நல்வரவு

வணக்கம் !

Thursday 15 December 2011

”தொட்டனைத்தூறும் மணற்கேணி”



சில மாதங்களுக்கு முன், ‘நடந்தது என்ன? என்ற நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தேன்.  அதில் ஒரு கிராமத்தி லிருந்த  பேய்க் கிணற்றைப் பற்றிச் சொன்னார்கள்.  அந்தக் கிராமத்தைச் சேர்ந்த சிலரிடம் பேட்டியும் எடுத்தார்கள்.

ஊரின் ஒதுக்குப் புறத்திலிருந்த அந்த பாழுங் கிணற்றைப் பல வருடங்களாக யாரும் பயன்படுத்துவதில்லை என்றும் அந்தப் பக்கமாய் வருகின்றவரைத் திடீரென்று அந்தக் கிணறு உள்ளே இழுத்துக் கொண்டு போய் விடும் என்றும் எல்லோரும் ஒரே மாதிரியாய்த் திரும்பத் திரும்பச் சொன்னார்கள்.  அந்த மாதிரி உள்ளே சென்று ஒன்றும் ஆகாமல் திரும்பவும் வெளியே வந்தவரிடமும் தொலைக்காட்சி நிறுவனத்தைச் சேர்ந்தவர் பேட்டி எடுத்தார். 

தான் எப்படி உள்ளே போனேன் என்பதே தமக்குத் தெரிய வில்லை என்று அவர் சொன்னார். 
“உச்சி வேளையில் ஒரு நாள் கிணத்துப் பக்கமா வந்துக்கிட்டிருந்தேன்.  அதான் தெரியும்.  திடீர்னு பார்த்தா கிடு கிடுன்னு கிணத்துக்குள்ளே போய்க்கிட்டிருக்கேன்.  கிணத்துல உள்ள சுவத்து ஓரத்துல போய் நின்ன பொறகு தான் எனக்கு சுய நினைவு வந்துச்சி.  அப்புறம் மெல்ல ஏறி வந்தேன்.

பேட்டியில் இது வரை பலர் அப்படி உள்ளே போய் வந்திருந் தாலும்  அவர்கள் யாருக்கும் கேணியின் உள்ளே இருந்த பூதத்தால் எந்தக் கெடுதலும் நடந்ததில்லை என்றும் பேட்டியில் தெரிவிக்கப்பட்டது.

அதற்குப் பிறகு பேட்டி எடுத்தவர், தீயணைப்பு படையினரை அழைத்து வந்தார்.  கிராமத்தினர் அக்கிணற்றைச் சுற்றி நின்று வேடிக்கை பார்க்க, தீயணைப்புப் படையினர் ஏணியின் உதவியோடு உள்ளே இறங்கினார்கள்.  பல ஆண்டுகளாய் புழங்காமல் இருந்ததால் கேணியின் தண்ணீர் முழுக்க அழுகிய இலைகளும் தழைகளும் நிறைந்து மாசடைந்து காணப்பட்டது.  நீரில் சாரைப் பாம்புகள் பல நீந்திக் கொண்டிருந்தன. பேயுமில்லை, பிசாசுமில்லை என்று பேட்டி எடுத்தவரின் விளக்கத்துடன் இந்த நிகழ்ச்சி முடிவடைந்தது.

மக்கள் கண் முன்னே தீயணைப்பு படையினரைக் கொண்டு வந்து அவர்களை இறங்கச் செய்து, அக்கேணியைப் பற்றிய மக்களின் பயத்தையும் மூடநம்பிக்கையையும் தகர்த்தெறிந்த விஜய் தொலைக் காட்சிக்கு ஓர் ஓ போடலாம்.

அந்தக் காலத்தில் எங்கள் வீட்டில் ஒரு கிணறு இருந்தது.  அதன் தண்ணீர் கண்ணாடி போல் அவ்வளவு தூய்மையாகவும் பளிச்சென்றும் இருக்கும். இளநீர் போல நல்ல ருசியும் கூட!

