மூன்று மாதங்களாக கோமாவில் கிடந்த தந்தை, கண் திறந்து பார்த்தவுடன், கண்ணன்
அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.
”அப்பா என்னைப் பாருங்க,
நான் யாருன்னு தெரியுதாப்பா?” என்று கேட்டவன், ”அம்மா, சீக்கிரம் வாங்க. அப்பா கண் முழிச்சிப் பார்க்கிறாங்க,”. என்று கூப்பிட்டான்
அடுப்படி வேலையை அப்படியே போட்டுவிட்டு, தன் கைகளை முந்தானையில் துடைத்தபடி
ஓடி வந்தார் பார்வதி.
”என்னங்க, நான் கும்பிட்ட
தெய்வம் என்னைக் கைவிடலே. . பாரு, பாருன்னு நொடிக்கு முந்நூறு வாட்டிக்
கூப்பிடுவீங்களே, அந்தப் பாரு வந்திருக்கேன், பாருங்க”
மனைவியை ஒரு நிமிடம் பார்த்து விட்டு, கண்ணனை
அருகில் வருமாறு கைகாட்டினார் பெரியவர்.
அவன் பக்கத்தில் வந்தவுடன், தம் மூன்று விரல்களைச் சேர்த்துக் காட்டி, என்னவோ
சொல்ல முயன்றார். வாய் கோணிக்கொண்டு சத்தம் எதுவும் வெளிவரவில்லை.
”மூணுமாசமா இப்படிக்
கிடக்கிறேனான்னு கேட்கிறீங்களா?
ஆமாம்பா. திடீர்னு மயக்கம் போட்டு
விழுந்துட்டீங்க. நான் அப்ப ஆபீசுல
இருந்தேன். அம்மா தான் போன் பண்ணிச்
சொன்னாங்க. உடனே கொண்டு போய் ஆஸ்பத்திரியில
சேர்த்தோம். ஒரு மாசம் வைச்சிருந்திட்டு,
வீட்டுக்கு அழைச்சிட்டுப் போயிடுங்கன்னு டாக்டர் சொல்லிட்டாரு.
எப்ப பிரக்ஞை வரும்னு டாக்டரைக் கேட்டோம்.
”எப்ப வரும்னு நிச்சயமாச் சொல்ல
முடியாது. ரெண்டு மாசத்திலேயும் நினைவு
திரும்பலாம். இல்லே கடைசி வரைக்கும் திரும்பாமலேக் கூட போயிடலாம்”னு சொன்னாரு அவரு.
நல்ல வேளையா மூணே மாசத்துல ஒங்களுக்கு நினைவு திரும்பினதுல ரொம்ப மகிழ்ச்சியா
இருக்குப்பா,” என்றான் கண்ணன்.
”தம்பி, அப்பாவுக்கு
நினைவு வந்துட்டா, அங்காளம்மனுக்கு மாவிளக்கு போடறதா வேண்டியிருக்கேன்.. நம்ம
குலதெய்வம் கோயிலுக்குப் போய், ஒடனே அதை நிறைவேத்திடணும்பா.”
”அதுக்கென்னம்மா.. அடுத்த வாரமே நிறைவேத்திடுவோம்”
ஆளாளுக்குப் பேசி முடிக்கும் வரை காத்திருந்தவர், தம் தலையில் அடித்துக்
கொண்டு, தாம் சொன்னது அதுவல்ல என்பது போல், மீண்டும் மூன்று விரலைச் சேர்த்துக்
காட்டி ஏதோ சொல்ல முயன்றார்.
”என்னப்பா சொல்றீங்க?
எனக்கு ஒன்னுமே புரியலியே?”
“தம்பி, ஒங்கப்பா என்ன சொல்றார்னு எனக்குப் புரிஞ்சிட்டுது. தம் பொண்ணுங்களைப் பார்க்கணும்னு ஆசைப்படறாருன்னு
நினைக்கிறேன். ஒடனே மூணு தங்கச்சிகளையும்
வரச் சொல்லு. எப்பவுமே ஒங்கப்பாவுக்கு
அதுங்க மேல தான் உசிரு.”
