நல்வரவு

வணக்கம் !

Wednesday, 14 December 2011

திருப்புமுனை - சிறுகதை (27/1/08 தினமணிக்கதிரில் வெளிவந்தது)


அலுவலகம் முடிந்து வீடு திரும்புகையில் செல் ஒலித்தது.

"ஏங்க உங்க வைத்தி மாமா வந்திருக்கார்.  உங்களைப் பார்க்கணும்னு காத்திக்கிட்டுருக்கார்.  எப்ப வருவீங்க?" மனைவி தான் பேசினாள்.

"அந்த ஆளை நல்லா நாலு கேள்வி கேட்கணும்.  சரி.. சரி வை. பத்து நிமிஷத்தில் வந்துடுவேன்.  நேர்ல பேசிக்கிறேன்"

யாரைப் பார்த்து நாலு வார்த்தை நாக்கைப் பிடுங்கிக்கிற மாதிரி கேட்க வேண்டுமென்று இந்தப் பத்து வருடங்களாக நினைத்துக் கொண்டிருந்தேனோ, அந்த மனுஷனே வீடு தேடி வந்திருக்கார்.  அன்றைக்கு அவர் பேசின பேச்சை நான் இன்னும் மறக்கவில்லை.

பி.ஏ படித்து விட்டு சும்மா இருந்த நேரம். 

"என் ஒண்ணுவிட்ட அண்ணன், மந்திரிக்கு பர்சனல் செக்ரட்டரியா இருக்கான்.  அவன்கிட்ட ஒரு வார்த்தை சொன்னாப் போதும்.  உடனே உனக்கு வேலை வாங்கிக் கொடுத்துடுவான்"னு சொல்லி அம்மாதான் என்னை இந்த வைத்தி மாமா வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.

என்னை ஒரு புழுவைப் போலப் பார்த்து, "என்ன படிச்சிருக்கே?" என்றார் மாமா.

"பி.ஏ"

"பி.ஏ படிச்சிட்டா பெரிய மேதாவின்னு நெனைப்பாஅந்தக் காலத்துல நாங்க படிச்ச எஸ்.எஸ்.எல்.சி.க்கு ஈடாகுமா ஒங்க பி.ஏஇந்தக் காலத்துப் பசங்க ஒடம்பு நோகாம யார் சிபாரிசுலயாவது வேலை கெடைக்காதானு அலையுதுங்க. தெனம் நாலு பேர் தங்களோட புள்ளைங்களை அழைச்சுக்கிட்டு சிபாரிசு கேட்டு வர்றானுங்க.  சரி. சரி.  ஒன்னோட
பயோ டேட்டாவைக் கொடுத்துட்டுப் போ.  பார்க்கிறேன்" என்றார் அலட்சியமாக.

ரோஷம் பொத்துக்கொண்டு வந்தது எனக்கு.  அதற்குப் பிறகு எப்படியெல்லாமோ கஷ்டப்பட்டுப் படித்து படிப்படியாக முன்னேறி இப்போது வங்கியில் பெரிய பொறுப்பில் இருக்கிறேன்.

இப்ப எந்த மூஞ்சை வைச்சுக்கிட்டு என்னைப் பார்க்க வந்தீங்கன்னு கேட்கணும்....வீடு வந்ததும் சிந்தனை தடைபட்டது.

"வாங்க மாமா, எப்படியிருக்கீங்க?" என்னையும் அறியாமல் வெளிவந்தன வார்த்தைகள்.

"ஏதோ இருக்கேம்பா.  ஒன் மாமி பூவும் பொட்டுமா மகராசியா போய்ச் சேர்ந்துட்டா.  நான் தான் தனியா கெடந்து தவிக்கிறேன்.  எத்தனை நாளைக்கு இப்படியிருந்து கஷ்டப்படணும்னு என் தலையில எழுதியிருக்கோ தெரியல.

