நல்வரவு

வணக்கம் !

Friday, 7 October 2016

என் பார்வையில் - துயரங்களின் பின்வாசல் - கவிதை நூல்


ஆசிரியர்;- உமா மோகன்
வெளியீடு:- வெர்சோ பேஜஸ், புதுச்சேரி. செல் - 9894660669
விலை:-ரூ 80/-
பிற கவிதை நூல்கள்:- டார்வின் படிக்காத குருவி
                                          ஆயி மண்டபத்தின் முன் ஒரு படம்
                       
புதுவை அகில இந்திய வானொலி நிலையத்தில் முதுநிலை அறிவிப்பாளராகப் பணிபுரியும் உமாமோகன், என் தோழியும், குடும்ப நண்பருமாவார்.

இந்நூலை இவர் பரிசளித்து, நான்கு மாதங்களுக்கு மேலாகிவிட்டன.  இப்போது தான், இதை வாசிக்கும் வாய்ப்புக்  கிட்டியது.  சூட்டோடு சூடாக நான் ரசித்தவற்றை உங்களிடம் பகிர விரும்பியே இப்பதிவு.


தம் உரையில் இவர் கூறியிருப்பதாவது:-
“எளியவர் கண்ணீரிலிருந்து ஊறும் மசி, நமது எழுதுகோலில் இருப்பதை உணர்ந்தால், நாம் அனைவருமே துயரங்களின் பின்வாசலில் காத்திருப்போம். 
அவை வெளியேறும் நேரத்தில், மீண்டும் நுழையாதபடி இறுக்கித் தாழிட்டுவிட மாட்டோமா என்ற தவிப்போடு…
ஒரு கவிதையால் பூமி புரண்டுவிட வேண்டாம்.  வாசிப்பவர் கண்ணோரம் ஒரு துளி.. இதழோரம் ஒரு கீற்று.. நெஞ்சோரம் ஒரு மின்னல்…போதும்!”

சென்னை பெருவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களின்  கண்களிலிருந்து ஆறாய்ப் பெருக்கெடுத்தோடிய  நீர், இவர் எழுதுகோலில் இருப்பதை, மழை, வெள்ளம் பற்றிய இவர் கவிதைகள் உறுதிசெய்கின்றன:-

கவிதை :- 1 - துரத்தும் திரவம்
………………………
வழியும்நீர்
அழிவின் நிழல் போல்
ஆயிரமாயிரம் கிளைகொண்டு
பெருகிப் படர்ந்து
அச்சத்தின் சிறையில் தள்ளுகிறது
……………….
விக்கித்து நிற்கும் கையிலிருந்து
நீர்க்குவளை வாங்கி
வார்க்கிறாள் கண்ணம்மா
நீர்கொண்டோடிய உறவின் முகங்கள்
நீரில் தெரியாதபடி
கண்ணை இறுக்கிக் கட்டிக்கொள்
என்னைப்போல் என்றபடி.     

கவிதை:- 2  இயல்புநிலை
………………………….
மழை, ஆறு, ஏரி, குளம், தண்ணீர்
இதெல்லாம் கேட்ட மாத்திரம்
நடுங்க வைத்த கெட்ட வார்த்தைகளாக
இருந்தது மாறி,
பாரம்பரிய கெட்ட வார்த்தைகளைக்
கண்டு கொள்ள முடிவதால்
இயல்புநிலை
திரும்பித்தான் விட்டது போலும்.
வாசலில் குழையும் சொறிநாய்க்கு
ஒருவாய் போட்டால் மட்டுமே
சோறுண்ணும் பழக்கமுள்ள
கைப்பிள்ளைக்குத் தான்
எப்படிப் புரியவைப்பது
வாசலுமில்லை
நாயுமில்லை
சோறுமில்லை என்ற
இந்த இயல்பு நிலையை.

சமூக சிந்தனை
இவர் கவிதைகளில் காணப்படும் சமூக சிந்தனை என்னை எப்போதும் கவர்வது.  இன்றைய சமூகச்சீர்கேடுகளையும், அவலங்களையும் கண்டு இவர் மனம் கொதிக்கிறது; வயிறு பற்றியெரிகிறது.
கெளரவக் கொலை என்ற பெயரில், பெருகி வரும் ஆணவக் கொலை பற்றி:-

1.     இருக்கட்டும் மரண தண்டனை
“பற்ற வைத்த போது
உருகாது உன்மத்தம் கொண்டிருந்த
உங்கள் …….
(அதையும் இதயம் என இயலுமா)
கரிந்த போதும்
ஐஸ்கட்டிகளின் மேல் கிடத்தியிருந்த
இரு துணிமூட்டைகளைக் கண்டபோதும்
உங்களையே நினைத்து
அருவருப்பில் பிதுங்கி
வெளியே விழவில்லையா பாவிகளே……….”

