நல்வரவு

வணக்கம் !

Wednesday 15 February 2012

கொலுசு - சிறுகதை

முதன்முதலில் வேலையில் சேர்ந்த போது எனக்குப் பிடித்த கொலுசு வாங்கிப் பரிசளித்தார் அம்மா.

அலுவலகத்தில் உமா எனக்கு நெருங்கியத் தோழியானாள், தன் குடும்பப் பிரச்சினைகளை ஒளிவு மறைவின்றி என்னிடம் பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு.

அவளுடைய அப்பா ஓர் உதவாக்கரை.  மூன்று குழந்தைகளுடன் அவளது அம்மாவை விட்டுவிட்டு எங்கோ போய்விட்டார்.  இவள் தான் மூத்தவள்.  தங்களைப் படிக்க வைக்க, வளர்த்து ஆளாக்கத் தன் அம்மா பட்ட
கஷ்டங்களை அவள் விவரிக்கும் போது வேதனையாயிருக்கும்.

தன் குடும்ப நிலைமையுணர்ந்து கஷ்டப்பட்டுப் படித்து இப்போது கிளார்க் வேலைக்குப் பயிற்சியாளராகச் செர்ந்திருக்கிறாள் உமா.

"இனிமே எங்க வீட்டுக்கு விடிவு காலம் தான்.  இப்பக் கிடைக்கிற உதவித் தொகை ரொம்பக்கம்மி தான் என்றாலும் ஒரு வருஷம் முடிஞ்சி வேலையில சேர்றப்ப, நல்ல சம்பளம் கிடைக்கும்.  அதற்கப்புறம் அம்மாவைக் கஷ்டப்பட விடமாட்டேன்.  ராணி மாதிரி வச்சுக்குவேன்."  சொல்லும் போதே அவள் கண்கள் கலங்கும்.

'இவளல்லவோ பெண்!' மனதிற்குள் மெச்சிவேன்.

ஒரு நாள் அம்மா வாங்கிக் கொடுத்த கொலுசை நான் அணிந்து சென்ற போது,
"கொலுசு ரொம்ப அழகாயிருக்கு.  அழகான ஒன் கால்கள்ல இருக்கிறதினால, அதுக்கு ரொம்பவே மெருகு கூடியிருக்கு" என்றாள் உமா.

"போதும், போதும் புகழ்ந்தது.  கொலுசை யார் போட்டாலும் நல்லாத் தான் இருக்கும்.  ஏன் நீ வேணா போட்டுப் பாரேன்" என்று கழற்றக் குனிந்தேன்.

"அய்யய்யோ, வேண்டாம், வேண்டாம்," என் கைகளைப் பிடித்துத் தடுத்தாலும் போட்டுப் பார்க்க வேண்டும் என்ற ஆசை அவளுக்கு இருப்பதை முகக்குறிப்பு வெளிப்படுத்தியது.  அவளும் பெண் தானே!

கொலுசு வாங்கி அணிய முடியாத நிலையில் அவளிருக்கும் போது, நான் போட்டுக் கொண்டு போயிருக்கக் கூடாது என்று எனக்குள் குற்றவுணர்ச்சி.

"இன்னிக்கு மட்டும் போட்டுக்கோ.  சாயங்காலம் வீட்டுக்குப் போறப்ப வாங்கிக்கிறேன்"

மிகுந்த தயக்கத்துக்குப் பிறகு அணிந்து கொண்டாலும், அதனால் அவளுக்கேற்பட்ட மகிழ்ச்சியை என்னால் உணர முடிந்தது.  ஜல் ஜல் என்ற சப்தத்தைக் கேட்க வேண்டும் என்பதற்காகவே அவள் குறுக்கும்நெடுக்கு மாகத் தேவையின்றி நடப்பதாக எனக்குத் தோன்றியது.

அலுவலகம் முடிந்து மாலை இருவரும் பேருந்து நிறுத்தத்திற்கு நடந்து வரும் போது, திடீரென்று உமா கத்தினாள்.

"அய்யய்யோ! ஒரு கொலுசைக் காணோம்"

பகீரென்றது எனக்கு.  அவளது ஒரு கால் வெறுமையாயிருந்தது.  வந்த வழியே திரும்பிப் போய்த் தேடிப்பார்த்தோம்.  கொலுசு கிடைக்கவேவில்லை. 

குற்றவுணர்ச்சி தாங்காமல் வழியெல்லாம் அழுது கொண்டே வந்தாள் உமா. 

"அழாதே உமா.  கொலுசு காணாமப் போறது சகஜம் தான்.  உன்னை வற்புறுத்திப் போட்டுக்கச் சொன்னது நான் தான்.  இதுல உன் தப்பு எதுவுமில்லை".

மேலுக்கு அவளிடம் சமாதானம் சொன்னாலும் அம்மாவிடம் வாங்கப் போகும் வசவை எண்ணி மனம் சஞ்சலப்பட்டது.

ஒரு கொலுசை வாங்கி கைப்பைக்குள் வைத்து விட்டு வீட்டுக்குத் திரும்பினேன்.  வீட்டுக்குள் நுழைந்தவுடன் அம்மா கேட்ட முதல் கேள்வி:

"காலையில போட்டுட்டுப் போன கொலுசு என்னாச்சு? சத்தத்தையே காணோம்?"

கொலுசைத் தொலைத்து விட்டதாகச் சொன்னேன்.  அம்மாவுக்கோ ஆத்திரமான ஆத்திரம்.

"எத்தனை கடை ஏறி இறங்கிப் பார்த்துப் பார்த்து வாங்கினேன்.  சரியான தெம்மாடி.  கால்ல இருந்து ஒரு கொலுசு கழண்டு விழறது கூடவா, ஒரு பொண்ணுக்குத் தெரியாது?  ஒரு பைசாவுக்குக் கூட உருப்பட மாட்டே.  காசோட அருமை தெரிஞ்சிருந்தா, அவ்ளோ அலட்சியமா இருந்திருப்பியா?"

அம்மா அன்று முழுக்கத் திட்டிக் கொண்டே இருந்தார்.

உண்மையைச் சொன்னால், அவளிடமிருந்து அதற்குரிய பணத்தை அம்மா வாங்கி வரச் சொல்லிவிடுவாரோ  என்ற பயத்தில், கடைசி வரை உமா தான் கொலுசைத் தொலைத்தாள் என்று நான் சொல்லவேயில்லை.   


(தினமணிக் கதிரில் ஒரு பக்கக் கதையாக எழுதியது)


 
     

7 comments:

  1. நல்ல நட்பும், மனித நேயமும் இங்கு தாயிடமும் பொய் சொல்லத் தூண்டுகிறது. பொய்மையும் வாய்மையிடத்து யார்க்கும் புரைதீர்த்த நன்மை பயக்குமெனின் என்னும் குறளை நினைவுபடுத்தும் அழகிய கதை. தினமணிக்கதிரில் வெளியானதற்குப் பாராட்டு அக்கா.

    ReplyDelete
  2. வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி கீதா.

    ReplyDelete
  3. நல்ல கதை.கமெண்ட் தரும்போது வரும் word verification ஐ நீக்குங்கள்.சிரமமாக உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிகுந்த நன்றி ஆச்சி. நீங்கள் சொல்லியிருக்கும் word verification நீக்க ஆவன செய்கிறேன்.

      Delete
  4. நட்ப்புப்பூ அருமையாய் மலர்ந்திருக்கிறது கதையாக.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி மேடம்.

      Delete