25 பைசா நாணயமும் 10 பைசா நாணயமும் இம்மாதம் 30 ஆம் தேதிக்குப் பிறகு செல்லாது
என்று ரிசர்வ் வங்கி அண்மையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கடந்த வருடம் உள்ளூர் பேருந்தில் பயணச் சீட்டு வாங்க சில்லறை கொடுத்த போது,.அதிலிருந்த
25 பைசாவை வாங்க மறுத்துத் திருப்பிக் கொடுத்து விட்டார் நடத்துநர். ஏனென்று
கேட்டேன். ”இது செல்லாது,” என்றார்.
’தலைமை வங்கி அறிவிப்பதற்கு
முன்னதாகவே, இதைச் செல்லாது என்று கூறி வாங்க மறுக்கும் அதிகாரத்தை யார் இவருக்குக்
கொடுத்தது?’ என்று எனக்கு
வியப்பு. 10 பைசா செல்லாது எனச் சொல்லிப் புழக்கத் திலிருந்து
அகற்றிப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது
தான் அறிவிப்பு வந்திருக்கிறது!
அடுத்து 50 பைசா நாணயத்தையும் மக்களாகவே செல்லாது என்று முடிவெடுத்துப்
புழக்கத்திலிருந்து அகற்றிப் பல ஆண்டுகள் கழிந்த பின், தலைமை வங்கி அறிவிப்பு வெளியிடும்
என்று நினைக்கிறேன்.
மதிப்பிழந்து போன இந்த 25 பைசா நாணயத்துக்கு ஒரு காலத்தில் எவ்வளவு மவுஸ்
இருந்தது தெரியுமா? என் சிறு வயதில் இதை
நாலணா என்பார்கள். ஐம்பது காசு எட்டணா. மூன்று
காசு அரையணா, ஆறு காசு ஓரணா..
நான் சிறுமியாக இருந்த போது தின்ன ஆசைப்படும் குச்சி ஐஸ் என்ன விலை தெரியுமா? மூன்று காசு மட்டுமே. இந்த 25 காசுக்கு எட்டு குச்சி ஐஸ் வாங்கிச்
சாப்பிடலாம்! ஓரணாவுக்கு ஆறோ ஏழோ வறுக்கி ரொட்டி கிடைக்கும்.
எனக்குச் சிறு வயதிலிருந்தே டான்சில்ஸ் அடிக்கடி வீங்கிக் கொண்டு தொண்டை வலி
ஏற்பட்டுக் காய்ச்சல் வந்துவிடும். அதனால்
சுத்தமில்லாத தண்ணீரில் செய்யப்படும் இந்தக் குச்சி ஐஸைச் சாப்பிடக்கூடாது என்பது
அம்மாவின் கடுமையான உத்தரவு.
மதிய உணவு இடைவேளையின் போது, என் தோழிகள், ”ஐஸ் திங்கப் போறோம், வர்றியா? என்பார்கள். எனக்கு அம்மாவின் எச்சரிக்கை உடனே நினைவுக்கு
வந்து, ”ஹுகும் வேண்டாம்; எனக்கு
ஒத்துக்காது,” என்பேன் மிகவும் நல்ல
பிள்ளையாக.
”நாங்க எல்லாரும் தின்னப்
போறோம். நீ மட்டும் தான் வரலே,” என்று வேண்டுமென்றே வெறுப்பேற்றுவாள் ஒருத்தி. ”வேண்டாம்,”
என்பேன் அரை மனதுடன்.
”பரவாயில்லை ஒங்கம்மாவுக்குத்
தெரியவாப் போகுது. இன்னிக்கு மட்டும் தின்னு,” என்பாள் இன்னொருத்தி. எனக்கு லேசாக சபலம் தட்டும்
”ஒரே ஒரு ஐஸ் திங்கறதால
ஒன்னும் ஆயிடாது. நீயும் வா,”
என்று அடுத்ததாக ஒருத்தி சொல்லி முடிக்குமுன்பாகவே அவர்களோடு செல்லத்
தயாராகிவிடுவேன்.
பச்சை, சிவப்பு, ஆரஞ்சு என்று கண்ணைப் பறிக்கும் வண்ணங்களில் குச்சி ஐஸ்
கிடைக்கும். வெயில் நேரத்தில் லேசான
தித்திப்புடன் ஜில்லென்று உறிஞ்சி உறிஞ்சி சாப்பிடுவதில் ஒரு சுகம் இருக்கிறதே,
அது ஓர் அலாதி சுகம். சீக்கிரமாகவும் சாப்பிட வேண்டும்.
இல்லாவிட்டால் குச்சியிலிருந்து ஐஸ் கீழே விழுந்துவிடும். குச்சி ஐஸில் சேமியா
வைத்து சேமியா ஐஸ் என்று விற்பார்கள்.
சாப்பிட்ட பிறகு ஆரஞ்சு, சிவப்பு என ஐஸ் நிறமாகி விட்ட நாக்கை நீட்டி நீட்டி அடுத்தவருக்குக் காட்டுவதில்
ஒரு பெருமை!
ஐஸ் தின்ற அன்றிரவில் எனக்குத் தொண்டை வலியும் காய்ச்சலும் வந்து விடும்.
மூட்டுக்கு மூட்டு வலி குடைந்தெடுக்கும்.
“இன்னிக்கு ஐஸ் வாங்கித் தின்னியா?” அம்மா
கேட்பார்..
”இல்லவே இல்லை,” என்று சாதிப்பேன்.
முதுகில் இரண்டு சாத்து சாத்தியவுடன், ”ஆமாம்” என்று ஒத்துக்
கொள்வேன். பொய் சொன்னதுக்காக, இரண்டு
மொத்து சேர்த்துக் கிடைக்கும்.