2.      எரிகிறது எம் வயிறு  (பரிதாபாத் பாதகத்தின் பின் எழுதப்பட்டது)
……….
முதல் வீறலில்
தேவகானம் கேட்காதவன்
குப்புற விழுந்து தலைதூக்கிப்
பார்க்கும் பார்வையில் சொக்காதவன்
……….
இவனெல்லாம் கூட
ஒரு தீச்சுடர்
தொடமாட்டான்
குழந்தையிருக்கும் கூடு கொளுத்த.
எங்கிருந்து வந்தீர்கள்?
ஒரு தாயின்
கர்ப்பத்திலிருந்து என்று மட்டும்
சொல்லாதீர்கள்
அழுக்குத் திரள்களே!

3.    எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
………….
கண்ணுக்கெட்டியவரை
கல்வளர்ந்த நகரின் நடுவே
எங்கிருக்கிறதோ
எங்கள் பத்தாயத்தின் கல்லறை………..

பெண்ணியம்
பெண்ணியம், பெண் முன்னேற்றம் குறித்த கவிதைகளில், என்னை மிகவும் கவர்ந்தவை:-  

1.    என்னைச் செதுக்கிய உளி
இன்னும் இன்னும் மேம்படுதல்
எனது நோக்கம்
……
கடைசிவரை
தெரியவேயில்லை
நான் ஓவியமில்லை
சிற்பமென்று.
அது தூரிகையில்லை
உளியென்றே தெரியாத அளவு
செதுக்கிக் கொண்டிருந்த உன்
திறனைக் குறிப்பிட்டே
என் வரலாறு முடியவேண்டும்

கவிதை - 2
பார்ப்பதே களைப்பு உனக்கு
பறத்தலின்
சுகம் அறியாய்
அலங்காரத்துக்கேனும்
சிறகு விரித்துப்பார்

கவிதை – 3  மாட்டிக்கொண்டது
முன்பெல்லாம் ரஞ்சி அக்கா மஞ்சள் கயிறு அணிந்திருந்தாள்.  அது போன பிறகு, இப்போது அவள் கழுத்தில் ஒரு சிவப்புக் கயிறு தொங்குகிறது.
…………..
உதைக்க யாருக்கும் உரிமம் தராத
இந்தக் கயிறு பற்றி
முன்பே அறியவில்லையே
என்பதே அவள் வருத்தம்!

கவிதை – 4  எவ்வளவோ மாறிட்டோம்
மகளிர் தினம் ஏற்படுத்தப்பட்டதன் உண்மையான நோக்கம் மறைந்து, மேல், நடுத்தர வகுப்பு மகளிரின்  கொண்டாட்ட தினமாக மாறிப்போனதை,  இவர் எப்படிக் கேலி  செய்கிறார் பாருங்கள்!:- 

கீரைக்கட்டு விற்று ஐம்பது ஐம்பது காசுகளாகச் சேர்க்கும்
தருமாம்பா கிழவி, கணவனின் சாராய நெடி அடிக்கும் சட்டையை இரவலாக அணிந்து, கல் சுமக்கும் கனகா, நள்ளிரவில் தெருக்கூட்டும் செல்வி இவர்கள்
“எவர்க்கும் சொல்லாமலே
இந்த வருடமும்
வருகிறது மகளிர்தினம்.
தவறாமல் தருவார்கள்,
வைர நகைகளுக்குத் தள்ளுபடி!
இவர்களோ இப்போது
வைரம் என்று எவருக்கும்
பெயர் கூட வைப்பதில்லை
பழசா இருக்காம்! 

