என் தந்தை தொண்ணூற்று ஒன்றாம் அகவையில் அடியெடுத்து வைக்கும்
இந்நாளில், அவரைப் பற்றிய சில நினைவலைகளைப் பகிர்ந்து கொள்ள விழைகின்றேன்:-
இலக்கியச்சாரல் திரு சொ.ஞானசம்பந்தன் அவர்கள் தாம், என் தந்தை,
ஆசான், வழிகாட்டி எனத் தெரிவிப்பதில் அகமிக மகிழ்கின்றேன்.
பதிவுலகில் திரு.கோபு சார், தனபாலன் சார், அண்ணன் முத்துநிலவன்
எனச் சிலருக்கு மட்டுமே தெரிந்த இவ்வுண்மையை, இன்று எல்லோரும் அறியும்படியாகத் தெரிவிப்பதில்,
பெருமை கொள்கின்றேன்.
பிரெஞ்சியர்கள் ஆண்ட காரைக்காலில், பிரெஞ்சு வழிக்கல்வி என்பதால்,
ஏழாம் வகுப்பு வரை மட்டுமே தமிழ் பயின்றவர். மேனிலைக்கல்வி வரை பயின்றவருக்கு இலத்தீனும், ஆங்கிலமும் துணை மொழிகள்.
நான்காண்டுகள் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் தனியார் கம்பெனியில்
பணிபுரிந்தபின், தாயகம் திரும்பி பிரெஞ்சு ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார்.
இரண்டாண்டுகளுக்குப் பிறகு, பிரெஞ்சியர்கள் புதுவையை விட்டுக்கிளம்ப, புதுவை யூனியன் பிரதேசம் இந்தியாவோடு சேர்கின்றது. அதன் பிறகு பள்ளிகளில் பிரெஞ்சு
வழிக்கல்வி அகற்றப்பட்டு, தமிழ்வழிக்கல்வி அறிமுகம் ஆகின்றது. இரண்டாம் மொழியாக ஆங்கிலம் என தமிழ்நாட்டுக்கல்வி
முறை இங்கும் அமல்படுத்தப் படுகின்றது,
குழந்தைகளுக்குப் பிரெஞ்சு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தவருக்குத்
திடீரென்று தமிழில் பாடம் நடத்த வேண்டிய கட்டாயம். பள்ளியின் சகநண்பர்கள் ‘நோட்ஸ்’ வாங்கி வைத்துக்கொண்டு
பாடம் நடத்த, இவரோ தமக்குத் தெரிந்த அரைகுறை தமிழில் பாடம் நடத்தத் தயங்கித் தமிழ்
அறிவை மேம்படுத்திக்கொள்ள விரும்பி, புலவர் தேர்வுக்குப் படிக்க முனைகிறார்.
அச்சமயம் நான் கைப்பிள்ளையாம். ஏணையை ஒரு கையால் ஆட்டிக்கொண்டே, மறு கையில் புத்தகத்தை
வைத்துக்கொண்டு படித்தாராம். அரை மணிநேரம்
ஆட்டினால், ஐந்து நிமிடம் தூங்குவேனாம்!
அப்போது தூங்காத தூக்கத்தையெல்லாம் சேர்த்து வைத்து, இப்போது
தூங்குகிறேன்!
தமிழ் இலக்கணத்தில் ஏற்பட்ட சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ள இவருக்குத்
தெரிந்த தமிழாசிரியர்களை அணுகிய போது,
“யப்பா, என்னை விட்டுடு; இலக்கியத்துல வேணும்னா எங்கிட்ட சந்தேகம்
கேளு; இலக்கணத்துல மட்டும் கேட்டுடாதே!” என்று சொல்லி பெரிய கும்பிடு போட்டு நழுவி
விடுவார்களாம்!
இன்னொருவர் இவர் கேள்வியைக் கேட்டவுடன், பேய்முழி முழித்து விட்டு,
“இந்தக் கேள்வியை இதுக்கு முன்னே யாரோ கேட்டாங்க; அதுக்கு நான் என்னமோ பதில் சொன்னேன்;
அது என்னன்னு தான் இப்ப ஞாபகம் வரமாட்டேங்குது,” என்பாராம்.
இலக்கணச்சுடர் திருமுருகன் அவர்கள் எழுதிய ஒரு புத்தகமே, தமக்கேற்பட்ட
பல சந்தேகங்களைத் தீர்த்ததாகச் சொல்வார் அப்பா.
