நல்வரவு

வணக்கம் !

Monday 12 March 2012

பெண் எனும் இயந்திரம்

கடிகாரம் பத்து முறை அடித்து ஓய்ந்தது. 

தன் மேலிருந்த குழந்தையின் கையை மெதுவாக எடுத்துத் தலையணை மீது வைத்து விட்டு மாலினி எழுந்த போது குழந்தை சிணுங்கியது. அய்யய்யோ! குழந்தை விழித்து விட்டால், கிளம்ப முடியாமல் போய் விடுமே!

பக்கத்தில் அமர்ந்தபடி குழந்தை விழித்துக் கொள்கிறாளா எனச் சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள். குழந்தை நன்றாகத் தூங்கியதை உறுதி செய்து கொண்டவள், அவசர அவசரமாகப் புடைவையை மாற்றிக் கொண்டு கிளம்பினாள்.

கதவைத் தாழிட்டுக் கொள்ள கணவனைத் தேடிய போது, அவன் பக்கத்து அறையில் படுத்துக் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தான். 

"ஏங்க. எந்திரிச்சு கதவைத் தாழ்ப்பாள் போட்டுட்டுப் படுத்துக்கோங்க" 

"நிம்மதியா இந்த வீட்டுல கொஞ்ச நேரம் தூங்க முடியாது," என்று முணுமுணுத்துக் கொண்டே எழுந்து வந்தான் அவன்.

'தூக்கத்துல எந்திரிச்சி ஒரு நிமிஷம் கதவைச் சாத்திக்கவே உங்களுக்கு இவ்ளோ கஷ்டமாயிருக்கே.  தெனமும் ராத்திரி முழுக்க கண் முழிக்கிற எனக்கு எவ்ளோ கஷ்டமாயிருக்கும்னு ஒரு நாளாவது யோசிச்சுப் பார்த்திருக்
கீங்களா?"

"அது ஒன்னோட தலையெழுத்து.  அதுக்கு நான் என்னா செய்ய முடியும்"

"ராத்திரி கண்ணு முழிச்சி சம்பாதிக்கணும்னு எனக்கு ஒன்னும் தலையெழுத்து இல்லை.  நீங்க தான் நல்லாப் பணம் கிடைக்குதுன்னு இந்த வேலையில சேர்த்து விட்டிருக்கீங்க.  இன்னிக்கே இந்த வேலையைத் தலை
முழுகிட்டு வந்துடறேன்.  நாளையிலேர்ந்து நான் போறேனான்னு பாருங்க"

போகாட்டி வூட்டுல உட்கார்ந்துட்டு மூணு வேளை எப்படி மூக்குப் புடிக்கத் திங்கிறது?  ஒனக்கு வசதியா வூடு வாங்கணும்.   ஸ்கூட்டர் வாங்கணும்.  எல்லாக் கடனுக்கும் புடிச்சது போக நான் வாங்கறது குழந்தைக்குப்
பால் பவுடர் வாங்கக் கூடப் போறாது.  எக்கேடாவது கெட்டுப் போ"  திட்டிக் கொண்டே வந்து படாரென்று கதவைச் சாத்தித் தாழிட்டுக் கொண்டான் அவன்.

ஒரு நாளாவது, 'பாவம் ராத்திரி முழுக்க கண் முழிச்சி இவ்ளோ கஷ்டப்படுறியே'ன்னு அவன் வாயிலிருந்து ஆறுதலாக ஒரு வார்த்தை வராதா என அவள் மனம் ஏங்கும்.  ஆறுதலாகப் பேச வேண்டாம்; .
திட்டாமலாவது இருக்கக் கூடாதா?

பகலில் படுத்துத் தூங்கலாம் என்றால் குழந்தையைக் கவனிப்பதற்கே நேரம் சரியாக இருக்கும்.  போதாக் குறைக்கு மளிகை, காய்கறி எல்லாம் இவள் தான் வாங்க வேண்டும்.  கடன் போக தான் வாங்கும் சம்பளத்தை அவள் கையில் கொடுப்பதோடு அவன் கடமை முடிந்து விடும்.

ஏதாவது அவள் சொன்னால், என் கூட  வேலை பார்க்கிறவனுங்க செய்யற மாதிரி குடி, கூத்துன்னு செல்வழிக்காம, சம்பளத்தை அப்படியே உங்கிட்ட கொண்டாந்து கொடுக்கிறேன்னு சந்தோஷப்படு என்று சொல்லி அவள் வாயை அடைத்து விடுவான்.

