நல்வரவு

வணக்கம் !

Friday, 17 July 2015

மரங்களைக் காப்பாற்றுங்கள்



இன்றைய காலக்கட்டத்தில்  மரக்கன்றுகளை நடுங்கள் என்று குரலெழுப்புவதற்குப் பதிலாக, இருக்கின்ற மரங்களையாவது காப்பாற்றுங்கள் என்று கூக்குரலிடுவது அவசியத் தேவையாயிருக்கிறது; அவசரமும் கூட.
 .
காலநிலை மாற்றத்திற்கும், மரங்களுக்கும் உள்ள பிணைப்புப் பற்றியும், சுற்றுச்சூழலுக்கும், மரங்களுக்கும் இடையேயான நெருங்கிய உறவு பற்றியும், வாய்கிழிய பேசுகின்றோம்; மரமின்றி மழையில்லை, மழையின்றி  நீரில்லை;  சுட்டெரிக்கும் கத்திரி வெயிலால் இவ்வாண்டு அதிகளவில் மரணம் என்றெல்லாம் புலம்புகின்றோம்.
     
ஆனாலும் ஆண்டுதோறும் புயல், மழை, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களுக்குப் பலியானது போக, எஞ்சி நிற்கின்ற மரங்கள் சாலை விரிவாக்கம், வீடு கட்டுதல், தூசி விழுதல், கடத்தல் போன்ற காரணங்களுக்காகத் தொடர்ந்து வெட்டப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.
       
தமிழகத்தில் போராட்டம் என்ற பெயரில் ஒரு கட்சி, தெருவோரங்களில் இருந்த தொன்மையான மரங்களை எல்லாம் வரலாறு காணாத வகையில், ஒரே இரவில் வெட்டிச் சாய்த்துப் போக்குவரத்தைத் தடுத்து நிறுத்திப் புதிய சாதனை படைத்தது!

இன்னொரு கட்சி தமிழுக்குச் செம்மொழி மாநாடு நடத்துகிறேன் என்று சொல்லிக் கோவையிலிருந்த பல நூறு மரங்களை வெட்டி, ஊரைப் பொட்டல் திடலாக ஆக்கியது.    

பிரும்மாண்ட தட்டிகளை வைத்து விளம்பரங்கள் செய்தல், அரசியல் வாதிகளுக்குக் கண்ட கண்ட இடங்களில் வரவேற்பு நுழைவாயில்கள் அமைத்தல், தோரணங்கள்  மாட்டுதல் போன்ற பல காரணங்களுக்காகப் பெரிய பெரிய கிளைகளைத் துண்டாடி மரத்தை மொட்டையடித்து மூளியாக்குகின்றனர்.  இதனால் மரம் பட்டுப் போய்விடுகின்றது. 

போதாக்குறைக்கு அவ்வப்போது நடத்தப்படும் மரம் நடு விழாக்களும், எஞ்சியிருக்கின்ற மரங்களுக்குச் சாவு மணி அடிக்கின்றன என்பது தான் வேதனையான உண்மை. 

எழுத்தாளர் கி.ராஜ்நாராயணன் எழுதியது இது.  மந்திரி தலைமையில்  மரம் நடு விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு, நூறு மரக்கன்றுகள் நடப்பட்டதாம்.  சில மாதங்கள் கழித்து, நட்டவற்றில் எத்தனை பிழைத்திருக்கின்றன என்று கேட்டதற்கு  

'நட்டது நூறு,  செத்தது  நூத்தியொன்னு,' என்றாராம் உதவியாளர்.  'அதெப்படி?'  என்று விழித்தவருக்கு, கன்றுகள் நடுவதற்கு நூறு
போத்துகள்  வெட்டியதில், இருந்த ஒரு மரமும் செத்து விட்டது என்றாராம்.  எனவே அரசியல்வாதிகள் நடத்தும் மரம் நடு விழாக்கள், இப்படித்தான் இருக்கின்ற மரத்தையும்  சாகடிக்கும் கேலிக்கூத்தாகயிருக்கின்றன. 


