இத்தொடருக்கு என்
வேண்டுகோளை ஏற்று, கரிச்சான் (BLACK DRONGO) குருவியைப் பற்றி நண்பர்கள் விரிவாக எழுதிய
பின்னூட்டம், என்னைப் போலவே பலருக்கும், பறவைகளின் மீது இருக்கும் நேசத்தை வெளிப்படுத்தியது.
உங்கள் பொன்னான
நேரத்தை ஒதுக்கி, விரிவான கருத்துக்களை எல்லோரும் அறியத் தந்து, என்னை மகிழ்ச்சிக்
கடலில் ஆழ்த்திய உங்கள் அனைவருக்கும் என் சிரந்தாழ்ந்த நன்றி.
துரை செல்வராஜ் (தஞ்சையம்பதி) அவர்கள் இக்குருவிக்குத் திருவாரூருக்கு அருகில் வலிவலம் என்ற ஊரில் கோவில் இருக்கிறது
என்ற அரிய தகவலைச் சொன்னார். இக்கோவில், தேவாரப்
பாடல், கரிச்சான் கழுகை விரட்டிய நினைவலைகள் ஆகியவை பற்றி, அவர் தளத்தில் தனியே ஒரு
பதிவு எழுதுமாறு அவரைக் கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில் கரிச்சானைப் பற்றி அவரிடம் அவ்வளவு
அரிய விபரங்கள் இருக்கின்றன. நம் சந்ததிக்காக
அவற்றைப் பதிந்து வைப்பது மிக அவசியம்.
பலர் அளித்த தகவல்கள்
மூலம் இக்குருவிக்கு வலியன், கரிச்சான், கரிக்குருவி,
இரட்டை வால் குருவி, கருவாட்டு வாலி என்ற பெயர்கள் இருப்பதை அறிந்தோம்.
இவற்றில் கருவாட்டு வாலி மட்டும் சரியா என்று எனக்கு
உறுத்திக் கொண்டே இருந்தது. கருவாட்டுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?
ஸ்ரீராம் (எங்கள் பிளாக்)கொடுத்த இணைப்பில் இருந்த சலீம் அலி புத்தகத்தைப்
படித்த போது, இதற்குக் கருவெட்டு வாலி
என்ற பெயரும் இருப்பதாக அறிந்தேன். ஸ்ரீராமுக்கும்
ஆர்.விக்கும் என் நன்றி.
வால் நடுவே இரண்டாகப்
பிளந்து, வெட்டுப்பட்டது போல் இருப்பதால், கருவெட்டு
வாலி என்பது பொருத்தமாக இருக்கிறது. எனவே கருவெட்டு வாலி தான் காலப்போக்கில் மருவி,
கருவாட்டுவாலி ஆகியிருக்க வேண்டும்.
BIRD WATCHING
என்பதற்கு ஜோசப் விஜு (ஊமைக்கனவுகள்) அவர்கள் சொன்ன கூர்நோக்கல் என்ற சொல், கவனித்தல் என்பதை விடப் பொருத்தமாய்த் தோன்றியதால்,
தலைப்பை மாற்றிவிட்டேன்.
மிமிக்ரி என்பதற்கும்
அநுகரணம் என்ற சொல் பத்து- பதினொன்றாம்
நூற்றாண்டிலேயே யாப்பருங்கல விருத்தி என்ற தமிழ் நூலில் பயன்படுத்தப்பட்டிருப்பதையறிந்தேன். இது தெரியாமல் நாமெல்லாரும் மிமிக்ரி என்று தமிங்கிலீஷில்
தானே, இது நாள் வரை எழுதி வந்தோம். இந்த அரியத் தகவலைத் தந்த விஜு சாருக்கு என் மனமார்ந்த
நன்றி.
இரண்டாவதாக நான்
சொல்லப் போவது கொண்டு கரிச்சான் (ORIENTAL
MAGPIE- ROBIN. (Copsychus
saularis)
இது எங்கள் தெருவில்
கடந்த ஓராண்டாக வசிக்கிறது. இதன் தமிழ்ப் பெயர்
தெரியாததால், ராபின் என்றே இதுநாள் வரை சொல்லி வந்தேன். பறவைகள் – அறிமுகக் கையேட்டின் (ப.ஜெகநாதன்) மூலம் சரியான பெயரைத் தெரிந்து கொண்டேன்.
ராபின் என்ற பெயர்
இருந்தாலும், இக்குருவி அமெரிக்க ராபின் (American robin) (Turdus migratorius)குடும்பத்தையோ, ஐரோப்பிய ராபின் (European robin) (Erithacus rubecula) குடும்பத்தையோ
சேர்ந்ததல்ல.
இது இந்தியாவிலும்,
தென் கிழக்கு ஆசியாவிலும் வாழும் பறவை.
