நல்வரவு

வணக்கம் !

Monday, 3 April 2017

என் பார்வையில் - 'சின்னவள் சிரிக்கிறாள்,' - கவிதைத் தொகுப்பு

ஆசிரியர்:- திரு மீரா செல்வகுமார்

காகிதம் பதிப்பகம், நெய்வேலி.
கைபேசி:-  8903279618

பெண் குழந்தையைச் சுமையாகக் கருதி, கருக்கொலையோ சிசுக்கொலையோ செய்யும் தமிழ்ச் சமூகத்தில், ‘அந்திவானின் செவ்வொளிக் கீற்று,’ என்றும், சிறு சிரிப்பில், உயிர் ஒளித்து வைக்கும் தேவதையென்றும், நூல்முழுக்க மகளின் புகழ் பாடும், இது போன்றதொரு  கவிதைத் தொகுப்பு, ஏற்கெனவே தமிழில் வெளியாகியிருக்கிறதா எனத் தெரியவில்லை. ஏனெனில், நான் படித்த கவிதை நூல்கள் மிகச்சிலவே.

தந்தைக்கு மகள் மீதான அபரிமித பாசம், பல கவிதைகளில் உணர்ச்சிப் பிரவாகமாக, அடிமனதின் ஆழத்திலிருந்து, ஊற்றெடுத்துப் பொங்கிப் பாய்கின்றது.

கவிதை என்பதே, உணர்ச்சிப் பிரவாகத்தின் வெளிப்பாடு தானேமகள் மீது கொண்ட உண்மையான நேசத்தின் விளைவாக, அலங்காரச் சொற்கள் ஏதுமின்றி, உள்ளத்திலிருந்து கிளர்ந்தெழுந்த வார்த்தைகள் என்பதால், நூல் வாசிப்பவரின் ஆன்மாவுடன் உறவாடி, தம் உணர்ச்சிகளைக் கடத்துவதில், பெருவெற்றி பெற்றிருக்கிறார் கவிஞர்

அதனால் தான் வெங்கட்ஜி, சின்னவளைத் தம் ரோஷ்ணியாகவே பார்க்கிறார்;
இந்நூல் பற்றிய அவர் பார்வை:- சின்னவள் - மீரா செல்வகுமார்

இப்பதிவுக்கு அவர் பகிர்ந்திருக்கும், படங்களைக் கூடப் பாருங்களேன்அவரும், ரோஷ்ணியும்!

அவர் மட்டுமின்றி, வாசிக்கும் அப்பாக்கள் அனைவருமே, சின்னவளைத் தம் பெண் குழந்தையாகவே பார்ப்பர் என்பது திண்ணம். மகள் இல்லாதவர்களை, நமக்குச் சின்னவள் போல், ஒருத்தி இல்லையே என்று ஏங்க வைத்திருக்கிறார் இந்நூலாசிரியர்!.

மனைவியிடம் ஆணென்ற அதிகாரத்தை நிலைநாட்டி, அதட்டி உருட்டும் கணவன்மார்கள் கூட, தம் மகளிடம், வாலைச் சுருட்டிக் கொண்டு, நாய்க்குட்டியாக குழைந்து சுற்றி வருவதில், அதிக மகிழ்ச்சி கொள்கிறார்கள்இதிலும் ஒரு கவிதையில், அப்பாவைதோ, தோ,’ என்றழைக்கிறாள், சின்னவள்!

என்னைப் பெரிதும் கவர்ந்த, கவிதைகளுள் ஒன்று:-
 கார்காலம்
“…………………………………….
சின்னவளுடன்
முன்னிருக்கைப் பயணம்.
ஓடிஒளியும் மரங்களெண்ணி
ஊர்ப்பெயர்கள் வாசித்து
………………………………………………..
எங்கேனும் மயில் தெரிந்தால்
இவளாடி..
என்னுடனான பயணங்களில்
எப்போதும் அவள் கண்களில்
புன்னகை.
வாழ்க்கை முழுதும்
வேண்டுகின்றேன்,
கார்காலம்

பிள்ளைகளில்லா வீட்டின் வெறுமையின் வெக்கையை, நானும் அனுபவித்திருக்கிறேன். அவர்கள் இருக்கும்போது, அமளி துமளியாகி கலைந்து கிடக்கும் வீடு, இல்லாதபோது ஒழுங்காக அடுக்கிவைக்கப்பட்டு அமைதியாக இருக்கும்அந்த ஒழுங்கும், அமைதியும் என்னைக் கொல்லும்

கலைந்திருக்க வேண்டும்,” என்ற கவிதையில், நான் என்னையே கண்டேன்:-
“…………………………………………………..
சின்னவள்
சுற்றுலா சென்ற
ஒரு நாளில்
தாமதமாய்
திரும்பினேன்….
அடுக்கி வைக்கப்பட்டிருந்தது
வீடு
அதனதன் இடத்தில்.
கத்தித் தீர்த்துவிட்டுக்
கலைத்துப் போட்டேன்….” 