பையனும் சரியில்லை.   பெண்டாட்டி பேச்சைக் கேட்டுக்கிட்டு என்னைக் கவனிக்கிறதில்லே.  வர வர கண்ணும் சரியாத் தெரிய மாட்டேங்குது.  ஆப்ரேஷன் பண்ணலாம்னா கொஞ்சம் பணம் கொறையுது.  அதான் ஒன்னைப் பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன்.  ஆயிரம் ரூபாய் கடனாக் கொடுத்தீன்னா, கொஞ்ச நாள்ல திருப்பிக் கொடுத்துடுவேன்" என்றார் மாமா கெஞ்சும் குரலில்.

என் மனதில் இருந்த ஆணவக்கார மாமாவுக்கும் இவருக்கும் துளியும் சம்பந்தமில்லாதது போல் தோன்றியது.

சட்டைப் பையிலிருந்து பணத்தை எடுத்து, "இந்தாங்க மாமா, கடனா வேணாம்.  நான் கொடுத்ததாவே இருக்கட்டும்" என்று சொல்லி ஆயிரம் ரூபாயை அவர் கையில் கொடுத்தேன்.

"ரொம்ப சந்தோஷம்பா. குணத்துல அப்படியே என் தங்கச்சியை உரிச்சி வைச்சிருக்கே.  பெண்டாட்டி புள்ளக்குட்டிகளோட நல்லா இருக்கணும்பா நீ"

முகம் மலர வாழ்த்தி விட்டு விடை பெற்றார் மாமா.

"நீங்க வந்தவுடனே சண்டை போட்டு அவரை வெளியே அனுப்பிடு வீங்களோன்னு பயந்துக்கிட்டிருந்தேன்.  நீங்க என்னடான்னா, அவரை வாய் நிறைய வாங்க மாமான்னு வரவேத்த தோடல்லாம, பணமும் கொடுத்தனுப்புறீங்க. உங்களைப் புரிஞ்சுக்கவே முடியல"

"வீட்டுக்கு வர்ற வரைக்கும் என்னென்னவோ கேட்கணும்னு நெனைச்சுக் கிட்டு தான் வந்தேன்.  ஆனா வீட்டுக்கு வந்தவங்க விரோதியா இருந்தாலும், வாங்கன்னு சொல்லணும்னு அம்மா அடிக்கடி சொல்லு வாங்க.  அந்தப் பழக்கத்துல வாங்க மாமான்னு சொல்லிட்டேன். 

உடம்பும் மனசும் தளர்ந்து போய் வந்திருக்கிற ஒரு முதியவர்கிட்டப் போய் பழசைக் குத்திக் கிளறி அவமானப் படுத்தறது  மனிதாபிமானம் இல்லன்னு தோணிச்சு. மேலும் அன்னிக்கு அவர் பேசின பேச்சு தான், எனக்குள்ள ரோஷத்தைக் கிளப்பி இந்தளவுக்கு என்னை முன்னேற வெச்சது. 

உழைப்பே உயர்வு தரும்னு போதிச்சதுக்கு நான் தந்த டியூஷன் பணம் தான் இந்த ஆயிரம் ரூபாய்,"  என்றேன் புன்னகையுடன். 



2 comments:

  1. எதிரியாயிருந்தாலும் வீடு தேடி வந்தவர்களை வரவேற்கிறதுதானே நம்முடைய பண்பாடு. அதிலும் முதுமைக்காலத்தில் வாழ்வதற்கும் ஆதாரமின்றி ஒருவர் வந்து நின்றால் மனம் இளகுவதுதான் நல்ல மனிதாபிமானமுள்ள மனிதருக்கு அழகு. ஆனால் எல்லாரும் அப்படிச் செய்வதில்லை என்பதே உண்மை. அவரால் உதாசீனப்படுத்தப்பட்டதை நினைவுபடுத்தி அவரை வருத்தாமல், உயர்ந்ததை மனத்தில் வைத்து அவருக்கு டியூஷன் ஃபீஸ் கொடுத்தது இந்தக் கதையின் சிறப்பு. நல்ல கதை. பாராட்டுகள்.

    ReplyDelete
  2. ஆழமான பின்னூட்டம் மனதைக் குளிர்விக்கிறது. பாராட்டுக்கு மிக்க நன்றி கீதா!

    ReplyDelete