அமெரிக்க ராபின் என்றவுடன் ‘மெளன வசந்தம்’ என்ற நூல் நினைவுக்கு
வருகிறது. அது பற்றி ஒரு சிறு தகவல்:-
அமெரிக்காவில்
1920 ல் எல்ம் மரங்களைப் பாதித்த பூஞ்சக்காளான் நோய்க்கு (DDT) எறும்பு மருந்தை, வண்டி
வண்டியாகத் தெளித்தார்கள்.
இதனால் பறவைகள்
குறிப்பாக ராபின் பறவைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டன. 1954 க்கு பின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து இவற்றைக் காண்பதே அரிதாகி விட்டது. இதன் பிறகு தான் எறும்பு மருந்தை உலகமுழுதும் தடை
செய்தார்கள்.
தம் பாடல் மூலம்
வசந்தத்தைக் கட்டியங்கூறி வரவேற்கும் ராபின் பறவைகள் இல்லாமல், அதற்குப் பிறகு அமெரிக்காவில்
வசந்தத்தில் மயான அமைதி நிலவியது.
“கோரைப்புல் ஏரியில் வாடிவிட்டது
பறவைகள் பண்ணிசைப்பதில்லை” (கீட்ஸ்)
இதைப் பற்றி ரெய்ச்சல் கார்சன் (RACHEL CARSON) எழுதிய மெளன வசந்தம்
(SILENT SPRING) என்ற நூலை, பேராசிரியர்
ச.வின்சென்ட். தமிழ் மொழியாக்கம் செய்திருக்கிறார். ‘எதிர்’
வெளியீடு. பூச்சிக்கொல்லிகளின் விளைவுகளை
உலகம் அறியச் செய்த மிக முக்கியமான புத்தகம் இது.
'கொண்டு கரிச்சான்,' மைனாவை விடச் சற்றுச் சிறியது; இதன் தனித்தன்மை
குரல் வளம் தான். அதிகாலை நேரத்தில் சீழ்க்கை
ஒலி போலத் தொடர்ந்து, இது பாடும் பாடலைக் கேட்கலாம்; கேட்கலாம்; கேட்டுக்கொண்டே இருக்கலாம். அவ்வளவு இனிமை!
சில பறவைகள் ஏன்
பாடுகின்றன? இயல்பாக அவை எழுப்பும் ஒலிக்கும்
பாட்டுக்கும் என்ன வேறுபாடு?
இனப்பெருக்கக்
காலத்தில் சில பறவைகள் இணையைத் தேடுமுன் ஒரு சிறிய இடத்தைத் தமது இடமாகத் தேர்ந்தெடுத்து,
‘இது என் பகுதி இங்கு யாரும் வரக்கூடாது,’ என்பதைத் தனித்துவமிக்க ஒலியால், பாடலால்
அறிவிக்கின்றனவாம்.
ஆண் பறவைகள் மட்டுமே
பாடும் (குயில் மாதிரி). அப்படி ஓர் ஆண் பறவை பாடினால், அவ்விடம் அதற்கு 'முன் பதிவு' செய்யப்பட்டதாக
அர்த்தமாம். அது ஓர் ஒலி வேலி; (எவ்வளவு அழகான சொல்!) பெட்டையைக் கவர்வதற்கும் இது ஒரு உத்தி
என்கிறார், கானுயிர் ஆர்வலரான சு. தியடோர்
பாஸ்கரன் ‘தாமரை பூத்த தடாகம்,’ என்ற நூலில். (உயிர்மை பதிப்பகம்)
இக்குருவி அமர்ந்திருக்கும்
பெரும்பாலான நேரங்களில் வாலைத் தூக்கியே வைத்திருக்கிறது; தரையில் இருக்கும் பூச்சிகளை இரையாகக் கொள்கிறது.
இக்குருவிக்குச்
சலீம் அலியின் புத்தகத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் குண்டு கரிச்சான் என்ற பெயர் பொருத்தமாக இல்லையென்பதால்
கையடக்க ஏட்டில் கொடுத்த பெயரையே கொடுத்திருக்கிறேன்.
இதற்கு வேறு பெயர்கள்
உங்கள் பகுதிகளில் வழங்கினால், அவசியம் அனைவரும் அறியத் தாருங்கள்.
துணை நூற்பட்டியல்:- 1. பறவைகள்-அறிமுகக்
கையேடு
ப.ஜெகநாதன்
& ஆசை – க்ரியா பதிப்பகம்
2. பறவை உலகம் – சலீம் அலி – தமிழாக்கம் – பேராசிரியர்
எம்.வி.ராசேந்திரன்
3. தாமரை பூத்த தடாகம் – சு.தியடோர் பாஸ்கரன்
- உயிர்மை வெளியீடு.
4. மெளன வசந்தம் – ரெய்ச்சல் கார்சன் – தமிழில் பேராசிரியர்
ச.வின்சென்ட் – எதிர் வெளியீடு.
தொடர்வேன்,
நன்றியுடன்,
ஞா.கலையரசி.
