நல்வரவு

வணக்கம் !

Monday 21 May 2012

அம்மாவின் ஆசை

எவ்வளவோ மருத்துவம் பார்த்தும் பலனின்றி அம்மாவின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வந்தது. நான் கார் வாங்க வேண்டும் என்பது அம்மாவின் ஆசை.  அம்மாவின் எல்லா ஆசைகளையும் நிறைவேற்றி விட்டேன் இந்த ஒன்றைத் தவிர.

கார்  வாங்கினால் யானையைக் கட்டித் தீனி போடுகிற மாதிரி என்று கார் வாங்கிய நண்பன் ஒருவன் சொன்னதிலிருந்து கார் வாங்கப் பயம்.  மேலும் என்னொருவன் சம்பளத்தில் பையன்களைப்  படிக்க வைக்க வேண்டும்.  நாளுக்கு நாள் ராக்கெட் வேகத்தில் எகிறிப் பாயும் விலைவாசியில் குடும்பச் செலவுகளைக் கவனிக்க வேண்டும். அம்மாவின் மருத்துவச்செலவு, வீட்டுக் கடனுக்கு வங்கிக்குச் செலுத்த வேண்டிய தவணைத் தொகை எனச் செலவுப் பட்டியல் நீண்டு கொண்டே செல்ல, என்னால் கார் வாங்குவதைப் பற்றிக்
கற்பனை கூடச் செய்யமுடியவில்லை. 

ஒரு வழியாகப் பையன்கள் இருவரும் கல்லூரிப் படிப்பை முடித்து வேலைக்குச் சேரும் தருவாயில் தான் அம்மாவின் இந்த ஆசையைப் பற்றி நான் யோசிக்கத் துவங்கினேன்.  எல்லோரும் சேர்ந்து வெளியில் சென்று
வர கார் இருந்தால் தான் நல்லது எனக் குடும்பத்தினர் அனைவரும் நச்சரிக்கத் துவங்க சரியென்று தலையாட்டி வைத்தேன்.

மேலும் என் கம்பெனியிலும் பெட்ரோல் செலவுக்கு மாதா மாதம் தனியே 'அலவன்ஸ்' தருவதாகச் சொல்லவே மகிழ்ச்சியாகச் சம்மதம் தெரிவித்தேன்.  அடுத்து என்ன கார் வாங்குவது என ஒரு பட்டிமன்றமே நடந்தது வீட்டில். ஆளாளுக்கு ஒரு காரைச் சிபாரிசு செய்தனர்.

"அம்பாசிடர் கார் தான் தேவலை; அப்போ தான் நாமெல்லாரும் தாராளமா உட்கார்ந்து போக முடியும்," என்ற மனைவியின் யோசனை சரியென்றே பட்டது எனக்கு.  ஆனால் சின்னவன் ஒத்துக் கொள்ளவில்லை. 

"அந்தக் காரை வாங்குவதாயிருந்தால் நீங்க காரே வாங்க வேணாம்," என்றான் கோபத்துடன்."போர்டு கார் சூப்பராயிருக்கும். எல்லாமே ஆட்டோமாடிக்.  அதைத் தான் வாங்கணும்," என்றான் அவன்.

"வெளிநாட்டுக் கார் வேணாம்பா.  நம்ம நாட்டுக் கம்பெனி கார் மாடல்களாப் பார்த்து அதுல ஒன்னு வாங்கலாம்பா," என்ற பெரியவனின் யோசனை ஏற்கப்பட்டு, அதன்படியே ஒரு காரும் வாங்கியாகிவிட்டது.

அம்மாவைக் காரில் அழைத்துக் கொண்டு பக்கத்தில் எங்காவது சென்று வர வேண்டும்; சொந்தக்காரில்   பயணம் செய்யும் போது அம்மாவுக்கு ஏற்படும் மகிழ்ச்சியைக் கண்டு ரசிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவரிடம் கேட்டேன்:-

"அம்மா! முதன் முதலா இன்னிக்குச் சாயந்திரம் நம்மூர் பிள்ளையார் கோவிலுக்குப் போயிட்டு அப்படியே திருநள்ளாறு கோவிலுக்குக் காரில போய்ட்டு வரலாம். வரீங்களாம்மா?"

