பிரபல நெஸ்லே தயாரிப்பான மாகி நூடுல்ஸில் காரீயம் (Lead) உட்பட
வேதிப்பொருட்கள் பல அதிகளவில் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதன் விளைவாக, இந்தியாவின்
பல மாநிலங்களில், இதன் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது யாவரும் அறிந்ததே.
நூடுல்ஸில் மட்டுமின்றி, நான்கு சக்கர வாகனங்கள் வெளியிடும் காரீயம்
கலந்த பெட்ரோல் புகை, தொழிற்சாலைகள் வெளியேற்றும் நச்சுப்புகை, எனாமல் சுவர் வண்ணங்கள்,
வர்ணம் பூசப்பட்ட குழந்தை பொம்மைகள், சில நாட்டு மருந்துப் பொருட்கள் ஆகியவற்றில் காரீயம் அதிகளவில் கலந்திருக்கிறது.
இந்தியாவில் வர்ணம்
தயாரிக்கும் கம்பெனிகள் தடையேதுமின்றிக் காலங்காலமாக இந்தக் காரீயத்தை அதிகளவில் தங்கள்
பொருட்களில் கலக்கின்றன. சீதோஷ்ண நிலையைத் தாக்குப் பிடித்து நீண்ட காலம்
மங்காமல் நிலைத்திருக்கவும், வர்ணம் அடித்தவுடன் உடனே காயவும், உற்பத்தி செலவைக்குறைத்து லாபத்தை இரட்டிப்பாக்கவும், அதிகளவு காரீயம் வர்ணங்களில்
சேர்க்கப்படுகின்றன.
வீட்டுச் சுவரைத்
தொட்டுவிட்டு வாயில் விரலை வைத்துச் சப்பும்
குழந்தைகளுக்கு பாதிப்பு அதிகம் ஏற்படும் என்று சொல்லத் தேவையில்லை. வெளிநாடுகளில் வீட்டு வர்ணங்களில் காரீயம் குறிப்பிட்ட
அளவுக்கு மேல் கலப்பதற்குக் கடுமையான சட்டதிட்டங்கள் உள்ளன. இந்தியாவில் இது பற்றிய விழிப்புணர்வு சிறிதும்
இல்லை. காரீயம் அதிகளவில் கலந்து எனாமல் வர்ணம்
தயாரிப்பதைத் தடை செய்ய கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டு, முறையாக செயல்படுத்தப் பட
வேண்டும்.
ஆண்டுதோறும் வர்ணம்
பூசப்பட்ட சாமி சிலைகளை, ஏரிகளிலும், ஆறுகளிலும் மூழ்கடிப்பதாலும், காரீயம் கலந்து
தண்ணீர் நஞ்சாகிறது. வர்ணம் பூசப்பட்ட 2 கிலோ
எடையுள்ள ஒரு சாமி பொம்மை எட்டிலிருந்து பத்து கிராம் காரீயத்தை நீரில் கலக்கிறது என்கிறார்
செயின்ட் ஜான் மருத்துவக்கல்லூரி பேராசிரியர் வெங்கடேஷ் என்பவர். எனவே வர்ணம் பூசப்பட்ட பொம்மைகளை, ஆற்றில் மூழ்கடிப்பதை
அரசு உடனடியாகத் தடை செய்யவேண்டும்.
.
பூமியின் மேல் இயற்கையாகவே படிந்துள்ள காரீயமானது, எத்தனை காலமானாலும்
மக்காத பொருள், காற்றில் கலந்துள்ள இது, சுவாசிக்கும்
போது நுண்ணிய துகள் வடிவில் உள்ளே சென்றாலோ,
உணவு மற்றும் நீர் வழியே உடலுக்குள் சென்றாலோ, உடலின் பல உறுப்புகள் பாதிக்கப்படும்; குறிப்பாக குழந்தைகளுக்கு மூளை மற்றும் உடல் வளர்ச்சி
பெருமளவு பாதிக்கப்படும் என்கின்றனர் அறிவியல் அறிஞர்கள்.