(படம் இணையத்திலிருந்து எடுத்தது)
தங்களது அருமையான பதிவினில் -
ReplyDeleteஎனது கருத்தினையும் நினைவு கூர்ந்ததற்கு மிக்க நன்றி..
முந்தைய பதிவின் கருத்துரையில் தாங்கள் குறித்ததைப் போல
எனது அடுத்த பதிவு - கரிக்குருவி!..
(சரியாக அமைய வேண்டுமே என இப்போதே கவலையாக இருக்கின்றது!..)
பதிவு வெளியிட்டவுடனே பின்னூட்டமிட்டு ஊக்குவித்ததற்கு மிகவும் நன்றி துரை சார்! என் வேண்டுகோளை ஏற்று கரிக்குருவைப் பற்றிப் பதிவு வெளியிடப் போவதறிந்து மிகவும் மகிழ்ச்சி. உங்களிடம் இது பற்றிய விபரங்கள் இருப்பதால் நிச்சயமாக நல்லதொரு பதிவாக அமையும். அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!
Deleteஅதுதானே!?..
ReplyDeleteகரிக்குருவிக்கும் கருவாட்டுக்கும் என்ன சம்பந்தம்!..
கருவெட்டு வாலி என்பது தான் மருவி கருவாடு வாலி என்றானது - நயமான தகவல்!..
இருந்தாலும் நமக்கு வேண்டியவர்களுக்கு ஒரு செல்லப் பெயர் வைத்து அழைத்தால் - பாசம் கூடுகின்றதல்லவா!..
அதைப் போல - கரிச்சான் - கருவாட்டு வாலி என்பதெல்லாம் ஒரு பாசப்பிணைப்பு!..
நிறைய தகவல்களுடன் வருகின்றேன்.. மகிழ்ச்சி!..
கரிச்சானுடன் உங்களிடமிருக்கும் பாசப்பிணைப்பு நெகிழ வைக்கிறது. உங்கள் பதிவை ஆவலோடு எதிர்நோக்குகின்றேன் துரை சார்! மீண்டும் உங்களுக்கு என் நன்றி!
DeleteNice article.
ReplyDeleteஉங்களது முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி டீச்சர்!
Deleteசகோ,
ReplyDeleteநான் தலைப்பை எல்லாம் மாற்றச் சொல்லவில்லையே...!
ஒரு பதிவிற்குக் கருத்துரைக்கப் போய் ஏற்கனவே நான் சந்தித்த பிரச்சினைகள் போதாதா? :))
இயற்கையை, மரங்களை , பறவையை விலங்கை அவற்றின் வாழ்வியலை
நுணுகி அவதானித்த மரபிலிருந்து வந்தவர்கள் நாம்.
அவற்றோடு நம் பிணைப்பின் பதிவுகளை நம் பண்டைய இலக்கியங்களில் குறிப்பாகச் சங்க இலக்கியங்களில் பரக்கக் காணலாம்.
ஒரு ஓவியம் போல எழுத்தில் அவை தீட்டப்பட்டிருக்கும்.
(பழந்தமிழில் எழுத்தென்பதே ஓவியம்தான்)
இயற்கையிடம் இருந்து அகன்று கொண்டிருக்கும் ரசனையற்ற வாழ்வின் அபத்தத்தை உங்களைப் போன்றவர்களின் இது போன்ற பதிவுகள் சுட்டுவதாகக் காண்கிறேன்.
வழிவழியாக நம் மரபணுக்களில் தொடர்ந்து கொண்டிருக்கிற நம் பாரம்பரிய எச்சங்கள் இது போன்ற சிந்தனைகளைக் காணும் போது மீண்டும் ( மேலிருந்து கீழே விழத் திடுக்கிட்டெழும் கனவு போல ) கிளர்ந்தெழலின் பரவசத்தை அனுபவிக்க முடிகிறது.
நீங்கள் குறிப்பிடும் கார்சனின் புத்தகத்தை அதிகம் தமிழில் மேற்கோள் காட்டியவர், நம்மாழ்வார்.
ஆங்கிலத்தில் படித்திருக்கிறேன்.
மொழிபெயர்ப்பு வந்துள்ளதா...?
நிச்சயம் படிக்க வேண்டும்.
தங்களைத் தொடர்கிறேன்.
நன்றி
த ம கூடுதல் 1
வாங்க சகோ,
Deleteஉங்கள் வருகைக்கு நன்றி.
நீங்கள் மாற்றச் சொன்னீர்கள் என்று நான் குறிப்பிடவில்லையே, நீங்கள் சொன்ன சொல் எனக்குப் பொருத்தமாய்ப் பட்டதால் நான் மாற்றிவிட்டேன் என்று தானே சொல்லியிருக்கிறேன்?
“வழிவழியாக நம் மரபணுக்களில் தொடர்ந்து கொண்டிருக்கிற நம் பாரம்பரிய எச்சங்கள் இது போன்ற சிந்தனைகளைக் காணும் போது மீண்டும் ( மேலிருந்து கீழே விழத் திடுக்கிட்டெழும் கனவு போல ) கிளர்ந்தெழலின் பரவசத்தை அனுபவிக்க முடிகிறது.”