பக்கத்தில் வந்து நின்ற வேனைப் பார்த்தவுடன் அவள் சிந்தனை தடைபட்டது. டிரைவரைப் பார்த்தவுடன் மனம் திக்கென்றது.

"பழைய டிரைவர் எங்கே?" என்றாள் தன் பதட்டத்தை வெளிக்காட்டாமல்.

"அவர் குழந்தைக்குத் திடீர்னு இன்னிக்கு உடம்பு சரியில்லாமப் போயிடுச்சாம்.  ஆஸ்பத்திரிக்குப் போயிருக்கார். அதனால இன்னிக்கு மட்டும் என்னை ஓட்டச் சொன்னாரு"

ஏறலாமா, வேண்டாமா எனக் குழப்பம். திரும்பி வீட்டுக்கே போய்விடுவோமா? என்று ஒரு கணம் யோசித்தாள்.

கணவன் இப்போது ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பார்.  கதவைத் தட்டினாலும் திறப்பது சந்தேகமே என்ற எண்ணத்தில் துணிந்து வண்டியில் ஏறிவிட்டாள்.  சில மாதங்களுக்கு முன் செய்தித் தாளில் படித்த ஒரு கொலைச் செய்தி நினைவுக்கு வந்து அவளைப் பயமுறுத்தியது.

வேன் எப்போதும் போகிற வழியில் தான் போகிறதா என  சன்னல் வழியே இருட்டில் உற்றுப் பார்த்துக் கொண்டே வந்தாள்.  வழி ஏதும் மாறிப் போனால் கதவைத் திறந்து கொண்டு குதித்து விடுவது என்று முடிவு செய்து கொண்டு கதவுக்குப் பக்கத்திலேயே அமர்ந்திருந்தாள்.  இடையிடையே டிரைவர் திரும்பி அவளை ஒரு மாதிரியாகப் பார்க்கவே அவளது பயம் அதிகரித்தது.

ஓடுகிற வேனிலிருந்து குதித்தால் கண்டிப்பாக உயிர் போய்விடும். மானம் போவதற்கு முன் உயிர் போய்விட வேண்டும்.  ஒரு வேளை, கை, கால் முறிந்து உயிர் பிழைத்துக் கொண்டால்?

கூடாது, கூடாது.  கை,கால் நன்றாயிருக்கும் போதே இந்த மனுசரிடம் இந்தப் பாடு.  படுக்கையில் வேறு விழுந்து விட்டால், அவ்வளவு தான்.  வார்த்தை யாலேயே கொன்று விடுவார்.  கடவுளே! கண்டிப்பாக உயிர் போய் விட வேண்டும்.

என் சாவைப் பற்றித் தெரிந்ததும் இவர் அழுவாரா?  பயந்த சுபாவம் கொண்டவளை இப்படி வலுக்கட்டாயமாக நட்ட நடு ராத்திரியில் வேலைக்கு அனுப்பி சாகடிச்சிட்டோங்கிற குற்ற உணர்வு இவரைக் கொல்லும். நன்றாகக்
கொல்லட்டும்.

வேனிலிருந்து தவறி விழுந்து இறந்ததாகத் தான் எல்லோரும் நினைத்துக் கொள்வார்கள். தற்கொலை என்று யாருக்கும் சந்தேகம் வராது.
நான் போன பிறகு என் குழந்தையை யார் பார்த்துக்கொள்வார்கள்?  இவர் வரதட்சிணை, சீர் செனத்தியோடு வேற ஒருத்தியைக் கல்யாணம் பண்ணிட்டுப் போய் விடுவார்.  என் குழந்தை தான் தாயில்லாம அனாதையாத்
தெருவில திரியும்.  தாயற்றுப் போனா சீரற்றுப் போகும்னு தெரியாமலா சொன்னாங்க பெரியவங்க?

திடீரென்று வண்டி நிற்கவே, உஷாராகி தெருவைப் பார்த்தாள்.  அவளுடன் வேலை பார்க்கும் பெண்களிருவர் வண்டியில் ஏறவே, அவளுக்குப் போன உயிர் திரும்பி வந்தது.

"எங்கள மாதிரி ஜீன்ஸ் பாண்ட் தான் போட மாட்டே.  தலை முடியைக் கூடவா ஒழுங்கா சீவிட்டு வரத் தெரியாது? அப்படியே அள்ளி முடிஞ்சுட்டு வந்திருக்கே"  கிண்டலாகச் சிரித்தபடியே கேட்டாள் ஒருத்தி.