உள்ளே செல்லும் காரீயத்தின் சிறு பகுதி மட்டுமே கழிவு மூலம் வெளி யேறும்;
பெரும் பகுதி கல்லீரல், மூளை, சிறுநீரகம், எலும்பு போன்ற உறுப்புக்களுக்குப் பரவி படிந்துவிடுமாம். இதன் அளவு அதிகமாகும் போது கோமா, வலிப்பு நோய் உண்டாகி
இறுதியில் மரணம் ஏற்படும்.
கருவுற்ற தாய்மார்களின் உடலில் சேரும் காரீயம், தொப்புள் கொடி
வழியாக குழந்தைக்குச் சென்றுவிடுமாம். இதன்
அளவு அதிகமாகும் போது வயிற்றுக் குள்ளேயே குழந்தை இறந்துவிடும் அபாயமுண்டு.
அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி போன்ற வளர்ந்த நாடுகளில் இந்தக்
காரீயத்தைப் பயன்படுத்துவதற்குக் கடுமையான சட்டங்கள் இருக்கின்றன. ஆனால் இந்தியா போன்ற வளரும் நாடுகளில், இத்தகைய
சட்டங்களோ, விழிப்புணர்வோ இல்லாததால், சுற்றுச்சூழல் நஞ்சாவதோடு, மக்களும் பெருமளவு
பாதிக்கப்படுகின்றனர். நம் நாட்டில் தான் உயிரின்
விலை மிக மிக மலிவாயிற்றே! வளரும் நாடுகளில்
15 முதல் 18 மில்லியன் குழந்தைகள் காரீயத்தால் மூளை பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற தகவலை,
உலகச் சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது.
1998-99 ல் பெங்களூரில் செயல்படும் ஜார்ஜ் பவுண்டேஷன் என்ற அமைப்பு
இந்தியாவின் ஏழு முக்கிய நகரங்களில், இரத்தத்தில் உள்ள காரீயத்தின் அளவைப் பரிசோதிக்க
22000 பேரிடம் சோதனை நடத்தியது. 12 வயதுக்குட் பட்ட
குழந்தைகள், 51 சதவீதத்துக்கும் அதிகமானோர்க்கு
இரத்தத்தில் அதிகளவு காரீயம் இருந்தது இச்சோதனையில் கண்டுபிடிக்கப் பட்டது. அதிர்ச்சி தரும் இச்செய்தியை 1999 பிப்ரவரியில்
பெங்களூரில் நடந்த அகில உலக மாநாட்டில், இவ்வமைப்பு வெளியிட்டு இந்திய அரசின் கவனத்துக்குக்
கொண்டு வந்த பின்னரே, நம் நாட்டின் மூன்று முக்கிய பெட்ரோல் சுத்திகரிப்பு கம்பெனிகள்,
2000 ஆண்டு முதல் காரீயம் கலக்காத பெட்ரோலை உற்பத்தி செய்ய முடிவெடுத்தன.
இனிப்புப் பண்டங்களின்
மேல் ஒட்டப்படும் வெள்ளி ஜிகினா தாளில் கூட காரீயம் இருக்கிறதாம். எனவே இம்மாதிரியான அலங்கார பண்டங்களைத் தவிர்க்கவேண்டும். கடையில் வாங்கும் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் போன்றவற்றிலும்
கலப்படம் இருக்கும் ஆபத்து அதிகம். எனவே அலுப்பு
பார்க்காமல் பழைய காலம் போல், மிளகாய், மஞ்சள்
வாங்கி காயவைத்து அரவை இயந்திரத்தில் தூள் செய்து கொள்ளுங்கள்.
மாகி நூடுல்ஸைத்
தடை செய்வதால் மட்டுமே நமக்குப் பாதுகாப்பு கிடைத்து விட்டதாக அகம் மகிழக்கூடாது. சூழலுக்கும் உடல்நலனுக்கும் மிகுந்த கேடு விளைவிக்கும்
காரீயம் கலந்த அனைத்துப் பொருட்களையும் ஒழித்துக்
கட்டினாலொழிய நமக்குப் பாதுகாப்பில்லை; நம் வருங்காலச்சந்ததியின் சுகாதாரத்தைப் பாதுகாக்க, காரீயம் குறித்த விழிப்புணர்வு நமக்கு மிகவும்
அவசியம்.