அருமையான இந்தச் சொற்றொடர்கள், எனக்குப் பரவசமூட்டுவதாய் அமைந்துள்ளன.
இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் மெளன வசந்தம் புத்தகம் பற்றி அதிகம் குறிப்பிடுவார் என்றறிந்தேன். இதன் மொழியாக்கம் டிசம்பர் 2013 ல் வெளிவந்து 2014ல் இரண்டாம் பதிப்பு கண்டிருப்பது விந்தையிலும் விந்தை! நம் தமிழர்கள் புத்தகம் வாங்கத் துவங்கியிருப்பது, மகிழ்ச்சியைத் தருகிறது.
விரிவான பின்னூட்டத்துக்கு மீண்டும் என் நன்றி!
முதல் ஓட்டு என்னுடையதா?
ReplyDeleteமகிழ்ச்சி
தமிழ் மண வாக்குக்கு அதுவும் முதல் வாக்குக்கு மீண்டும் என் நன்றி சகோ!
Deleteதகவல் களஞ்சியமான பதிவு சகோ
ReplyDeleteதமிழ் மணம் 2
வணக்கம் சகோ, தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி. தமிழ் மண வாக்குக்கு நெஞ்சார்ந்த நன்றி.
Deleteபறவை கூர்நோக்கல் சொல் அழகாக இருக்கிறது.
ReplyDeleteமிமிக்ரி - அநுகரணம், ஒலி வேலி எவ்வளவு அழகான சொற்கள். கொண்டு கரிச்சானைப் பற்றியும் அத்துடன் அழகான தமிழ்ச் சொற்களையும் அறியமுடிகிறது அக்கா உங்கள் பதிவில் வாழ்த்துக்கள்.
அடுத்த பதிவிற்கு ஆவலுடன்....
தம 1
வாருங்கள் காயத்ரி, வாழ்த்துக்கும், பதிவை ரசித்தமைக்கும் என் நன்றி. தம வாக்குக்கு மீண்டும் என் நன்றி காயத்ரி!
Deleteநம் மரபில் மறைந்த, இன்றும் நாட்டார் வழக்காற்றில் இருக்கின்ற, இயற்கையை உயிர்களை நமக்குச் சாதகமாக்கி நம்மை காத்துக் கொள்கின்ற நிறைய விடயங்களை நாம் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கத் தவறிவிட்டோம் என்றே தோன்றுகிறது.
ReplyDeleteஅதிகம் விமர்சிக்கப்பட்ட ( நல்லவேளை தடைசெய்யப்படவில்லை. தடைசெய்யப்பட்டிருந்தால் இதை இங்கு எடுத்தாண்டிருக்க முடியாது) பெருமாள் முருகனின் மாதொருபாகன் என்னும் நாவலில் நாயகன் காளியின் தொண்டுப்பட்டியில் அடைவைக்கப்படும் அத்தனை கோழிக்குஞ்சுகளும் ஒன்று கூட காக்கை கழுகு போன்ற பிற பறவைகளால் கொண்டு போகப் படுவதில்லை.
பிற கோழிகளின் முட்டைகளையும் பெற்று ஒரு முறைக்கு இருபது முட்டைகளுக்குக் குறையாமல் அடைவைத்து அத்தனை குஞ்சுகளையும் காப்பாற்றிவிடுவான் காளி.
இதன் ரகசியம் என்ன என்று கேட்கும் முத்துவிடம் ( காளியின் மைத்துனன் ) ஓலையை வெட்டாமல் அடர்த்தியாக வளர்ந்திருந்த பனை மரங்களைப் பார்க்கச் சொல்கிறான் காளி.
சற்று நேரத்தில் அதில் இரு கரிக்குருவிகள் மாறி மாறி வந்து போகும்.
காளி குஞ்சுகளைக் காப்பாற்றுவது இப்படித்தான்.
அக்கரிக்குருவிகள் அடர்த்தியான மரத்தில்தான் தங்களது கூடுகளைக் கட்டும். அவை அதற்காக நோட்டம் பார்க்க ஆரம்பிக்கும் போதே முட்டைகளை வாங்கி அடைவைத்துவிடுவான் காளி.
அவை முட்டையிட்டுக் குஞ்சு பொறித்து வெளிவரும்வரை எந்தப்பறவையும் அந்தப்பக்கத்தில் நெருங்க முடியாது.
கைப்பிடிக்குள் அடங்கிவிடுவதுபோலக் கரிக்குருவியின் உருவம் சிறியதுதான். வால் நீண்டு இரட்டையாகப் பிரிந்திருக்கும். ஆனால் கூட்டைக் காவல் காக்கும் நேரத்தில் அதன் வலிமை பெரிது. பெருங்கழுகையே விசையோடு கொத்தி விரட்டியடித்துவிடும்.