பெண்குழந்தை வளரும்போது, தந்தைக்குக் கூடவே வளரும், பிரிவுத்துயர் கவலை காரணமாக, பல கவிதைகளில் மெல்லிய சோகம் இழையோடுகின்றது.

அவள் வளர்வதைக் காலக்கடிகாரம் துல்லியமாக காட்டினாலும்,
கவிஞரின் மனம்சின்னவளை எந்நாளும் சிறுகுழந்தையாகவே, தன் அரவணைப்பில் வைத்துக் கொள்ள விழைகின்றது.

“…………………………………………
ஆயிரம் மாற்றங்கள்
அவள் சொல்கிறாள்.
எனக்குத் தான்
ஒன்றும்
தெரியவில்லை
எப்போதும்
இவள்
சின்னவள்.”  (எப்போதும் அவள்)

இக்காலப் பெண்குழந்தைகளின் சேட்டைகளும், குறும்புகளும் பெரும்பாலும், சின்னவளுடையதை ஒத்திருப்பதால், பெரிதும் ரசிக்க முடிகின்றதுதந்தையைப் பலவிதமான கிரீம்கள் கொண்டு அலங்கரிப்பது, பெண் குழந்தையின் சேட்டைகளில் ஒன்று.

எதிர்வினை,’ என்ற கவிதையிலிருந்து சில வரிகள்நீங்களும் ரசிக்க:-
“…………….………………………………
பலப்பல
வாசனைகளால்
நிறைந்து
போனது
முகமெனக்கு.
……………………………
கடிகாரம் பார்த்து
என் முகம் கழுவினாள்
சிறு கண்ணாடி கொண்டு
பார் என்றாள்..
அய்யோ….
மிக அழகாய்
மாறிப்போய்
இருந்தது
அவள் முகம்….”

இந்த எதிர்பாரா எதிர்வினை(!)யை மிகவும் ரசித்தேன்ஆனால் இதே கருத்து, திரும்பவும் உயிரோவியம் என்ற கவிதையில், வருவதைத் தவிர்த்திருக்கலாம்.

இலக்கியத் தரமான இந்நூலில், முடியில்லாக் காலம் என்பதின் கடைசி வரி மட்டும், சற்று நெருடலைத் தந்து, முகம் சுளிக்க வைத்தது.
  
நான் ரசித்த கவிதைகளின் பட்டியல், நீண்டு கொண்டே செல்கிறது; எல்லாவற்றையும் சொல்லிவிட்டால், வாசிப்பவர்க்குச் சுவாரசியம் குறைந்து விடும் என்பதால், இன்னும் ஒரு கவிதையின் சில வரிகள் மட்டும் சொல்லி நிறைவு செய்கிறேன்……

(நீ தானேஎன்..)
“………………………………….
என்ன
பரிசு வேண்டுமென்கிறேன்
பிறந்தநாளில்……..
எப்போதும்
என்னோடிரு
என்கிறாள்
சின்னவளுக்கு
எப்படிச் சொல்வது….
இருப்பதே
அவளுக்காய் என்பதை…”

இன்று பிறந்த நாள் கொண்டாடும் கவிஞர் மீரா. செல்வக்குமார் அவர்களுக்கு வாழ்த்தும், பாராட்டுகளும்! 
இவர் எழுத்தை மீட்டும், தாயாக விளங்கும் சின்னவள், எல்லா நலமும், வளமும் பெற்று, என்றென்றும் புன்னகை சிந்தும் தேவதையாக, பவனி வர  வாழ்த்துகிறேன்
பெங்களூர் புஸ்தகா டிஜிட்டல் மீடியா, வில், இது மின்னூலாகவும் கிடைக்கின்றது.  வாங்கிப் படித்து இன்புறுவீர்!



31 comments:

  1. அப்படி ஒரு ஆனந்தம்..
    உங்கள் எழுத்துக்கு நன்றி அம்மா

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கவிதை நூலை வாசித்ததில் எனக்கும் பெருமகிழ்ச்சியே. நூலைப் பரிசளித்தமைக்கு மிகவும் நன்றி!

