கடந்த வாரம் சென்னை பள்ளியொன்றில் ஆசிரியை உமா மகேஸ்வரி வகுப்பறைக்குள் தம்
மாணவன் ஒருவனால் கொல்லப்பட்ட சம்பவம், தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியலையை
ஏற்படுத்தியது.
தினமணி நாளிதழில் மாணவன் ஆசிரியையைக் குத்தி விட்டுக் கழிவறைக்குள் போய்ப்
புகுந்து கொண்டான் எனவும், மாணவர்களும் ஆசிரியர்களும் சேர்ந்து அவனைப்
பிடித்தார்கள் என்றும் செய்தி வெளியாகியிருந்தது.
ஜூனியர் விகடனிலோ, அவன் குத்தி விட்டு எங்கும் தப்பித்து ஓடாமல்,
பெஞ்சிலேயே தலை கவிந்தபடி அமர்ந்திருந்தான் என்றிருந்தது.
பத்தாம் வகுப்புக்குப் பாடம் எடுக்கச் சென்ற ஆசிரியையைத் தொடர்ந்து சென்று
மாணவன் குத்தினான் என்றும், கொலையுண்டவரின்
அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த மாணவர்கள், கையில் கத்தியுடன் நின்ற சகமாணவனைப்
பார்த்துப் பள்ளி முதல்வருக்குத் தகவல் தெரிவித்தார்கள் என்றும் தினமலர் தெரிவிக்கிறது.
தமிழகத்தில், அதுவும் தலைநகர் சென்னையில் நடந்த ஒரு சம்பவம், ஒவ்வொரு பத்திரிக்கையிலும்
ஒவ்வொரு விதமாய்! ஏன் இப்படி? எது சரியான தகவல்?
அமெரிக்கப் பள்ளிகளில் மாணவர்கள் தம் ஆசிரியரை, சக மாணவர் களைத் துப்பாக்கியால்
சகட்டு மேனிக்குச் சுட்டுக் கொன்ற சம்பவங்கள் பல நடந்திருக்கின்றன. ஆனால் ’மாதா,
பிதா, குரு தெய்வம்,’ என்று ஆசிரியரைத்
தெய்வத்துக்குச் சமானமாய்க் கருதும் தமிழகத்தில், இப்படியொரு கொலைவெறிச் சம்பவம்
எனும்போது மனம் பதைக்கிறது.
தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்திருப்பது ப்ற்றியும், பள்ளி வருகை நாட்கள்
குறைந்தது பற்றியும் ஆசிரியை புகார் செய்ததால், ஆத்திர மடைந்த மாணவன் இக்கொலையைச்
செய்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன
தந்தையிடம் தன்னைப் பற்றிப் புகார் செய்த ஆசிரியை மீது கோபம் வரலாம்; வருத்தம்
வரலாம். ஆனால் கொலை செய்யும் அளவுக்கு வெறி வருகிறது என்றால்? நினைக்கவே பயமாயிருக்கிறது. நம் மாணவச் சமுதாயம் எங்கே போகிறது? அவர்களைச் சரியான பாதையில் வழி நடத்தத் தவறி
விட்டோமா நாம்?
15 வய்தே நிரம்பிய இம்மாணவன், திட்டமிட்டுக் கத்தியை மறைத்து எடுத்து
வந்திருந்தாலும், அதை முதன் முதலில் கையாளும் போது அவன் கைகளில் நடுக்கமோ, ஆசிரியையைப் பார்த்துப் பதற்றமோ
ஏற்படுமல்லவா?. ஆனால் இவனோ தேர்ச்சிப்
பெற்ற கொலைகாரன் போல, அவரது கழுத்து, வயிறு எனப் பலமுறை ஆக்ரோஷ்மாய்க் குத்தி, மருத்துவமனைக்குக் கொண்டு
செல்லும் வழியிலேயே, இறக்கும்படி பண்ணியிருக்கிறான்.