இந்தக் கரிக்குருவியின் காவலைப் பயன்படுத்தி தன் கோழிக்குஞ்சுகளை பிற பறவைகள் கொண்டு போகாமல் வளர்த்தெடுத்திவிடுவான் காளி.
கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், காலம் காலமாக இது போன்ற மக்கள் மரபு வழி பெற்ற அனுபவம், அதனால் கிடைத்த அறிவு, அதையெல்லாம் பாமரத்தனமென்று படிப்பறிவை முன் வைத்து ஏளனம் செய்கின்ற அறியாமைகளால் நாம் இழந்த பல விடயங்களைக் காண இயலும்.
தங்கள் பதிவினோடு தொடர்புடைய செய்தி என்பதால் பகிர நேர்ந்தது.
அதிகப்பிரசங்கித்தனம் என நினைத்துவிடமாட்டீர்கள் என்கிற நம்பிக்கையின் பேரில்.
நன்றி‘!
மாதொரு பாகனில் வரும் காளி போல் இயற்கையை நமக்குச் சாதகமாக்கி நம்மைக் காத்துக்கொள்கிற பல விஷயங்களை நாமும் மறந்து விட்டோம் நம் தலைமுறைக்கும் கடத்த தவறிவிட்டோம் என்று நீங்கள் சொல்லியிருப்பது நூற்றுக்கு நூறு உண்மை. இதனால் நாம் இழந்தது எவ்வளவோ!
இயற்கையோடியைந்து வாழ்ந்தால் மற்ற உயிரினங்களை விட மனிதனுக்குத் தான் பெருத்த நன்மை என்பதை மறந்து விட்டோம். இதன் விளைவை இப்போது அனுபவிக்கத் துவங்கியுள்ளோம். இது எங்குப் போய் முடியுமோ?
கரிக்குருவி அடைகாக்கும் சமயம் அதன் எல்லையில் பல சிறு பறவைகள் தைரியமாக அடைகாத்துக் குஞ்சு பொரிக்கும் என்று இப்புத்தகங்களைப் படித்துத் தெரிந்து கொண்டேன். ஆனால் மனிதர்களே அதன் தயவில் கோழிக்குஞ்சுகளைக் காப்பாற்றும் விஷயமறிந்து வியப்பாய் இருக்கிறது. நாட்டார் வழக்கில் இது இன்றும் இருக்கிறது என்பதை அறிய வியப்பு இன்னும் அதிகமாகிறது.
இந்தச் சின்னஞ்சிறு பறவைக்குத் தான் எவ்வளவு வலிமை? ஆங்கிலத்தில் இதனை DIVE BOMB என்று சொல்கின்றனர். டைவ் அடித்து சரியான இலக்கைக் குறிதவறாமல் சென்று தாக்கும் திறன் கொண்டதாம் இது!
நம் கூடவே வாழும் இப்பறவையைப் பற்றி இத்தனை விஷயங்களைத் இது நாள் வரை தெரிந்து கொள்ளாமல் இருந்திருக்கிறோமே என்று நினைக்கும் போது வெட்கமாகவும், வேதனையாகவும் இருக்கிறது.
நமக்குத் தெரிந்தது கூட நம் தலைமுறைக்குத் தெரியவில்லையே என்று நினைக்கும் போது வேதனை இன்னும் அதிகமாகிறது.
தமிழ்நாட்டில் எழுத்தாளர்களைத் தாக்கும் போக்கு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. எழுத்தாளர் பெருமாள் முருகன் இறந்து விட்டார் என்று அவர் கொடுத்த அறிக்கையைப் படித்த போது மிக மிக வேதனையாயிருந்தது. இப்போது அடுத்ததாக புலியூரில் இன்னுமோர் எழுத்தாளர் மீது தாக்குதல்!
நீங்கள் எழுதிய இந்த விபரங்கள் என் பதிவுக்குத் துணை செய்பவை. சுவை கூட்டுபவை. எவ்வளவு அரிய, அருமையான செய்தியைச் சொல்லியிருக்கிறீர்கள்? இதில் அதிகபிரசங்கித்தனம் எங்கிருந்து வந்தது?
இத்தொடர் துவங்கும் போதே, இது சம்பந்தப்பட்ட கருத்துக்களை எழுதுங்கள் என்றல்லவா நான் வேண்டுகோள் விடுத்தேன். ஓரிரு வரிகளில் பிரமாதம், அருமை என்று சொல்லிச்செல்வதை விட இப்பதிவுக்குச் சம்பந்தப்பட்ட விபரங்களை விரிவாக அறியத் தருவது எவ்வளவு உயர்வான செயல்? நான் இத்தொடருக்காகப் புத்தங்களில் படித்துத் தெரிந்து கொண்டதை விட நீங்கள் அனைவரும் எழுதிய பின்னூட்டக் கருத்துக்கள் மூலம் பல புதிய விஷயங்களைக் கற்றுக் கொண்டேன். அனுபவம் தான் மிக உயரிய பாடம்!