      Delete
  2. ரசித்து, ரசித்து எழுதியிருக்கிறீர்கள் கலை! ரசித்து, ரசித்துப் படித்தேன்! படிக்கும்போது அவரவர் அப்பாவை நினவூட்டியது கவிதையின் வெற்றி. உடனே விமர்சனம் எழுதியது உங்கள் வெற்றி!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் அண்ணா! உங்கள் பாராட்டுக்கு மிகவும் நன்றி!

      Delete
  3. மிகச்சிறப்பான கவிதைகள் பற்றி தங்கள் வாயிலாக மிகவும் அழகானதொரு விமர்சனம். நூலாசியருக்கும் தங்களுக்கும் என் பாராட்டுகளும் வாழ்த்துகளும். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் கோபு சார்! தங்கள் பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் மிகவும் நன்றி!

      Delete
  4. கவிஞரின் பிறந்தநாளில் அவரின் நூல் குறித்த விமர்சனம் அருமை...
    ரசித்து வாசித்து ரசனையுடன் கொடுத்திருக்கிறீர்கள்...

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் குமார்! விமர்சனம் அருமை என்ற உங்கள் பாராட்டு கண்டு அகமகிழ்ந்தேன். மிகவும் நன்றி!

      Delete
  5. கவிஞர் மீரா செல்வக்குமாருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். எடுத்துக் காட்டி இருக்கும் கவிதை வரிகள் சிறப்பு.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஸ்ரீராம்! கருத்துக்கு மிகவும் நன்றி!

      Delete
  6. மதிப்புரையில் ரசனை அருமையாக காணப்படுகிறது. இதுவே நூலாசிரியருக்குக் கிடைத்த வெற்றி. நூலாசிரியருக்குப் பாராட்டுகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ரசனை அருமை என்ற பாராட்டுக்கு மிகவும் நன்றி முனைவர் ஐயா!

      Delete
  7. >>>
    கடிகாரம் பார்த்து
    என் முகம் கழுவினாள்…
    சிறு கண்ணாடி கொண்டு
    பார் என்றாள்..
    அய்யோ….
    மிக அழகாய்
    மாறிப் போய்
    இருந்தது
    அவள் முகம்…
    <<<

    மனம் நெகிழ்ந்ததில் கண்கள் கசிகின்றன..

    அழகாய் வார்த்தெடுத்த
    கவிஞருக்கும்
    அழகாய் பதிவு செய்தளித்த
    தங்களுக்கும்
    அன்பின் நல்வாழ்த்துகள்..

    ReplyDelete
    Replies
    1. மனம் நெகிழச்செய்த கவிதையுடன் வாழ்த்துச் சொன்னமைக்கு மிகவும் நன்றி துரை சார்!

      Delete
  8. மகளின் ஒவ்வொரு செயலிலும் மகிழ்ந்து நெகிழ்ந்த மனம் கோத்த வரிகள் யாவும் என்பதை சான்றுக்குக் காட்டியிருக்கும் கவிதைகளே சொல்லிவிடுகின்றன. வாசிக்கும் அப்பாக்கள் ஒவ்வொருவரும் தங்கள் மகள்களையும் வாசிக்கும் மகள்கள் தங்கள் அப்பாக்களையும் நினைவுக்குக் கொண்டுவந்து நெகிழ்த்தும் எழுத்து. சின்னவளுக்கும் பெற்றவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். அழகான விமர்சனம் மூலம் நூலை வாசிக்கும் ஆவலைத் தூண்டியுள்ளீர்கள். நன்றி அக்கா.

    ReplyDelete
    Replies
    1. அழகான விமர்சனம் என்ற பாராட்டுக்கு மிகவும் நன்றி கீதா!

      Delete
  9. நினைவுக்குக் கொண்டுவந்து - நினைவுக்குக் கொண்டுவரச்செய்து

    ReplyDelete
  10. நல்ல விமர்சனம் மா....இப்படி அப்பா கிடைக்க கொடுத்து வைக்க வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. நல்ல விமர்சனம் என்ற பாராட்டுக்கு மிகவும் நன்றி கீதா! உண்மை தான்; சின்னவள் மிகவும் கொடுத்துவைத்தவள் என்பதில் சந்தேகமில்லை!

      Delete
  11. அருமையான விமர்சனம். பதிவில் எனது பக்கத்தில் வெளியிட்ட பதிவினையும் குறிப்பிட்டதற்கு நன்றி.