கவிதை – 5  - நகரு அல்லது நகரவிடு
நிழல் எனக்குப் பிடிக்கவில்லை
தேவையாகவும் இல்லை
…………………..
போதும் நிழலில் இருந்தது
நகரு அல்லது நகரவிடு
வெயிலின் ருசி அறிய வேண்டும். 
வெயிலைப்பற்றி நீ அச்சுறுத்தியதெல்லாம்
 நிஜமாகவே இருக்கட்டும்

நகைச்சுவை
இவர் கவிதைகளில் நகைச்சுவைக்கும் பஞ்சமில்லை.
எடுத்துக்காட்டுக்கு இரண்டு:-

1.     கமல்ஹாசன் சொல்லாத தீபாவளி
…………………………………..
“நாலாயிரத்தில் தொடங்கும்
பருத்திப் புடவையை விரித்து
“கிரேட் லுக் மேடம்! ஹைஃபையா இருக்கும்”
என்றெல்லாம் கவர்வது
கட்பீஸ் கடைக்காரர் மகன்தான்;
சமீபத்தில் பழகிய கழுத்துப்பட்டியைத்
தளர்த்த முடியாமல் சிரிக்கிறார்.
முடிந்தால் வீட்டுக்கு அழைக்க வேண்டும்
நண்பர்கள் அனுப்புவதில்
சுமாரான கடையின் இனிப்புப் பெட்டியில்
ஒன்றைக் கொடுத்து அனுப்பலாம்,”

2.    என் பெயர் நீலா
……………………
கரைத்துக் கரைத்து ஊற்றினாலும்
நான் வளர்கிறேன்
எனக் குதிக்காத பிள்ளை
உங்களைப் போலவே கிண்ணத்தில் குழைத்து
ஊட்டியபோது ‘களுக்,’ கெனச் சிரிக்காமல்
தூவெனச் துப்பி, விழுங்கினால்
வீறிட்ட செல்வமல்லவா?
…………………..
நான் வளர்கிறேனே மம்மி,’ என்ற காம்ப்ளான் விளம்பரம் பார்த்தவர்களுக்கு, முதல் மூன்று வரிகள், பட்டெனப் புரியும்).

கடந்து போன வாழ்வைக் கடக்க முடியாமலும், வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்வில் நிலை கொள்ளாமலும் காலத்தின் முன்னும் பின்னும் பயணித்துக் கொண்டிருக்கும் உமா மோகனின் தவிப்புகளே இக்கவிதைகள்,” என்று முன்னுரையில் சொல்லியிருக்கும் கவிஞர் அ.வெண்ணிலாவின் வார்த்தைகளை வழிமொழிகிறேன்.  இன்னும் இது போல் பல நூல்கள் வெளியிடவேண்டும் என ஆசிரியரை வாழ்த்துவதில் மகிழ்கிறேன்.

நன்றி, வணக்கம்.

30 comments:

  1. கவிதை நூல் அறிமுகம் மிகவும் அருமையாக உள்ளது. நூலாசிரியரும் தங்களின் குடும்ப நண்பருமான தங்களின் தோழிக்குப் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

    தங்களுக்கும் இந்தப்பகிர்வுக்கும் நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் முதல் வருகைக்கும், அருமை என்ற பாராட்டுக்கும் மிகவும் நன்றி திரு கோபு சார்!

      Delete
  2. //முடிந்தால் வீட்டுக்கு அழைக்க வேண்டும்
    நண்பர்கள் அனுப்புவதில்
    சுமாரான கடையின் இனிப்புப் பெட்டியில்
    ஒன்றைக் கொடுத்து அனுப்பலாம்,”//

    ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா .... ரஸித்தேன், சிரித்தேன். :)

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சார்! ஒவ்வொரு தீபாவளியின் போதும் இது போல் தரம் பிரிக்கும் வேலையை நானே செய்வேன் என்பதால்,இந்த வரிகளைப் படித்த போது எனக்கும் சிரிப்பு வந்தது. ரசித்துப் பாராட்டியமைக்கு நன்றி சார்!

      Delete
    2. மிக்க நன்றி சார்

      Delete
  3. என்னைச் செதுக்கிய உளி இன்னும் இன்னும் மேம்படுதல் எனது நோக்கம்
    ……
    கடைசிவரை
    தெரியவேயில்லை
    நான் ஓவியமில்லை
    சிற்பமென்று.
    அது தூரிகையில்லை
    உளியென்றே தெரியாத அளவு
    செதுக்கிக் கொண்டிருந்த உன்
    திறனைக் குறிப்பிட்டே
    என் வரலாறு முடியவேண்டும்//

    இது எனக்கு மிகவும் பிடித்துள்ளது. என் ஸ்பெஷல் பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்குப் பிடித்த வரிகளை எடுத்துக்காட்டிப் பாராட்டியமைக்கு மீண்டும் என் நன்றி சார்!

      Delete
  4. ஒரு பானை சோற்றின் பலசோற்றுப் பதம்.