புலவர் தேர்வில் தேறிய பிறகு, தமிழாசிரியராகவும், தலைமை யாசிரியராகவும் பணி
செய்து ஓய்வு பெற்றார். கணிதம் போல தமிழ் இலக்கணமும்,
தம்மை மிகவும் ஈர்த்ததாகச் சொல்வார்.
தமிழறிஞர்களில் நடுநிலையில் இருந்து ஆய்ந்து, ஆதாரத்துடன் கருத்துக்களைச் சொல்லும் திரு வையாபுரிபிள்ளை அவர்கள், என் தந்தையைக் கவர்ந்தவர்களில் மிகவும் முக்கியமானவர்.
நினைவு தெரிந்த நாளில், தடிதடியான புத்தகங்களை வைத்துக் கொண்டு,
அவர் வாசிப்பதைப் பார்த்துப் பிரமித்திருக்கிறேன்!
அம்மாவுக்குக் கோபம் வந்து விட்டால், “மறுபடியும் திருக்குறளை
எடுத்துட்டீங்களா? எப்பப் பார்த்தாலும் அதையே
படிச்சிக்கிட்டு இருங்க!” என்று சத்தம் போடுவார்.
அம்மாவைப் பொறுத்தவரை அப்பா படிப்பதெல்லாம், ஒன்று திருக்குறள்;
மற்றொன்று கம்பராமாயணம்.
அப்பாவால் கம்பரும், திருவள்ளுவரும் அடிக்கடி என் அம்மாவிடம்
திட்டு வாங்குவார்கள்! பாவம் அவர்கள்!
வாங்கும் சம்பளத்தில் ஒரு சிறுபகுதியைச் சேமித்துப் புத்தகம்
வாங்குவார். அது செலவில்லை; சேமிப்பு என்பார். அவரிடமிருந்து கற்ற இந்தப் பாடத்தை, இன்றளவும் நான் கடைபிடிக்கிறேன்.
ஆர்வம் இருந்தால், கற்பதற்கு வயது ஒரு தடையில்லை என்பது அவரிடமிருந்து
கற்ற இன்னொரு பாடம். இந்த வயதில் கணிணியில்
தம் வலைப்பூவுக்கு அவரே, தமிழ்த் தட்டச்சு செய்வது வியப்புக்குரிய விஷயம்!
அவர் எழுதியவற்றைத் தொகுத்து ஓரிடத்தில் சேமிக்க இலக்கியச்சாரல் என்ற வலைப்பூவைத் துவக்கி, பதிவுகளை அவ்வப்போது வெளியிட்டு அரும்பணியாற்றும் கீதமஞ்சரியின்
கீதாவை, இச்சமயத்தில் நன்றியுடன் நினைவு கூர்கின்றேன்! மாமனார் மெச்சும் மருமகள்!
யாரிடமும் அதிகம் பேசாதவர் என்பதால் சிறு வயதிலிருந்தே நண்பர்கள்
குறைவு. என்றென்றும் புத்தகமே அவருடைய நண்பன். அதனால் முதுமையில் நேரத்தை எப்படிப் போக்குவது என்ற
பிரச்சினையே அவருக்கு எழவில்லை.
வாழ்வின் இறுதி நாள்வரை புத்தகம் வாசிப்பதற்கேற்ற கண் பார்வையும்,
உடல் நலமும் அவர் பெற்று, தொடர்ந்து எங்களை வழிநடத்த வேண்டும் என்பதே என் அவா!
என் தந்தையைப் பற்றி ஏற்கெனவே நான் வெளியிட்ட கவிதை:- தந்தையர் தினம்.
அதிலிருந்து சில வரிகள்;-
அதிலிருந்து சில வரிகள்;-
"அன்பு ஆசானே! அருமை தந்தையே!
அன்னைக்குப் பிறகு தாயுமானவரே!
’பணம் மட்டுமே வாழ்க்கையில்லை,’யென்ற
உண்மையை வாழ்ந்து காட்டியவர் நீங்கள்!
அடுத்தபிறவி என்ற ஒன்று எனக்கிருந்தால்
உம் செல்ல மகளாகவே
மீண்டும் பிறக்க விரும்புகின்றேன்!"
தங்களின் தந்தையார் பற்றிய சிறப்புச் செய்திகளை நான் அவரின் வலைத்தளம் வழியே ஏற்கனவே நன்கு உணர்ந்து யூகித்திருந்தாலும், தங்கள் அண்ணியின் இன்றைய பதிவின் மூலம் சில விஷயங்களையும், இந்தத் தங்களின் பதிவின் மூலம் மேலும் சில விஷயங்களையும் கேட்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
ReplyDelete>>>>>
வாங்க கோபு சார்! தங்கள் முதல் வருகைக்கும், கருத்துரைக்கும் மிகவும் நன்றி! உங்கள் பின்னூட்டம் என் மகிழ்ச்சியை மேலும் அதிகமாக்குகிறது.
