நல்வரவு

வணக்கம் !

Monday 20 April 2020

நெஞ்சு பொறுக்குதில்லையே!



நரம்பியல் நிபுணர் டாக்டர் சைமன் அவர்களின் இறப்பு, ஈடு செய்ய முடியாப் பேரிழப்பு!

கொரோனாவால் இறக்கும் மருத்துவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது.  இந்தப் பேரிடர் காலத்தில், அவர்களின் இறப்புச் செய்தி தரும் வேதனையைக் காட்டிலும், அப்படி இறந்த மருத்துவர்களின் உடல்களை உரிய முறையில் அடக்கம் செய்ய விடாமல் தடுக்கும் காட்டுமிராண்டித் தனம், வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுகிறது.

ஏற்கெனவே இரண்டு மருத்துவர்கள் இறந்த போது நடந்தது போல், டாக்டர் சைமன் உடல் சென்ற ஆம்புலன்ஸ் வாகனத்தை ஒரு கூட்டம் சேதப்படுத்தி, ஓட்டுநரைத் தாக்கியிருக்கிறது. 

குடும்பங்களைப் பிரிந்து, தம் உயிரைப் பணயம் வைத்து இரவு பகலாக நோய்வாய்ப்பட்ட மக்களுக்குச் சிகிச்சை செய்யும் மருத்துவர்களுக்கு, நாம் காட்டும் நன்றிக்கடன் இது தானா? போதுமான பாதுகாப்பு கவசங்கள் இல்லையென்றாலும், தொடர்ந்து சேவை செய்து தம் உயிரை இழக்கும் மருத்துவர்கள், நம் கடவுள்களாகப் போற்றப்பட வேண்டியவர்கள் அல்லவா?



பிரதம மந்திரி சொன்னவுடன், வீட்டில் இருந்து அவர்கள் சேவையைக் கை தட்டி உற்சாகப்படுத்தியதோடு, நம் நன்றியுணர்ச்சி தீர்ந்துவிட்டதா?  போரில் இறக்கும் வீர்ர்களுக்கு மரியாதை செய்வது போல், இவர்கள் உடல்களுக்குக் குண்டுகள் முழங்க, அரசு மரியாதை செய்ய வேண்டாமா?  அரசு மரியாதை கூடச் செய்ய வேண்டாம்; குறைந்த பட்சம் அவர்கள் உடல்களை உரிய மரியாதையோடு அடக்கம் செய்யவாவது, அவர்கள் குடும்பத்துக்குப் பாதுகாப்பு கொடுக்க வேண்டாமா?

வேடிக்கை பார்ப்பதற்காக அரசும், காவல்துறையும்?  இப்படித் தடுப்பவர்கள் மீது உடனடியாகக் குண்டர் சட்டம் பாய வேண்டாமா?   
போரில் கைப்பற்றப்பட்ட எதிரி நாட்டு வீர்ர்களின் உடல்களைக் கூட தகுந்த மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும் என்பது காலங்காலமாகக் காப்பாற்றப்படும் அடிப்படை மனித மாண்பு!  அப்படிச் செய்யாவிட்டால் அது போர்க்குற்றமாகக் கருதப்படும் என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்தி தானே?  அப்படியிருக்க நம் மக்களுக்காக, தம் உயிரைக் கொடுக்கும் மருத்துவர்களுக்கு எப்படிப்பட்ட நன்றிக்கடன் நாம் செலுத்த வேண்டும்? 

“அடிப்படை மனித மாண்பைக் கூட இழந்துவிட்ட இந்த நன்றிகெட்ட மக்களுக்கு நாங்கள் எங்கள் உயிரைப் பணயம் வைக்க மாட்டோம்;  நாங்கள் யாரும் வேலைக்கு வர மாட்டோம்,” என அவர்கள் போராட ஆரம்பித்தால் நம் நிலைமை என்னவாகும்?

‘புகழ் பெற்ற மருத்துவர் சைமன் அவர்களுக்கே, இந்த நிலைமையென்றால், நாளைக்கு என் கதி என்ன?’ என இப்போது பணியிலிருக்கும் மருத்துவர்கள் யோசிக்க ஆரம்பித்தால், நிலைமை படுமோசமாகும் என்பதை அரசும் காவல்துறையும் உணர்ந்து உரிய நடவடிக்கை உடனே எடுக்கவேண்டும்.

இங்கிலாந்தில் மருத்துவர்களின் வீடுகளுக்கு முன்னால், யார் யாரோ முகம் தெரியாதவர்கள், வந்து பழக்கூடைகளையும், சாப்பாட்டுப் பொருட்களையும் வைத்துச் செல்கிறார்களாம்.  “நீங்கள் குடும்பத்தை மறந்து நாட்டுக்காக உழைக்கிறீர்கள்; உங்கள் குடும்பத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்,” என்று தங்கள் நன்றியுணர்ச்சியை வெளிப்படுத்துகிறார்களாம்.

இங்கோ அவர்கள் உடலை உரிய மரியாதையோடு அடக்கம் செய்யக் கூடக் கலவரம் செய்கிறார்கள்!   

நெஞ்சு பொறுக்குதில்லையே! .   

12 comments:

  1. வேதனையான விசயம் இது காட்டுமிராண்டித்தனமானது நன்றியுணர்வு துளியும் இல்லை.

    ஒரு காணொளி பார்த்தேன் ஸ்கூட்டியில் மாஸ்க் போட்டு ஆபரேஷன் தியேட்டரில் போடும் உடையுடன் வந்த மருத்துவரை காவல்துறை அடிக்கிறது அவர் தன்னை மருத்துவர் என்றதும் முன்னாலே சொல்ல வேண்டியதுதானே என்கிறார்.

    விசாரணையே இல்லாமல் அடித்து விட்டு சொல்வது முட்டாள்த்தனமாது.

    மக்களும் அப்படி, காவல்துறையும் அப்படி, ஆளும் அரசும் அப்படியேதான்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துக்கு மிக்க ந்னறி கில்லர்ஜி சார்! மிகவும் தாமதமாக நன்றி சொல்வதற்கு வருந்துகிறேன்.

      Delete
  2. ஆம் மனிதர்களின் இன்னொரு கோரமுகம்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துக்கு மிக்க ந்னறி ரமணி சார்! மிகவும் தாமதமாக நன்றி சொல்வதற்கு வருந்துகிறேன்.

      Delete
  3. மருத்துவ தெய்வங்கள் இறப்பு, மேலும் ஆபத்தை அதிகரிக்கும்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனபாலன் சார்!

      Delete
  4. பண்பட்டோம், முன்னேறினோம் என்று இறுமாந்திருந்தது எல்லாம் தகர்கிறது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க தங்கை கிரேஸ்! நலமா? தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா!

      Delete
  5. வேதனை. மனிதம் மரத்துப் போனதோ என்று தோன்றுகிறது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட்ஜி! தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  6. மனிதத்தைத் தொலைத்துவிட்டு எதை சாதிக்கப்போகின்றோமோ. மிகவும் வேதனையாக உள்ளது.

    ReplyDelete
  7. வாங்க முனைவர் ஐயா! தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி!

    ReplyDelete