    படிக்கக் குறித்துக் கொண்டேன்.

    தொடர்கிறேன்.

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ! வணக்கம். குறித்துக் கொண்டமைக்கும், தொடர்வதற்கும் நன்றி!

      Delete
    2. மிக்க நன்றி சகோ

      Delete
  5. அருமையான கண்ணோட்டம்

    ReplyDelete
    Replies
    1. அருமையான கண்ணோட்டம் என்ற பாராட்டுரைக்கு மிகவும் நன்றி காசிராஜலிங்கம் அவர்களே!

      Delete
  6. >>>
    இவனெல்லாம் கூட
    ஒரு தீச்சுடர்
    தொடமாட்டான்
    குழந்தையிருக்கும் கூடு கொளுத்த
    எங்கிருந்து வந்தீர்கள்?..
    ஒரு தாயின்
    கர்ப்பத்திலிருந்து என்று
    மட்டும் சொல்லாதீர்கள்
    அழுக்குத் திரள்களே!..
    <<<

    கவிதைச் சாலையில் - சமூக உணர்வு முன் நடந்திருக்கின்றது..

    அழலூட்டும் வரிகளுக்கு தங்களது விமரிசனம் அழகூட்டுகின்றது..

    வாழ்க நலம்!..

    ReplyDelete
    Replies
    1. பிடித்த வரிகளை எடுத்துச் சொல்லிக் கருத்துரைத்தமைக்கு மிகவும் நன்றி துரை சார்!

      Delete
  7. //பறத்தலின்
    சுகம் அறியாய்
    அலங்காரத்துக்கேனும்
    சிறகு விரித்துப்பார்.. //

    மனத்தில் சிக்கிக் கொண்ட வரிகள்.

    எங்காவது உபயோகப்படுத்தி விட்டால், மீட்டெடுத்து விடலாம்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் பிடித்த வரிகளைக் குறிப்பிட்டமைக்கும் நன்றி ஜீவி சார்!

      Delete
  8. அருமையான கவிதை நூல். விமர்சித்த விதம் அதைவிட அருமை. நூலாசிரியருக்கு பாராட்டுகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. அருமையான விமர்சனம் என்ற பாராட்டுக்கும் தங்கள் வருகைக்கும் நன்றி முனைவர் ஐயா!

      Delete
  9. அருமையான நூலினை அறிமுகம் செய்தமைக்கு நன்றி சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ! அருமையான நூலின் அறிமுகம் என்ற கருத்துக்கு மிகவும் நன்றி!

      Delete
  10. தோழி உமா மோகன் அவர்களின் கவிதைகளின் பெரும் விசிறி நான். மேலோட்டமாய் வாசிக்கும்போது புரியாத சில விஷயங்கள் ஆழ்ந்துவாசிக்கும்போது பிடிபட்டுவிடுவது அவருடைய கவிதைகளின் சிறப்பு. துயரங்களின் பின்வாசல் தலைப்பும் உரிய கவிதைகளின் தொகுப்பும் பிரமாதம். அழகாகத் தொகுத்து வழங்கி கவிதை நூலை முழுவதுமாய் வாசிக்கும் ஆவலைத் தூண்டிடும் அறிமுகம் & விமர்சனம். நன்றி அக்கா. பாராட்டுகள் தோழி.

    ReplyDelete
    Replies
    1. வாசிக்கும் ஆவலைத் தூண்டும் விதமாய் நூல் அறிமுகம் இருப்பதறிந்து மகிழ்ச்சி கீதா! பாராட்டுக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி கீதா!

      Delete
    2. மிக்க நன்றி கீதா

      Delete
  11. மிகுந்த மகிழ்ச்சி ...தோழி கலையரசியின் ஆழ்ந்த பொருத்தமான நுண்ணிய விமர்சனம் ..நண்பர்களின் வாழ்த்துகள் அனைத்தும் என்னை இன்னும் மேம்படுத்திக் கொள்ளத் துணை நிற்கும் .மிக்க நன்றி

    ReplyDelete
  12. வாங்க உமா! ஆழ்ந்த பொருத்தமான நுண்ணிய விமர்சனம் என்று கருத்து கண்டு மகிழ்ந்தேன். நூலை வாங்கி வாசிக்கும் ஆவலைத் தூண்டும் விதமாக நூல் அறிமுகம் இருப்பதறிந்து மகிழ்ச்சி. வாழ்த்துக்களுடன் கூடிய பாராட்டுக்கள்!

    ReplyDelete