என் பதிவுக்குத் தொடர்புடைய கருத்துக்களை நீங்கள் தொடர்ந்து தரவேண்டும் என வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன், மீண்டும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவிக்க மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்.
புதிய தகவல்கள் அறியக்கூடியதாக இருக்கின்ற பகிர்வு.
ReplyDeleteபதிவைப் பாராட்டிக் கருத்துரைத்தமைக்கு மிகவும் நன்றி சார்!
Deleteபறவை பற்றிய விவரம் சொல்லி வரும்போது தொடர்புடைய பல விவரங்கள் சொல்லித் தொடர்வது சுவாரஸ்யமானவை. இந்தத் தொடரை நீங்கள் பின்னர் புத்தமாகப் போடலாம்.
ReplyDeleteதியோடர் பாஸ்கரனின் தாமரை பூத்த தடாகம் புத்தகத் தலைப்பு படித்தால் நூலடக்கம் இதைப் பற்றி என்பது அறிவதில் சிரமம் இருக்கும் என்று தெரிகிறது. பறவைகள் பற்ற மட்டுமா? அல்லது காடு வாழ் விலங்குகள் குறித்துமா?
மௌன வசந்தம் - அழகிய வார்த்தை.
என்னைக் குறிப்பிட்டு இருப்பதற்கு நன்றி. தொடர்கிறேன்.
வாங்க ஸ்ரீராம்! இத்தொடரைப் புத்தகமாகப் போடலாம் என்ற தங்களின் யோசனைக்கு நன்றி. புத்தகம் போடுவது பெரிய பிரச்சினையில்லை; விற்பது தான் பெரும் பாடு.
Deleteபுத்தகங்கள் விற்க வேண்டும் என்றால் ஒன்று நான் ஜனரஞ்சக பத்திரிக்கைகளில் எழுதும் பிரபல எழுத்தாளராக இருக்க வேண்டும்; அல்லது வலையுலக பிரமுகராக இருக்க வேண்டும். நான் இரண்டும் இல்லை.
ஒரு வேளை இதற்கு நூலாக வெளிவரக்கூடிய பிராப்தம் இருந்து, என்றேனும் ஒரு நாள் வெளிவந்தால், புத்தக முன்னுரையில் என் முதல் நன்றியைக் கண்டிப்பாக உங்களுக்குத் தான் சொல்வேன்.
கட்டுரை சுவாரசியமாக இருப்பதறிந்து மகிழ்ச்சி. வெறும் பறவைகளின் விபரங்களை வரிசையாகத் தொகுத்துக் கொடுத்தால் வாசிப்பதற்கு சுவாரசியமாக இருக்காதென்பதால், அது சம்பந்தப் பட்ட விபரங்களையும் இடையிடையே சேர்த்துத் தருகின்றேன்.
சுற்றுச்சூழல் மாசுபடுதல், அபூர்வ உயிரினங்களின் அழிவு, புள்ளினங்கள், விலங்குகள் ஆகியவை குறித்து சு.தியடோர் பாஸ்கரன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே தாமரை பூத்த தடாகம் என்ற நூல். ஒரு கட்டுரையின் தலைப்பையே நூலின் பெயராகவும் வைத்திருக்கின்றார்.
ஆப்பிரிக்காவில் நக்கூரா என்ற பறவை சரணாலயத்தைப் பற்றிய கட்டுரை இது. பூநாரைகள் இங்கு லட்சக்கணக்கில் இருக்கின்றனவாம். அங்குப் பயணம் செய்த அனுபவத்தை எழுதியிருக்கின்றார். லட்சக்கணக்கில் ரோஸ் நிறத்தில் பூ நாரைகள் நிறைந்த ஏரியின் காட்சி தாமரை பூத்த தடாகம் போல் இருந்தது என்று வர்ணிக்கிறார்.
தொடர்வதற்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி ஸ்ரீராம்!
பெயர் விளக்கமும் அருமை...
ReplyDeleteஇணைய இனிய நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
வாங்க தனபாலன் சார்! உங்கள் தளத்தில் வலையுலக நுட்பம் பகுதியைப் படித்து unjal.blogspot.in என்ற என் தளத்தை blogspot.com என்று மாற்றிக்கொண்டேன். அதற்கு உங்களுக்கு என் நன்றி. கொண்டு கரிச்சான் குரலை என் செல்போனில் பதிந்து வைத்திருந்தேன் அதை எப்படி இப்பதிவில் சேர்ப்பது என்று தெரியவில்லை. அதற்கு உங்களது பதிவின் இணைப்பைக் கொடுத்தால் நல்லது. கூடுமானவரை முயன்று விட்டு முடியவில்லையென்றால் சந்தேகம் கேட்பேன்.