கட்டுரை எழுத உதவிய
இவ்விணைப்புக்களுக்கு நன்றி:-
1) அறிவியல்புரம் - http://www.ariviyal.in/2015/06/blog-post.html
(நான்கு பெண்கள் தளத்தில் 07/07/2015 அன்று வெளியான என் கட்டுரை)
(படம் – நன்றி
இணையம்)
வர்ண பொம்மைகள், கருவுற்ற தாயின் உடலில் சேரும் காரீயம் - இவையெல்லாம் அதிர்ச்சி தரும் செய்திகள்...
ReplyDeleteஅருமையான இந்த காரீயம் சம்பந்தப்பட்ட விழிப்புணர்வு பகிர்வை எனது பக்கத்திலும் பகிர்ந்து கொள்கிறேன்... நன்றி...
முதல் பின்னூட்த்துக்கும், கருத்துக்கும் மிகவும் நன்றி தனபாலன் சார்! உங்கள் பக்கத்தில் பதிவதற்கும் த ம வாக்குக்கும் மீண்டும் என் நன்றி!
Deleteஅறியாத பல தகவல்கள். நல்லதோர் விழிப்புணர்வு பகிர்வு. பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் தோழி.
ReplyDeleteதங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிகவும் நன்றி தமிழ்!
Deleteகாற்றும் நீரும் மண்ணும் மட்டுமல்ல எல்லாமே நஞ்சாகிவிட்டது என்றாலும். இவ்வளவு விபரங்கள் அறிந்திருக்கவில்லை. தெளிவா ஆராய்ந்து தந்த விபரங்களுக்கு மிகவும் நன்றி தோழி !வாழ்த்துக்கள் ...!
ReplyDeleteவாங்க இனியா! உங்கள் கருத்துரைக்கும், வாழ்த்துக்கும் நன்றி தோழி!
Deleteநல்லதொரு விழிப்புணர்வுப் பகிர்வு...
ReplyDeleteநல்லதொரு விழிப்புணர்வுப் பகிர்வு என்ற பாராட்டுக்கும் தொடர் வருகைக்கும் மிகவும் நன்றி குமார்!
Deleteபதற வைக்கும் தகவல்கள்.
ReplyDeleteஇக்காலத்தில் அரசாங்கம் தானாகச் செயல்படாமல் ஒரு விஷயம் ஊடகங்களில் பெரிய அளவில் பேசப்பட்டு விளம்பரமானவுடன் மட்டும் ஆக்ஷன் எடுக்கும் நிலை. மணற்கொள்ளை, தொடங்கி மரங்கள் வளர்க்காதது, ஓசோன் படலத்தில் ஓட்டை போடுவது, கருவேல மரங்கள், யுகலிப்டஸ் மரங்கள் போன்றவற்றை அழிக்காதது,ஏறி, குளங்களை காலாகாலத்தில் தூர் வாராதது, வீணாகும் மழை நீரைச் சேகரம் செய்ய நடவடிக்கை எடுக்காதது...
நிறைய விஷயங்கள் மனதில் அணி வகுக்கின்றன.
சரியாய்ச் சொன்னீர்கள் ஸ்ரீராம்! நீங்கள் பட்டியலிட்டது போல் செய்ய வேண்டிய விஷயங்கள் பல இருக்கின்றன. ஊடகங்கள் தொடர்ந்து செய்திகள் வெளியிடும் போது தான் அரசு வேறு வழியின்றி அதில் கவனம் செலுத்தத் துவங்குகின்றது. வெளிநாடு போல் மக்களுக்கு விழிப்புணர்வு இன்னும் அதிகளவில் வரவேண்டும். ஆழமான கருத்துரைக்கு நன்றி ஸ்ரீராம்!