   கோடை காலத்தில் சுட்டெரிக்கும் வெயிலில் ஜில்லென்ற அந்தத் தண்ணீரில் குளிப்பது மகா ஆனந்தம்.  கோடை காலத்தில் குழாய்த் தண்ணீர் கொதித்துப் போய் ஆவி பறக்க, கிணற்றுத் தண்ணீரோ ஜில்லென்று உடலுக்குப் புத்துணர்ச்சியைக் கொடுக்கும்.  குளிர் காலத்திலோ குழாயில் வரும் நீர் ஐஸ் கட்டி போல் இருக்கும் போது, கிணற்று நீரோ வெது வெதுப்பாக உடலுக்கு இதமாக இருக்கும். 

எங்கள் வீட்டுக்கிணறு வற்றி யாரும் பார்த்ததில்லையாம்.  அந்த ஏரியாவில் தண்ணீர்ப் பிரச்சினை வந்து சுற்றியிருந்த கிணறுகள் வறண்ட போது கூட இந்த்க் கிணறு வற்ற வில்லையாம்.  அந்தச் சமயங்களில் அக்கம்பக்கத்தார் இங்கு தான் வந்து தண்ணீர் எடுத்துப் போவார்களாம். இதெல்லாம் என் அம்மா எனக்குச் சொன்னவை.  மண்ணின் நிலவளம், நீர்வளம் பற்றி எதுவும் படித்தறியாத  அந்தக் காலத்தில் வற்றாத ஊற்று சுரக்கும் இடத்தைச் சரியாகக் கணித்து இந்தக் கிணற்றைத் தோண்டிய வர்களின் அறிவை நினைத்து நான் வியந்திருக்கிறேன்.  

அந்தக் கிணற்றில் எங்கள் வீட்டு வேலைக்காரி ஒருத்தி ஒருமுறை விழுந்து விட்டாள்.  கிணறு மிகவும் ஆழம். மேலும் யாருக்கும் நீச்சல் தெரியாது. எனவே யாரும் இறங்கி அவளைக் காப்பாற்றுவதென்பது இயலாத காரியம்.  ஆனால் நல்லவேளையாக,  சகடையில் மாட்டி யிருந்த கயிற்றோடு அவள் உள்ளே போய் விழுந்ததோடு,  மிகவும் கெட்டியாக கயிற்றையும்  பிடித்திருந்ததால் தப்பித்தாள்.  இரண்டு மூன்று பேராக கயிற்றை இழுத்து மெதுவாக அவளை வெளியே கொண்டு வந்து விட்டார்கள்.  வாளியில் மாட்டியிருந்த அந்தக் கயிறு அப்போது தான் புதிதாக வாங்கப்பட்டது என்பதால் அவளது உடல் எடையைத் தாங்கும் அளவிற்கு அது உறுதியாயிருந்தது.  பழசாக நைந்த நிலையில் அது இருந்திருக்குமேயானால் அவள் உயிர் பிழைத்திருக்க முடியுமா என்பது சந்தேகம் தான். 

அவள் விழுந்த செய்தியை நான் அறிந்திருந்த காரணத்தால், ஒவ்வொரு முறை கிணற்றிலிருந்து தண்ணீர் இறைக்கும் போது மிகவும் ஜாக்கிரதையாகத் தான் இறைப்பேன். ஆனால் அவ்வப்போது வாளி கயிற்றிலிருந்து அறுந்து கொண்டு கிணற்றுக்குள் விழுந்து விடும்.  அதை எடுத்துத்  தருவது அப்பாவின் வேலை.

பாதாளக் கரண்டியை கிணற்றுக்குள் விட்டுத் துழாவி வாளியைக் கண்டுபிடித்து எடுப்பது மிகவும் மெனக்கெட்ட வேலை.  கேணி மிகவும் ஆழம் என்பதால் உள்ளே விழுந்து விட்ட பொருட்களை எடுப்பதற்கு மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும்.