’அக்னி பாத்,’ என்ற இந்திப் படத்தைப் பார்த்துக் கொலை பண்ணத்
தெரிந்து கொண்டதாகக் கூறியிருக்கிறான் அவன். நம் திரைப்படங்களும், மீடியாக்களும் சமுதாய
நலன் கருதி, கொஞ்சம் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வதன் அவசியத்தை இப்போதாவது உணர
வேண்டும்.
இக்காலத்தில் பெரும்பாலான திரைப்படங்களில் அரிவாளால் எதிரிகளைக்
கண்டந்துண்டமாக வெட்டித் துவம்சம் செய்பவனாகத் தான் கதாநாயகன்
சித்திரிக்கப்படுகிறான். அது தான்
ஹீரோயிசமாகக் கருதப்படுகிறது. கிளைமாக்சில்
எதிரியின் குரல்வளையை அறுத்து, அவன் இரத்தத்தைக் குடிப்பது போன்று தத்ரூபமாக காட்டப்படும்
காட்சி, பிரமாதம் என விமர்சனத்தில் பாராட்டப்படுகிறது.
பழிக்குப் பழி, இரத்தத்துக்கு இரத்தம் என வீர வசனத்துடன் கூடிய இரத்தந்
தோய்ந்த காட்சிகளைப் பார்த்துப் பார்த்து நம் பிஞ்சுகளுக்கு இயற்கையாக இருக்கக்
கூடிய மென்மையான உணர்வு மரத்துப் போய், வக்கிர உணர்வு மிகுந்து விட்டது. அதனால்
தான் இக்காலத்தில் குழந்தைகளுக்குக் கொலை என்பது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாத,
மிகவும் சாதாரண ஒரு நிகழ்வாகிவிட்டது.
கல்வி, மருத்துவம் உட்பட எல்லாமே வணிகமயமாகி விட்ட இன்றைய சூழலில், பொருளீட்டுவது
மட்டுமே கல்வியின் குறிக்கோளாகக் கருதப்படுகிறது.
இதன் காரணமாக பெரும்பாலான தனியார் பள்ளிகள், மாணவர்களை நாட்முழுக்க
படிப்பு, தேர்வு என ’டிரில்’ வாங்கி மதிப்பெண் வாங்க வைப்பதை மட்டுமே தம் இலக்காகக்
கொண்டு அதிக லாபம் ஈட்டுகின்றன.. இப்பள்ளிகளில் தம்
பிள்ளைகளைச் சேர்க்கப் பெற்றோர் தவமாய் தவமிருக்கிறார்கள்.
மனித நேயம், குழுவாக இணைந்து செயல்படுதல், நேர்மை, நாணயம், வாக்குத்
தவறாமை, நேர் வழியில் பணம் சம்பாதித்தல் உள்ளிட்ட நற்பண்புகள் பலவற்றைக் கற்றுக்
கொடுக்க வேண்டிய பொறுப்பு பள்ளிகளுக்கு உள்ளது.
இது போன்ற நன்னெறிகளையும் நற்பண்புகளையும் போதிக்கக் கூடிய பாடங்களை நம் கல்வித் திட்டத்தில் சேர்த்து இவற்றைச் சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு மனதில் பதியும்படி போதித்து நாட்டுப்பற்று மிக்க சிறந்த குடிமக்களை உருவாக்குவது கல்வியின் முக்கிய நோக்கமாக இருத்தல் வேண்டும். அதிக மதிப்பெண் வாங்க வைப்பது மட்டுமே கல்வியின் குறிக்கோள் என்றால், அதற்கு ’டியூஷன் சென்டர்’ போதும், கல்விக்கூடங்கள் தேவையில்லை!
இது போன்ற நன்னெறிகளையும் நற்பண்புகளையும் போதிக்கக் கூடிய பாடங்களை நம் கல்வித் திட்டத்தில் சேர்த்து இவற்றைச் சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு மனதில் பதியும்படி போதித்து நாட்டுப்பற்று மிக்க சிறந்த குடிமக்களை உருவாக்குவது கல்வியின் முக்கிய நோக்கமாக இருத்தல் வேண்டும். அதிக மதிப்பெண் வாங்க வைப்பது மட்டுமே கல்வியின் குறிக்கோள் என்றால், அதற்கு ’டியூஷன் சென்டர்’ போதும், கல்விக்கூடங்கள் தேவையில்லை!