Delete90 ஆண்டுகள் வாழ்ந்து தங்கள் குடும்பத்தினர் எல்லோருக்குமே மிகச்சிறந்த வழிகாட்டியாக இருந்துவரும் மாமனிதருக்கு, 91-ஆம் ஆண்டு பிறக்கும் இந்தப் பொன்னான நாளில் என் நமஸ்காரங்களைத் தங்கள் மூலம் இங்கு தெரிவித்துக்கொள்கிறேன்.
ReplyDeleteஅவர் மேலும் இதேபோல மிகக் கூர்மையான அறிவுடனும், ஞாபக சக்தியுடனும், நீண்ட ஆயுளுடனும், நல்ல ஆரோக்யத்துடனும், மிகவும் சந்தோஷத்துடனும், நூறாண்டுகளுக்கு மேல் வாழ்ந்து நம் எல்லோருக்குமே தன் பதிவுகளின் மூலம் வழிகாட்டிட, நாம் இறைவனைப் பிரார்த்திப்போம்.
>>>>>
உங்கள் வாழ்த்துக்கும், வணக்கத்துக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி கோபு சார்! உங்கள் பிராத்தனை பலிக்கட்டும்!
Delete//என் தந்தையைப் பற்றி ஏற்கெனவே நான் வெளியிட்ட கவிதை:- தந்தையர் தினம்.
ReplyDeleteஅதிலிருந்து சில வரிகள்:
"அன்பு ஆசானே! அருமை தந்தையே!
அன்னைக்குப் பிறகு தாயுமானவரே!
’பணம் மட்டுமே வாழ்க்கையில்லை,’யென்ற
உண்மையை வாழ்ந்து காட்டியவர் நீங்கள்!//
மிகவும் அருமையாக உள்ளன. பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.
உங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மீண்டும் என் நன்றியைத் தெரிவிப்பதில் மகிழ்கின்றேன்!
Delete//அப்பாவால் கம்பரும், திருவள்ளுவரும் அடிக்கடி என் அம்மாவிடம் திட்டு வாங்குவார்கள்! பாவம் அவர்கள்!//
ReplyDelete:) இது விஷயத்தில் வீட்டுக்கு வீடு வாசல்படிதான் போலிருக்கு :)
அடடே! உங்கள் வீட்டிலும் அர்ச்சனை உண்டா? என் பதிவில் ஒன்று சொல்ல மறந்துவிட்டேன் கோபு சார்! உங்களைப் போலவே என் தந்தைக்கும் நகைச்சுவை உணர்வு அதிகம். பகிர்வுக்கு மிகவும் நன்றி!
Delete//அவர் எழுதியவற்றைத் தொகுத்து ஓரிடத்தில் சேமிக்க இலக்கியச்சாரல் என்ற வலைப்பூவைத் துவக்கி, பதிவுகளை அவ்வப்போது வெளியிட்டு அரும்பணியாற்றும் கீதமஞ்சரியின் கீதாவை, இச்சமயத்தில் நன்றியுடன் நினைவு கூர்கின்றேன்! மாமனார் மெச்சும் மருமகள்!//
ReplyDeleteபதிவுலகமே இன்று மெச்சிப் புகழும், மிகச்சிறப்பான தரம் வாய்ந்த எழுத்தாளரும், எங்கள் ஊராம் திருச்சியைப் பிறந்த வீடாகக் கொண்டுள்ளவருமான, உங்கள் அண்ணியை அவரின் சொந்த மாமனார் மெச்சுவதில் வியப்ப்பேதும் இல்லை.
தமிழ் இலக்கியக்குடும்பத்தைச் சேர்ந்த பதிவர்களான தங்களுக்கும் தங்களின் அன்பு அண்ணிக்கும், தங்கள் தந்தையாருக்கும் என் பாராட்டுகள், நல்வாழ்த்துகள். உங்கள் குடும்பத்தாரின் இன்றைய மகிழ்ச்சி என்றும் தொடரட்டும்.