மரங்களை வளர்த்து இயற்கையைப் பேணுவதில் இவர்களுக்கு உண்மையான அக்கறையிருக்குமானால், கோலாகலமாக விழா நடத்தி மரக்கன்று நடுவதுடன்,  அது வேர் பிடிக்கும் வரைத் தினமும் தண்ணீர் ஊற்றிக் கவனிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.   அல்லது மழைக்காலம் துவங்குவதற்கு முந்தைய மாதத்தில், இவ்விழாவை நடத்த வேண்டும்.  செய்வார்களா? 

ஒரு நாள் கூத்தாக கடுங்கோடையில் மரம் நடுவிழா நடத்திக் கன்றுகளை நடுவது போல் ‘போஸ்’ கொடுத்து பத்திரிக்கையில் பெரிய படம் போட்டு விளம்பரம் தேடிக்கொள்வதே அரசியல்வாதிகளின் உண்மையான நோக்கம்.

சுற்றுச்சூழல் பற்றியும் இயற்கையைப் பேணுதல் குறித்தும் நம்  எழுத்தாளர்களும் அவ்வப்போது குரலெழுப்பித் தம் பங்களிப்பைச் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.  காலச்சுவடு இதழின் நிறுவனர் மறைந்த எழுத்தாளர் திரு. சுந்தர ராமசாமியின் புகழ்பெற்ற நாவல் ‘ஒரு புளிய மரத்தின் கதை.’  இக்கதையின் கரு பற்றி ஆசிரியர் முதல் அத்தியாயத்தில் என்ன கூறுகிறார் கேளுங்கள்:-

மறக்க முடியாத விஷயங்களும் சில உண்டு தானே? அதில் ஒன்று தான் புளியமரத்தின் கதையும்.

சொல்லப்போனால் புளியமரம் என்ன செய்தது? சும்மா நின்று கொண்டு தானே இருந்தது? மனிதனின் அலகிலா விளையாடல்களுக்கு மெளன சாட்சியாக நின்றதே அல்லாமல் எதிலாவது பங்கெடுத்துக் கொண்டதா? பட்டுக்கொண்டதா? மனித ஜாதிக்கு அது இழைத்த கொடுமை தான் என்ன? யாரைப் பார்த்துக் கை நீட்டிற்று? யாரை நோக்கிப் பல்லிளித்தது? யாருடனாவது சேர்ந்து கொண்டு, யாருக்கேனும் குழி பறித்ததா?
 

ஆனால் நாட்டையும், பணத்தையும் பெண்டுகளையும் அதிகாரத்தையும், புகழையும் காயாக வைத்து விளையாடிய மனிதன், புளியமரத்தை மட்டும் விட்டு வைக்கிறேன் என்கிறானா? அதையும் காயாக வைத்து விளையாடித் தீர்த்து விட்டான். புளியமரம் அழிக்கப்பட்டது.”
 

இதே கதையில் காற்றாடி மரத்தோப்பு அழிக்கப்பட்டு நவீன பூங்கா அமைக்கும் பணி விவரிக்கப்படுகிறது. தோப்பு மரம் ஒவ்வொன்றாக வெட்டப்பட்டு வீழ்வதைக் காணச் சகிக்காமல், முதியவர் ஒருவர், இளைஞனிடம் கேட்கிறார்:-

”தம்பி, எதுக்குடேய் மரத்தெ வெட்டிச் சாய்க்கிறாங்க?”

”செடி வைக்கப் போறாங்க” 

”எதுக்கு டேய், செடி வைக்கப் போறாங்க?”
”காத்துக்கு”

”மரத்தெக் காட்டிலும், செடியாடேய் கூடுதல் காத்துத் தரும்?”

”அளகுக்கு”

”செடிதான் அளகாட்டு இருக்குமோ?”

”உம்”

”செடி மரமாயுடாதோவ்?”

”மரமாட்டு வளராத செடி தான் வைப்பாங்க. இல்லை வெட்டி வெட்டி விடுவாங்க”

”வெட்டி வெட்டி விடுவாங்களா?”

”ஆமா”

”அட, பயித்தாரப் பசங்களா!” 

நவீனமயம் என்ற பெயரில் தோப்பை அழிக்கும் மனிதனின் பைத்தியக் காரத்தனத்தை இவ்வுரையாடல் மூலம், ஆசிரியர் எப்படிக் கிண்டல் செய்கிறார் பாருங்கள்!

