நல்வரவு

வணக்கம் !

Sunday, 16 October 2016

பாதை மாறிய பயணங்கள்




(01/07/2011 அன்று நிலாச்சாரலுக்காக எழுதியது)

பயணம் - 1

ஐந்தாம் வகுப்பிலிருந்து நெருங்கியத் தோழியாயிருந்த ராஜிக்கும், எனக்கும் ஏழாம் வகுப்பில் சண்டை வந்து பிரிந்து விட்டோம்.  சண்டை வந்ததற்கான காரணம் என்ன வென்று நினைவில்லை.  அப்போது பிரிந்த நாங்கள், பள்ளியிறுதி வகுப்பு வரையில் பேசிக்கொள்ளவேயில்லை.  என் நட்பு வட்டம், படிக்கும் கோஷ்டி என்றும் அவளுடையது அரட்டை கோஷ்டி என்றும் அமைந்து,  அவளைப் பொறுத்தவரை துரதிர்ஷ்டமே.


இன்னும் சில நாட்களில், பிரியப் போகிறோம் என்பதாலும், இனிமேலும் பேசாதிருக்கக் கூடாது என்று சக நண்பிகள் அறிவுறுத்தியதாலும், பள்ளி முடியும் தருவாயில், பேசத் துவங்கினோம்.  ஆனால் நாலைந்து வருடங்களில், எங்களுக்குள் பெரிய இடைவெளி ஏற்பட்டு பழைய நட்பு முற்றிலும் காணாமல் போய் விட, பேருக்குத்தான் பேசிக் கொண்டோம்.  கீழ் வகுப்பில் நன்றாய்ப் படித்துக் கொண்டிருந்த ராஜிக்கு, மேலே செல்லச் செல்ல படிப்பில் நாட்டம் குறைந்ததின் காரணமாய், எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் அவள் வெற்றி பெறவில்லை.

நான் பள்ளியிறுதி வகுப்பு முடித்தவுடன், என் தந்தைக்குப் பக்கத்து ஊருக்கு மாற்றல் வரவே,  கிராமத்திலிருந்து அவ்வூருக்குச் சென்று விட்டேன்.

அதே ஊரில் இருந்த டுடோரியல் கல்லூரியில் சேர்ந்து, அவள் படித்துக் கொண்டிருந்த சமயத்தில் ஓரிரு முறை அவளைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த்து.  தினமும் கிராமத்திலிருந்து நான் இருந்த ஊருக்குப் பேருந்தில் வந்து போய்க் கொண்டிருந்தாள்.  பார்க்கும் போது பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொள்வோம்.

டுடோரியலில் கூடப் படிப்பவன் ஒருவனை அவள் விரும்புவதாகவும், அவனையே அவள் மணமுடிக்கப் போவதாகவும் வேறொருத்தி மூலமாகக் கேள்விப்பட்டேன். 

சில மாதங்கள் கழித்து ஒரு நாள் மதியம் எங்கள் வீட்டு வாசலில் நின்றிருந்த போது, பிணவண்டி ஒன்று, ஒரு சடலத்தை ஏற்றிக் கொண்டு செல்வதைப் பார்த்தேன்.  அதற்குப் பின்னால் நடந்து போனவரைப் பார்த்த போது பகீரென்றது.  ராஜியின் அண்ணன் (அவர் எனக்கு நன்கு அறிமுகமானவர்) அந்த வண்டிக்குப் பின்னால் சென்று கொண்டிருந்தார்.

அவளது காதல் பெரிய பிரச்சினையாகி, கடைசியில் அவள் தற்கொலை செய்து கொண்ட விபரமும், பிணப்பரிசோதனை முடிந்து மருத்துவமனையிலிருந்து அவளது உடலை எடுத்துச் சென்ற விபரமும் பின்னர் எனக்குத் தெரிய வந்தது.
       
என் தலைமுறையின் முதல் சாவு என்பதாலும், அது தற்கொலை என்பதாலும் அவள் மரணம் எனக்கு மிகுந்த மனவேதனையைத் தந்தது. எனக்கும் அவளுக்கும் பிரிவு வராமல் இருந்திருந்தால் ஒரு வேளை அவளது வாழ்க்கைப் பாதை மாறியிருக்குமோ? என்று அடிக்கடி நான்  நினைத்துப் பார்ப்பதுண்டு.  இளம் வயதில் மனதை அலை பாய விடாமல் படிப்பில் கவனம் செலுத்தி யிருந்தால், அவளுக்கு இந்தக் கதி ஏற்பட்டிருக்காது என்று மனதைத் தேற்றிக் கொண்டேன்.