Deleteபயனுள்ள பதிவு. பல புதிய செய்திகளைத் தெரிந்துகொண்டோம். விழிப்புணர்வினை ஏற்படுத்தியமைக்கு நன்றி.
ReplyDeleteபயனுள்ள பதிவு என்ற பாராட்டுக்கு மிகவும் நன்றி முனைவர் ஐயா!
Deleteசுகமான சுற்றுச் சூழலை ஒழித்துக் கட்டி வெகு நாட்களாகின்றன...
ReplyDeleteநம்மவர்களுக்கு தோட்டமிட்டு செடி கொடிகளை வளர்ப்பதற்குத் தான் அலுப்பு என்றால் - காய்கறிகளை நறுக்குவதற்கும் மகா அலுப்பு..
அம்மியில் மசாலா அரைத்ததை மறந்து விட்டார்கள்.. எவனோ ஒருவன் எப்படியோ தயாரித்த பொடிகளை விருப்பமுடன் வாங்கி தின்கின்றார்கள்..
லஞ்ச லாவண்யங்களில் ஊறித் திளைக்கும் அலுவலர்களால் தரச்சான்றீதழ்..
வெட்கக்கேடு..
உலகுக்கே சமையல் சொல்லித் தந்தவர்கள் நாம்!..
வாராந்திர சமையல் பத்திரிக்கைக்காரன் மேலும் கோடீஸ்வரன் ஆகின்றான்..
ஏதோ ஒன்றைத் தேடி அலைகின்ற மக்கள்.. அதை அடைந்தார்களோ இல்லையோ -
இழந்தது - உடல் நலத்தையும் - மன நிம்மதியையும்!..
வாங்க துரை சார்! நீங்கள் இங்குச் சொல்லியிருப்பது நூற்றுக்கு நூறு சரி! இது சம்பந்தமாய் நீங்கள் வெளியிட்டிருக்கும் பதிவையும் படித்தேன். நன்கு விளக்கமாய் எழுதியிருக்கிறீர்கள். உழைப்பைக் கைவிட்டு எல்லாவற்றிற்கும் ரெடிமேட் பொருட்களை வாங்கி உடல்நலம், மன நிம்மதியைத் தொலைத்து விட்டோம்! இது எங்குப் போய் முடியுமோ! உங்கள் தொடர்வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி சார்!
Deleteவணக்கம்
ReplyDeleteதங்கள் தளம் இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறேன்
http://blogintamil.blogspot.fr/2015/07/blog-post_31.html
நன்றி
சாமானியன்
என் தளத்தை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியமைக்கு மிகவும் நன்றி சாம்!
Deleteவணக்கம்
ReplyDeleteஇன்றைய வலைச்சரத்தில் என் நன்றியுரை...
http://blogintamil.blogspot.fr/2015/08/blog-post.html
உங்கள் வரவை ஆவலுடன் எதிர்நோக்கும் சாமானியன் !
நன்றி
ஆசிரியப்பணியைத் திறம்பட செய்து முடித்த தங்களுக்குப் பாராட்டுக்கள் சாம்!
Deleteநான்குபெண்கள் தளத்தில் எழுதும் கலையரசி நீங்கள் தான் என்று இன்றுதான் தெரிந்து கொண்டேன். தெளிவாக எளிதில் புரியும்படி எழுதுகிறீர்கள் எல்லா விஷயங்களையும். பாராட்டுக்கள்.
ReplyDeleteவாங்க ரஞ்சனி! உங்கள் முதல் வருகைக்கு என் நன்றி! உங்களை நான் நன்கறிவேன். படைப்புக்களையும் வாசித்திருக்கிறேன். நான்கு பெண்கள் தளத்தில் செல்வக்களஞ்சியமே நூறு வாரங்கள் எழுதி சாதனை புரிந்த உங்களை வியப்பால் விழி மலர்த்திப் பார்க்கிறேன். உங்களிடமிருந்து பாராட்டுக்கள் என்பதால் அகம் மிக மகிழ்கிறேன். மீண்டும் உங்களுக்கு என் நன்றி!
Delete