”அப்படியாப்பா? தங்கச்சிகளைத்
தானே பார்க்கணும்? ஒடனே வரச் சொல்றேன்பா.”
கிழவர் களைப்பு மிகுதியால் கண்களை மூடிக் கொண்டார்.
மறுநாள் அவரது மூன்று பெண்களும், குடும்ப சகிதம் அங்கு ஆஜராகினர்.
”அப்பா எங்களைப்
பாருங்கப்பா. எங்களைத் தெரியுதாப்பா?” என்றனர் படுக்கையைச் சுற்றி நின்று கொண்டு.
பெரியவர் கண்களைத் திறந்து எல்லோரையும் பார்த்தார். அடையாளம் தெரிந்து கொண்டது போல், அவரது
முகத்தில் ஒரு பிரகாசம் தெரிந்தது.
மறுபடியும் மூன்று விரலைக் காட்டி, அவர்களிடம் ஏதோ சொல்ல முற்பட்டார்.
”அண்ணா, இங்க வாயேன்.
அப்பா ஏதோ மூணுன்னு காட்டறாரே! நாங்க தான் வந்துட்டோமே, இன்னும் ஏன் மூணுன்னு
காட்டறார்?”
திடீரென்று பெரியவருக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது. டாக்டர் உடனடியாக வரவழைக்கப்பட்டுச் சிகிச்சை
செய்தும் பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.
அப்பாவின் கடைசி ஆசை என்னவென்று புரிந்து கொள்ள முடியாமல் போய் விட்டதே, என்று கண்ணனுக்கு மிகவும்
வருத்தமாக இருந்தது.
தன் நண்பர்களிடம் அது பற்றிப் புலம்பிக் கொண்டிருந்தான் . பக்கத்து ஊரில் குறி சொல்லும் பெண்ணொருத்தி
இருப்பதாகவும் ஆவியுடன் பேசும் சக்தி
வாய்க்கப்பெற்ற அவள், அவனது தந்தை
ஆவியுடன் பேசிக் கடைசி விருப்பத்தைக் கேட்டுச் சொல்லிவிடுவாள் என்றும் அவன் நண்பனொருவன் கூறக் கேட்டு, அவ்வூருக்குப் பயணம்
மேற்கொண்டான் கண்ணன்.
சாராயம் குடித்து விட்டு ஆடிக்கொண்டிருந்த அப்பெண்ணிடம் தான் வந்த விஷயத்தைச் சொன்னான்.
குறி சொல்வதற்கு ஐநூறு ரூபாய் தட்சிணையாகப் பெற்றுக் கொண்டவள்,
”ஒங்கப்பா ஆவியோட
பேசிட்டுச் சொல்றேன். அதுவரைக்கும்
வெளியில ஒட்கார்ந்திரு,” என்றாள்.
சாமி வந்தவள் போல் உடுக்கையைக் கையில் வைத்துக் கொண்டு சிறிது நேரம் ஆடியவள்,
அவனைக் கூப்பிட்டு, ”ஒங்க ஊர்ல உள்ள
மாரியம்மன் கோயில்ல கும்பாபிஷேகம் நடந்து மூணு வருஷம் ஆயிடுச்சாம். அதனால உடனே அந்தக் கோயிலைப் புதுப்பிச்சிக்
கும்பாபிஷேகம் பண்ணச் சொல்றாரு ஒங்கப்பா,”
என்றாள்.
’ஓ இவ்ளோ தானா? எப்படியோ அப்பாவோட கடைசி ஆசையைத் தெரிஞ்சிக்கிட்டேன். அதை
எப்பாடு பட்டாவது, ஒடனே பூர்த்தி பண்ணிடணும்’ என்ற எண்ணத்துடன் வீட்டுக்குத் திரும்பியவன், அன்றிரவு
நிம்மதியாக உறங்கினான்.