பயணம் - 2

கல்லூரியில் என்னுடன் படித்த சாருவும், நானும் ஒரே தெருவில் வசித்தமையால் கல்லூரிக்குச் சேர்ந்தே போவோம், சேர்ந்தே வருவோம். 
நாங்கள் போகும் வழியில் பரட்டைத் தலையன் ஒருவன் தினமும் நின்று கொண்டு ஏதாவது காமெண்ட் அடிப்பான்.  அவனைப் பார்த்தாலே எனக்குப் பற்றிக் கொண்டு வரும்.  அவனைப் பற்றி கன்னா பின்னாவென்று சாருவிடம் திட்டித் தீர்ப்பேன்.

வழக்கமாக போகும் தெருவை விடுத்து, அடுத்த நாள் வேறு ஒரு வழியில் சென்றால், அங்கும் அவன் நிற்பான்.  நாம் பாதை மாற்றும் விஷ்யம் இவனுக்கெப்படி தெரிகிறது என்று எனக்கு ஒரே ஆச்சரியம். என்னோடு சேர்ந்து சாருவும் வியப்புத் தெரிவிப்பாள்.  நீண்ட நாட்கள் கழித்துத் தான் தெரிந்தது, சாரு அவனை விரும்பிய விஷயம். 

அந்தத் தடியன்,  முன்னாள் மந்திரியின் மகன் என்றும் ஆண்கள் கல்லூரியில் ஏதோ டிகிரி படித்தான் என்றும் பிற்பாடு தெரிந்து கொண்டேன். 

அவனை நான் திட்டுவது பற்றியும், பாதை மாற்றுவது பற்றியும்  சாருவே அவனிடம் சொல்லிவிட்டு, என்னிடம் ஒன்றும் தெரியாதவள் போல் நடித்திருக்கிறாள் என்றறிந்தபோது எனக்கு ஆத்திரம் தாங்கவில்லை. 

படிப்பு முடியும் வரை அவளாகச் சொல்வாள் என எதிர்பார்த்தேன்.  ஆனால் அவள் கடைசி வரை என்னிடம் உண்மையைச் சொல்லவேயில்லை. என்னிடம் அவள் சொல்லியிருந்தால்,   பணக்காரப் பசங்களுக்கு இதெல்லாம் ஒரு பொழுது போக்கு; ஒழுங்காப் படிச்சி முன்னேறும் வழியைப் பாரு, என்று அவளை அறிவுறுத்தியிருப்பேன். 

அவள் என்னிடம் சொல்ல விரும்பாத ஒரு விஷயத்தில் நானாக போய் மூக்கை நுழைத்துக் கடிந்துரைப்பது எனக்குப் பிடிக்கவில்லை.  என்னை அவள் ஏமாற்றியது நெஞ்சில் ஒரு முள்ளாக நெருடிக் கொண்டிருந்ததால், படிப்பு முடிந்த பிறகு அவளுடன் தொடர்பை நீட்டிக்க நான் விரும்பவில்லை.


கடந்த ஆண்டு ஒரு நாள் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த போது,  என்னையே உற்றுப் பார்த்தபடி ஒருத்தி அருகில் வந்து,  நீ கலை தானே? என்றாள்..

ஆமாம், நீங்கள்? என்று கேட்க வாயெடுத்த நான், ‘சாரு, நீயா என்று கூவி விட்டேன் மகிழ்ச்சி பொங்க.. இத்தனை ஆண்டுகளாக அவள் மேல் எனக்கிருந்த கோபம், வருத்தம் எல்லாம் அந்தக் கணத்தில் மாயமாய் மறைந்து விட்டது.  பல வருடங்கள் கழித்து நண்பியைச் சந்திக்கும் பேருவகை, மன முழுக்க நிறைந்திருந்தது. 

கண்களில் குழி விழுந்து, கழுத்து நீண்டு ஆள் மிகவும் இளைத்துத் துரும்பாக மாறிவிட்டிருந்தாள்.  கைகளில் பிளாஸ்டிக் வளையல்கள்.  நான் பார்த்த அந்தத் துரு துரு சாரு எங்கே?