"வேணாம்பா.  நான் வரலை.  நீங்கள்லாம் போய்ட்டு வாங்க.  அடுத்த வாரம் உங்க அத்தையோட பேத்தி கல்யாணம் திருச்சியில நடக்குதில்லே.  அதுக்கு நாமெல்லாரும் சேர்ந்து காரில போய்ட்டு வருவோம்".

எனக்குத் தூக்கி வாரிப் போட்டது.  காரையிலிருந்து திருச்சிக்குக் குறைந்தது நான்கு மணி நேரப் பயணம். மேலும் தற்சமயம் புதிதாகச் சாலை போடும் பணி வேறு நடைபெற்று வருவதால் தஞ்சையிலிருந்து திருச்சி வரை தூக்கித் தூக்கிப் போட்டுப் பயணம் செய்வதற்குள் நல்ல உடல்நிலையில் இருப்பவர்க்கே இடுப்பு கழன்று விடும்.  அம்மாவின் உடம்பு இந்தப் பயணத்தைத் தாங்குவது கடினம் என்று தோன்றியது.

"அதல்லாம் வேணாம்மா. அவ்ளோ தூரம் போறது ஆபத்து.  உங்க உடம்புக்கு ஒத்துக்காது. அதுவுமில்லாம போன வருஷம் தான் அத்தையோட பேரன் கல்யாணத்துக்கு நான் போயிட்டு வந்திருக்கேன். இந்தத் தடவை
நானும் போறதா இல்லே.  மொய் பணத்துக்கு ஒரு D.D. எடுத்து தபாலில அனுப்பிடலாம்னு இருக்கேன்"  என்றேன் தீர்மானமாக.

ஆனால் அம்மா விடுவதாய் இல்லை.

"இல்லப்பா. நான் போயே ஆகணும்.  சொந்தக்காரங்க எல்லாரையும் பார்த்து எவ்ளோ வருஷமாச்சி. அவங்க எல்லாரையும் பார்க்கணும்னு ரொம்ப ஆசையாயிருக்கு.  இந்த ஒரு தடவை மட்டும் மாட்டேன்னு சொல்லாம என்னை அழைச்சிட்டுப் போப்பா.  எனக்கு ஒன்னும் ஆகாது.  கவலைப்படாதே.  என்  பேரனுங்க கல்யாணத்தைப் பார்த்துட்டுத் தான் நான் சாவேன்"

என் கைகளைப் பிடித்துக் கெஞ்சிய அம்மாவைப் பார்க்க எனக்கு வியப்பாயிருந்தது.  அவரது கோரிக்கைக்கு இணங்குவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லாமல் போனது.

ஊருக்குக் கிளம்பும் நாளன்று சின்னக் குழந்தையின் உற்சாகத்துடன் எல்லாருக்கும் முன்னதாக எழுந்து வெந்நீர் போட்டுத் தலைக்குக் குளித்து விட்டுப் பட்டுப்புடவை உடுத்தி ஞாபகமாய் தம் இரட்டை வடச் சங்கிலியை எடுத்துப் போட்டுக் கொண்டு காரில் வந்தமர்ந்த அம்மாவைப் பார்த்த போது என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை.

நேற்று வரை நான் பார்த்த நோயாளி அம்மாவா இவர்?  தலைமுடியைக் கூட சீவமுடியாமல்  முக்கிக் கொண்டும் முனகிக் கொண்டும் படுத்துக் கிடந்தவர், உறவுகளைப் பார்க்கப் போகிற மகிழ்ச்சியில்  நான் சின்னப்பிள்ளையில் பார்த்த பழைய அம்மாவாக உருமாறி விட்டாரா என்ன?

மனைவியை முன் சீட்டில் அமரச் சொல்லிவிட்டு பின் சீட்டில் அம்மாவை என் மடியில் படுக்கச் சொல்லிப் பயணம் செய்து ஊர் வந்து சேர்ந்தோம்.

