நல்வரவு

வணக்கம் !

Sunday, 27 March 2016

என்னைக் கவர்ந்த பதிவுகள் - 2 தொடர் பதிவு

வலையுலகப் பிதாமகன் என்றழைக்கப்படும் திரு. கோபு சாரின் கதைகளில் என்னை மிகவும் கவர்ந்தவை:-


இணையத்தமிழ் வளர்ச்சியில், இவரின் பங்களிப்பு மிக அதிகம்.
தமிழில் விமர்சனக்கலை இன்னும் முழு வளர்ச்சியடையாத நிலையில்,  விமர்சனப்போட்டி என்ற ஒன்றை அறிவித்து, 2014 ஜனவரி துவங்கிப் பத்து மாதங்கள் செம்மையாக நடத்திப் பதிவர்களிடம் ஒளிந்திருந்த விமர்சனத் திறமையை வெளிக்கொணர்ந்து, விமர்சன சக்ரவர்த்திகளையும், வித்தகிகளையும் உருவாக்கிய பெருமை இவரையே சாரும்.

மாத ஓய்வூதியம் இல்லாத நிலையிலும், சொந்தப் பணத்தைத் தாராளமாகச்  செலவழித்து, ஒவ்வொரு போட்டிக்கும் மூன்று பரிசுகள் கொடுத்ததுடன், போனஸ், ஹாட்டிரிக், ஆறுதல் என்ற பெயர்களில் பல்வேறு பரிசுகள் உடனுக்குடன் கொடுத்துப் பதிவர்களை எழுத ஊக்குவித்தவர்.   

இப்போட்டிக்கு நடுவராக இருந்தவர், தேர்ந்த படிப்பாளியும், படைப்பாளியுமான பூவனம் ஜீவி சார் அவர்கள்.  அண்மையில்  மறக்க முடியாத எழுத்துலகம் – ந.பிச்சமூர்த்தியிலியிருந்து எஸ்.ரா வரை என்று இவர் எழுதி, சென்னை சந்தியா பதிப்பகத்தார் வெளியிட்டுள்ள அருமையான நூல் பற்றிய என் பார்வையைத் தனிப்பதிவாக எழுதியிருக்கிறேன்.       

சிலர் விமர்சனம் என்ற பெயரில் கதையை அப்படியே வரிக்கு வரி ஒப்பிப்பார்கள்.  ஆனால் கதையின் ஒரு வரியைக் கூடச் சொல்லாமல் விமர்சனம் செய்து அசத்தியவர், தீதும் நன்றும் பிறர் தர வாரா திரு ரமணி சார் அவர்கள். 

சூடிதார் வாங்கப் போறேன் என்ற கோபு சார் கதைக்கு, இவர் எழுதிய விமர்சனம் என்னை மிகவும் கவர்ந்தது.  

இளம் வயதிலேயே புகழ்பெற்ற வானம்பாடிக் கவிஞர்கள் சிலரோடு புதுக்கவிதையின் பிதாமகனான ந.பிச்சைமூர்த்தி அவர்களிடம் கலந்துரையாடலில் கலந்து கொள்ளும் வாய்ப்பு பெற்ற கவிஞர் இவர் என்பது ஒன்றே போதும், இவர் சிறப்பை நாம் அறிந்து கொள்ள. 

இவர் கவிதைகளினூடே வெளிப்படும் மனித நேயம், சமூக அவலங்களைக் காணும் போது, பாரதியைப் போல் நெஞ்சு பொறுக்காமல் வெளிப்படும் கோபம், பெண் முன்னேற்றம் குறித்த முற்போக்கு சிந்தனை ஆகியவை என்னை மிகவும் கவர்ந்தவை:--

பெண்கள் தினம் என்பது மலர்க்கொத்து பரிசளித்து, வாழ்த்துச் சொல்லும் கொண்டாட்ட நாளில்லை; அதன் உண்மையான நோக்கம் வேறு என்பதை எவ்வளவு அழுத்தந்திருத்தமாகப் பொட்டில் அடித்தாற் போல் சொல்கிறார் பாருங்கள்!

"பெண் சுதந்திரம் என்பது
கணவன் மனைவிக்குக் கொடுப்பதல்ல
ஒரு தகப்பன் தன் மகளுக்குக் கொடுப்பதுபோல் எனும்
பெரியாரின் வார்த்தைக்கான முழுமையானபொருள்
இந்த சமூகத்திற்கு என்று புரிந்துதொலைக்கப் போகிறது ?
இந்த மகளிர் தினம் என்பது
நிச்சயம் கொண்டாட்டத்திற்கான நாள் இல்லை
நம்மைக் கூர்ப்
 படுத்திக் கொள்ளும் நாள் எனபதில்
அனைவரும் உறுதியாய் இருப்போம்…………"(நம்மைக் கூர்ப்படுத்திக்கொள்ளும் நாள்)

என்னைக் கவர்ந்த வேறு சில படைப்புகள்:-

ஜெயகாந்தனிடம் “இப்போது ஏன் எழுதுவதில்லை?” என யாரோ கேட்க, “அது என்ன தோசையா, சுட்டுச் சுட்டு அடுக்குவதற்கு? என்றாராம்.  இக்கவிதையை வாசித்த போது, எனக்கு அவர் சொன்னது, நினைவுக்கு வந்தது.