இந்த ஊரில் தான் நீயும் இருக்குறியா? என்றாள்.

ஆமாம். நீ?

நானும் இங்கத் தான் இருக்கேன்.

எங்க வேலை பார்க்குறே?

என் வேலை பற்றியும், என் குடும்ப விபரங்களையும் அவளிடம் பகிர்ந்து கொண்டேன்.

நீ?

ஒரு பெண்கள் விடுதியில் காப்பாளராக இருப்பதாகவும் அங்கேயே அவளும் அவள் பெண்ணும் தங்கியிருப்பதாயும்  தெரிவித்தாள். சாப்பாடும் தங்குமிடமும் இலவசம் என்றும் மாதம் ஆயிரத்து ஐநூறு சம்பளம் பெறுவதாகவும் தெரிவித்தாள்.  

சொந்தத்தில் தனக்குத் திருமணம் ஆனது பற்றியும், தன் மீது சந்தேகம் ஏற்பட்டதன் காரணமாக, கணவன் தன்னை விவாகரத்து செய்து விட்டது பற்றியும் சொன்னாள். 

(அவள் விரும்பிய மந்திரி மகன்,  இவளைக் கைவிட்டு பெரிய பணக்காரர் வீட்டுப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட விபரத்தை நான் அறிந்திருந்தும்,  அது பற்றி எதுவும் அவளிடம் கேட்கவில்லை.) 

வீட்டுக்கு வருமாறு அழைத்தேன்.  என் அலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டு, வேறு ஒரு சமயம் வருவதாகத் தெரிவித்தாள். 

அவளிடம் பேசிக்கொண்டிருந்த சமயம், நான் ஏற வேண்டிய பேருந்து வந்தது. ஓடிப் போய்ப் படிகளில் ஏறிக் கொண்டே, உன்னோட பஸ் எப்ப வரும் சாரு?  என்றேன்.

என் பஸ்ஸை எப்பவோ நான் தவற விட்டுட்டேன், என்றாள் சாரு, எங்கோ தொலைதூரத்தில் தன் பார்வையைப் பதித்தபடி.


(படம் - நன்றி -  இணையம்) 





26 comments:

  1. இரண்டுமே மிகவும் கொடுமையான கசப்பான அனுபவங்களாக உள்ளன.

    இளம் பருவ வயதில் பெண்கள் மிகவும் உஷாராகத்தான் இருக்க வேண்டியுள்ளது.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. "இளம் பருவ வயதில் பெண்கள் மிகவும் உஷாராகத்தான் இருக்க வேண்டியுள்ளது." வணக்கம் கோபு சார்! நீங்கள் சொல்வது மிகச்சரி. முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

      Delete
  2. வேதனை தான்!..

    ஒருகணம் மனதை அலைபாய விடாமல் நிறுத்தி சிந்தித்திருக்கலாம்..

    என்ன செய்வது?..

    வல்லான் வகுத்த வழி வாய்க்காலின் நீர் ஓடுகின்றது..

    ReplyDelete
    Replies
    1. சரியாகச் சொன்னீர்கள் துரை சார்! தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நெஞ்சார்ந்த நன்றி!

      Delete
  3. //என் தலைமுறையின் முதல் சாவு என்பதாலும், அது தற்கொலை என்பதாலும் அவள் மரணம் எனக்கு மிகுந்த மனவேதனையைத் தந்தது.//

    நிச்சயமாக தங்களுக்கு இது மிகுந்த மனவேதனையைத்தான் தந்திருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

    //எனக்கும் அவளுக்கும் பிரிவு வராமல் இருந்திருந்தால் ஒரு வேளை அவளது வாழ்க்கைப் பாதை மாறியிருக்குமோ? என்று அடிக்கடி நான் நினைத்துப் பார்ப்பதுண்டு.//

    இருக்கலாம். உங்களைப்போல நல்ல நண்பர்கள் வாய்க்கவும் ஓர் கொடுப்பிணை வேண்டும். அது அவர்களுக்கு இல்லாமல் போய் உள்ளது.