பல வருடங்களாகப் பார்க்காமலிருந்த தம் உறவுகளைப் பார்த்த போது அம்மாவுக்கு உற்சாகம் கரை புரண்டு ஓடிற்று. அம்மாவைப் பார்த்தச் சொந்தக்காரர்களும் அவர் மேல் அன்பு மழையைப் பொழிந்தனர்.

"வாங்க அத்தாச்சி!  எப்படி இருந்த நீங்க இப்படி துரும்பா இளைச்சிப் போயிட்டீங்க? ஒங்களுக்கு ஒடம்பு சொகமில்லேன்னு கேள்விப்பட்டு மனசுக்கு ரொம்பக் கஷ்டமாயிடுச்சி! வந்து பார்க்கணும்னு தான் ஆசை. 
இந்தப் பாவிக்குத் தான்  வர முடியல.  இது யாரு?  ஒங்க மவனா?  சின்னப்
பையனா இருந்தப்பப் பார்த்தது.  அவங்கப்பாவை அப்படியே உரிச்சி வைச்சிருக்கே!  அவங்கப்பாவைத் தான் சீக்கிரமா ஆண்டவன் கொண்டு போயிட்டான்.  அவர் ஆயுசையும் சேர்த்து ஆண்டவன் இவருக்கு
நீண்ட ஆயுளைக் கொடுக்கட்டும்."

திருமணத்துக்கு வந்திருந்த யார் யாரிடமோ அம்மா என்னை அழைத்துப் போய் அறிமுகம் செய்தார்.

"தம்பி! இவர் யாரு தெரியுமா? ஒங்கச் சித்தப்பாவோட, தங்கச்சியோட, நாத்தனாரோட கொழுந்தனார் .பையன்."  

எனக்குத் தலை சுற்றியது.  நல்லவேளையாக அம்மா அத்துடன் நிறுத்திக் கொண்டார். 'அப்படியானால் உனக்கு அவர் என்ன முறை வேண்டும்?' என்று கேள்வி கேட்டிருந்தால் என் கதி அம்பேல் ஆகியிருக்கும்.  அவர் சொன்ன உறவு முறை புரிந்தது போல் வேக வேகமாகத் தலையாட்டி வைத்தேன். அந்த உறவுக்காரரும் என் நிலையிலேயே இருந்தார் என்பது அவர் திரு திரு என்று விழிப்பதிலேயே கண்டு கொள்ள முடிந்தது.

"இவன் என் பையன்.  பெரிய கம்பெனியில மேனேஜரா இருக்கான்.  லட்சம் லட்சமா சம்பாதிக்கிறான். இப்ப ஏழு லட்சம் போட்டு எனக்காகவே கார் வாங்கியிருக்கான்.  வாசல்ல படகு மாதிரி தெருவை அடைச்சிக்கிட்டு நிக்குதே, அது இவனோட கார் தான்"

பேசிய அத்தனை உறவுகளிடமும் அம்மா என்னைக் கூப்பிட்டு அறிமுகம் செய்து வைத்தார். பேச்சினூடே என் காரையும் பற்றிச் சொல்ல மறக்கவில்லை.  எனக்குத் தர்ம சங்கடமாயிருந்தது.

சத்தம் போட்டு இடைவிடாமல் பேசிக்கொண்டிருந்த அம்மாவை அணுகி,
"ரொம்பக் கத்திப் பேசாதீங்க. நெஞ்சு வலி வந்துடுச்சின்னா அப்புறம் நீங்க தான் கஷ்டப்படுவீங்க," என்று எச்சரித்துப் பார்த்தேன்.  ஆனால் அம்மா என் வார்த்தையைச் சட்டையே செய்யவில்லை.

"அம்மா, கல்யாணம் முடிஞ்ச கையோட சாப்பிட்டுட்டுக் கிளம்பிடலாம்.  அப்பதான் பொழுதோட ஊர் போய்ச் சேர முடியும்.  நாளைக்குக் கண்டிப்பா நான் கம்பெனி போயாகணும்.  முக்கியமான வேலையிருக்கு"

"சரிப்பா. உடனே கிளம்பிடலாம்"

நாங்கள் கிளம்பிய போது மாமாவும் அத்தையும் வாசல் வரை வந்து எங்களை வழியனுப்பி வைத்தார்கள்.