எவ்வளவு தான் எடுத்துச் சொன்னாலும், இன்னும் நம் மக்களுக்கு
சுற்றுச்சூழலைப் பேணுவது குறித்தோ, மரங்களின் அருமை பற்றியோ போதிய விழிப்புணர்வு வந்தபாடில்லை.  புவி வெப்பமயமாதலைத் தடுக்க மரங்களைக் காக்க வேண்டியதன் அவசியத்தை இவர்கள் உணரும் வரை, நாமும் திரும்பத் திரும்ப இது பற்றிப் பேசிக் கொண்டோ, எழுதிக் கொண்டோ  இருக்க வேண்டியது தான்; வேறு வழியில்லை.

முடிவாக கவிஞர் தேனம்மை லெக்ஷ்மணன் எழுதிய ‘காயின் ருசி’ என்ற கவிதையிலிருந்து, என்னைக் கவர்ந்த சில வரிகள்:-

தூசி விழுகிறது, முகத்தில் கிளை இடிக்கிறது, பூச்சி வருகிறது  என்று    ஏதேதோ காரணம் சொல்லி மரமொன்றை வெட்டிச் சாய்த்து விடுகிறார்கள். நடு இரவில் கிளை தழைகளோடு, ஜன்னல் வழி வந்து   கன்னந் தழுவிய  நிலா, இப்போது மொட்டையாக….….
“காக்கைகளும், குருவிகளும்
வண்டுகளும் இல்லாமல்
கண்கள் காயும் வெளிச்சத்தில்
வறண்டு கிடந்தது சிமெண்ட் தரை.
இலையிழந்து, அழகிழந்து, களையிழந்து
மொட்டையடித்தது போல் நிலவு
நடுநிசி விழிப்பில், ஜன்னல் வழி அசைந்து
கன்னம் வருடும் சுகமிழந்து துக்கமாய்…. …..”


(நான்கு பெண்கள் இணைய இதழில் 17/06/2015 அன்று வெளியானது)

(படம் நன்றி இணையம்)

26 comments:

  1. பூமியை அழிக்காமல் விடமாட்டோம் போல..ஒரு பக்கம் வெப்பமயமாகுதல் பற்றிக் கூவிக் கொண்டிருந்தாலும் ஒரு பக்கம் வீடு கட்டவும், சாலைகளை அகலப்படுத்தவும் என்று பேராசைகளுக்கு மரங்களை வெட்டிக் கொண்டுதான் இருக்கிறோம்.
    த.ம.2

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கும், கருத்துப்பகிர்வுக்கும் மிகவும் நன்றி தங்கையே! இதே நிலைமை நீடித்தால் பூமியின் அழிவு வெகு தூரத்தில் இல்லை என்பது மட்டும் புரிகின்றது. த.ம வாக்குக்கு மீண்டும் என் நன்றி கிரேஸ்!

      Delete
  2. ஆஹா நன்றாக சொன்னீர்கள்மா நல்ல விழிப்புணர்வுப் பதிவு. நாமே நமக்கு குழி தோ ண்டுகிறோம். மரங்களை அழித்து. பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
    Replies
    1. வாங்க இனியா! கருத்துப்பகிர்வுக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி இனியா!

      Delete
  3. குறைந்தபட்சம் வருங்கால சந்ததிகளையாவது நினைத்துப் பார்க்க வேண்டும்... ம்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க தனபாலன் சார்! கண்டிப்பாக நம் வருங்கால சந்ததிகளுக்காவது நாம் இயற்கையைக் காப்பாற்ற வேண்டும்! கருத்துக்கு மிகவும் நன்றி!

      Delete
  4. மிகவும் அவசியமானதும், அவசரமானதுமான பதிவு. எதாவது செய்தே ஆகா வேண்டிய கட்டாயத்தில் மக்கள் இருந்தாலும் அதை நாம் நினைப்பதுமில்லை, செய்வதுமில்லை. முன்னாள் ஜனாதிபதி கலாம் வார்த்தைகளைக் கேட்டு, வேண்டுகோளை ஏற்று நடிகர் விவேக் லட்சக் கணக்கில் மரம் நட்டு பாதுகாத்து வர ஏற்பாடுகள் செய்து வருகிறார்.

    இன்று வாட்ஸப்பில் வந்த ஒரு செய்தி.

