நல்வரவு

வணக்கம் !

Wednesday, 1 February 2012

பிராய்ச்சித்தம் - சிறுவர் கதை

பாபு எட்டாம் வகுப்பு மாணவன். அன்று காலை வழக்கத்தை விட அதிக நேரம் தூங்கி விட்டதால், அவசர அவசரமாகப் பள்ளிக்குக் கிளம்பிக் கொண்டி ருந்தான்.

அறை அலமாரியிலிருந்த சட்டையை அவன் எடுத்தபோது மேலேயிருந்து "கீச் கீச்" என்று சத்தம் கேட்டது. "அது என்னவாகயிருக்கும்..?' என்று யோசித்த போது, அடுப்பங்கரையிலிருந்து அவன் அம்மாவின் குரல் கேட்டது.

"டேய்... பாபு! இரும்பு அலமாரியை மெதுவாத் தெறந்து மூடு. மேலே சிட்டுக் குருவி கூடு கட்டி குஞ்சு பொரிச்சிருக்கு. கீழே விழுந்துடப் போவுது..." என்றார்.

"ஐ... அப்படியா, நான் மேலே ஏறி குருவிக் குஞ்சைப் பார்க்கப் போறேம்மா."

"அதெல்லாம் செய்யக் கூடாது பாபு. ஏற்கெனவே நேரமாயிட்டுது. சீக்கிரம் பள்ளிக்குக் கிளம்புற வழியைப் பாரு" என்றார் அம்மா கண்டிப்புடன்.

வகுப்பில் உயிரியல் பாடம் நடந்து கொண்டு இருந்தது. ஆனால், பாபுவின் கவனம் முழுக்க அந்தக் குருவிக் குஞ்சு மேலேயே இருந்தது.

பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர், "ஆண்டுதோறும் மார்ச் 20-ம் தேதி என்ன தினம்னு யாருக்காவது தெரியுமா?" என்று கேட்டார்.

யாருக்கும் அதற்கான பதில் தெரியாததால் எல்லோரும் அமைதியாக இருந்தனர். வகுப்பு துவங்கியது முதலே பாபுவின் கவனம் பாடத்தில் இல்லாததைக் கவனித்திருந்த ஆசிரியர், "பாபு, எழுந்திரு. இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லு பார்ப்போம்" என்றார் கடுமையான குரலில்.

திடீரென்று ஆசிரியர் தன் பெயரைச் சொல்லிக் கேள்வி கேட்டவுடன், எழுந்து நின்று அலங்க மலங்க விழித்தான் பாபு. அவனையும் அறியாமல் அவன் வாய் சிட்டுக்குருவி என்று முணுமுணுத்தது.

ஆசிரியர் கேள்விக்குத் துளிக்கூட சம்பந்தமே இல்லாமல் அவன் இப்படிச் சொன்னதும், மாணவர்கள் அனைவரும் "ஹா... ஹா..." என்று சத்தம் போட்டுச் சிரித்தனர். அப்போதுதான் தன் தவறை உணர்ந்து வெட்கத்தில் தலைகவிழ்ந்தான் பாபு.

ஆனால் அவன் சிறிதும் எதிர்பாராதவிதமாய் ஆசிரியரோ, "ஏன் எல்லோரும் சிரிக்கிறீங்க? அவன் சரியான பதிலைத்தான் சொல்லியிருக்கான்" என்றார். எல்லோருக்கும் ஆச்சர்யம் தாங்க முடியவில்லை.

"அழிஞ்சிக்கிட்டே வரும் சிட்டுக்குருவி இனத்தைக் காப்பாத்த உலகம் முழுவதும் மார்ச் 20-ம் தேதி சிட்டுக்குருவி தினம் கொண்டாடப்படுது. ஆங்கிலத்தில் இதை House sparrow day ன்னு சொல்றாங்க. சரியான பதிலைச் சொன்ன பாபுவை நான் பாராட்டறேன். எல்லோரும் கை தட்டி இவனை உற்சாகப்படுத்துங்க" என்றார் ஆசிரியர்.