Deletehttp://dindiguldhanabalan.blogspot.com/2014/04/how-to-add-mp3-in-blogger.html
Deleteமேலே உள்ளது தனபாலன் அவர்களின் பதிவுக்கான இணைப்பு. இதில் ஒலிப்பதிவை எப்படி வலைப்பதிவில் இணைப்பது என்று அழகாக வழிகாட்டியுள்ளார். அவர் காட்டிய வழியில்தான் நான் கீழ்க்காணும் என்னுடைய தோட்டத்துப் பறவைகள் பதிவில் பறவைகளின் ஒலியை இணைத்திருக்கிறேன்.
http://www.geethamanjari.blogspot.com.au/2014/05/blog-post_2.html
இதே பகுதிக்குத் தான் சென்றேன் கீதா. ஆனால் பாதிக்கு மேல் செய்யத் தெரியவில்லை. 2 ஸ்டெப் மட்டும் வரை சென்றேன். நீ தான் எனக்கு உதவ வேண்டும். நான் கைபேசியில் பதிந்திருப்பது அவ்வளவு தெளிவாக இல்லையென்றாலும் கொண்டு கரிச்சானின் குரல் எப்படியிருக்கும் என்று அறிய விரும்புவோருக்காக இதைப் பதிய விரும்புகிறேன்.
Deletemp3 கைபேசியிலிருந்து கணினிக்கு மாற்றியாச்சா...? mp3 ஆக மாற்ற இதுவும் (http://www.convertfiles.com/) உதவும்...
Deleteஅந்தப் பதிவில் மூன்றாவதில் உள்ளது போல் செய்தால் வரும்... முயற்சி செய்யுங்கள்...
முடியவில்லை என்றால் தொடர்பு கொள்ளுங்கள்...
dindiguldhanabalan@yahoo.com
09944345233
நீங்கள் சொன்னது போலவே நோட் பாடிலும் சேமித்துவிட்டேன். அதற்குப் பிறகும் ஒலிக்கவில்லை. பின்னர் கீதா தான் இணைத்துக்கொடுத்தார்.என்னுடையது m4a ஆக இருந்ததாம். அதை mp3 ஆக கீதா தான் மாற்றிக்கொடுத்திருக்கிறார். இன்று வெளியிட்டிருக்கிறேன். மிக்க நன்றி தனபாலன் சார்! உங்கள் பதிவு மிகவும் உதவியது.
Deleteநீங்கள் பறவையானால்...?
ReplyDeletehttp://dindiguldhanabalan.blogspot.com/2013/10/If-you-are-a-BIRD.html
விரைவில் படித்து விட்டுக் கருத்திடுவேன். நன்றி
Deleteகடந்த பதிவையும் படித்தேன். வித்தியாசமான கோணத்தில் புதிய செய்திகளைத் தந்துள்ள விதம் நன்று
ReplyDeleteநன்று என்று பாராட்டியமைக்கு மிகவும் நன்றி சார்!
Deleteஅருமையான விளக்கம். வாழ்த்துகள்.
ReplyDeleteவாங்க மகேஸ்வரி! தொடர்ந்து வந்து கருத்திடுவதற்கு நன்றி!
Deleteநாம் தினமும் பார்த்து ரசிக்கும் பறவைகளைப் பற்றியே நமக்கு போதுமான அளவு புரிதல் இல்லையென்று நினைக்கையில் ஆதங்கமாக உள்ளது. நானும் ராபின் என்ற அளவில்தான் தெரிந்துவைத்திருந்தேன். கொண்டு கரிச்சான் என்பது எவ்வளவு அழகான தமிழ் வார்த்தை. கருவெட்டு வாலியின் காரணப்பெயர் ரசிக்கவைக்கிறது. பறவைகளோடு அவை தொடர்பான பல்வேறு இலக்கியத் தகவல்களையும் வழங்குவது சிறப்பு. பாராட்டுகள் அக்கா.
ReplyDeleteஆமாம் கீதா இதை எழுதத் துவங்கிய பின் தான் நாம் தினமும் பார்க்கும் பறவைகள் பற்றி இவ்வளவு விபரங்கள் தெரியாமல் இருந்திருக்கிறோம் என்பது தெரிகிறது. ரசித்துப் பாராட்டியமைக்கு மிகவும் நன்றி கீதா!
Deleteமாதொரு பாகன் வாசித்தபோது நானும் இந்த கரிச்சான்குருவியின் சிறப்பையும் அதன் வீரத்தை மனிதர்கள் தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளும் சாதுர்யத்தையும் வியந்து ரசித்தேன். இங்கு அந்தத் தகவலை நினைவுகூர்ந்தமை நன்றி. தங்களுக்கும் விஜி சாருக்கும் மிக்க நன்றி. நீங்கள் குறிப்பிடுவது போல் பின்னூட்டங்கள் வாயிலாய் பல புதிய தகவல்கள் அறிவது இந்தப் பதிவுக்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது. தொடரட்டும் இம்முயற்சி.
