நல்வரவு

வணக்கம் !

Monday 6 January 2020

சஞ்சாரம் நாவல் - எஸ்.ராமகிருஷ்ணன் - வாசிப்பனுபவம்



சஞ்சாரம் நாவல் - எஸ்.ராமகிருஷ்ணன்
தேசாந்திரி பதிப்பகம் விலை ரூ 340/-

பக்கிரி, ரத்தினம் என்ற இரு நாதஸ்வரக் கலைஞர்கள், சொந்த ஊருக்குத் திரும்ப முடியாச் சூழ்நிலையில், ஊர் ஊராகப் பயணம் செய்ய, அவர்களின் நினைவுகள் வழியே, கதை விரிகிறது.


தமிழகத்தின் பாரம்பரியமான நாதஸ்வர இசையைப் பற்றிய முக்கிய விபரங்களைச் சேகரித்து ஆவணப்படுத்தியதன் மூலம், இசைத்தமிழ் வரலாற்றுக்கு அரும்பணி ஆற்றியிருக்கிறார் ஆசிரியர். அந்த இசைக்கலைஞர்களின் சோகங்கலந்த வாழ்வியல் உண்மைகளை, வாசகர்களின் கவனத்துக்குக் கொண்டு வந்ததற்கு, ஆசிரியருக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். 2018 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடெமி விருது, நல்ல வேளையாக இந்நூலுக்குக் கிடைத்ததன் மூலம், தமிழகமெங்கும் இக்கவன ஈர்ப்பு பரவலாக்கப்பட்டிருக்கின்றது.

இதற்கு முன் எத்தனையோ முறை, நாதஸ்வர இசையைக் கேட்டிருந்தும், தமிழகத்தின் அந்த பாரம்பரிய இசையைப் பற்றியோ, அந்த இசைக் கருவியைப் பற்றியோ, அக்கலைஞர்கள் வாழ்வியல் பற்றியோ தெரிந்து கொள்ள, இதுவரை நான் அக்கறை காட்டியதேயில்லை என்பதை நினைத்து வெட்கமாயிருக்கிறது!.

அவர்கள் ஊதும் பீ பீக்கு சீவாளி என்று பெயர் என்பதைக் கூட, இப்போது தான் தெரிந்து கொண்டேன். ஆற்றோர நாணலின் தட்டைகளைக் கொண்டு வந்து, முறையாக வெட்டி நறுக்கி, நெல்லில் போட்டுப் பதமாக அவித்துச் செப்புத்தகடுகளைச் சுற்றி, இந்தச் சீவாளி செய்வார்களாம்! (பக்கம் 134).,
அது போல் சுவாமியின் வீதியுலாவுக்கு மல்லாரி வாசிக்க வேண்டும் என்பது தான், இக்கலைஞர்களின் பெரிய ஆசை என்பதும், எனக்குப் புதிய செய்தி. .
சுவாமியின் புறப்பாட்டின் போது எக்காளம், திருச்சீரனம், உடலு, கொட்டு, டவுண்டி, மிருதங்கம் போன்ற இசைக்கருவிகள் முழக்கமிட, அழகிய முகபடாம் பூட்டிய யானையின் அம்பாரி முன் செல்ல, நாதஸ்வரம் வாசித்து வருவார்கள்.

…………….. மல்லாரியில் ராஜ மல்லாரி என்றழைக்கப்படும் திரிபுடைதாள மல்லாரி வாசிக்கப்படும் நேரத்தைத் தான், எல்லோரும் எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள். பெரும் வீர்ர் படையொன்று எழுச்சி கொள்வது போல் எடுத்த எடுப்பிலேயே வாசிப்பு கேட்போர், மனவெழுச்சியை உருவாக்கிவிடும். இம்மல்லாரிக்கு இரண்டு நாதஸ்வரங்கள், ஒரு ஒத்து, நான்கு தவில்கள்….(பக் 132)

கரிசலில் முதன்முதலில் ஒருவன், நாதஸ்வரம் ஒன்றை மாட்டியபடி வந்து குடிக்கத் தண்ணீர் கேட்கின்றான். நாயனம் வாசிக்கிறவன் என்று தெரிந்தவுடன், பொதுக்கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்துக் குடிக்க வாளியும், கயிறும் கொடுக்க மறுக்கிறார்கள். குட்டையில் தண்ணீர் இருந்தாப் போய்க்குடி,’ என்கிறாள் ஒருத்தி. அவன் தண்ணீர் கிடைக்காமல், போகும் வழியில் பாம்பு கடித்து இறந்துவிட, மண்ணில் புதையுண்டு கிடக்கும் வாத்தியத்தை, வெகு காலத்துக்குப் பிறகு ஆடு மேய்க்கும் சிறுவன் வாலன் கண்டெடுத்து வாசிக்கக் கற்றுக்கொள்கிறான்.