மறுநாள் காலை அம்மா சொன்ன தகவல், கண்ணனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
”டேய் தம்பி, இங்க
வாயேன். அந்தக் குறி சொல்றவ சொன்னதை இங்க
யாரும் நம்ப மாட்டேங்கிறாங்க. ”மாமாவுக்குச் சாமி பக்தி அவ்வளவாக் கிடையாது. அதனால அவரு
கும்பாபிஷேகம் பத்திச் சொல்லியிருக்க சான்ஸே இல்லை. இந்த வூட்டை வித்து தன்னோட மூணு
பொண்ணுங் களுக்கும் பிரிச்சிக் கொடுக்கணும்னு தான் மாமா மூணு விரலைக் காட்டியிருக்காரு,”ன்னு பெரிய மாப்பிள்ளை சொல்றாரு. ஒடனே மத்த ரெண்டு பேரும் அவரு கூடச் சேர்ந்துக்கிட்டு,
ஆமாம் சாமி போடறாங்க.
பாவி மனுஷர், நினைவு திரும்பாமலே போயிருக்கக் கூடாதா? போகும் போது இப்படி மூணு விரலைக் காட்டிட்டு
ஆளாளுக்கு ஒன்னு சொல்ற மாதிரி, பண்ணிட்டுப் போயிட்டாரே! மூணு பொண்ணுகளுக்கும் நகைநட்டு செஞ்சுப்
போட்டு, சீர் செனத்தி செஞ்சு நல்ல விதமாக் கல்யாணம் பண்ணிக் கொடுத்தாச்சு. இப்ப ஒனக்குன்னு இருக்கிறது, இந்த ஒரு வீடு மட்டும்
தான். இதையும் வித்து அவங்களுக்குப்
பங்குப் போட்டுக் கொடுத்துட்டு நீ என்ன பண்ணுவே தம்பி?”
”சரிம்மா. மெதுவாப் பேசுங்க. அப்பாவோட கடைசி ஆசை அது
தான்னு அவங்க சாதிச்சாங்கன்னா, வித்துக் கொடுக்கிறதைத் தவிர வேற வழியில்லை. கருமாதி
முடியறவரைக்கும் இதைப் பத்தி எதுவும் பேச வேணாம்.
அதுக்கப்புறம் என்ன பண்ணலாம்னு
யோசிக்கலாம்மா.”
அப்பா படுக்கையில் கிடந்த போது, கணவருக்கு அலுவலகத்தில் விடுப்பு கிடைக்கவில்லை,, பிள்ளைகளுக்குத்
தேர்வு நடக்கிறது என்று பலப்பல காரணங்களைச் சொல்லி, வீட்டுக்கு வந்து தங்க மறுத்த
தங்கைகள், கருமாதி வரை இங்கேயே பழியாகக் கிடந்து வீட்டை விற்றுப் பணத்தைப்
பெற்றுக் கொண்ட பிறகே ஊருக்குத் திரும்புவது என்ற முடிவுடன் இருந்தனர்.
கருமாதி முடிந்த மறுநாள், பதிவுத் தபாலில் வந்த அந்தக் கடிதம் கண்ணன் உட்பட
அனைவரையும் ஒரு சேரக் கலங்கடித்தது.
அவன் தந்தை, வீட்டின் பெயரில் வாங்கியிருக்கும் மூன்று லட்ச ரூபாயை வட்டியுடன்
சேர்த்து ஒரு மாதத்துக்குள் கட்ட வேண்டும்.
தவறினால் வீடு ஏலத்துக்கு விடப்பட்டு நிலுவைத் தொகை வசூலிக்கப்படும் என்ற
வாசகத்துடன் பக்கத்து ஊரிலிருந்த வங்கியிடமிருந்து வக்கீல் நோட்டீசு வந்திருந்தது.
