பின்னங்கால் நிலத்தில் பதியாமல்
முன்னங்காலை மட்டும் ஊன்றி
தட்டுத் தடுமாறி குழந்தை
நடை பயின்ற வேளை,
கால் தடுக்கி கீழே விழுந்து
அழுத போது
தவறேதும் செய்யாத
தரையை அடித்துச்
சமாதானம் செய்தாள் அன்னை.
பிடரியில் கண்ணை வைத்து
சுவரில் வந்து மோதிக் கொண்டபோது
’சிவனே’ என்று நின்றிருந்த
குறுக்குச் சுவருக்கு அடி விழுந்தது.
பின் வரும் காலங்களில்
தான் செய்த தவற்றைப்
பிறர் மீது சுமத்தி
பழியிலிருந்து எளிதாய்த் தப்பிக்கக்
‘பாடம்’ கற்றுக் கொண்டது குழந்தை!
(டிசம்பர் 2011 உயிரோசை இணைய இதழில் வெளியானது)
உயிரோசையில் வாசித்தபோதே அதிசயிதேன் கலையரசி.சின்ன விஷயம்தான்.அதன் அவதானிப்புக்குள் எத்தனை வாழ்வியல்.அற்புதம் தோழி !
ReplyDeleteஆம் ஹேமா. குழந்தைகளை வளர்க்கும் போது அவர்களைச் சமாதானப்படுத்த நாம் செய்யும் சிறிய தவறுகள் அவர்கள் மனதில் எதிர்மறையான பாடத்தைக் கற்பித்து விடுகின்றன. உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி ஹேமா!
Deleteதன் தவற்றைப் பிறர்மேல் சுமத்தும் பழிக்கான விதையைத் தாயாரே விதைக்கிறாள். இப்படித்தான் நம்மில் பலரும், தங்கள் குழந்தைகள் செய்யும் தவறுகளை நியாயப்படுத்தியே அவர்களை வழிதவறி வளர்த்துவிட்டுவிடுகிறோம். குறுங்கவிதைக்குள் பெருந்தத்துவம் அடக்கிவிட்டீர்கள். பாராட்டு அக்கா.
ReplyDeleteஆம் கீதா. ”சரியாக நடக்காததால் நீ விழுந்து விட்டாய்; இனி மேல் பார்த்துக் கவனமாக நட,” என்று சொல்ல வேண்டிய நாம் அவர்களைச் சமாதானப்படுத்த பழியைத் தரைமேல் போட்டு விடுகிறோம். பெற்றோரிடமிருந்தே குழந்தைகள் வாழ்வியல் தத்துவங்களைக் கற்றுக் கொள்கின்றனர். எனவே வளர்ப்பு முறையில் அதிக கவனம் தேவை. வருகைக்கும் பாராட்டுக்கும் மிகுந்த நன்றி கீதா!
Deleteதன் மீதான தவற்றை ஒத்துக்கொள்ள பகுத்தறிவு மனிதனுக்கும் எளிதில்லை.நல்ல கவிதை
ReplyDeleteவருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி ஆச்சி!
Deleteபாசத்தின் வெளிப்பாடு கூட எத்தனை பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி விடுகிறது. நல்ல கவிதை வாழ்த்துக்கள் பா. தொடர்ந்து எழுதுங்க.
ReplyDelete