"ரொம்பச் சந்தோஷம் அண்ணி.  உங்களுக்கு உடம்பு முடியாம இருக்கிற தினாலே நீங்க எங்க வரப் போறீங்கன்னு தான் நாங்க நினைச்சோம்.  நீங்களும் வந்து மணமக்களை வாழ்த்துனதிலே எங்களுக்கு ரொம்பச் சந்தோஷம்" என்றாள் அத்தை.

அம்மாவுடன் பேசிக்கொண்டிருந்தாலும் அத்தையின் கவனம் முழுவதும் என் காரின் மீதே படிந்திருந்ததை நான் கவனிக்கத் தவறவில்லை.  வைத்த கண் வாங்காமல் காரையே பார்த்துக் கொண்டிருந்தாள் அத்தை.

"நீங்க ஆசைப்பட்டபடி ஒங்கச் சொந்தக்காரங்க எல்லாரையும் பார்த்ததுல சந்தோஷம் தானே ஒங்களுக்கு?"

மாலை ஏழு மணியளவில் வீடு வந்து சேர்ந்த பிறகு அம்மாவிடம் கேட்டேன்.

"சொந்தக்காரங்களைப் பார்த்ததுல எனக்கு மகிழ்ச்சி தான் தம்பி. ஆனா அதை விட பெரிய சந்தோஷம்,  உங்கத்தைக்கு முன்னாடி நானும் ஒரு நாள் காரில போய் இறங்கணும்னு நான் செஞ்சிருந்த வைராக்கியமும் நிறைவேறிடுச்சி. எங்க நான் சாகறதுக்குள்ளே நீ கார் வாங்க மாட்டியோ, என் சபதத்தை நிறைவேத்தாம நான் போய்ச் சேர்ந்துடுவேனோன்னு பயந்துக்கிட்டே இருந்தேன்". 

"சபதமா? என்னது அது?  எங்கிட்ட நீங்க சொல்லவேயில்லியே?"

"அப்ப நீ சின்னப்புள்ளை. ரெண்டு வயசிருக்கும். நேத்தி நடந்தது மாதிரி இன்னும் என் நினைவில அப்படியே பதிஞ்சிருக்கு.  திருச்சியில ஒரு கல்யாணத்துக்கு ஒன்னையும் அழைச்சிக்கிட்டு நானும்  ஒங்கப்பாவும்
போயிருந்தோம்.  ஒங்கத்தை வாக்கப்பட்டது நல்ல வசதியான குடும்பம். அந்தக்காலத்துல நம்ப சொந்தக்காரங்களிலேயே அவங்கக்கிட்ட தான் காரு இருந்துச்சி.  அத்தை வீட்டுக்குப் பக்கத்துல தான் கல்யாண மண்டபங்கிறதால, மத்தியானமே அவங்க வீட்டுக்குப் போயிட்டோம். 

சாயங்காலம் மண்டபத்துக்குக் கிளம்பறப்ப, "தங்கச்சி, நம்ப காரை ரெண்டு டிரிப் அடிக்கச் சொல்றேன். நாம எல்லாரும் காரிலேயே மண்டபத்துக்குப் போயிடலாம்,"னு ஒங்க மாமா தான் சொன்னாரு. அவரு ரொம்ப நல்லவரு.  சரின்னுட்டு நான் காரில ஏறப் போன சமயம், காரில உட்காந்திருந்த அத்தை,

"உங்களுக்கெல்லாம் காரில இடமில்லை, நீங்க பஸ்சில வாங்க,"ன்னு முகத்திலடிச்சது மாதிரி சொல்லிட்டுப் படாருன்னு கதவைச் சாத்திட்டா.  எனக்கு ரொம்ப அவமானமாப் போயிட்டுது.  அழுகையும் ஆத்திரமும் தாங்க முடியல.. 