ஏதோ உளறப் போய் அது சரியான பதில் என்று ஆசிரியர் கூறவே, ’திருதிரு'ன்னு விழித்தான் பாபு.

"நாங்கள்லாம் சின்னப் புள்ளைங்களா இருந்தப்ப எங்க வீட்டு முற்றத்துல நெல்லைக் கொட்டி காய வைப்பாங்க. இந்தச் சிட்டுக் குருவிங்க கூட்டம் கூட்டமா வந்து நெல்லைப் பொறுக்கித் தின்னும். ஆனா, இப்ப எங்கேயும் இதுங்களைப் பார்க்க முடியலை. சுத்தமா அழிஞ்சி போச்சு. நம்மூர்ல மட்டுமில்ல, உலகம் பூராவுமே இது அழிஞ்சிக்கிட்டு வருதாம்.

மனுஷன் காடுகளை அழிச்சிட்டதினாலே, இந்த மாதிரி பறவைங்க இனப்பெருக்கம் செய்ய முடியாம எண்ணிக்கையிலே குறைஞ்சுக்கிட்டே வருது. அதனால பசங்களா, நீங்க ஒவ்வொருத்தரும் உங்களால முடிஞ்ச அளவில உங்கக் கொல்லையில, தெருவில, பள்ளிக்கூட வளாகத்தில மரங்களை நட்டு வளர்க்கணும். அப்பத்தான் இந்தப் பறவை இனத்தை நம்மால் காப்பாத்த முடியும்" என்று குட்டிப் பிரசங்கமே பண்ணி முடித்தார் ஆசிரியர்.

வீட்டு மணி எப்போது அடிக்கும் என்று ஆவலுடன் காத்திருந்தான் பாபு. வீட்டுக்கு வந்த போது, அவன் அம்மா வெளியே சென்றிருந்தார். அம்மா வந்து விட்டால் குருவிக் குஞ்சைப் பார்க்க அனுமதிக்கமாட்டார் என்று அவனுக்குத் தெரியும். எனவே, அம்மா வருவதற்குள் ஏறிப் பார்த்து விட வேண்டும் என்று ஆசையில் ஒரு முக்காலியைப் போட்டு அதில் ஏறினான்.

அப்போது குஞ்சுகளுக்கு இரை ஊட்டிக் கொண்டிருந்த தாய்ப் பறவை, பாபுவைக் கண்டதும் மிரண்டு போய் "கீச்கீச்" என்று கத்திக் கொண்டே ஜன்னல் கம்பியில் போய் உட்கார்ந்தது.

முக்காலியில் ஏறியும் அவனால் சரியாகப் பார்க்க முடியவில்லை என்பதால், குருவிக் கூட்டை அவன் பக்கம் நோக்கி இழுத்தான். அப்போது அதிலிருந்த ஒரு குஞ்சு தத்தித் தத்திப் பறந்து அலமாரியின் ஓரத்துக்கு வந்ததால், மேலேயிருந்து "பொத்'தென்று தரையில் விழுந்து ஒரு சில நிமிடங்கள் துடிதுடித்துப் பின் இறந்து போய்விட்டது.

"என்னடா... பண்றே?" என்று பாபுவின் அம்மா அடித்துப் பிடித்துக் கொண்டு அங்கு ஓடி வருவதற்கும், குருவிக் குஞ்சு கீழே விழுந்து இறப்பதற்கும் சரியாக இருந்தது.

"அடப்பாவி! காலையிலதான் சொன்னேன். அந்தத் தாய்க் குருவி எப்படி கத்துது பாரு. அநியாயமா ஒரு குஞ்சைக் சாகடிச்சிட்டியே" என்று திட்டினார் அம்மா.

குஞ்சு கீழே விழுந்து துடிதுடித்து இறந்த காட்சி, பாபுவை நிலைகுலையச் செய்தது. இரவு நீண்ட நேரம் வரையில் அவனுக்குத் தூக்கமே வரவில்லை. அந்தத் தாய்க் குருவியின் கதறல் அவன் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது.

