நல்வரவு

வணக்கம் !

Thursday, 15 December 2011

தாய்மை


சுவரில் தொங்கும்
நாட்காட்டியின் பக்கங்களைத்
தினந்தினம் தூக்கிப் பார்த்து
தீபாவளி வரும்  நாளை
விரல் விட்டெண்ணி
ஆசையோடு எதிர்பார்த்த
காலமது...

பண்டிகைக்கு நாலு நாள் இருக்கையிலே.
பட்டாசும் துணியும் வாங்கப்
பக்கத்து ஊருக்குச் சென்ற அப்பா
எப்போ வருவாரென்று
இரவு பத்து மணிக்கு மேலும்
தூங்காமல் கண்விழித்துக்
காத்திருந்த நடுத்தம்பி.....
பூப்போட்ட புதுப்பாவாடை,
ரோசாப்பூ வண்ணத்தில்
நைலக்ஸ் தாவணியை
எதிர்பார்த்து நானும்.....

ஒருவழியாய் அப்பா வந்து
தாம் போய்வந்த கதை சொல்லி
வாங்கி வந்தவற்றை எடுத்துக்
கடை பரப்பிய போது….
ஆர்வக் கோளாறு காரணமாய்த்
தம்பி கொளுத்திப் பார்த்த
மத்தாப்புப் பொறியொன்று
சர வெடியின் மீது பட்டுப்.
படபட வென வெடிக்கத்
துவங்கியது பட்டாசு.

கண் மூடி கண் திறப்பதற்குள்
நிலைமையின் தீவிரமுணர்ந்து
வெடி மீது தம் கைகளை வைத்து
அம்மா அழுத்தி மூட
கைக்குள்ளேயே வெடித்து
உள்ளங்கை சதையை
ருசி பார்த்த திருப்தியோடு
பசியை அடக்கிக் கொண்டது
தீ நாக்கு!

வெந்த கையின்
வேதனை தாங்காமல்
அய்யோ! அம்மா! என அலறித்
துடித்த போதும்,
வலி பொறுக்க வழியின்றிக்
கண்ணீர் அருவியாகக்
கொட்டியபோதும்,
கொசுவலைக்குள் தூங்கும்
குழ்ந்தைகளைத்
தீயின் கோரப் பிடியிலிருந்து
காப்பாற்றியதை நினைத்து
நிம்மதிப் பெருமூச்சு விட்டார்,

தான் இறந்த பிறகு கூட
தன்னுடலை நெருப்பு சுடும் என்றஞ்சி
என்னுடலை எரிக்க வேண்டாம்,
புதைத்து விடுங்கள், என்று
சொல்லியிருந்த என் அம்மா!
.   

2 comments:

  1. கலையரசி,
    அந்தக் கடைசி வரிகளில், என் கண்களில் இருந்து வழிந்த இரண்டு சொட்டுக் கண்ணீர் சொல்லும், இந்தக் கவிதையின் தரம் என்னவென்று !

    ReplyDelete
  2. உங்களது மனம் நெகிழ்ந்த பாராட்டுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி குரு!

    ReplyDelete