ஒவ்வொரு முறை காய்ச்சல் வந்து அடி வாங்கும் போதும், இனிமேல் இந்த ஐஸ் பக்கம்
போகக்கூடாது என்று தான் நினைப்பேன். ஆனால்
கொழுப்பெடுத்த நாக்கு கேட்டுத் தொலைத்தால் தானே?
ஓரளவுக்கு வளர்ந்த பின்பே, நாக்கைக் கட்டுப்படுத்தும் பழக்கம் எனக்கு
வந்தது. அது வரை இதே கதை தான். பிரசவ
வைராக்கியம் என்பார்களே, அதுபோல் தான், என் ஐஸ் வைராக்கியமும்.
இந்த இருபத்தைந்து காசு என் மனதில் நீங்காவிடம் பெற்று என் நினைவுக்
குறிப்புகளில் இடம் பெற ஒரு முக்கிய காரணமுண்டு.
ஒரு நாள் மாலை என் பள்ளிக்கூட வீட்டு வாசலில் நின்றிருந்தேன். அப்போது என் வகுப்பில் படித்தவள் ஒருத்தி தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தாள். அவள் கடந்த சில வருடங்களாக என்னுடன்
படித்தாலும், எனக்கும் அவளுக்கும் நெருங்கிய நட்பு கிடையாது.
அவள் என்னைக் கவனிக்கவில்லை. அவள்
கவனம் முழுதும் கீழேயே இருந்தது. விழுந்து
விட்ட எதையோ தேடிக்கொண்டு செல்கிறாள் என்று புரிந்தது. நான் அவளை அணுகி,
”லட்சுமி! என்ன தேடுறே?” என்றேன்.
என்னை எதிர்பார்க்காததால் திடுக்கிட்ட அவள், அவசர அவசரமாகத் தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.
”ஏன் அழுவுறே? என்னாச்சு
சொல்லு”
”எங்கம்மா மளிகை சாமான்
வாங்கிட்டு வரச்சொல்லிக் காசு கொடுத்தாங்க.
அதுல நாலணா எங்கியோ விழுந்துடுச்சி.
சாமான் வாங்காம போனா அம்மா அடிப்பாங்க.
அதான் காசு கிடக்குதான்னு தேடிக்கிட்டுப் போறேன்” (25 காசுக்கு அப்போது எவ்வளவு மதிப்பிருந்தால், ஒருத்தி அழுது கொண்டே அதைத்
தேடிச் செல்வாள்?)
அவளது கிராமம் என் ஊரிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரம். திரும்பவும் வீட்டுக்கு நடந்து போய் 25 பைசா
எடுத்து வருவதென்பது முடியாத காரியம். அப்போதெல்லாம்
சுற்றுப்பட்ட கிராமங்களுக்கு ஆட்டோ, பேருந்து வசதி கிடையாது. மாணவர்கள் பள்ளிக்குச் சைக்கிளில் தான் வருவார்கள். பெண்கள் சைக்கிள் ஓட்ட மாட்டார்கள் என்பதால், பள்ளிக்கு வருவதாயிருந்தாலும், அல்லது பக்கத்து
ஊருக்குச் சென்று சாமான்கள் வாங்குவதாயிருந்தாலும், இரண்டு மூன்று கிலோ மீட்டர்
தூரத்தை நடந்தே கடக்க வேண்டும்.
இப்போதோ தெரு முனையில் இருக்கும் கடைக்குப் போய் ஏதாவது சாமான் வாங்கி வரச்
சொன்னால் முளைத்து மூன்று இலை விடாத குழந்தைகள் கூட ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு சிட்டாய்ப்
பறக்கின்றனர். சைக்கிள் ஓட்டுவதற்குக் கூட
உடம்பு வளைவதில்லை
”கூப்பிடு தூரம் போக
கூப்பிடாதே ஆட்டோ, டாக்ஸி”
”எரிபொருள் சிக்கனம்
தேவை இக்கணம்”
இவை போன்று அங்கங்கே எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி எழுதப்பட்டிருக்கும்
வாசகங்கள், நம் பிள்ளைகளின் கவனத்தைக் கவர்ந்ததாகத் தெரியவில்லை.
லஷ்மி வசிக்கும் ஊர் குக்கிராமம் என்பதால் அங்குச் சாமான் வாங்கக் கடை கிடையாது. மேலும் காசைத் தொலைத்து விட்டுச் சாமான்
வாங்காமல் சென்றால், அவள் அம்மா விடமிருந்து செமத்தியாக அடி கிடைக்கும். எனக்கு
அவளைப் பார்க்க பாவமாக இருந்தது.
”சரி சரி. அழாதே. எங்கப்பாக்கிட்ட சொல்லி காசு வாங்கித் தரேன்,” என்று சொல்லி அதன்படி செய்தேன்.
எதிர்பாராமல் வலிய கிடைத்த் உதவியில் அவள் நெகிழ்ந்து போனாள். மகிழ்ச்சியுடன் காசை வாங்கிச் சென்று சாமான்கள்
வாங்கிப் போனாள்.
அதற்குப் பிறகு அவள் எனக்கு இணை பிரியாத் தோழியானாள். இன்றும் பள்ளித்தோழி என்றால், எனக்கு முதலில்
நினைவுக்கு வருபவள் அவள் தான்.
இப்போது சொல்லுங்கள். இந்த 25 பைசாவை
என்னால் மறக்க முடியுமா? இன்று இது செல்லாக்காசானாலும், ஒரு நல்ல தோழியைப் பெற்றுத்
தரக் காரணமாக இருந்த இதற்கு, என்றென்றும் நான் நன்றி சொல்லக்
கடமைப்பட்டிருக்கின்றேன்.
(20/06/2011 நிலாச்சாரலில் எழுதியது)
No comments:
Post a Comment