அன்று கனவில் அந்தப் பறவை வந்தது.

"நான் உனக்கு என்ன தீங்கு செஞ்சேன்? ஏன் என் குழந்தையைச் சாகடிச்சே?" என்று கேட்டது.

மறுநாள் காலையில் சீக்கிரமே எழுந்து வெளியில் சென்ற பாபு, தான் சேர்த்து வைத்திருந்த பணத்தில் செடிகளையும், மரக்கன்றுகளையும் வாங்கி வந்து வீட்டின் பின்புறமிருந்த தோட்டத்தில் நட்டான்.

"அம்மா... என் பிறந்த நாளுக்கு உடை வாங்க வேண்டாம். அதுக்குப் பதிலா காசை எங்கிட்ட கொடுங்க. அந்தப் பணத்துல ரெடிமேடா விக்குற குருவிக் கூடுகளை வாங்கிட்டு வீட்டுப் 'போர்டிகோ'வில் தொங்கவிடப் போறேன். தினம் தினம் எனக்கு வைக்கிற சாப்பாட்டு அரிசியிலேர்ந்து ஒரு பிடி எங்ககிட்ட கொடுங்க. அதை மாடியில ஒரு ஓரமா தூவி வைக்கப் போறேன்.
குருவிகளுக்கு அது உணவாப் பயன்படும்" என்று சொன்னவன், சொன்னபடியே தினமும் செய்து வரலானான்.

இரண்டு மூன்று வருடங்களில் அவன் வைத்த செடிகள் நன்றாக வளர்ந்து தோட்டமே பசுஞ்சோலை போலக் காட்சியளித்தது. மலர்களில் இருந்த தேனை உண்ண வண்ணத்துப் பூச்சிகள் கண்ணைப் பறிக்கும் பல வண்ணங்களில் தோட்டத்தை வலம் வரத் துவங்கின.

மரங்களில் பல்வேறு வகையான பறவைகள் குடிபுகுந்து இனிமையான கானம் இசைத்தன.சில ஆண்டுகள் கழித்து பாபுவின் கனவில் மறுபடியும் அந்தத் தாய் குருவி தோன்றியது. அதன் கண்களில் வழிந்தோடும் கண்ணீர்!

"நான் செய்த தப்புக்குத்தான் பிராயச்சித்தம் பண்ணிட்டேனே! இன்னும் நீ என்னை மன்னிக்கலையா?" என்றான் பாபு சோகமாக.

"இல்லண்ணா! இது ஆனந்தக் கண்ணீர். உங்களை மாதிரி எல்லோரும் எங்களுக்கு உதவி செஞ்சா, நாங்களும் எங்கக் குடும்பத்தோட நிம்மதியா வாழ்வோம். உங்களுக்கு நன்றி சொல்லத்தான் வந்தேன்" என்று மகிழ்ச்சியாகச் சொல்லி விட்டுப் பறந்து சென்றது சிட்டுக் குருவி.

அதைக் கேட்டதும் பாபுவின் மனது மகிழ்ச்சியில் திளைத்தது.

(10/04/2010 தினமணியின் சிறுவர்மணியில் எழுதியது)

2 comments:

  1. அழிந்துவரும் சிட்டுக்குருவிகளுக்காக ஒரு தினம்! மிகவும் வரவேற்கத்தக்கது. நம் ஊரில் காணாத சிட்டுக்குருவிகளை ஆஸ்திரேலியாவில் கூட்டம் கூட்டமாக காணும்போது மனம் மகிழ்ச்சியில் துள்ளுகிறது.

    குழந்தைகளுக்கான எளிய மொழியிலான கதையும் சிறியவர், பெரியவர் அனைவருக்குமான கருத்தும் மனம் கவர்கின்றன. பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கும் பின்னூட்டத்திற்கும் மிகவும் நன்றி கீதா!

      Delete