அளவுக்கதிகமாக செல்லங் கொடுத்துப் பிள்ளைகளைச் சீரழிக்காமல், கண்டிக்க
வேண்டிய நேரத்தில் கண்டித்து, பாசம் காட்ட வேண்டிய நேரத்தில் பாசம் காட்டி, ஒழுக்க
சீலராக வளர்க்க வேண்டிய பொறுப்பு பெற்றோரைச் சார்ந்தது.
சிறு வயது முதலே அவர்களது நண்பர்களைக் கவனிக்க வேண்டியது மிகவும் அவசியம். ’உன் நண்பனைக் காட்டு; உன்னைப் பற்றிச் சொல்கிறேன்,’ என்று சொல்வார்கள்
அல்லவா? சிகரெட், மது, போதை போன்ற கெட்ட
பழக்கங்களைக் கற்றுக் கொள்ளக் காரணமாக இருப்பது தீய நட்பு தான். சேர்க்கை சரியாக இருந்தால், பிள்ளைகள் தடம் மாறிப் போகும்
அபாயம் மிகவும் குறைவு.
தம் ஆசைகளைக் குழந்தைகள் தலையில் திணிக்காமல், ஆசைப்படும் துறையில்
அவர்களைப் படிக்க அனுமதித்தால் அந்தத் துறையில் அவர்கள் பிரகாசிக்க
வாய்ப்புண்டு. குழந்தைகள் கேட்கும்
பொருட்கள் அனைத்தையும் உடனுக்குடன் வாங்கித் தராமல், பணத்தின் அருமையை, குடும்பச்
சூழ்நிலையை, அவர்களுக்குத் தெரிவிக்க
வேண்டியது பெற்றோரின் கடமை.
சிறு இழப்புக்களை, ஏமாற்றத்தைத் தாங்கும் சக்தி இளம்வயதிலேயே அவர்களுக்குத்
தேவை. இல்லையேல் பின்னாளில் எந்தவொரு சிறு ஏமாற்றத்தையும் தாங்க, மனதில் வலுவின்றி
தற்கொலையையோ, போதைப் பொருளையோ அவர்கள் நாடக் கூடும். .
தொலைக்காட்சி, இணையம், அலைபேசி என மாணவனுக்கிருக்கும் கவனச்சிதறலின் காரணமாக
ஆசிரியப்பணி முன்னெப்போதையும் விட, இப்போது மிகவும் சிக்கலாகி யிருக்கிறது. உமா
மகேஸ்வரி மிகவும் அர்ப்பணிப்பு உணர்வோடு தம் பணியைச் செய்து வந்ததாக, பள்ளி
நிர்வாகத்தினரும் பெற்றோரும் பேட்டியில் கூறியிருக்கின்றனர்.
சரிவரப் பள்ளிக்கு வராத, படிப்பில் அக்கறையில்லாத மாணவன், ’எக்கேடு கெட்டுப் போனால் நமக்கென்ன?’ என்று இருந்து விடாமல், அவனைத் திருத்தி நல்வழிக்குக்
கொண்டு வரவேண்டும் என்ற உயர்ந்த எண்ணம், அவரது உயிரைக் குடித்து விட்டது தான், சோகத்திலும்
பெரிய சோகம்!
வகுப்பறையில் மாணவனால் ஆசிரியை கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில், இதுவே
முதலாவதாக இருக்கக்கூடும்.
இந்த நிகழ்வு நம் கல்விமுறைக்கும், பெருகி வரும் மாணவச் சமுதாயத்தின் ஒழுக்கச்
சீர்கேட்டுக்கும், பிள்ளைகளின் ஒழுக்கத்தை விட மதிப்பெண்ணுக்கு முக்கியத்துவம்
கொடுக்கும் பெற்றோருக்கும், ஊடகத் தர்மத்தைக் காற்றில் பறக்கவிடும் மீடியாக்களின்
அத்துமீறலுக்கும், நம் பண்பாட்டை மறந்து, மேற்குக் கலாச்சாரத்தை ’ஈயடிச்சான் காப்பி’ யடிக்கும் ஒட்டு மொத்த தமிழ்ச் சமுதாயத்துக்கும் எதிராக அடிக்கப் பட்டிருக்கும்
ஓர் எச்சரிக்கை மணி!