"குட்டிக்கும் பசுவுக்கும்
வேறுபாடறியும்
ஐந்தறிவுக் காளைகள்
உலவுகிற பூமியில்
....
குழந்தைக்கும் பெண்ணுக்கும்
வேறு பாடறியா
ஆறறிவு எருமைகள்
அதிகமாகும் பூமியிலே....
இளம் கன்றே
  நீ உலகறிவாய்"..... 

கவிஞர், பட்டிமன்ற பேச்சாளர், எழுத்தாளர் என பன்முகத்திறமை கொண்ட அண்ணன் முத்துநிலவன் அவர்களின் இன்னொரு பரிணாமம், பதிவர் விழாவின் மிகச் சிறந்த ஒருங்கிணைப்பாளர்! 
2015 அக்டோபரில் புதுக்கோட்டையில் பதிவர்களை ஒருங்கிணைத்து உலகமே வியக்கும் வண்ணம், சிறப்பாகப் பதிவர் விழா நடத்திய இவரின் வலைப்பூ வளரும் கவிதை என்பது, நான் சொல்லாமலே, உங்கள் அனைவருக்கும் தெரிந்தது தான்.
விழாவை முன்னின்று நடத்தியதோடு நில்லாமல், இணையத்தமிழை வளர்க்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் இவரை, எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
கலை, இலக்கியம் சினிமா என எல்லாவகைமைக்கும் விருது தரும் விகடன், வளர்ந்து வரும் வலைப்பக்க இலக்கியத்தை மறந்தது நியாயமா என விகடன் நிர்வாகத்துக்கு வலைப்பதிவர் சார்பாக கேட்டு மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார்.  
“அடுத்த ஆண்டாவது விகடன் விருதுப்பட்டியலில் நல்ல இலக்கியம் வளர்க்கும் சமூக விமர்சனங்களை முன் வைக்கும், தமிழ்ச்சமூகம் முன்னேற தளராது பணியாற்றும் தமிழ் வலைப்பக்க எழுத்தாளர்க்கும் தனியாக விருது வழங்கிட வேண்டுமாய் உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன்.”
விகடன் இவர் கோரிக்கையைப் பரிசீலிக்குமானால், அடுத்த ஆண்டிலிருந்து, வலைப்பூவில் சிறப்பாக எழுதுவோர்க்கும் விருது கிடைக்க வாய்ப்புண்டு. 
தொடரும் தொடர் பதிவர்கள் என்ற தொடர் பதிவை, இவர் துவங்கிச் சிலரை எழுத அழைத்ததும், நல்ல பதிவுகள் பலரைச் சென்றடைய வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காகவே.
இன்றைய தமிழில் பெண்கவிகள்  என்ற தலைப்பில் தமிழகத்துச் சங்க கால ஒளவை முதல் ஈழத்துச் சம கால அவ்வை வரையிலான பெண்கவிகளின் கவிதைகள் பற்றிய ஆய்வுக்கட்டுரை அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று.

இவரின் நீண்ட நாள் கனவான கவிதையின் கதை என்ற நூலை அடுத்த ஆணடு வெளியிடவிருக்கிறார்.  இதன் ஆக்கத்துக்காகவே தனியாகக் கவிதையின் கதை என்ற வலைப்பூவைத் துவங்கியிருக்கிறார்.

கவிதை என்பது யாது? என்ற முன்னுரையே, வெளியாகப் போகும் நூலின் ஆழத்திற்கும், அகலத்துக்கும் கட்டியங்கூறுவதாய் அமைந்து நம் எதிர்பார்ப்பை அதிகப்படுத்துகிறது. 

