நல்வரவு

வணக்கம் !

Tuesday, 20 March 2012

’இன்று சிட்டுக்குருவி தினம்’


சிட்டுக் குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமாஎன்னை
விட்டுப் பிரிஞ்சி போன கணவன் வீடு திரும்பல"

இந்தப் பழைய சினிமாப் பாடலைக் கேட்டிருக்கிறீர்களா? சிட்டுக் குருவியைத் தன் தோழியாக நினைத்து தன் கவலையைப் பகிர்ந்து கொள்கிறாள் பெண்ணொருத்தி. 

'காக்கை குருவி எங்கள் ஜாதி,' என்ற பாரதியின் பாட்டில் குருவி என்பது இந்தச் சிட்டுக்குருவியையே குறிக்கிறது.  ஏனெனில் காகமும், சிட்டுக் குருவியும் மனிதரின் வீடுகளை அண்டியே பிழைப்பவை. நம் வீடுகளைச் சுற்றியே நம் இளம் வயது நண்பர்களாக எந்நேரமும் திரிந்து கொண்டிருந்த இந்தச் சிட்டுக்குருவிகளுக்கு நம் மலரும் நினைவுகளில் சிறப்பான ஒரு தனியிடம் உண்டு.

முற்காலத்தில் நம் வீடுகள் ஓட்டு வீடுகளாயிருந்தபடியால் பரண்கள், மச்சிகள், சந்து இடுக்கு என இவை கூடுகட்டுவதற்கு வசதியாக இருந்தன. ஒவ்வொரு வீட்டிற்குப் பின்புறம் இருந்த செடி கொடி மரங்கள் நிறைந்த தோட்டமும்இவற்றின் இனப்பெருக்கத்துக்குத் துணை செய்தன. ஆனால் இப்போது கான்கிரீட் வீடுகளில் இவை கூடு கட்ட மறைவிடம் ஏதுமில்லை. மேலும் அடுக்கக வீடுகள் பெருகி வரும் இந்நாளில் தோட்டத்திற்கு ஏது இடம்?  

நான் சிறுமியாக இருந்த போது முற்றத்தில் காய வைத்திருக்கும் நெல்லைக் கொத்தித் தின்ன இச்சிட்டுக்குருவிகள் கூட்டங் கூட்டமாக வரும்.  இப்போதெல்லாம் இக்குருவியைப் பார்ப்பதே மிகவும் அரிதாய் ஆகிவிட்டது. 

நம்மூரில் இக்குருவியின் எண்ணிக்கை குறைந்து விட்டது என்று தான் இது நாள் வரை நான் எண்ணியிருந்தேன்.  ஆனால் உலகமுழுதுமே இந்த இனம் அழிவிற்குள்ளாகி தற்போது மிகவும் சொற்ப எண்ணிக்கையில் உள்ளதாம்.

அழிந்து வரும் புலி, யானை போன்ற விலங்கினங்களை அழிவிலிருந்து காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.  ஆனால் சிட்டுக்குருவி போன்று அழிந்து வரும் பறவை யினங்களைக் காப்பாற்ற அரசு நடவடிக்கை எதுவும் எடுப்பதில்லை.  செல்போன் கோபுரத்திலிருந்து வரும் கதிர்வீச்சும் இந்தப் பறவை இனத்தை அழிப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாகச் சொல்கிறார்கள். 

இக்குருவி இனத்தை அழிவின் விளிம்பிலிருந்து காப்பாற்றும் நோக்கத்தில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வோராண்டும் மார்ச் மாதம் 20 ஆம் தேதி உலக முழுதும் சிட்டுக்குருவி தினம் கொண்டாடுகிறார்கள்.

இந்த ஆண்டு சிட்டுக்குருவி தினத்தின் கரு என்ன தெரியுமா?

WSD theme: CHIRP FOR THE SPARROW! TWEET FOR THE SPARROW!