"சரி.  சரி.  அழாதே.  சின்ன வயசிலேர்ந்தே அவளுக்கு வாய்த்துடுக்கு அதிகம்.  அதோட இப்ப பணத்திமிரும் சேர்ந்துடுச்சி.  பொறுமையா இரு. நமக்கும் ஒரு காலம் வராமலாப் போயிடும்?"னு அப்பா தான் என்னைச் சமாதானம் செஞ்சாரு.

அவளுக்கு முன்னாடி அவ மூக்கில விரல் வைக்கிற மாதிரி நானும் ஒரு நாள், பெரிய காரில போய் இறங்கணும்னு அன்னிக்கு முடிவெடுத்தேன்.  இத்தினி வருஷமா என் மனசில இருந்த வைராக்கியம் இன்னிக்கு உன்னால நிறைவேறிடுச்சி.  இனிமே நான் நிம்மதியாச் சாவேன்."

அம்மா சொன்னதைக் கேட்டதும் எனக்கு ரோஷம் பொத்துக் கொண்டு வந்தது.
"இதுக்காகத் தான் நீங்க கார் வாங்க விரும்புறீங்கன்னு  என்கிட்ட முன்னாடியே சொல்லியிருந்தா,  கடனை உடனை வாங்கியாவது ஒங்கச் சபதத்தை உடனே நிறைவேத்தியிருப்பேனேம்மா"  

"நீ அப்படி செய்வேன்னு எனக்குத் தெரியும்பா.  ஆனா என் வைராக்கியத்தை நிறைவேத்தணுங்கிறதுக்காக கடன் வாங்கி வரவுக்கு மேல செலவு செஞ்சு நீ கடன்ல மூழ்கிப் போறதை நான் விரும்பல. அததுக்கு ஒரு நேரம் வரணும்ல.  இப்பத்தான் என் ஆசை நிறைவேறிடுச்சே.  அது போதும் எனக்கு. உங்கத்தை வைச்ச கண் வாங்காம நம்ம காரைப் பார்த்துக்கிட்டே இருந்தாளே, அதைக் கவனிச்சியா? இப்ப நான் ரொம்ப மகிழ்ச்சியா இருக்கேன்".    

"ம்.ம். கவனிச்சேன். சரிம்மா!  நெஞ்சு வலி அதிகமா இருந்தா மறைக்காம சொல்லிடுங்க. டாக்டர்கிட்ட ஒரு தடவை போயிட்டு வந்திடலாம்." வழக்கமாக போடும் மாத்திரைகளை அம்மாவிடம் கொடுத்து விட்டுக் கேட்டேன்.

"டாக்டர் கிட்டப் போனாலும் அவரு புதுசாவா மாத்திரை எழுதப் போறாரு? இதையே தான் எழுதிக் கொடுப்பாரு.வேணாம் தம்பி. என்னைப் பத்திக் கவலைப்படுறத உட்டுட்டு போய்ப்படுத்து நிம்மதியாத் தூங்கு. காலையில எழுந்திருச்சி  ஆபிசுக்குப் போகணும்."

"சரிம்மா"

பயணம் செய்ததால் ஏற்பட்ட களைப்பு இருந்தாலும் தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தேன்.  என்னென்னவோ நினைவலைகள்!

அம்மாவின் வார்த்தைகள் திரும்பத் திரும்ப காதுகளில் எதிரொலித்துக் கொண்டிருந்தன.  இதற்குத் தான் அம்மா அவ்வளவு பிடிவாதமாக ஊருக்குக் கிளம்பி வந்திருக்கிறார். மனதிலிருந்த வலிமை பயணம் செய்ய தேவையான சக்தியை அவரது உடலுக்கு அளித்தது போலும். இத்தனை வருடங்கள் கழிந்த
பின்னரும் அந்தச் சம்பவம் ஏற்படுத்திய வடு, நீறு பூத்த நெருப்பாய் அம்மாவின் நெஞ்சுக்குள் கனன்று கொண்டிருந்திருக்கிறது.

இதைப்பற்றி அம்மா முன்னமே எனக்குத் தெரிவித்திருக்கலாம்.  ஒரு வேளை தம் குமுறலை வெளியே கொட்டிப் புலம்பி விட்டால் மனதுக்கு ஆறுதல் கிடைத்து தாம் கொண்ட வைராக்கியத்தை நிறைவேற்ற வாய்ப்பில்லாமல் போய் விடும் என அம்மா நினைத்தாரோ?