’தான் வாங்குன கடனைப் பத்திச்
சொல்லத்தான், அப்பா அந்தப் பாடு பட்டுருக்கிறாரு.
அதைப் புரிஞ்சிருக்கிற சக்தி நமக்கில்லாம போயிட்டுது,’ என்று வருந்தினான் கண்ணன்.
”கண்ணா, இப்ப நம்மக்கிட்ட
மூணு லட்சம் ஏது? அந்த நோட்டீசை
எடுத்துட்டுப் போய், என்ன செய்யலாம், ஏது செய்யலாம்னு குமாரைப் பார்த்துக் கேட்டுட்டு வா. இந்த மாதிரி நாம கஷ்டப்படுற நேரத்துல, நிச்சயமா
அவன் ஒனக்கு உதவி செய்வான்.”
”நானும் அவனைத் தான்
போய்ப் பார்க்கணும்னு நினைச்சிக் கிட்டிருந்தேன்மா, நீங்களும் அதையே சொல்லிட்டீங்க.
லோன் பத்தியெல்லாம், எனக்கு ஒன்னுமே தெரியாது. பாங்க் விஷயமெல்லாம் அவனுக்குத்
தான் அத்துப்படி. நாளைக் காலையில அவனைப்
போயிப் பார்த்துட்டுத் தான் மறுவேலை.”
கணவன்மார்க்கு அலுவலகத்தில் அவசர வேலையிருப்பதாகவும், குழந்தைகளுக்குப்
படிப்பு கெடுவதாகவும் காரணங்களைச் சொல்லிவிட்டு கண்ணனின் தங்கை குடும்பத்தினர்
அன்று மாலையே ஒருவர் பின் ஒருவராக ஊருக்குக் கிளம்பினர்.
மறுநாள் தன்னைப் பார்க்க வந்த கண்ணனை, இன்முகம் காட்டி வரவேற்றான் குமார்.
”வாடா, காரியமெல்லாம் நல்ல
விதமா முடிஞ்சுதா? நானே இன்னிக்குச்
சாயந்திரம், ஒங்க வீட்டுக்கு வரலாம்னு இருந்தேன்.
அதுக்குள்ள நீயே வந்துட்டே”
”அதெல்லாம் நல்ல விதமா
முடிஞ்சிடுச்சிடா. ஆனா... பாங்க்லேர்ந்து
வக்கீல் நோட்டீசு ஒன்னு வந்திருக்கு. அப்பா
எனக்குத் தெரியாம கடன் வாங்கியிருந்திருக்கிறாரு. இது வந்த பிறகு தான், அந்த விஷயமே
எனக்குத் தெரிஞ்சுது. முன்னமே தெரிஞ்சிருந்தா, கொஞ்சங் கொஞ்சமா வட்டியாவது
கட்டிட்டு வந்திருப்பேன்.
இப்ப எங்கிட்டே அவ்ளோ பணம் இல்லடா. வெளியில வட்டிக்கு வாங்கி இந்த லோனை அடைச்சிடலாமா? இல்லே பாங்கில போய் இன்னும் கொஞ்சம் நாள் நீட்டிக்கச்
சொல்லிக் கேட்கலாமா? எல்லாத்துக்கும் நீ தான் எனக்கு உதவி செய்யணும். ஒன்னை
நம்பித் தான் வந்துருக்கேன்”
”சரிடா. எல்லாத்தையும்
நான் பார்த்துக்கறேன். நீ எதுக்கும் கவலைப்படாதே.
இந்த நோட்டீசு வந்தவுடனே தங்கச்சிங்க எல்லாரும் ஊருக்குக் கிளம்பியிருப்பாங்களே?”
”ஆமாண்டா. ஒனக்கெப்படித் தெரியும்?”