    நூலாசிரியர் நண்பர் செல்வாவிற்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் விமர்சனத்தை மொபைலில் வாசித்தேன். அதனால் கருத்து எழுதவில்லை. மிகவும் அழகான விமர்சனம் என்பதால், அதற்கான இணைப்புக் கொடுத்தேன். மிகவும் நன்றி வெங்கட்ஜி!

      Delete
  12. சிறப்பான விமர்சனம். கவிஞருக்கு வாழ்த்துக்கள்!

    -இராய செல்லப்பா நியூஜெர்சி

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும், சிறப்பான விமர்சனம் என்ற பாராட்டுக்கும் மிக்க நன்றி!

      Delete
  13. வணக்கம் !

    மீரா செல்வக்குமார் ஆம் எங்கோ ஒரு கவிதையில் நானும் என்னைத் தொலைத்தேன் அன்று ,ஒப்பனைகள் இன்றிய உயிர் எழுத்து அவர் வரிகள் அதனை அழகாகக் கோத்து அளித்த தங்களுக்கும் நன்றிகள்

    வாசனைகள்
    வலுவிழந்து போகும்
    வாழ்க்கையின்
    வியர்வைகளில் .....

    நானும் சில
    முட்களுக்கு முக்காடு போட்டேன்
    அரும்பும் பூக்கள்
    அழகாக வேண்டி ......

    கூர்ப்பியல்
    குத்தாட்டம் போட்டாலும்
    இயங்கியல்
    இறுமாப்புக் கொண்டாலும்

    ஒவ்வோர்
    பெண்பிள்ளையும்
    தந்தைக்கு மட்டும்
    தாயாகிறாள்
    அவள்
    தாயாகும் முன்பே ...

    ஏனெனில்

    அன்னைக்குப் பின்
    அடிபணிவது
    ஆசை மகளுக்குத்தான் ....!


    நன்றி

    ReplyDelete
    Replies
    1. வாங்க சீராளன்! ஒவ்வோர்
      பெண்பிள்ளையும்
      தந்தைக்கு மட்டும்
      தாயாகிறாள்
      அவள்
      தாயாகும் முன்பே ... என்று வெகு அழகாகச் சொன்னீர்கள். அழகான கருத்துரைக்கு மிகவும் நன்றி!

      Delete
  14. வணக்கம் சகோ.

    தேர்ந்த விமர்சனம்.

    நுணுக்கமான வாசிப்பு.

    காட்டிய சோற்றுப் பதங்களில் அறியலாகும் நூற்சுவை.

    கவிஞரின் கவிதைகளுடன் எனக்கும் பரிச்சயமுண்டு எனினும் நூலை முழுதாய் வாசிக்கத் தூண்டும் பார்வை.

    தொடர்கிறேன்.

    நன்றி

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ! வணக்கம். நீண்ட நாட்களுக்குப் பின் உங்கள் வருகை மகிழ்வளிக்கிறது. நுணுக்கமானவாசிப்பு, தேர்ந்த விமர்சனம் என்ற பாராட்டுரைக்கு மிகவும் நன்றி!

      Delete
  15. கவிதைகளை ஆழ்ந்து வாசித்து முழுதாய்ப் புரிந்துகொண்டு சிறப்பாகத் திறனாய்வு செய்யக் கவியுள்ளம் உடையோர்க்கே இயலும் .நல்ல விமர்சனம் ; பெண் குழந்தை பிறந்ததற்காக அழுகிறவர்களே மிகுதி . இந்த நிலையில் மகளைச் சிறப்பித்துப் பாடிய கவிஞர்க்குப் பாராட்டு .

    ReplyDelete
    Replies
    1. நல்ல விமர்சனம் என்ற பாராட்டு கண்டு மகிழ்கின்றேன். மிகவும் நன்றி!

      Delete
  16. தங்கள் வருகைக்கும், அருமையான விமர்சனம் என்ற பாராட்டுக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  17. என்ன
    பரிசு வேண்டுமென்கிறேன்
    பிறந்தநாளில்……..
    எப்போதும்
    என்னோடிரு
    என்கிறாள்…
    சின்னவளுக்கு
    எப்படிச் சொல்வது….
    இருப்பதே
    அவளுக்காய் என்பதை…”....

    ஆஹா ..ஆஹா தாய்மையையும், சேய்மையையும் ... அவர்களின் உணர்வுகளையும் இதைவிட எவ்வாறு வெளிக்காட்டமுடியும் ..அருமை..அருமை ...
    https://www.scientificjudgment.com/

    ReplyDelete