நல்வரவு

வணக்கம் !

Monday 6 January 2020

‘அன்புள்ள ஏவாளுக்கு,’ நாவல் – (ஆலிஸ் வாக்கர்) வாசிப்பனுபவம்




அன்புள்ள ஏவாளுக்கு,’  நாவல் – (ஆலிஸ் வாக்கர்
தமிழில்ஷஹிதா
எதிர் வெளியீடுரூ350/-

அமெரிக்க நாவலாசிரியை ஆலிஸ் வாக்கர் எழுதியதும், புலிட்சர் பரிசை வென்றதுமான, ‘The Colour Purple,’ என்ற நாவலை, ‘அன்புள்ள ஏவாளுக்கு,’ எனும் தலைப்பில், தமிழில் அற்புதமாக மொழியாக்கம் செய்துள்ளார் ஷகிதா.


அமெரிக்காவுக்கு அடிமைகளாய் இழுத்து வரப்பட்டு, ஆங்கிலம் கற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலையில், ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் தங்களுக்குள் பேசும் மொழியாக, உருவாக்கிக் கொண்ட, கொச்சை பேச்சு ஆங்கிலத்தில் அமைந்திருந்த நாவலைப் படித்துப் புரிந்து, மொழிபெயர்த்தது, உண்மையிலேயே சவாலான விஷயம் தான்! 

மொழிபெயர்ப்பு என்ற எண்ணமே, தோன்றாத வண்ணமாகவும், வாசிப்பில் கொஞ்சமும் தடையேற்படாத விதமாகவும், நம் சூழலுக்கு முற்றிலும், அந்நியமான ஆப்பிரிக்க கறுப்பர்களின் வாழ்வியலை, நமக்கேற்றாற் போல், மாற்றித் தந்திருக்கும் ஷகிதா, மிகுந்த பாராட்டுக்குரியவர்!

நாவலில் பெரும்பான்மையான பகுதி முழுக்க, முதன்மை பாத்திரமான சீலி என்ற பெண், கடவுளுக்கு எழுதும் கடிதங்கள் வாயிலாகவே, கதையை நகர்த்திச் செல்கிறார் ஆசிரியர்.  எனவே கருஊதா நிறம் என்ற தலைப்பைக் காட்டிலும், ‘அன்புள்ள ஏவாளுக்கு,’ என்பது பொருத்தமாக இருந்ததால், இந்தப் பெயரைத் தேர்வு செய்ததாக, ஷகிதா தம்முரையில் குறிப்பிடுகின்றார்.

நாவலின் தொடக்கமே, நமக்கு அதிர்ச்சியூட்டுவதாக அமைந்திருக்கின்றது.  தன் வயிறு பெருத்துப் போவதற்கு, என்ன காரணம் என்று கூடத் தெரியாத பதினான்கு வயது சிறுமி சீலி, தனக்கு என்ன ஆனது என்று ஒரு சகுனம் காட்டக் கூடாதா என்று கடவுளுக்கு, எழுதும் முதல் கடிதத்தில் கேட்கிறாள்.  அடுத்த கடிதத்தில், அதற்குக் காரணம், அவள் தந்தை என்று நாம் அறியும் போது, நமக்கேற்படும் அதிர்ச்சி இரட்டிப்பாகிறது.

நாடு, இனம், மொழி, கலாச்சாரம், என எல்லாமே வெவ்வேறாக இருந்தாலும், உலகமுழுக்கப் பெண்ணினம், அனுபவிக்கும் துன்பங்களும், சித்ரவதைகளும் ஒன்றுபோலவே இருக்கின்றன என்ற அதிர்ச்சிகரமான உண்மையே, நாவலை என் மனதுக்கு நெருக்கமாக, உணர வைக்கின்றது!