நாதஸ்வரம் என்பது கரிசலைப் பூக்க வைக்கும் ஒரு விசித்திர வாத்தியம் என்பதைக் கரிசல்வாசிகள் உணர்ந்து, கோவில் உள்ள ஊர்களில் மேளமும் நாதஸ்வரமும் வாசிப்பவர்களைக் குடி அமர்த்தினார்களாம். இது தான். கரிசலில் நாதஸ்வரம் துவங்கிய கதை!

இதுபோல் கரிசல் மண்ணில் மழை பொய்த்தமைக்கான காரணங்கள் குறித்து வழங்கும் நாட்டுப்புறக் கதைகள், மாலிக் காபூர் படையெடுப்பு குறித்த சங்கதிகள், லட்சய்யா வாசித்த போது, இசையைக் கேட்டுக் கல்யானை சிற்பத்தின் காதுகள் அசைந்த கதை, வட இந்தியாவில் நாதஸ்வரம் ஒலிக்காமல் போனதற்கான காரணம் குறித்து வழங்கும் கதையென்று, மெயின் கதைக்குள் ஏராளமான கிளைக்கதைகளைச் சேகரித்துத் தொகுத்திருக்கிறார் ஆசிரியர்.

இசைக்கலைஞர்களை வெளிநாட்டுக்கு அழைத்துப் போய், நடுங்கும் குளிரில் நிற்க வைத்தே வாசிக்க வைத்துவிட்டு, அதற்குரிய சன்மானத்தைத் தராமல் ஏமாற்றுவது, கல்யாண வீடுகளில் திருமணம் முடிந்து பணம் கேட்கும் போது, நீ இழுத்த இழுப்புக்கு இது போதும்,’ என்று பேசிய தொகையைக் குறைத்துக் கொடுப்பது, தேர்தல் சமயங்களில், வாக்காளர்களுக்கு வாசிக்கப்போய் அலைக்கழிக்கப்பட்டு, அவமானப் படுவது, என அவர்களின் கதையைப் படிக்கும் போது, நெகிழ்ச்சியாக இருக்கின்றது.

நவீனம் என்ற பெயரில், சில விழாக்களில் நாதஸ்வரத்துக்குப் பதிலாகக் கேரளாவின் செண்டு மேளமும், டிரம்ஸூம் வாசிக்கப்படுவதை ஆசிரியர் சுட்டிக்காட்டி எச்சரிக்கத் தவறவில்லை.

நாதஸ்வரக் கலைஞர்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளை விட, நம் சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் சாதிப்பிரச்சினையை இநநாவல் அதிகமாகப் பேசுகிறது என்பது என் எண்ணம்.. ஒரு வேளை அவர்களின் துயருக்கு, மிக முக்கியக் காரணமாக விளங்குவது, அவர்களின் சாதி என்பதால் இருக்கலாம். பக்கிரி நினைத்து வருந்துவதாக, இதில் வரும் வரிகள், என் எண்ணத்தை உறுதிப்படுத்துகின்றன.

நாவலின் 21 ஆம் பக்கத்திலிருந்து……..
என்ன மனிதர்கள் இவர்கள்? அவர்கள் பிரச்சனைக்கு, நம்மை ஏன் அடிக்கிறார்கள்? சாதி திமிர் என்பது இது தானா? இப்படி அடியும் அவமானமும் பட்டு, நாய்பிழைப்பு எத்தனை நாளைக்குப் பிழைப்பது? எந்த ஊருக்கு வாசிக்கப் போனாலும், தங்களைச் சாதியைச் சொல்லிக் கேவலமாகத் தான் நடத்துகிறார்கள். சாமி முன்னால் வாசிப்பது மட்டும் தான் கெளரவம். சாப்பாடு தெருவில் உட்கார்ந்து தான் சாப்பிட வேண்டும். தாழ்வாரத்துல உட்கார்ந்து, சாப்பிட்டுக்கிறோம்னு சொன்னால், கெட்ட வார்த்தையில் திட்டுவார்கள். காற்றடித்துச் சோற்றில் மண்ணை வாரிப் போட்டாலும், அப்படியே தான் சாப்பிட வேண்டும். இதில் ரெண்டு நாள் கச்சேரி என்றால், மணிக்கணக்காக நின்று வாசித்துக் கால் வலி வந்துவிடும். படுப்பதற்கு இடம் கிடைக்காது……பத்து வயசுப் பையன் கூட ஒருமையில் தான் பேசுவான். எதிர்த்து யாரையும் கேட்க முடியாது….”