பாதாளக் கரண்டி மூலம் கிணற்றில் விழுந்து விட்ட வாளியைத் தேடிக் கொண்டிருக்கும் அப்பா, திடீரென்று கூவுவார்:-

”கண்டுபிடிச்சிட்டேன்.  கண்டுபிடிச்சிட்டேன்.  வாளி எங்கேயிருக்குன்னு தெரிஞ்சிடுச்சி

எங்கே? எங்கே? என்று ஆர்வமுடன் கேட்டுக் கொண்டே நாங்கள் ஓடி வந்து கேணியை எட்டிப் பார்ப்போம்.

வாளி இந்தக் கிண்த்துக்குள்ள தான் இருக்குன்னு கண்டுபிடிச்சிட்டேன் 
சிரிக்காமல் அப்பா சொல்வதைக் கேட்டு அசடு வழியச் சிரிப்போம்.

பிறந்தது முதல் தண்ணீர்க் கஷ்டம் என்றால் என்னவென்று தெரியாமல் வளர்ந்த நான் சென்னையில் பணியாற்ற சென்று ஒரு ஹாஸ்டலில் தங்கியிருந்த போது தான் தண்ணீரின் அருமை எனக்குப் புரிந்தது. 

குளியல் அறைக்கு வெளியில் உள்ள குழாயில் தான் தண்ணீர் வரும்.  நம்முடைய வாளியை எடுத்து வந்து ஒரே ஒரு வாளி மட்டும் நீர் பிடித்துக் கொள்ள வேண்டும்.  வார்டன் அங்கு உட்கார்ந்திருப்பார்.  தலை குளிக்க வேண்டும் என்றால் பெரிய மனது பண்ணி இரண்டு வாளிகள் பிடித்துக் கொள்ள அனுமதிப்பார்கள். தலை குளிப்பதென்றால் கிணற்றி லிருந்து அண்டா, அண்டாவாக நீர் நிரப்பிக் குளித்த எனக்கு இது மிகுந்த கஷ்டத்தைக் கொடுத்தது.  அந்த நீரும் செம்மண் நிறத்தில் கலங்கலாக இருக்கும். எனக்கு ஏன் தான் குளிக்கிறோமோ என்றிருக்கும். 

விடுமுறை நாட்களில் எப்போதடா ஊருக்குப் போவோம்; அண்டா நிறைய சுத்தமான நீர் நிரப்பி ஆசை தீரக் குளிப்போம் என்று மனது அலைபாயும்.  அந்த வீட்டையும் ஊரையும் விட்டு வெளியூருக்கு மாற்றலாகி வந்து சில ஆண்டுகள் கழிந்து விட்டன.  அந்த வீட்டை வாங்கியவர் அதை இடித்து விட்டுத் திருமண மண்டபமாகக் கட்டிவிட்டார். 

ஒரு முறை அந்த மண்டபத்தில் நடந்த திருமணத்துக்குப் போகும் வாய்ப்புக் கிடைத்தது. பழைய வீட்டின் நினைவுகளைச் சுமந்தபடி அங்குப் போன நான், புதுக்கட்டிடத்தின் ஒவ்வொரு இடமாகப் பார்த்துக் கொண்டே வந்தேன்.

இங்கு தான் எங்கள் கூடம் இருந்தது.  அது தாழ்வாரம்.  இதோ இங்கு தான் என் மேஜை இருக்கும்.  அதோ அங்கு தான் தம்பி உட்கார்ந்து படிப்பான், பக்கத்தில் கீழே உட்கார்ந்தபடி கணக்கு மேஜையில் தங்கை எழுதுவாள்.  இங்கு தான் நானும் அம்மாவும் படுத்துக் கொள்வோம்.  அந்த இடத்தில் அப்பா படுத்துறங்கும் பலகை கிடக்கும்.  இந்த இடத்தில் அல்மாரி இருந்தது.  அதோ அது  சமையலறை... இவ்வாறு என் பழைய வீட்டில் நான் பழகிய இடங்கள், புழங்கிய இடங்கள் அங்குல அங்குலமாக என் மனக்கண்ணில் வலம் வரத் தொடங்கின.  