.ஆப்பிரிக்காவில் ஒலிங்கர் இனப்பெண்களுக்குப் பெண்ணுறுப்புச் சிதைவு, மற்றும் கன்னங்களைக் கீறி, இனக்குறிகளை இடும் வழக்கங்கள் குறித்து,  அங்கு வசிக்கும் நெட்டி, தன் அக்கா சீலிக்கு எழுதும் கடிதத்தில் குறிப்பிடுகின்றாள்.  ஆணாதிக்கச் சமூகத்தில் பெண்களுக்கெதிராக இழைக்கப்படும் கொடுமைகள் போதாதென்று, மக்களின் அறியாமையும், மூடநம்பிக்கைகளும், அவர்களின் வேதனைகளை அதிகபடுத்தவே செய்கின்றன என்பது வேதனையான உண்மை!?

கடவுளுக்கு எழுதும் கடிதங்கள் அனைத்திலும், மிஸ்டர்_________- என்ற கோடு போட்டுத்தான், கணவனின் பெயரைச் சீலி எழுதுகிறாள்.  அவனின் பழைய காதலி ஷூக் ஏவரி வந்த பிறகு தான், (நூலின் 73 ஆம் பக்கத்தில்) அவன் பெயரை ஆல்பர்ட் என்றழைக்கிறாள்.   யாரது ஆல்பர்ட்?” என்று யோசிக்கும் சீலிக்குப் பிறகு தான், அவனுடைய பெயர் ஆல்பர்ட் என்று நினைவுக்கு வருகின்றது. 

தந்தையின் கட்டளைக்குப் பணிந்து, கணவனின் பெயர் கூடத் தெரியாமல், அப்பாவின் வயதையொத்த, முதல் மனைவியை இழந்த ஒருவனுக்கு, அவன் மூன்று குழந்தைகளை வளர்க்க வேண்டி, இரண்டாம் தாரமாய் வாழ்க்கைப்படுகின்றாள், பரிதாபத்துக்குரிய சீலி..

உனக்கு என் அனுதாபங்கள்.  புருஷனின் வைப்பாட்டியை உன்னைத் தவிர வேறெந்தப் பெண்ணும், தன் வீட்டில் சேர்க்க மாட்டாள்.  (பக் 81)
என்று அவள் வீட்டிலேயே வந்து தங்கியிருக்கும், ஷூக் ஏவரிக்கு வேலைக்காரியாக, சீலி பணிபுரிவது பற்றி, அவளது மாமனார்  ஒருமுறை சொல்லுகின்றார்.

நாவலை வாசிக்க வாசிக்க, முடிவே இல்லாமல், துன்பம் தொடர்கதையாகிப் போன சீலியின் வாழ்வில், என்றாவது ஒரு நாள், விடிவெள்ளி முளைக்காதா என மனம் ஏங்கத் துவங்கிவிட்டது.  அந்தளவுக்கு வாசகரின் இதயத்தில் இரக்கமும், கருணையும் பொங்கும்படியாக சீலி என்ற கதாபாத்திரத்தை, உருவாக்கியிருக்கிறார் ஆலிஸ் வாக்கர்.

சீலிக்கு நேர்ந்ததைப் போலக் குழப்பமும், பேரதிர்ச்சியும் நம்மைத் தாக்கத் தான் செய்யும்; திடமாய் நின்று, சமாளித்துக் கொண்டால்,  இருளிலிருந்து தோன்றும் வெளிச்சம் போல, நாம் எதிர்பார்க்காத நேரத்தில், யார் யாரிடமிருந்தோ அன்பும், அரவணைப்பும் கிடைத்து, நம்மைச் சூழ்ந்திருக்கும் துன்பங்களிலிருந்துவிட்டு விடுதலையாகி,’ இம்மண்ணில் நமக்கான அடையாளத்தை நிலைநாட்ட முடியும் என்ற நேர்சிந்தனையை, அப்பாத்திரத்தின் மூலம் நிறுவியிருக்கும் ஆசிரியர், பாராட்டுக்குரியவர்