    "மரங்கள் மட்டும் WI FI வெளியிடுமானால் வீட்டுக்கு இரு மரம் வளர்த்திருப்போம். ஆனால் அவை பாவம் ஆக்ஸிஜன் மட்டுமே வெளியிடுகின்றன"

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஸ்ரீராம்! முன்னாள் ஜனாதிபதி வேண்டுகோளின் பேரில் நடிகர் விவேக் மரம் நட்டு வளர்க்கும் செய்தி காதில் தேனைப் பாய்ச்சுகின்றது. வாட் ஸப்பில் வந்திருக்கும் செய்தியை ரசித்தேன். வேதனை தரும் உண்மை. உயிர் வாழத்தேவையான ஆக்ஸிஜனை விட மக்களுக்கு Wi Fi முக்கியமாக இருக்கின்றது. சுவையான கருத்துப்பகிர்வுக்கு மிகவும் நன்றி ஸ்ரீராம்!

      Delete
  5. வணக்கம்,
    நன்றாக சொன்னீர்களம்மா,,,,,,,,,,,
    இந்நிலை மாறத்தான் வேண்டும்,
    மரம் வெட்டி செடி நடும் நாம்,,,,,,,,,,
    அருமையான விளக்கம், வாழ்த்துக்கள். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வாங்க மகி! நவீன மயம் என்ற பெயரில் இயற்கையை மேலும் மேலும் அழித்துக்கொண்டிருக்கிறோம்! இதன் கொடுமையான விளைவுகளை அனுபவிக்கப்போகிறவர்கள் நம் சந்ததிகள் தாம்! வாழ்த்துக்கு மிகவும் நன்றி மகி!

      Delete
  6. >>> மரங்களைக் காக்க வேண்டியதன் அவசியத்தை இவர்கள் உணரும் வரை, நாமும் திரும்பத் திரும்ப இது பற்றிப் பேசிக் கொண்டோ, எழுதிக் கொண்டோ இருக்க வேண்டியது தான்; வேறு வழியில்லை.<<<

    பிடியிலிருந்து விலகியோடும் வேதாளத்தை மீண்டும் பிடிக்க யத்தனித்தான் -
    முயற்சியில் மனம் தளராத விக்ரமாதித்யன்!..

    ReplyDelete
    Replies
    1. வாங்க துரை சார்! அந்த விக்ரமாதித்தன் போல மனம் தளராமல் நாமும் திரும்பத் திரும்ப இதையே வலியுறுத்தி எழுதிக்கொண்டிருப்போம்! கருத்துக்கு மிகவும் நன்றி!

      Delete
  7. வணக்கம்
    சிறப்பான விளக்கம்கண்டுமகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வாங்க ரூபன். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி ரூபன்!

      Delete
  8. இயற்கையின் மீதுள்ள அலட்சியமே இந்நிலைக்கு காரணம்! ஒவ்வொருவருக்கும் சுய கட்டுப்பாடு அவசியம், சின்ன சின்ன இடையூறுகளுக்கு எல்லாம் மரத்தை வெட்டி சாய்த்தால் என்ன ஆகும் , இன்னும் கடினமான காலக்கட்டங்களை அனுபவிக்க நேரிடும், அப்போது உணருவர் நம்மவர்கள் ...

    நல்ல சிந்தனைக்கு என் வணக்கங்கள் ..

    ReplyDelete
    Replies
    1. வாங்க அரசன்! உங்கள் வரவு நல்வரவாகுக! உங்கள் முதல் வருகைக்கு என் நன்றி! குப்பை கொட்டுகிறது என்று சாதாரண காரணம் சொல்லியே தொன்மையான மரங்கள் பல வெட்டிச்சாய்க்கப்படுகின்றன. எல்லாம் முடிந்த பிறகு நம்மவர்கள் உணர்ந்து எந்தப் பயனும் இருக்கப்போவதில்லை. ஏதோ நம்மால் முடிந்தவரைக் குரல் கொடுத்துக் கொண்டிருப்போம்! உங்கள் கருத்துப்பகிர்வுக்கு மீண்டும் நன்றி அரசன்!