நன்றியுடன் கோபு
உங்கள் இதய பூர்வமான வாழ்த்து கண்டு நெகிழ்ந்தேன். நல்வாழ்த்துக்கு மிகவும் நன்றி! எங்கள் குடும்பத்தின் இன்றைய மகிழ்ச்சி என்றென்றும் இது போல் தொடர வேண்டும் என்பதே என் ஆசை. உங்கள் ஊர்க்காரர் எங்கள் வீட்டுச் செல்ல மருமகளானதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி!
Deleteதந்தையைப் பற்றிய மலரும் நினைவுகளை அழகாகப் பதிவு செய்தமைக்கு நன்றி.
ReplyDeleteஆகா! வலைப்பூ துவங்கி இன்னும் ஓர் நாள் கூட ஆகவில்லை. அதற்குள் பின்னூட்டமா? மிக்க நன்றி! தொடர்ந்து வலையுலகில் உற்சாகமாக பவனி வர வாழ்த்துகிறேன்!
Deleteஉங்கள் தந்தைக்கு வணக்கங்களுடன் அவர் நூறு வருடம் நலமுடன் வாழப் பிரார்த்தனைகளும். கீதமஞ்சரியின் பதிவில் வாசித்திருந்தேன். அழகான உங்கள் இலக்கியக் குடும்பத்திற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்!
ReplyDeleteவாங்க கிரேஸ்! உங்கள் அன்பான வாழ்த்துக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி! அழகான இலக்கியக் குடும்பம் என்பதைப் பெரிதும் ரசித்தேன். மிக்க நன்றி கிரேஸ்!
Deleteதங்கள் தந்தையாரின் தளராத முயற்சியும்
ReplyDeleteபயிற்சியும் முதிர்ச்சியும் பிரமிப்பூட்டுகின்றன
தமிழோடும் நல்ல உடல் நலத்தோடும்
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு வாழ
அன்னை மீனாட்சியை வேண்டிக் கொள்கிறேன்.
வாங்க ரமணி சார்! உங்கள் வேண்டுதலுக்கும் வாழ்த்துக்கும் அகம் நிறைந்த நன்றி! உங்கள் வாழ்த்து மகிழ்வளிக்கிறது!
Deleteஉங்கள் தந்தைக்கு என் நமஸ்காரங்கள்.
ReplyDeleteவாங்க ஸ்ரீராம்! உங்கள் வணக்கத்தைத் தந்தைக்குத் தெரிவித்துவிட்டேன்! மிக்க நன்றி!
Deleteஒரே நேரத்தில், உங்கள் தந்தை பன்மொழி ஆசிரியர் திரு.சொ.ஞானசம்பந்தன் அவர்களுடைய பிறந்தநாளில், அவரைப் பற்றிய இரு பதிவுகள். ஒன்று உங்கள் (மகள்) பதிவு. இன்னொன்று உங்கள் அண்ணி - கீதமஞ்சரி அவர்களுடைய (மருமகள்) பதிவு.
ReplyDeleteஅப்பா, நீங்கள், அண்ணி என்று மூவருமே சிறந்த வலைப்பதிவர்கள் என்பது சிறப்பம்சம். ஆசிரியரின் பிறந்தநாளில், அவருக்கு என்னுடைய அன்பு வணக்கங்கள்! உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
(நீங்கள் 91 ஆவது பிறந்தநாள் என்று குறிப்பிட்டு இருக்கிறீர்கள். அவர் (கீதமஞ்சரி) 90 ஆவது பிறந்தநாள் என்று குறிப்பிட்டு இருக்கிறார். சரி செய்யவும்)
வாங்க இளங்கோ சார்! உங்கள் வாழ்த்துக்கு மிகவும் நன்றி! கீதமஞ்சரியின் பதிவையும் படித்தது அறிந்து மகிழ்ச்சி. நீங்கள் குறிப்பிட்டது சரி தான். நான் தான் தவறுதலாக 91 எனக்குறிப்பிட்டு விட்டேன். தவறைச்சுட்டிக்காட்டியவுடன் திருத்திவிட்டேன். சுட்டிக்காட்டியமைக்கு என் நன்றி!
Deleteஐயா அவர்களுக்கு எங்களது வணக்கங்களும்,வாழ்த்துக்களும்....
ReplyDeleteவாங்க அனு! உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி!
Deleteதங்களுடைய தந்தையைப் பற்றிய பெருமைமிகு பதிவு..
ReplyDeleteஐயா அவர்களைப் பற்றி அறிந்து மனதிற்கு -
மிகவும் சந்தோஷமாக இருக்கின்றது..