இந்த யோசனைகளில் ஆழ்ந்திருந்த நான் எப்போது தூங்கினேனோ தெரிய வில்லை.

"என்னங்க ஏந்திரிச்சி வந்து மாமியைப் பாருங்களேன்.  பாலை வைச்சிக்கிட்டு ரொம்ப நேரமாக் கூப்பிடறேன். கண்ணையே தொறக்க மாட்டேங்கிறாங்க,"

அதிகாலையில் மனைவி வந்து எழுப்பவே, வாரிச் சுருட்டிக் கொண்டு ஓடினேன்.  அம்மா அசைவற்று இருந்தார்.  பக்கத்துத் தெருவிலிருந்த டாக்டரைக் கொண்டு வந்து காட்டினேன்.  தூக்கத்திலேயே அம்மாவின் உயிர் பிரிந்து விட்டதாகச் சொன்னார் அவர்.

என் கன்னங்களில் வழிந்தோடும் கண்ணீரை ஒரு கையால் துடைத்தபடியே அம்மாவைப் பார்த்தேன்.

'நான் நினைத்ததைச் சாதித்து விட்டேன்' என்ற வெற்றிப் புன்னகையுடன் தூங்குவது போலவே இருந்தது முகம்.


எத்தனையோ முறை செத்துச் செத்து உயிர் பிழைத்தவர் தாம் அம்மா. இவ்வளவு நாட்கள் தம் வைராக்கியத்தை நிறைவேற்றத்தான் அம்மா தம் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு போராடியிருக்கிறார் என்று இப்போது எனக்குப் புரிந்தது.

அம்மாவை அவ்வளவு தூரம் அழைத்துப் போயிருக்கக் கூடாது; தலை குளிக்க அனுமதித்திருக்கக் கூடாது;  உறவுக்காரர்களிடம் ஓய்வின்றிப் பேச விட்டிருக்கக்  கூடாது, இதெல்லாம் தாம் அம்மாவின் சாவுக்குக் காரணம் என்பன போன்ற எண்ணங்களால் குற்றவுணர்வு தோன்றி என்னைப் பெரிதும் அலைக்கழித்தாலும் அவரது ஆசையை நிறைவேற்றி வைத்தோம் என்ற எண்ணம் மனதுக்குச் சிறு ஆறுதலைத் தந்தது.


(தமிழ் மன்றச் சிறுகதைப் போட்டியில் முதற் பரிசு வென்ற கதை-ஜூன் 2010) 



   
    

   

18 comments:

  1. அம்மாவின் வைராக்கியம் வெற்றி பெற்றுள்ளது. அதற்காகவே அவருடைய உயிரும் போகாமல் இழுத்துக்கொண்டிருந்தது. வைராக்கியம் நிறைவேறியவுடன் மனதில் ஒரு சந்தோசம் . இன்றைய காலகட்டத்தில் மனிதர்களிடையே நிறைய வைராக்கியம், ஆசைகள், கோபங்கள் உண்டு. சிலருக்கு அவை நிறைவேறும்போது தாங்கமுடியாத சந்தோசத்தை தருகின்றன. கதையின் நடை மிக எளிமையாக அருமையாக இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி விச்சு சார்!

      Delete
  2. 'நான் நினைத்ததைச் சாதித்து விட்டேன்' என்ற வெற்றிப் புன்னகையுடன் தூங்குவது போலவே இருந்தது முகம்


    வைராக்கிய்த்தில் வெற்றிபெற்ற அம்மா ~~!

    ReplyDelete
    Replies
    1. பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி ராஜி மேடம்!