      Delete
  9. அவசியமான கட்டுரை . சாயாவனம் என்னும் புதினத்தில் சா. கந்தசாமி மரங்களை அழிக்கின்ற கொடுமையை மையமாய் வைத்துள்ளார் . மலைகளின்மீது வளர்ந்திருக்கிற மரங்களை அழிப்பதால்தான் அடிக்கடி நிலச் சரிவு ஏற்படுகிறதாம் . சுற்றுச் சூழல் குறித்து மேன்மேலும் எழுதுக .

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் கூறுவது உண்மை தான். சாயாவனம் எனக்கு மிகவும் பிடித்த புதினம். அதில் ஒரு தோப்பை அங்குல அங்குலமாக எப்படி அழிக்கிறான் நாயகன் என்பதை விலாவாரியாக விவரித்திருப்பார் சா.கந்தசாமி. மண்ணை இறுக்கமாகப் ப்பிடித்திருக்கும் மரங்களின் வேர் அறுபடுவதால் நிலச்சரிவு ஏற்படுகிறது என்று தாங்கள் சொல்லியிருபப்தும் உண்மையே. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி!

      Delete
  10. வாருங்கள் சகோ.

    நாட்டிற்கு அரண் என்று வள்ளுவர் சொல்வார்,

    அரண் என்றால் அது பாதுகாப்பு.

    அது கோட்டை கொத்தளங்களல்ல.

    நவீன போர்க்கருவிகள் அல்ல.

    திண்ணிய தோளும் தோல்வி காணா வீரமும் கொண்ட வீரர்கள் அல்ல.

    அரசின் பராக்கிரமத்தால் வருவதல்ல.

    அது,

    நீரால்,

    மண்வளத்தால்,

    மலைகளால்,

    காடுகளால் வருவது என்கிறார் அவர்.

    மணி நீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
    காடும் உடையது அரண் !

    அணிநிழற் காடு என்பது எவ்வளவு அருமையான சொற்பிரயோகம்.

    காடுகளின் செறிவைச் சொல்லும் வரிகள் இவை.



    காடு கொன்று நாடாக்கி இன்று மரங்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதும் மனிதர்களின் சுயநலம்தான்.

    அதில் உலகத்தின் நலனும் அடங்கி இருக்கிறது.

    புளிய மரத்தின் கதை, சாயாவனம் என்றெல்லாம் மலரும் நினைவுகளைக் கிளறிவிடுகிறது உங்கள் பதிவு.


    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ! நாட்டின் அரணே அணிநிழற் காடு என்று வள்ளுவர் கூறுவதையறிந்தேன். அணிநிழற் காடு அழகு தான்! பதிவுக்கு ஏற்ற வள்ளுவர் கருத்தை எடுத்துச் சொன்னமைக்கு மிகவும் நன்றி.

      Delete
  11. அருமையான விழிப்புணர்வுப் பகிர்வு...
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள் சகோதரி.

    ReplyDelete
  12. தங்கள் வருகைக்கும் அருமையான பதிவு என்ற பாராட்டுக்கும் மிகவும் நன்றி குமார்!

    ReplyDelete
  13. மரங்களின் அருமை உணர்ந்தும் தங்கள் சுயநலத்துக்காக அவற்றை வெட்டிச் சாய்த்துக்கொண்டிருக்கும் மூடர்கள் திருந்தும் நாள்வரை ஊதுகிற சங்கை ஊதிக்கொண்டே இருப்பதுதான் நாம் செய்யக்கூடிய ஒரே விஷயம். மரங்களை வெட்டி செடிகளை நடும் முட்டாள்தனத்தை புளியமரம் கதையில் ஆசிரியர் நையாண்டி மேலிட நறுக்கென குட்டும் வரிகள் அருமை. தேனம்மையின் கவிதை வரிகள் வெகு யதார்த்தம். மரங்களற்ற வாழ்க்கை என்ன வாழ்க்கை? அனைவரும் அறிந்துகொள்ளவேண்டிய அவசியமான பதிவு. பாராட்டுகள் அக்கா.

    ReplyDelete
    Replies
    1. அருமையான கருத்துரைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி கீதா!

      Delete
  14. நம்மை நாமே அழித்துக்கொண்டிருக்கிறோம் என்பது தெரியாமல் அழித்துக்கொண்டிருக்கிறோம். வேதனையே.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சார்! கருத்துப் பகிர்வுக்கு மிகவும் நன்றி!

      Delete