ReplyDeleteமாதொரு பாகன் வாசித்து விட்டாயா? நான் இன்னும் புத்தகமே வாங்கவில்லை. இவர் எழுதிய கூளமாதாரி வாங்கி வைத்திருக்கிறேன். இன்னும் வாசிக்கத் துவங்கவில்லை. இத்தொடருக்குப் பின்னூட்டங்கள் மூலம் நிறைய விபரங்கள் தெரிந்து கொள்ள முடிந்திருக்கிறது. அதற்கு உங்கள் எல்லோருக்கும் தான் நன்றி சொல்ல வேண்டும்!
Deleteமாதொருபாகன் நூலுக்கு எதிர்ப்பு கிளம்பியபோது பலரும் கண்மூடித்தனமாய் அதில் என்ன விஷயம் இருக்கிறது என்றும் அறியாதவர்களாய் குறிப்பிட்ட இரண்டு பக்கங்களை மட்டுமே வைத்துக்கொண்டு போராட்டத்தில் இறங்கியிருந்தனர். அப்போது இணையத்தில் அவரது புத்தகம் முழுவதுமே பிடிஎஃப் வடிவில் வெளியிடப்பட்டது. முழுவதுமாய் அனைவராலும் வாசிக்கப்படவேண்டும் என்ற நோக்கில் பலரும் வெளியிட்டார்கள். என்னிடம் உள்ள ஆக்கத்தை உங்களுக்கு மெயிலில் அனுப்புகிறேன்.
Deleteவாலைத்தூக்கியபடி அமர்ந்திருக்கும் இந்தப்பறவையைப் பார்க்கவே அழகாக உள்ளது.
ReplyDelete//'கொண்டு கரிச்சான்,' மைனாவை விடச் சற்றுச் சிறியது; இதன் தனித்தன்மை குரல் வளம் தான். அதிகாலை நேரத்தில் சீழ்க்கை ஒலி போலத் தொடர்ந்து, இது பாடும் பாடலைக் கேட்கலாம்; கேட்கலாம்; கேட்டுக்கொண்டே இருக்கலாம். அவ்வளவு இனிமை!//
:)))))
இந்தப்பதிவும், அதைவிட பலரும் கொடுத்துள்ள பின்னூட்டங்களும் படிக்க மிகவும் சுவாரஸ்யமாக உள்ளன. நான் மிகவும் தாமதமாக வந்ததால் கிடைத்துள்ள உபரியான லாபம் இது. :)
பறவையை ரசித்தமைக்கும் பின்னூட்டங்களைப் பொறுமையாகப் படித்து ரசித்தமைக்கும் மிகவும் நன்றி கோபு சார்! சில நாட்கள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் உங்கள் வரவு மகிழ்ச்சியளிக்கிறது!
ReplyDeleteஎங்கள் கொங்கு பகுதிகளில் கரிச்சான்குருவியை "கரிக்குருவி"-என்றே குறிப்பிடுகிறார்கள் இதன் வால் மீனின்வாலைப்போல பிளவுபட்டிருப்பதால் கருவாட்டுவாலி என ஒருசில இடங்களில் குறிப்பிடுவதாக படித்திருக்கிறேன்.தமிழில் பறவைகளுக்கான நல்ல புத்தகங்களும் கையேடுகளும் வந்தால் பறவை ஆர்வலர்களுக்கு உதவியாக இருக்கும்.தங்கள் இந்த முயற்சி பாராட்டுதலுக்குரியது நன்றி...
ReplyDeleteஎங்கள் கொங்கு பகுதிகளில் கரிச்சான்குருவியை "கரிக்குருவி"-என்றே குறிப்பிடுகிறார்கள் இதன் வால் மீனின்வாலைப்போல பிளவுபட்டிருப்பதால் கருவாட்டுவாலி என ஒருசில இடங்களில் குறிப்பிடுவதாக படித்திருக்கிறேன்.தமிழில் பறவைகளுக்கான நல்ல புத்தகங்களும் கையேடுகளும் வந்தால் பறவை ஆர்வலர்களுக்கு உதவியாக இருக்கும்.தங்கள் இந்த முயற்சி பாராட்டுதலுக்குரியது நன்றி...
ReplyDeleteஉங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி சிவா சார்! வாலில் பிளவுப்பட்டிருப்பதால் கருவெட்டு வாலி என்ற காரணப்பெயர் ஏற்பட்டுப் பின் அது கருவாட்டு வாலியாக பேச்சு வழக்கில் மாறியிருக்கவேண்டும். கிரியா பதிப்பகத்தின் ஜெகநாதன் & ஆசை எழுதிய பறவைகள் கையேடு மிகவும் தரமாக இருக்கின்றது. நம்மூரில் பரவலாகக் காணப்படும் பறவைகளைப் பற்றி அறிந்துகொள்ள இந்நூல் உதவும். உங்கள் பாராட்டுக்கு மீண்டும் என் நன்றி!
ReplyDeleteதகவல்கள் அற்புதம் ...நன்றி!!!
ReplyDelete