இப்படியான நிகழ்வுகளுக்கு அந்த மாணவனோ ஆசியரோ பொறுப்பல்ல.பலபேர் சேர்ந்த சமூகமே பொறுப்பேற்கவேண்டும் !
ReplyDeleteசரியாய்ச் சொன்னீர்கள் ஹேமா! ஒட்டு மொத்த சமூகமே பொறுப்பேற்க வேண்டும். உங்களது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஹேமா!
Deleteஎன்னைப்பொருத்த வரையில்
ReplyDeleteபெற்றோர்களுக்குத் தான் இதில் முக்கிய பங்கு
சிறு தளிராய் இருக்கையில்
சரியாய் வளர்ந்தால்
சுற்றுப்புறமும் அதன் வளர்ச்சிக்கு உதவும்...
ஆம் மகேந்திரன் சார். ’எந்தப்பிள்ளையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே, அது நல்லவனாவாவதும் தீயவன் ஆவதும் அன்னை வளர்ப்பதிலே’ என்பது நூற்றுக்கு நூறு சரி.
Deleteதங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.
சரியான நேரத்தில் சரியான எச்சரிக்கைமணி. தாங்கள் இங்குக் குறிப்பிட்டுள்ள பல விஷயங்களோடு என் எண்ணங்களும் ஒத்துப்போவதை எண்ணி வியக்கிறேன். இளைய தலைமுறையினரை உருவாக்கும் பெரும் பொறுப்பில் இருக்கும் ஊடகங்களும், பெற்றோரும், ஆசிரியர்களும் பள்ளிகளும், கல்வித்துறையும், மொத்தத்தில் சமுதாய நலனில் அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் கவனத்தில் கொள்ளவேண்டிய முக்கிய விஷயங்களைப் பகிர்ந்துள்ளதற்கு நன்றி அக்கா.
ReplyDeleteநாமிருவரும் ஒரே மாதிரி சிந்திக்கிறோம் கீதா. அதனால் தான் இருவருக்கும் எண்ணங்கள் ஒத்துப் போகின்றன. கருத்துக்கு மிக்க நன்றி கீதா!
Deleteஇந்த நிகழ்வு ஜீரணிக்க முடியாததாக உள்ளது.நானும் பெற்றோரே முக்கிய காரணம் பின்னரே சமூகம் என்பேன்.
ReplyDeleteபிள்ளைகளை வளர்ப்பது ஊற்றுத் தண்ணீராகவே உள்ளது.
ஆம் ஆச்சி. இந்தக் கொலை என்னை மிகவும் பாதித்தது. உங்களது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
Deleteஹரியானாவில் நிகழ்ந்த சம்பவம் கேள்விப்பட்டீர்களா? டிசம்பர் 23 வாக்கில் ஒரு பள்ளியில் ஆறு வயது சிறுவன் ஒருவன் வீட்டுப்பாடம் செய்யாதக் காரணத்தால் ஆசிரியர் அவனைத் தனியறைக்குள் தள்ளிப் பூட்ட, மன அதிர்வுக்காளாகி மருத்துவமனையில் இருந்த அவன் நேற்று இறந்துவிட்டானாம். கல்விமுறையின் அழுத்தம் ஆறு வயதுக் குழந்தையையும் விட்டுவைக்கவில்லை என்பதை நினைக்கையில் மிகவும் வேதனையாக உள்ளது.
ReplyDeleteஆமாம் கீதா.செய்தி கேள்விப்பட்டபோது மிகவும் வருத்தமாயிருந்தது. ஒரு பக்கம் ஆசிரியர் கொலை, இன்னொரு பக்கம் மாணவன் சாவு.. நம் கல்விகூடங்களில் என்று முடிவுக்கு வரும் இது போன்ற கொடுமைகள்?
Delete