குழந்தையைத் தூங்க வைத்து விட்டு தலை முடியை வாரிக் கொள்ளாமல் அவசரமாகக் கிளம்பி வந்தது அப்போது தான் அவள் நினைவுக்கு வந்தது.  கண்ணாடி பார்த்திருந்தால் தெரிந்திருக்கும்.

கண்ணாடி பார்க்க நேரம் எங்கேயிருந்தது?அவராவது பார்த்துச் சொல்லியிருக்கலாம்.  'இவ எப்பக் கிளம்புவா?  கதவைச் சாத்திட்டு
நாம எப்பத் தூங்கப் போகலாம்?' என்றிருப்பவருக்கு என் தலைமுடியைப் பற்றி என்ன கவலை என்று யோசித்தவள், தன் கைப்பையிலிருந்து சீப்பை எடுத்து அவசர அவசரமாக முடியைச் சீர் படுத்திக் கொண்டாள்.

"குழந்தைக்கு உடம்பு சரியில்லே.  அவளைத் தூங்க வைச்சிட்டுக் கிளம்புறதுக்கு நேரமாயிடுச்சி.  அதனால வர்ற வழியிலே முடியை வாரிக்கலாம்னு வந்துட்டேன்" என்று சமாளித்தாள்.

டிரைவர் திரும்பித் திரும்பித் தன்னை ஒரு மாதிரியாகப் பார்த்தது இதற்குத் தான் என்று மாலினிக்கு இப்போது புரிந்தது. இது தெரியாமல் டிரைவரைச் சந்தேகப்பட்டு..... கண நேரத்தில் என்னென்னவோ யோசித்து...
மனம் இன்னும் அந்தப் பதட்டத்திலிருந்து முழுமையாக விடுபட வில்லை.

அப்பெண்களிருவரும் உற்சாகமாக வழி நெடுகப் பேசிக் கொண்டே வந்தனர்.  அவளால் அவர்கள் உரையாடலில் கலந்து கொள்ள முடியவில்லை.

'இவர்களால் மட்டும் எப்படி பதட்டமே இல்லாமல், இப்படி சிரிப்பும் கும்மாளமுமாக இருக்க முடிகிறது? இவர்களுக்கும் என்னை மாதிரி கல்யாணம் ஆகி குழந்தை, குட்டி வந்த பிறகு இதே மாதிரி உற்சாகமாக
இருக்க முடிகிறதா என்று பார்க்க வேண்டும்.'   அவர்களைப் பார்த்து அவளால் பொறாமைப்படாமல் இருக்க முடியவில்லை.

இரவு முழுதும் அவள் பணிபுரியும் அந்த கால் செண்டருக்கு வெளிநாடு களிலிருந்து வரும் தொலைபேசி அழைப்புகளுக்கு நுனி நாக்கு ஆங்கிலத்தில் பதில் சொல்வதே அவளது வேலை. 

விடிய விடிய வேலை செய்து விட்டு வீட்டுக்குத் திரும்பிய போது அவளது உடம்பும் மனதும் மிகவும் சோர்ந்துவிட்டிருந்தது.

நாற்காலியில் தலையைச் சாய்த்துக் கொண்டு கண்களை மூடி சிறிது நேரம் அப்படியே அமர்ந்திருந்தாள். குழந்தை இன்னும் கண் விழிக்கவில்லை.  கணவன் எழுந்து பல் தேய்த்து விட்டுக் குளிக்கக் கிளம்பிக் கொண்டிருந்தான்.

முதல் நாளிரவு தான் பட்ட மனக் கலக்கத்தை  யாரிடமாவது சொன்னால் தேவலை என்றிருந்தது அவளுக்கு.

"என்னங்க.  நேத்து ராத்திரி என்னாச்சு தெரியுமா?  வழக்கமா வர்ற டிரைவர் வரலை.  புதுசா ஒருத்தன் வந்தான்.  எனக்குப் பெங்களூர்ல கால் செண்டர் பொண்ணு கொலை நடந்துச்சே அது ஞாபகத்துக்கு வந்துடுச்சி.  நான் ரொம்பப் பயந்து போயி......."

"அந்தக் கதையெல்லாம் அப்புறமாப் பேசலாம்.   குழந்தை முழிக்கிறதுக் குள்ளே எந்திரிச்சிப் போயி டிபன் செய்ற வேலையைப் பாரு." என்றான் அவன்.   
         

22 comments:

  1. பெண் என்னும் இயந்திரம் மனதை கனக்கவைக்கிறது..