இப்போது வலைப்பதிவில் தரமாக எழுதும் எழுத்தாளர்களை நேர்காணல் செய்து தர வரிசைப் பட்டியலில் அவர்கள் முன்னணியில் இருக்கும் காரணங்களைக் கேட்டறிந்து வெளியிடுவதன் மூலம், வலைப்பூவில் புதிதாக எழுதவரும் எழுத்தாளர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து வருகிறார்.
இதில் முதலாவதாக கூட்டாஞ்சோறு செந்தில் அவர்களின் சிறப்பான நேர்காணல் வெளியாகியிருக்கிறது. இவர் ஊடகத்துறையில் பணியாற்றும் பதிவர். 
இருட்டு நல்லது என்ற இவரின் கட்டுரை, புதுக்கோட்டை பதிவர் விழாவின் போது நடத்தப்பட்ட உலகளாவிய மின் தமிழ் இலக்கியப் போட்டியில் சுற்றுச்சூழல் பிரிவில் முதற்பரிசு பெற்றது.
இயற்கையைப் பாழ்படுத்தியன் விளைவாக சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள், நவீன தொழில்நுட்பம் ஆகியவை பற்றி, இவர் எழுதும் கட்டுரைகள் என்னை மிகவும் கவர்ந்தவை.
எடுத்துக்காட்டுக்குச் சில:-
அடுத்து என்னை மிகவும் கவர்ந்த பதிவர் கீதா மதிவாணன்.  கவிதை, கதை, கட்டுரை, மொழியாக்கம், தமிழிலக்கியம் என பல்சுவை விருந்து படைக்கும் கீதமஞ்சரி எனும் வலைப்பூவுக்குச் சொந்தக்காரர். 
எழுத்து மட்டுமின்றி ஓவியம், புகைப்படம் போன்ற கலைகளிலும் ஈடுபாடு உண்டு.  ஆஸ்திரேலியா எழுத்தாளர் ஹென்றி லாசன் கதைகளை 'என்றாவது ஒரு நாள்' என்ற தலைப்பில் மொழியாக்கம் செய்து வெளியிட்டுள்ளார்.
பன்முகத்திறமை கொண்ட இவர் என் நெருங்கிய உறவினர் என்பதில் எனக்குப் பெருமை! 
என்னைக் கவர்ந்த பதிவுகளில் சில:-
நெருப்பெனத் தோன்றும் முருக்கம்பூ என்ற தலைப்பில் முருக்கம்பூவை பற்றிய பதிவு, சுவையான இலக்கிய மேற்கோள்களுடன். 

ஒண்ட வந்த பிடாரிகள் என்ற தலைப்பில் உலகின் பல பாகங்களிலிருந்து ஆஸ்திரேலியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட உயிரினங்களால் சொந்த மண்ணின் உயிரினங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளைப் பற்றி விவரிக்கும் அருமையான தொடர்.

இது போன்று ஆஸ்திரேலியாவைத் தவிர உலகில் வேறெங்கும் காணக்கிடைக்காத அதிசய உயிரினங்கள் பற்றிய தொடரும் சுவாரசியம் மிகுந்தது.

எழுத எழுத என் கட்டுக்கடங்காமல் நீளும் கட்டுரையை, அடுத்த பதிவுடன் எப்படியாவது முடிக்கத் திட்டமிருக்கிறேன்!
நன்றியுடன்
ஞா.கலையரசி
(படம் – நன்றி இணையம்)

41 comments:

  1. நான் மிகவும் மதித்துப் போற்றித் தொடரும்
    மிகச் சிறந்த பதிவர்களுடம் என்னை இணைத்துப்
    பதிவிட்டதே எனக்கு மிகவும் பெருமையாகப்
    படுகிறது

    கவனிக்கப்படுகிறோம் என்பது எண்ணிகையில்
    தெரிந்துவிடுகிறது என்றாலும் மிகச் சரியாகக்
    கணிக்கப்படுகிறோம் என்பதை தங்கள்
    பதிவில் தாங்கள் குறிப்பிட்டுள்ள வரிகளைக் கண்டு
    அறிய மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது

    மிக நன்றி சகோதரி ஞா. கலையரசி....

    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
    Replies
    1. அன்புச் சகோதரிக்கு வணக்கம்.
      அழகாகவும் தெளிவாகவும் சொல்லிவிட்ட அய்யா ரமணி அவர்களைவிட நான் ஒன்றும் சொல்ல இயலவில்லை,
      “கவனிக்கப்படுகிறோம் என்பது எண்ணிகையில்
      தெரிந்துவிடுகிறது என்றாலும் மிகச் சரியாகக்
      கணிக்கப்படுகிறோம் என்பதை தங்கள்
      பதிவில் தாங்கள் குறிப்பிட்டுள்ள வரிகளைக் கண்டு
      அறிய மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது“
      நன்றியம்மா, நட்பும் வலையுலக வளர்ச்சியும் தொடரட்டும்.வணக்கம்.