      Delete
  3. அம்மாவின் ஆழ்மன வைராக்கியம், வைராக்கியத்தை வெளிப்படுத்தாமல் ஆசையெனச் சொல்லி அவகாசம் கொடுத்த அவரது நிதானமும், மகன் மீதான பற்றும், அம்மாவின் ஆசையை நிறைவேற்றி அவரது மனத்துயர் குறைத்த மகனின் பாசம் என ஒவ்வொரு நிலையிலும் மனம் நெகிழ்த்தும் அழகான உணர்வுகளால் பின்னிப் பிணைந்த கதை.

    இறுதியில் மனநிறைவுடன் உண்டான அம்மாவின் மரணம், நமக்கும் சிறு ஆறுதல் தந்து தேற்றுகிறது. நல்லதொரு மனம் தொட்டக் கதைக்குப் பாராட்டுகள் அக்கா.

    ReplyDelete
    Replies
    1. விரிவான விமர்சனத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி கீதா!

      Delete
  4. //அவளுக்கு முன்னாடி அவ மூக்கில விரல் வைக்கிற மாதிரி நானும் ஒரு நாள், பெரிய காரில போய் இறங்கணும்னு அன்னிக்கு முடிவெடுத்தேன். இத்தினி வருஷமா என் மனசில இருந்த வைராக்கியம் இன்னிக்கு உன்னால நிறைவேறிடுச்சி. இனிமே நான் நிம்மதியாச் சாவேன்."//

    நல்ல வேளை கதை என்று கூறி ஆறுதல் கொடுத்தீர்கள். அருமையான கதை. அம்மாவின் சபதம் நிறவெறிய விதத்தை கூறிய விதம் அருமை. உண்மையை சொல்ல வேண்டுமானால் கலைஞர் கூறுவது போல் கண்கள் பனித்தது இதயம் இனித்தது

    ReplyDelete
    Replies
    1. மென்மையான இதயம் கொண்டவர் நீங்கள். கதையில் மட்டுமல்ல, நிஜ வாழ்விலும் இது போன்ற அவமானத்தால் மனம் புண்பட்டு அதுவே வைராக்கியமாகி வெற்றி பெற்ற சம்பவங்கள் நடக்கத் தான் செய்கின்றன.
      அருமை என்ற பாராட்டுக்கு நெஞ்சார்ந்த நன்றி சீனு சார்!

      Delete
  5. மிக எளிமையாக வார்த்தைகளை கோர்த்து அழகிய கதை ...
    அந்தந்த பாத்திரங்களின் பெயர்களை சொல்லாமல் நேர்த்தியான கதை எழுதிய உங்களுக்கு என் நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் மனம் திறந்த வாழ்த்துக்கும் என் உளமார்ந்த நன்றி.

      Delete
  6. நினைத்ததை சாதித்த அம்மா நிறைவான கதை மனம்நிறைந்த வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சார்!

      Delete
  7. //எத்தனையோ முறை செத்துச் செத்து உயிர் பிழைத்தவர் தாம் அம்மா. இவ்வளவு நாட்கள் தம் வைராக்கியத்தை நிறைவேற்றத்தான் அம்மா தம் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு போராடியிருக்கிறார் என்று இப்போது எனக்குப் புரிந்தது.//

    கதையின் கருவும், அதை அழகாக எடுத்துச்சென்று முடித்த நடையும், மிகவும் நன்றாகவே உள்ளன. பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

    //நான் நினைத்ததைச் சாதித்து விட்டேன்' என்ற வெற்றிப் புன்னகையுடன் தூங்குவது போலவே இருந்தது முகம்//

    வைராக்யத்தின் வெற்றியல்லவா! ;)))))

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி சார்!

      Delete
  8. Replies
    1. அருமையான கதை என்ற பாராட்டுக்கு மிக்க நன்றி சாந்தி!

      Delete
  9. என் கண்களில் வழியும் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை
    கலையரசி.
    விஜி

    ReplyDelete
    Replies
    1. மிகவும் இளகிய மனம் உங்களுக்கு விஜி! அம்மாவின் நினைவுகள் அனைவருக்கும் ஒரே மாதிரியான உணர்வினைத் தான் தருகின்றன. உங்கள் கருத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிகவும் நன்றி விஜி! நான் எழுதியவற்றுள் எனக்கு மிகவும் பிடித்த கதை இது!

      Delete