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மேடம்!

      Delete
  2. கல்லும் புல்லும் தான் அவன் என்று நிறுபித்து
    எழுதியிருக்கிறீர்கள்!
    வாழ்த்துக்கள் கலையரசி!

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி அருணா!

      Delete
  3. வலி நிறைந்த கதை ...வாழ்த்துக்கள் கலை...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக மிக நன்றி ரெவெரி!

      Delete
  4. நல்ல நடை. அருமையா வந்துருக்கு!

    ப்ச்........ அவள் ஒரு இயந்திரம்......... உண்மைதான்:(

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் பாராட்டுக்கும் மிகுந்த நன்றி துளசி!

      Delete
  5. வேலைக்குப் போகும் பல பெண்களின் பரிதாப நிலையை எழுதியுள்ளீர்கள். வேதனையைப் பகிர்ந்துகொள்ளவும் மனமில்லாத வாழ்க்கைத்துணை ஒப்புக்காய்.
    நல்ல நீரோட்டமான எழுத்துநடைக்கும் மனம் தொட்டக் கருவுக்கும் பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. கருத்தாழமிக்க பின்னூட்டத்திற்கும் பாராட்டுக்கும் மிக்க ந்ன்றி கீதா!

      Delete
  6. பணியிலும் பனியிடை நேரங்களிலும்
    பெண்களும் படும் அவஸ்தைகளை
    அழகாய் புனைந்திருக்கிறீர்கள் சகோதரி....

    ReplyDelete
  7. வேலைக்குச் செல்லும் பெண்களின் நிலைமை மோசம்! அதிலும் கம்பெனிக் காரில் ஏறி இரவில் வேலைக்குச் செல்லும் போது தினந்தினம் செத்துச் செத்துப் பிழைக்க வேண்டும். உங்களது பாராட்டுக்கு மிக்க நன்றி சார்!

    ReplyDelete
  8. தங்கள் பதிவை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.
    http://blogintamil.blogspot.com.au/2012/03/blog-post_15.html

    ReplyDelete
    Replies
    1. என் பதிவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி கீதா! வலைச்சரத்தின் ஆசிரியராக செவ்வனே பணிமுடிக்கும் உனக்கு என் வாழ்த்தைத் தெரிவித்துக்கொள்வதில் மகிழ்கிறேன்.

      Delete
  9. கண்முன்னே நிகழ்வை கொண்டு வந்திருக்கிறீர்கள். பாவமாக இருக்கிறது மாலினியை நினைத்தால்... என்ன கொடுமையான வாழ்க்கை!

    ReplyDelete
    Replies
    1. எவ்வளவு இளகிய மனம் உங்களுக்கு? பெரும்பாலான பெண்களின் வாழ்வு இப்படித்தான் உள்ளது. தங்களது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி பந்து!

      Delete
  10. பெண்ணின் உணர்வுகளைக் கையில் பிடித்துக்கொண்டு எழுதியிருக்கிறீர்கள் கலையரசி.பாராட்டுக்கள் !

    ReplyDelete
    Replies
    1. பெங்களூரில் கால் செண்டரில் வேலை பார்க்கும் பெண்ணின் கொலை பற்றியறிந்த போது நள்ளிரவில் கம்பெனி காரில் ஏறிப்போகும் பெண்களைப் பற்றி எண்ணிப்பார்த்த போது எழுதப்பட்டது இது. நானும் ஒரு பெண் என்பதால் என்னால் அந்தப் பயத்தைக் கதையில் கொண்டுவர முடிந்திருக்கிறது. மிக்க நன்றி ஹேமா!

      Delete
  11. வலைச்சர அறிமுகம் பார்த்து வந்தேன் சிட்டுக் குருவி பற்றிய பதிவு படிச்சுட்டு இங்கயும் வந்தேன் நல்லா இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. வாங்க பூந்தளிர்! கடுங்கோடையில் உங்கள் பெயரே குளிர்ச்சியாக உள்ளது. உங்கள் வருகைக்கு என் முதல் நன்றி. வலைச்சரம் வழியாக என் தளம் வந்து படித்ததுடன் நல்லா இருக்கு என்றும் பாராட்டியதற்கு மிகவும் நன்றி. தொடர்ந்து வாருங்கள்!

      Delete
  12. வலைச்சர அறிமுகம் பார்த்துட்டு உங்க பக்கம் வந்தேன். நல்லா இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. மிகவும் நன்றி பூந்தளிர்!

      Delete