ஐயாவர்களுக்கு அன்பின் வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடையும் வேளையில் -
இன்னும் பல பிறந்த நாள் விழாக்களைக் கண்டு நிறைவாழ்வு வாழவேண்டுமென எல்லாம் வல்ல பரம்பொருளை வேண்டுகின்றேன்..
உங்கள் நல்வாழ்த்து கண்டு நெகிழ்ந்தேன் துரை சார்! உங்கள் வாழ்த்துக்கும் வேண்டுதலுக்கும் மனம் நிறைந்த நன்றி!
Deleteஎனது வாழ்த்துக்களும் வணக்கங்களும்
ReplyDeleteஉங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் மிகவும் நன்றி ஜெயக்குமார் சார்!
Deleteஅப்பாவுக்கு வணக்கங்கள்...
ReplyDeleteவாங்க குமார்! உங்கள் வணக்கத்தை என் அப்பாவிடம் சமர்ப்பித்துவிட்டேன்! மிகவும் நன்றி!
Deleteதங்கள் தந்தையின் சிறப்பு பற்றி கீதமஞ்சரியின் பதிவில்தான் தெரிந்து கொண்டேன். மதிப்பு மிக்க பெரும் மனிதர். அய்யாவின் ஆசிகள் நம் எல்லோருக்கும் எப்போதும் வேண்டும்.
ReplyDeleteத ம 7
வாங்க செந்தில்! உங்கள் பதிவுகளை வந்து வாசிக்க வேண்டும் என நினைத்திருக்கிறேன். பணிச்சுமை காரணமாக என்னால் தற்சமயம் முடியவில்லை. விரைவில் வாசிப்பேன். உங்களுக்குத் தந்தையின் ஆசி என்றும் உண்டு. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி!
Deleteஅழகான நினைவுகளின் தொகுப்போடு அப்பாவுக்கு ஒரு அழகான பிறந்தநாள் பதிவு. இதில் குறிப்பிடப்பட்டுள்ள சம்பவங்களைப் பற்றி நாம் அறிந்திருந்தாலும் இப்போது எழுத்தால் தாங்கள் ஆவணப்படுத்தியிருப்பது சிறப்பு. பிறந்தநாள் நிகழ்வு இனிமை தருவதாக அமைந்திருக்கும் என்று நம்புகிறேன். தந்தையைப் போற்றி எழுதிய கவி வரிகள் மனந்தொடுகின்றன.
ReplyDeleteஅழகான பிறந்த நாள் பதிவு என்ற பாராட்டுக்கு மிகவும் நன்றி கீதா!
Delete'அப்பாவால் கம்பரும், திருவள்ளுவரும் அடிக்கடி என் அம்மாவிடம் திட்டு வாங்குவார்கள்! பாவம் அவர்கள்!" இப்படித் திட்டுவாங்க அவர்களல்லவா கொடுத்துவைத்திருக்க வேண்டும்? இதைத்தான் நாங்கள் -தமிழாசிரியர்கள்- வஞ்சப் புகழ்ச்சி அணி என்போம்! சகோதரியின் வழி நல்ல ஆசிரியர் ஒருவரை அறிந்து மகிழ்ந்தேன். தங்களைப் போலும் நன்மனத்தால் இருக்கும்வரை நூறுவயதுக்கும் மேலாக அவர்கள் வாழ்வார்கள். அவர்களுக்கு என் வணக்கமும் தங்கைக்கு என் நன்றியும்.
ReplyDeleteத.ம.8
Deleteநூறு வயதுக்கு மேலாக வாழ்வார்கள் என்ற தங்கள் வாழ்த்து கண்டு மகிழ்ந்தேன் அண்ணா! அவர்களுக்குத் தங்கள் வணக்கத்தைத் தெரிவிக்கிறேன்!வாழ்த்தியமைக்கும் வாக்குக்கும் மீண்டும் என் நெஞ்சம் நிறைந்த நன்றி!
Deleteஐயாவிற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.
ReplyDeleteவாங்க முனைவர் ஐயா! தங்கள் வாழ்த்துக்கு அகம் நிறைந்த நன்றி!
Deleteநல்ல பதிவு !
ReplyDeleteதாத்தா என் வணக்கத்துக்கும் மரியாதைக்கும் உரியவர்கள்.
நான் அறிந்தத் தாத்தா மிக மிக நிதானமாக, தமிழில் பேசக்கூடியவர்கள்; அவை என்னை மிகவும் கவர்ந்த ஒன்று.
தாத்தா பல்லாண்டு காலம் வாழவேண்டும் !