இன்னொரு முக்கிய பாத்திரம் சோஃபியா.  சீலியைப் போன்று பணிவாக இல்லாமல், தன் மனதுக்குச் சரியென்று நினைப்பதைத் துணிச்சலுடன்  பேசுபவள்.  ஆணுடன் சரிக்குச் சரியாக நின்று, சண்டை போடுபவள்.  சீலி கணவனின் பெரிய மகனான ஹார்ப்போவின் மனைவி.. 
.
தன் சித்தி சீலி மாதிரி, பணிவாக இல்லாமல், தன்னை எதிர்த்து சோஃபியா பேசுவதாகத் தன் தந்தையிடம், ஒரு முறை சொல்கிறான், ஹார்ப்போ.  அதற்குச் சீலியின் கணவன் கூறும் பதில்:-
நீ அவளை அடிப்பதில்லையா? அடிக்கவில்லையென்றால், அவள் உன்னை மதிப்பாள் என்று எப்படி எதிர்பார்க்கிறாய்?  மனைவியையும், நம்முடைய பிள்ளைகளைப் போலத் தான், நடத்த வேண்டும்.  அதிகாரம் உன்னிடம் தான் இருக்கிறது என்பதை, நீ காட்டித் தானாக வேண்டும்.  செமத்தியாக அடித்து, உதைப்பதுதான், அதற்குச் சரியான வழி” (பக் 59)

உலகமுழுக்கப் பெரும்பான்மையான ஆண்கள், ஒரே மாதிரியாகத் தான் சிந்திக்கிறார்கள் என்று யோசித்த போது, எனக்கு வியப்பாக இருந்தது..

சீலியிடம் பேசிக்கொண்டிருக்கும் போது, சோஃபியா கூறுவது இது:-
எனக்கு ஹார்ப்போவிடம், சலிப்பு ஏற்பட்டுவிட்டது.  எங்களுக்குத் திருமணமானதிலிருந்து, அவன் மனதில், என்னை எப்படி அடிபணியச் செய்வது, என்ற எண்ணம் மட்டுமே உள்ளது.  அவனுக்கு வேண்டியது, ஒரு மனைவியல்ல, ஒரு நாய் தான்” (பக் 93)

வெள்ளைக்கார மேயருடன் சண்டை போட்டதினால், சோஃபியா சிறைக்குப்  போய்விடுகின்றாள்.   அமெரிக்காவில் கறுப்பர்களுக்கெதிரான வெள்ளையரின் இனவெறியை, நிறவெறியை, நாவல் முழுக்க, ஆசிரியர் ஆங்காங்கே தோலுரித்துக் காட்டியிருக்கின்றார்.  கறுப்பர் இனத்தைச் சேர்ந்தவள், வெள்ளையனை அடித்து விட்டால் என்பதால் சோஃபியாவுக்குக் கிடைக்கும் அதிகப்படியான தண்டனை, அதற்கு ஓர் எடுத்துக்காட்டு!  உயிர் பிழைப்பதை விட, மரணமே மேல் என்கிற மாதிரியான கொடுமையான தண்டனை!

சோஃபியாவைச் சிறையில் சந்திக்கச் செல்லும் சீலி, கடவுளுக்கு எழுதும் கடிதத்தில், இவ்வாறு எழுதுகின்றாள்:-
நான் மறுபடி சோபியாவைப் பார்த்த போது, அவள் ஏன் இன்னமும் உயிரோடு இருக்கிறாள் என்றுதான் நினைத்தேன்.  அவளுடைய மண்டையோட்டையும், விலா எலும்புகளையும், அவர்கள் உடைத்திருந்தார்கள்.  அவளுடைய மூக்கை, அவர்கள் கிழித்ததில், அது ஒருபுறமாகத் தொங்கிக் கொண்டிருந்தது.  அவளுடைய ஒரு கண்ணைக் குருடாக்கியிருந்தார்கள்.  தலையிலிருந்து பாதம் வரை, அவள் வீங்கியிருந்தாள்..(பக் 120)

நன்னடத்தை காரணமாக, அவள் வெளியில் வரலாம் என ஹார்ப்போ சொல்லும் போது, சோஃபியா சொல்லும் பதிலிது:-
நன்னடத்தை மட்டுமே, அவர்களுக்குப் பத்தாது.  குப்புற விழுந்து, அவர்கள் பூட்சுகளை, உங்கள் நாக்கால் நக்கினால் ஒழிய, அவர்கள் கவனத்தைப் பெற முடியாது,”. (பக் 122) .

