே காரணம். பாராட்டுக்கு மீண்டும் என் நன்றி கீதா!

      Delete