”இந்த நோட்டீசை அனுப்பினதே
நான் தான்டா. என்னோட நண்பன் ஒருத்தன் வக்கீலா இருக்கான். அவன்கிட்டச் சொல்லி சும்மா ஒரு பாங்க்
பேரையும், நம்பரையும் போட்டு, ஒங்க விலாசத்துக்குத் தபால் அனுப்பச் சொன்னேன்.
கருமாதிக்கு வீட்டுக்கு வந்தப்ப, ஒன் தங்கச்சி
மாப்பிள்ளைங்க வீட்டை வித்தா ஒவ்வொருத்தருக்கும் இவ்ளோ கிடைக்கும், அவ்ளோ
கிடைக்கும்னு கணக்குப் போட்டுக்கிட்டிருந்தாங்க.
கடன்னு தெரிஞ்சவுடனே சத்தம் போடாம இடத்தைக் காலி பண்ணிடுவாங்கன்னு நினைச்சேன். அதே மாதிரி நடந்துட்டுது.
எப்படியோ எல்லாம் நல்ல விதமா முடிஞ்சுது. இதைக் கிழிச்சிக் குப்பைக் கூடையிலப்
போட்டுட்டு, இனிமே நீ நிம்மதியா இருக்கலாம்”
”அப்படியா? எல்லாம் ஒன்
வேலை தானா? வக்கீல் நோட்டீசுன்னவுடனே நான்
ரொம்பவே பயந்துட்டேன். ரொம்ப நன்றிடா. வரும் போது மூணு லட்ச ரூபாயை எப்படி அடைக்கப்
போறோம்னு கவலைப் பட்டுக்கிட்டு வந்தேன். கடன்
இல்லேன்னு தெரிஞ்சதும், ரொம்ப சந்தோஷமா இருக்குடா. ஆனா அப்பா கடைசியா சொல்ல நினைச்ச விஷ்யம்,
இதுவும் இல்லேன்னா..................?”
”டேய்! டேய்! மறுபடியும்
ஆரம்பிச்சிட்டியா? ஒங்கப்பா உயிரோடு
இருந்த வரைக்கும், ஒரு மகனா நீ செய்ய வேண்டிய கடமையைத் திருப்தியா
செஞ்சிட்டே. நினைவு திரும்பாமலே, அவரு
இறந்து போயிருந்தா, என்ன பண்ணியிருப்பே? அந்த மாதிரி நினைச்சி, இதோட அந்த விஷயத்தை
மறந்துடு. அது தான் ஒனக்கும் நல்லது, ஒன் குடும்பத்துக்கும் நல்லது.”
”சரிடா. மறக்க முயற்சி
செய்றேன். இந்தப் பிரச்சினையைத் தீர்த்து வைச்ச ஒனக்கு, எப்படி நன்றி சொல்றதுன்னு
தான் தெரியலை.”
”சரி சரி. ரொம்ப உணர்ச்சி
வ்சப்படாதே. நீ நன்றி சொல்ல வேண்டியது எனக்கில்ல, ஒங்கம்மாவுக்குத் தான்.”
”அம்மாவுக்கா? என்னடா சொல்றே?”
”ஆமாம்டா. வூட்டு மேல கடன் இருக்கிற மாதிரி, ஒரு நோட்டீசு
அனுப்ப முடியுமான்னு கேட்டு, எனக்கு இந்த ஐடியாவைக் கொடுத்ததே அவங்க தான்!”
(உயிரோசை இணைய இதழில் எழுதியது)
நல்ல ஐடியா...நல்ல கதை...
ReplyDeleteதங்களது வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி ரெவெரி
Deleteபெற்றவர்கள் இருக்கையிலேயே சொத்துக்களை
ReplyDeleteபிரித்து அவர்களை நடுத்தெருவில் விடும் பிள்ளைகளும் இருக்கிறார்கள்.
எத்தனையோ வீடுகளில் பெற்றவர்கள் இறந்ததும்
சொத்துக்காக குடுமிப் பிடி சண்டை போடுபவர்களும்
இருக்கிறார்கள்..