மூன்றாவது முக்கிய பாத்திரம், சீலியின் தங்கை நெட்டி.  மதப்போதகராக ஆப்பிரிக்காவின் ஒலிங்கா பகுதிக்குச் சென்று தங்கியிருப்பவள், அங்குள்ள மக்களின் வாழ்க்கை குறித்து, தன் அக்காவிற்குத் தொடர்ச்சியாகக் கடிதங்கள் எழுதுகின்றாள்.

ஒலிங்கா கிராமத்தின் ஊடாகத் தான், அதன் பாதை நீளவிருந்தது. நாங்கள் படுக்கையிலிருந்து எழுமுன்பே, காத்தெரினின் புதிதாகப் பயிரடப்பட்ட சேனைத் தோட்டமெல்லாம், சாலை இடுவதற்காகத் தோண்டப்பட்டிருந்தது. ஒலிங்கர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்கள்.  ஆனால் சாலை இடவந்தவர்களின் கரங்களில், துப்பாக்கிகள் இருந்தன.  சுடுவதற்கான ஆணையோடு வந்திருந்தார்கள் சீலி! 
மக்கள் கடும் துரோகத்துக்காளானவர்களாக, உணர்ந்தார்கள்.  மிகப் பரிதாபகரமான நிலைமை சீலி!  அவர்கள் கண்ணெதிரிலேயே, அவர்களுடைய பயிர்களும், வீடுகளும் நாசமாவதைப் பார்த்தபடி, என்ன செய்வதென்றறியாமல், அப்படியே நின்றார்கள்…………………ஊரின் நட்டநடுவே செல்லும் தார்ரோட்டோடு, கிராமமே சிதைந்து போனது போல இருந்தது”.(பக் 208)    

ஆப்பிரிக்கக் கிராமங்களின் வாழ்வாதாரத்தைச் சிதைத்து, ஆங்கிலேயர்களின் ரப்பர் கம்பெனிகள் அமைத்த விதத்தை, அவள் கடிதங்கள் விரிவாகப் பேசுகின்றன. இன்று நம் தமிழகத்தில் பன்னாட்டுக் கம்பெனிகளுக்காக, விளைநிலங்களைப் பாழ்படுத்திக் கொண்டுள்ளோம். நம் கிராமங்களின் நிலைமை, நாளைக்கு என்னாகுமோ?  

அடுத்துக் கடவுளின் உருவத்துக்கும், கடவுளுக்குமான முரண்பாட்டைப் பற்றி இந்நூல் பேசுகின்றது.  கடவுளும் வெள்ளையர் தான்.  அதெப்படி பைபிளும், அவர்கள் செய்யும் எல்லாவற்றையும் போலவே, வெள்ளையர்களின் காரியங்களைப் பற்றியே, ஒன்றன் பின் ஒன்றாகப் பேசுகின்றது? அதில் வரும் கறுப்பர்களுக்கு ஏன், சாபங்கள் மட்டுமே கிடைக்கின்றன?” (பக் 237) என்று ஷூக், சீலியிடம் கேட்கும் கேள்வி, மிக முக்கியமானது.

இப்படிப் பல தளங்களில் விரியும் இந்நாவல், அவசியம் வாசிக்கப்பட வேண்டிய ஒன்று.
மொழிபெயர்ப்பாளருக்கு மீண்டும் என் பாராட்டுகளும், வாழ்த்துகளும்!


No comments:

Post a Comment