இது பற்றிய விபரங்கள் கொண்ட வலைத்தளத்தின் முகவரியைக் கீழேக் கொடுத்திருக்கிறேன்:-  

சிட்டுக்குருவியின் தினத்தைக் கொண்டாடுவதன் நோக்கம் இதனைக் அழிவிலிருந்து எப்பாடுபட்டாவது மீட்பது தான்.   இதற்கு நாம் செய்ய வேண்டியவை என்று இத்தளத்தில் சொல்லப்பட்டிருக்கும் சில தகவல்கள்:-

1. இது பற்றிய விழிப்புணர்வை அனைவருக்கும் நம் பிளாக்,எஸ்.எம்.எஸ், பேஸ் புக், என எந்தெந்த வழிகளிலெல்லாம் முடியுமோ, அந்தந்த  வழிகளின் மூலம் ஏற்படுத்துவது.

2. இன்றிலிருந்து துவங்கி தினந்தினம் அரிசி போன்ற தானிய வகைகளை ஒரு கிண்ணத்திலும், சுத்தமான தண்ணீரை ஒரு கிண்ணத்திலும் வைக்கலாம்.  நாள்தோறும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரே இடத்தில் வைக்க வேண்டும் என்பது முக்கியம்.  தினந்தினம் தண்ணீரை மாற்ற வேண்டும். இல்லையேல் சிட்டுக்குருவிக்கு நோய் வந்து விடுமாம்.

3. அரிசி போன்ற தானியங்கள் வறட்டுத் தன்மை கொண்டதால் 
   தண்ணீர் வைப்பது மிகவும் அவசியம். ஒவ்வொரு குருவியும்
   ஒரு நாளைக்கு இரு முறை நீர் அருந்துமாம்.

4.நம் கான்கிரீட் வீடுகளில் குருவிக்குக் கூடு கட்ட வசதியில்லாததால், 
மரத்தால் செய்யப்பட்ட கூடுகளை வாங்கி வீட்டுப் பால்கனிகளில் 
வைக்கலாம்.
5.           தோட்டமிருப்பவர்கள் புதர்ச் செடிகளை வளர்க்கலாம்.


சுறுசுறுப்புக்குப் பெயர் போன இந்த இனத்தில் ஆணும் பெண்ணும் ஒன்றுக்கொன்று மிகவும் நேசத்துடனும் பாசத்துடனும் இணை பிரியாமல் இருக்கும் என்பது வியப்பான செய்தி.

சின்னஞ்சிறு குருவி போலே
நீ திரிந்து பறந்து வா பாப்பா
வண்ண பறவைகளைக்கண்டு நீ
மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா.

என்று நம் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டியது நம் கடமை.

எனவே அன்பர்களே, நண்பர்களே இச்சிட்டுக்குருவியினத்தை அழிவின் விளிம்பிலிருந்து காப்பாற்ற நம்மால் முடிந்ததைச் செய்வோம்!



8 comments:

  1. Replies
    1. தங்களது வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி முத்துலெட்சுமி.

      Delete
  2. வாழ்த்துக்கள் கலா !மிகப் பொறுப்பான ஒரு பகிர்வு

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு மிக்க நன்றி உமா!

      Delete
  3. இயல்பான பகிர்வு. உள்ளத்தின் ஆழத்திலிருந்து வந்த சொற்கள். குருவிகளை மட்டுமா.. குதூகலத்தையே மின்காந்த அலைகளுக்குக் காவு கொடுத்துவிட்டோம். மெழுகுதிரியும் அகல்விளக்கும் அரசின் தயவால் பலருக்குப் பாதுகாப்புத் தந்துவருவதொன்றே மிஞ்சுகிறது.

    ReplyDelete
  4. தங்களது வருகைக்கும் ஆழமான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி பசுபதி சார்!

    ReplyDelete
  5. இயற்கையை நேசிக்கும் ஒவ்வொருவரும் தவறாமல் பின்பற்றவேண்டிய வழிமுறைகளைச் சுட்டியதற்கும், சிட்டுக்குருவிகள் பற்றிய இனிய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டதற்கும் மிகவும் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. பின்னூட்டத்துக்கு மிகவும் நன்றி கீதா!

      Delete