அப்படிப் பட்டவர்களை சமாளிக்க அந்த அம்மா கொடுத்த
யோசனை அருமை...
அருமையான கதை சகோதரி..
உங்களது பாராட்டுக்கு மிகவும் நன்றி மகேந்திரன் சார்!
Deleteமூன்று விரல் காட்டியதால் ஆளாளுக்கு தங்களுக்கு சாதகமாக கற்பிதம் செய்துகொண்டு ஐடியா கொடுப்பதும் அந்தப்பிரச்சினையை சாதூரியமாக தீர்ப்பதும் ரசிக்க வைத்தது.
ReplyDeleteதங்களது வருகைக்கும் ரசித்தமைக்கும் மிகவும் நன்றி விச்சு சார்!
Deleteஅப்பா மூன்றுவிரல் காட்டிச் சொல்ல நினைத்ததன் மர்மத்தைக் கடைசிவரையிலும் நீட்டித்தது சிறப்பு. சுயநலம் மிகுந்த மகள்களிடமிருந்து மகனுக்குரிய பங்கைக் காப்பாற்ற முனையும் தாயாரின் சாதுர்யம் பாராட்டுக்குரியது. நல்லதொரு கதையை சுவாரசியமாகப் படைத்ததற்குப் பாராட்டுகள்.
ReplyDeleteபாராட்டுக்கு மிகவும் நன்றி கீதா!
ReplyDeleteமூன்று விரல்களின் மர்மம் சிரிப்பும் வியப்பும்.அருமையான சிந்தனை கலையரசி !
ReplyDeleteபாராட்டுக்கு மிகவும் நன்றி ஹேமா!
Delete3 உலகமே கொலைவெறியோடு சொல்லும் இந்த மூன்று என்னன்னு சொல்லாமலே விட்டுட்டீங்களே கலை !good story
ReplyDeleteவிஜய் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி பார்த்தேன். தம் தந்தை சாவதற்கு முன் மூன்று விரலைக் காட்டி விட்டுச் செத்து விட்டார் என்றும் அது என்ன என்று கேட்டுச் சொல்லுமாறும் குறி சொல்பவரை நாடினார் ஒருவர். இப்படி ஒருவர் மூன்று விரலைக் காட்டி விட்டுச் செத்து விட்டால் என்னவெல்லாம் நடக்கும் என்று சிந்தித்ததில் உதித்தது இந்தக் கதை.
ReplyDeleteஆகவே அவர் என்ன சொல்ல வந்தார் என்பது எனக்கும் தெரியாது!!!
கலையரசி,
ReplyDeleteகொஞ்சம் கூடப் பிசிறு இல்லாமல் முடித்திருக்கிறீர்கள் கதையை ! சிதறல் இல்லாமல் கதை மோனோக்ரோமேட்டிக்காக ஒரே திசையில் பயணிக்கிறது. அந்த மூணு விரல் சங்கதியைக் கடைசிவரை சொல்லாமல் விட்டதில் கதையின் வெற்றியே இருக்கிறது. ஒரே ஒரு வேண்டுகோள் ! நீங்கள் விரைவில் ஒரு திரைப்படம் எடுக்க வேண்டும் ! இங்கு தமிழ் சினிமாவில் பல முன்னணி இயக்குனர்களுக்கு இது போன்ற ஒரு கதையை எழுத சுட்டுப் போட்டாலும் வராது.
படித்த அனைத்திற்கும் விரிவாகப் பின்னூட்டம் எழுதும் உங்களுக்கு என் முதல் நன்றி. உங்களது அளவுக்கு மீறிய புகழ்ச்சியுரை என்னை மென்மேலும் எழுத ஊக்கமளிப்பதாய் உள்ளது. மிக்க நன்றி குருச்சந்திரன்!
ReplyDelete