எல்லாவற்றையும் மனதுக்குள் அசை போட்டபடி எல்லோரும்  திருமண நிகழ்ச்சியைக் கண்டு கொண்டிருக்க, நான் மட்டும் மெதுவாக பின்கட்டுக்கு நடையைக் கட்டினேன்.  அங்கு தானே என் மனதுக்கினிய கிணற்றடி இருக்கிறது!

ஆனால் அந்தோ, நான் அங்குப் போய் கேணியைத் தேடிக்கொண்டிருந்தேன்.  எங்கும் அதனைக் காணவில்லை.  இங்கு தான் இருக்க வேண்டும் என்று நான் மனதுக்குள் கணக்குப் போட்டதைக் கவனித்த ஒருவர், என்னம்மா, என்ன தேடுறீங்க? என்றார்.

இல்லை; ஒன்றுமில்லை; இந்த இடத்தில் ஒரு கிணறு இருந்ததே...

அதுவாம்மா?  அதைத் துத்துட்டாங்கம்மா.  அது மேல தான் இந்த அறையைக் கட்டியிருக்காங்க.  கிணத்து மேல தான் நீங்க இப்ப நிற்கிறீங்க.

அவ்வளவு அருமையான இளநீர் போன்ற ருசியுடன் தண்ணீர் அளித்த வற்றாத ஊற்றைத் தூர்த்து விட்டார்கள் என்ற உண்மையை அறிந்த போது  எனக்கு மனசு கனத்தது.  கிணற்றின் கல்லறையின் மீதா நான் நிற்கிறேன்?.  என்னையும் அறியாமல் ஒரு சொட்டுக் கண்ணீர் கன்னத்தினூடே வழிந்தோடி கிணற்றின் சமாதியில் விழுந்தது.


இந்த மாதிரி கிணறுகளை மட்டுமின்றி, கோடையில் தண்ணீர் தேவையைச் சமாளிப்பதற்காக அக்காலத்தில் மிகவும் கஷ்டப்பட்டு ஏற்படுத்தி வைத்த குளங்கள், குட்டைகள் போன்ற நீர்நிலைகளை மனிதன் தூர்த்துக் கட்டிடங்களைக் கட்டிக் கொண்டிருக்கிறான்.  தனியார் லாரிகள் பெரும் அளவில் நதியின் மணலைக் கொள்ளை யடிப்பதால் ஆற்றின் ஊற்றுக்கள் முற்றிலுமாகத் தூர்ந்து போகும் ஆபத்திருக்கிறதாம்.  உலக வெப்பமயமாயதலின் காரணமாக இன்னும் ஐம்பது ஆண்டுகளில் கடுமையான தண்ணீர்ப் பஞ்சம் ஏற்படும் என்று வேறு அச்சுறுத்திக் கொண்டிருக்கிறார்கள். 
.
இப்போதாவது மனிதன் விழித்துக் கொண்டு மிஞ்சி இருக்கும் நீர் நிலைகளைக் காப்பாற்றுவதோடு மழை நீர் சேகரிப்பிலும்  இறங்கினால் வர இருக்கும் தண்ணீர்ப் பஞ்சம் எனும் ஆபத்தை முற்றிலுமாகத் தடுக்க முடியாவிட்டாலும், இன்னும் சில ஆண்டுகளுக்குத் ஒத்திப் போடும் வாய்ப்பு கிடைக்கக் கூடும். 

ற்று மணலை
ஏற்றிச் செல்லும் லாரியிலிருந்து
வழிகிறது நதியின் கண்ணீர்..             (திருவை குமரன்) 

(4/04/2011 நிலாச்சாரலில் எழுதியது)

No comments:

Post a Comment