முப்பதாவது அத்தியாயம் வேப்பங்காடு என்ற கிராமத்தில், தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கும், முற்பட்ட சாதியினருக்கும் சாதியின் காரணமாக நடக்கும் வெட்டுக்குத்து கொலைகள் பற்றி, இருபது பக்கங்களில் விலாவாரியாக விவரிக்கிறது.. இந்த ஊருக்கு நாதஸ்வரக் கலைஞர்கள் வாசிக்கச் சென்று, கலவரத்தில் அடிபட்டு ஓடி வருவது குறித்த, இரு வரி செய்தி மட்டுமே, இதற்கும், மெயின் கதைக்கும் உள்ள தொடர்பு!

பயணத்தின் போது சந்திக்கும் ஒவ்வொருவரைப் பற்றியும், அவர்களுக்குத் தோன்றும் தொடர்ச்சியான மலரும் நினைவுகள், ஒரு கட்டத்தில் நாவல் எப்போது முடியும் என்ற சலிப்பை ஏற்படுத்துகின்றது. அந்தளவுக்கு அளவுக்கு மீறிய மலரும் நினைவுகள்!

தமிழர்களின் பாரம்பரியமிக்க இந்த இசைக்கலையை அழிந்து விடாமல் காப்பாற்றியாக வேண்டும் என்ற எண்ணத்தை வாசகரின் மனதில் ஆழமாக விதைத்ததில், ஆசிரியர் வெற்றி பெற்றுள்ளார்.
ஆசிரியருக்குப் பாராட்டுகள்!

4 comments:

  1. சிறப்பான விமர்சனம். சீவாளி, மல்லாரி பற்றியெல்லாம் ஓரளவு அறிந்திருக்கிறேன். தங்கள் விமர்சனம் பல புதிய தகவல்களை அறிந்துகொள்ளும் ஆவலைத் தூண்டுகிறது. வாய்ப்பு அமைந்தால் அவசியம் வாசிப்பேன். நன்றி அக்கா.

    ReplyDelete
    Replies
    1. சிறப்பான விமர்சனம் என்ற கருத்துக்கு நன்றி கீதா!

      Delete
  2. சிறந்த திறனாய்வு. தொழில் காரணமாய் இழிவுக்காளான பற்பல தமிழர்களுள் இசைக் கலைஞர்களும் அடங்குவார்கள்; அவர்கள் சட்டையோ துண்டோ அணியக்கூடாது என்ற தடையிருந்தது . சாமி ஊர்வலமொன்றில் சிவக்கொழுந்து என்ற கலைஞர் துண்டணிந்திருந்தார் என்பதற்காக எதிர்ப்பு எழுந்தபோது பட்டுக்கோட்டை அழகிரிசாமி ( பெரியாரின் வலக்கை ) அவரை யாதரித்து எதிர்ப்பை முறியடித்தார் என்பது வரலாறு . நாகசுரக் கலைஞர்களுக்கு இப்போதெல்லாம் வாய்ப்பே கிடையாது . அவர்களைப் பற்றி நாடு அறிந்துகொள்ளச் செய்த எஸ்>ரா. பாராட்டுக்குரியவர். நூலை அறிமுகஞ் செய்தமைக்கு நன்றி .

    ReplyDelete
  3. சிவக்கொழுந்து துண்டுக்கு எழுந்த எதிர்ப்பைப் பற்றியும் பட்டுக்கோட்டை அழகிரியின் ஆதரவையும் அறிந்து கொள்ள உதவியமைக்கு நன்றி. தோளில் துண்டு அணியக் கூட உரிமை இல்லாமல் இருந்திருக்கிறார்கள் என்பது வேதனையான உண்மை. கருத்துக்கும் பாராட்டுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி!

    ReplyDelete