    //இளம் வயதில் மனதை அலை பாய விடாமல் படிப்பில் கவனம் செலுத்தி யிருந்தால், அவளுக்கு இந்தக் கதி ஏற்பட்டிருக்காது என்று மனதைத் தேற்றிக் கொண்டேன்.//

    அலைபாயும் இளம் வயது என்பது எல்லோருக்குமே மிகவும் சோதனைகளை சந்திக்க வேண்டிய காலக்கட்டமாகவே உள்ளது.

    முட்களின் மீது சேலை விழுந்தாலும், சேலையின் மீது முட்கள் விழுந்தாலும் .... கடைசியில் சேலைக்கு மட்டும்தான் ஆபத்து அதிகம் ஆகி விடுகிறது.

    ReplyDelete
    Replies
    1. "முட்களின் மீது சேலை விழுந்தாலும், சேலையின் மீது முட்கள் விழுந்தாலும் .... கடைசியில் சேலைக்கு மட்டும்தான் ஆபத்து அதிகம் ஆகி விடுகிறது." நீங்கள் சொல்வது முழுக்க முழுக்க உண்மை. பெண்களுக்குத் தான் பாதிப்பு அதிகம். என் வேதனையைப் புரிந்து கொண்ட கருத்துரைக்கு மிகவும் நன்றி சார்!

      Delete
  4. //”என் பஸ்ஸை எப்பவோ நான் தவற விட்டுட்டேன்,” என்றாள் சாரு, எங்கோ தொலைதூரத்தில் தன் பார்வையைப் பதித்தபடி.//

    எவ்வளவு அர்த்தம் பொதிந்துள்ள வரிகள் !

    தங்களின் இந்த மிக அருமையான அனுபவக்கட்டுரைகளால், இதனைப் படிக்க நேரும் யாரேனும் ஒருவராவது மனம் திருந்தினால், அதுவே உங்கள் எழுத்துக்களுக்குக் கிடைக்கும் மாபெரும் வெற்றியாகும்.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் இந்த மிக அருமையான அனுபவக்கட்டுரைகளால், இதனைப் படிக்க நேரும் யாரேனும் ஒருவராவது மனம் திருந்தினால், அதுவே உங்கள் எழுத்துக்களுக்குக் கிடைக்கும் மாபெரும் வெற்றியாகும். உண்மை சார்! நம் அனுபவத்தை நாம் எழுதுவது அதற்காகத் தானே. இதிலிருந்து படிப்பினையைப் பெற்றுக்கொண்டால் நம் எழுத்தின் நோக்கம் வெற்றி பெறுவதாக நினைக்கிறேன். கடைசி வரியின் அர்த்தத்தைச் சரியாக ஊகித்தமைக்குப் பாராட்டுக்கள் சார்! தொடர்ச்சியாகப் பின்னூட்டம் கொடுத்து ஊக்கிவித்தமைக்கு நன்றி கோபு சார்!

      Delete
  5. இவையெல்லாம் நல்லதோர் சிறுகதைக்கான களங்கள்.

    ஓர் மையத்தை நோக்கிக் குவித்து வீழ்த்தினால் நல்ல கதை தமிழுக்குக் கிடைக்கக் கூடும்.

    பயணங்கள் முடிவதில்லை.

    நீங்கள் சொல்லிய விதத்தை ரசித்தேன்.

    த ம

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ. வணக்கம். நீங்கள் சொன்னது சரிதான். இந்தக் கருவை வைத்துக்கொண்டு சிறுகதை எழுதலாம். முயல்கிறேன். கருத்துக்கும் ரசித்தமைக்கும், த ம வாக்குக்கும் என் நன்றி!

      Delete
  6. நட்பு என்பதானது பல சமயங்களில் இவ்வாறான ஒரு சூழ்நிலையில் கொண்டுவந்து மனதை கனக்க வைத்துவிடும்.

    ReplyDelete
    Replies
    1. ஆம் முனைவர் ஐயா! நீங்கள் சொன்னது மிகச் சரி. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

      Delete
  7. parents should guide adolescent girls properly
    they must be affectionate with their daughters ... and prevent any immatured infatuation love....
    and caution them ...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் என் நன்றி. நீங்கள் கூறுவது போல் பெற்றோர் பெண்களிடம் நட்புடன் பழகி நல்வழிப்படுத்த வேண்டும்!

      Delete
  8. அருமையான பதிவு

    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் அருமை என்ற பாராட்டுக்கும் மிகவும் நன்றி!

