நல்வரவு

வணக்கம் !

Friday, 29 December 2017

என் பார்வையில் - "மனம் சுடும் தோட்டாக்கள்," – கவிதைத் தொகுப்பு



கவிஞர் மு.கீதா (தேவதா தமிழ்)
காகிதம் பதிப்பகம்
(மாற்றுத்திறன் நண்பர்கள் நடத்துவது)
+91 8903279618
விலை ரூ100/-.

2015 ஆம் ஆண்டு புதுக்கோட்டை பதிவர் விழா, மிகச்சிறப்பாக நடந்தேற, முக்கிய பங்காற்றியவர்களுள், இந்நூலாசிரியர்  மு.கீதாவும் ஒருவர்.   மனிதநேயமிக்க அரசுப்பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றும் இவர், சமூகப் பிரச்சினைகளுக்காக அவ்வப்போது தெருவில் இறங்கிப் போராடும், களப்போராளியும் கூட.  வாரா வாரம் புதுகையில் வீதி இலக்கியச் சந்திப்பு நடத்துவதிலும், சிறப்பான பங்களிப்பைச் செய்து வருகிறார்.

Friday, 15 December 2017

தப்புக்கணக்கு - சிறுகதை



எழுத்தாளர் வே.சபாநாயகம் நினைவு சிறுகதைப் போட்டியின் முடிவில் வெளியிடப்பட்ட ‘வசீரும் லீலாவதியும்,’ என்ற தொகுப்பு நூலில், இடம் பெற்ற என் கதை:-

தப்புக்கணக்கு

அப்பாவின் இதயத் துடிப்பு சீராக இல்லை என்பதைத் தொடர்ந்து பீப் ஒலி மூலம் அறிவித்துக்கொண்டிருந்தது,  ஒரு கருவி.  செயற்கை சுவாசம், இரத்த அழுத்தம், இதய துடிப்பு ஆகியவற்றைக் கண்காணிக்க, அவரைச் சுற்றிலும் எண்ணற்ற கருவிகள்.  அவற்றின் உதவியால் அப்பாவின் உயிரைப் போக விடாமல், இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்கிறது, இம்மருத்துவமனை. 

சிவராமனுக்கு ஆயாசமாக இருந்தது.  ஒருமாதத்துக்கு மேலாக, வீட்டுக்கும் மருத்துவமனைக்கும் அலைவது பெரும்பாடாயிருக்கவே, மனைவியிடம் வாய்விட்டே சொல்லிவிட்டான் சீக்கிரம் செத்துத் தொலைத்தால் தேவலை,” என்று.

அப்படியெல்லாம் சொல்லாதீங்க. நாளைக்கு நம்ம கதி என்னாகும்னு தெரியாது.  பெத்தவங்களுக்குச் செய்யறது புண்ணியம் அப்பத்தான் நமக்கு நல்ல கதி கெடைக்கும் புடிக்கலேன்னாலும், பெத்த அப்பாவுக்குப் புள்ளை செய்யற கடமைன்னு, ஒன்னு இருக்கு; அத மறக்கக் கூடாது; ஒங்க வெறுப்பைக் காட்டறதுக்கு, இது நேரமில்லே,” என்றாள் அமுதா.

ஆமா பெத்த அப்பா.  அவருக்கு என்மேல கொஞ்சங்கூட பாசம் கிடையாதுதம்பியைத் தான் அவருக்கு ரொம்பப் புடிக்கும். எங்கிட்ட அன்பா இருந்தது, அம்மா மட்டும் தான் அவங்களுக்குச் செஞ்சாலும் புண்ணியம் உண்டு.  ஆனா அதுக்கு வாய்ப்பே கொடுக்காம, பொசுக்குன்னு போயிட்டாங்க அம்மா இருந்திருந்தா, அவங்களை அங்க விட்டுட்டு, நான் கம்பி நீட்டியிருப்பேன்.  வேற வழியில்லாம, என் தலைவிதியை நொந்துக்கிட்டு, அந்த ஆஸ்பத்திரி மருந்து நாத்தத்துல, ஒக்கார்ந்து கிடக்க வேண்டியிருக்கு.  சரி டிபனை கொடு நான் கெளம்பறேன்.  மணி ஆறாயிடுச்சி ஏன் கண்ணன் இன்னும் வீட்டுக்கு வரலை?”.

Monday, 11 December 2017

எல்லோருக்கும் அட்வான்ஸ் புத்தாண்டு வாழ்த்து!

எல்லோருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து!

பணிச்சுமை மற்றும் குடும்பச்சூழல் காரணமாக, இந்த ஆண்டில் என்னால் வலைப்பக்கம் அதிகம் வரவியலவில்லை.  

2018 ஆம் ஆண்டிலாவது தொடர்ந்து எழுத வேண்டும் என ஒவ்வொரு புத்தாண்டின் போதும், எடுக்கும் சபதம் போல், இப்போதும் எடுத்திருக்கிறேன்.

இடைப்பட்ட காலத்தில் சில சிறுகதைப்போட்டிகளில் கலந்து கொண்டேன்.  மறைந்த எழுத்தாளர் திரு.க.சீ..சிவக்குமார் நினைவுச் சிறுகதைப் போட்டியில் வளரும் எழுத்தாளர் பிரிவில் முதற் பரிசு கிடைத்தது.

நம் பதிவுலக நண்பர் திரு வே. நடனசபாபதி அவர்களின் அண்ணன் பெயரில் இளவேனில் பதிப்பகம் நடத்திய வே.சபாநாயகம் நினைவுச் சிறுகதைப்போட்டிக்காக நான் எழுதிய தப்புக்கணக்கு, என்ற கதை, நான்காவதாகத் தேர்வு பெற்று வசீரும் லீலாவதியும், என்ற தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ளது.

வாழ்க்கைச்சட்டம் பதிப்பகம் நடத்திய வானதி விருது சிறுகதைப்போட்டிக்காக எழுதிய பித்து என்ற கதை, இவளப் பிடிக்கல,’ என்ற தொகுப்பு நூலில் வெளியாகியுள்ளது.

அந்நியன், என்ற கதை, நவம்பர் 2017 கணையாழியில் வெளிவந்துள்ளது.

இனி ‘அந்நியன், கதை அடுத்த பதிவில்....

வழக்கம் போல், என் கதைகள் பற்றிய, உங்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை ஆவலுடன் எதிர்பார்த்து...


நன்றியுடன்,

ஞா.கலையரசி