      Delete
  9. வாழ்க்கையைத் தொலைத்தவர்கள். படிக்க வேதனை தரும் விஷயங்கள். பாவமாய் இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. ஆம் ஸ்ரீராம்! இவர்கள் போல் வாழ்க்கையைத் தொலைத்தவர்கள் எத்தனையோ பேர்! வேதனையைப் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி ஸ்ரீராம்!

      Delete
  10. நம்மோடு நட்போடு இருந்தவர்கள் இப்போது தொடர்பில் இல்லையென்றாலும் எங்காவது நன்றாக இருப்பார்கள் என்றுதான் நம்புகிறோம்.. ஆசைப்படவும் செய்கிறோம்.. ஆனால் என்றேனும் ஒருநாள் அவர்களது நிலை பரிதாபத்துக்குரியதாய் இருப்பது தெரியவருகையிலோ.. கண்முன் காண்கையிலோ.. நம் மனம் வேதனையில் விம்முவதைத் தவிர்க்கமுடியாது. தோழிகளின் விஷயத்தில் அவர்களை அந்த வயதில் சொல்லித் திருத்துவதென்பது சற்றே சவாலான விஷயம். சொல்லியிருந்தாலும் கேட்டிருப்பார்களா என்பது சந்தேகம். கடைசியில் நமக்கு மிஞ்சுவது தோழமை குறித்த ஆற்றாமையே.. நினைவுகளின் பின்னோக்கிய பயணம்... எழுத்தாய் பயணித்து இலக்கை அடைந்துவிட்டது.

    ReplyDelete
    Replies
    1. ஆம் கீதா! அவர்களைச் சந்தித்து அவர்களின் பரிதாபநிலை தெரியாதவரை பிரச்சினையில்லை. அது தெரியவரும் போது தான் நாம் வேதனையில் மூழுகுகிறோம். பழைய நினைவலைகள் மீண்டும் உயிர்பெற்று எழுந்துவிடுகின்றன. ஆழமான கருத்துரைக்கு நன்றி கீதா!

      Delete
  11. இரண்டுமே கசப்பான அனுபவங்கள்..... பாவம். இப்படித்தான் பல பெண்கள், ஏமாறுகிறார்கள் அல்லது ஏமாற்றப்படுகிறார்கள்.....

    ReplyDelete
    Replies
    1. ஆம் வெங்கட்! இரண்டுமே வேதனை தரும் அனுபவங்கள். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

      Delete
  12. //இளம் வயதில் மனதை அலை பாய விடாமல் படிப்பில் கவனம் செலுத்தி யிருந்தால், அவளுக்கு இந்தக் கதி ஏற்பட்டிருக்காது என்று மனதைத் தேற்றிக் கொண்டேன்.//
    சரியான மதிப்பீடு. இன்றைக்கு பலர் தங்கள் வாழ்க்கையை தொலைப்பதன் காரணம் படிக்கும்போது ஏற்படும் கவனச் சிதைவுதான். துரதிர்ஷ்டவசமாக நம்முடைய ஊடகங்கள் இளைஞர்களின் கவனத்தை சிதைப்பதில் பெரும்பங்கு ஆற்றுகின்றன.
    நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இரு நிகழ்வுகளுமே சொல்லமுடியாத வருத்தத்தை தருகின்றன.

    ReplyDelete
  13. துரதிர்ஷ்டவசமாக நம்முடைய ஊடகங்கள் இளைஞர்களின் கவனத்தை சிதைப்பதில் பெரும்பங்கு ஆற்றுகின்றன. நீங்கள் கூறுவது முற்றிலும் சரி. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிகவும் நன்றி!

    ReplyDelete
  14. இனி நடப்பவை நன்மைகளாகும் என்ற நம்பிக்கையுடன் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் !

    எனது புத்தாண்டு பதிவு : நடப்பவை நன்மைகளாகட்டும் !
    http://saamaaniyan.blogspot.fr/2017/01/blog-post.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடுங்கள். நன்றி

    ReplyDelete
  15. பொதுவாக காதலை''காதல் கத்தரிக்காய்'' என்று ஏன் அடைமொழியில் சொல்கிறோம் தெரியுமா? அது வாழ்க்கையை கத்தரித்து விடுவதால்தான்....
    https://www.scientificjudgment.com/

    ReplyDelete