      Delete
    2. முதல் பின்னூட்டத்துக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி ரமணி சார்! உங்களைப் போன்ற மிகச் சிறந்த எழுத்தாளுமைகளின் பதிவுகளைத் தொடர்ந்து படிப்பதும், அதிலிருந்து மேற்கோள் காட்டுவதும் என் ரசனையையும், வாசிப்புத் திறனையும் மேம்படுத்தும் என நான் உறுதியாக நம்புகின்றேன். உங்கள் காலத்துச் சக பதிவர் என்பதே எனக்குப் பெருமை தரும் விஷயம் தான். உங்கள் வாழ்த்து கண்டு மகிழ்ந்தேன். மிகவும் நன்றி ரமணி சார்!

      Delete
    3. வணக்கம் அண்ணா. உங்களால் தான் இப்ப்திவை எழுதத்துவங்கினேன். அதற்காகப் பதிவுகளையும் தேடிப்பிடித்து வாசித்தேன். நல்ல எழுத்தாளர்களின் குறிப்பிடத்தக்க பதிவுகளை இப்பதிவின் வாயிலாக சுட்டிக்காட்டுவது எனக்கு மகிழ்ச்சி தரும் விஷயமாகவே இருக்கின்றது. எனவே உங்களுக்கு மீண்டும் என் நன்றி!

      Delete
  2. நான் போற்றித் தொடரும் பதிவர்கள்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ! கருத்துப் பகிர்வுக்கு மிகவும் நன்றி! நீங்கள் போற்றித் தொடரும் பதிவர்கள் இவர்கள் என்றறிய மிக்க மகிழ்ச்சி!

      Delete
  3. பெரும்பாலானோர் அறிந்த பதிவர்களே. அறிமுகப்படுத்திய விதம் அருமை. பாராட்டுகள். அடுத்த வாரம் சந்திப்போம்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் முனைவர் ஐயா! பெரும்பாலானோர் அறிந்த பதிவர்கள் தாம். இத்தொடரின் முக்கிய நோக்கம் இவர்களுடைய நல்ல பதிவுகள் இன்னும் பலரைச் சென்றடைய வேண்டும் என்பதே. புதிதாக எழுதுபவர்கள் யாரையும் நான் அறிமுகப்படுத்தவில்லை என்பது பெரிய குறை தான். அதற்கு எனக்குப் போதுமான நேரமில்லை என்பதே முக்கிய காரணம். பாராட்டுக்கு மிகவும் நன்றி ஐயா!

      Delete
  4. இனிய அறிமுகம்..

    ஆனாலும், தொடர்வது -
    வலையுலகப் பிதாமகன் திரு. வை.கோ. அண்ணா அவர்களை மட்டுமே!..

    பதிவின் வழி மலரட்டும் நட்பு..

    வாழ்க நலம்!..

    ReplyDelete
    Replies
    1. இனிய அறிமுகம் என்ற பாராட்டுக்கு மிகவும் நன்றி துரை சார்! கோபு சாரை மட்டும் தொடர்கிறீர்கள் என்றறிந்தேன். நேரங் கிடைக்கும் போது நான் அறிமுகப்படுத்தும் பதிவுகளையும் சென்று வாசித்துப் பாருங்கள். உங்களுக்குக் கண்டிப்பாகப் பிடிக்கும். பதிவின் வழி மலரட்டும் நட்பு என்று அழகாய்ச் சொல்லியுள்ளீர்கள். நன்றி துரை சார்!

      Delete
    2. துரை செல்வராஜூ 27 March 2016 at 20:25

      //இனிய அறிமுகம்.. ஆனாலும், தொடர்வது - வலையுலகப் பிதாமகன் திரு. வை.கோ. அண்ணா அவர்களை மட்டுமே!..//

      வாங்கோ பிரதர், வணக்கம். இதைத்தங்கள் மூலம் இங்கு கேட்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. மிக்க நன்றி. என்றும் அன்புடன் VGK

      Delete
  5. இந்த சந்தர்ப்ப;த்தில் மறக்காமல் என் வலைத்தளத்தை நினைவில் கொண்டமைக்கு நன்றி.

    இலக்கியம் சமைக்க நினைக்கும் நம் வலையுகப் பதிவர்கள் மறக்க முடியாத தமிழ் எழுத்துலகின் முன்னோடிகளைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமான ஒன்று. அதற்கான ஈடுபாட்டை அவர்களுக்கு அறிமுகப்படுத்தும் முயற்சியாய் எனது சமீபத்திய நூலான 'ந.பிச்சமூர்த்தியிலிருந்து எஸ்.ரா'வை
    தாங்கள் விமர்சனம் செய்திருந்த சுட்டியைக் கொடுத்ததற்கும் நன்றி.

    தங்கள் இலக்கியப் பணி வாழ்க.

    ReplyDelete
    Replies
    1. அய்யா ஜீவி அவர்களுக்கு வணக்கம்.
      தங்கள் சிறுகதையை எங்கள் ப்ளாக் இல் பார்த்தேன். புதுக்கோட்டை அருகே அறந்தாங்கியில் உங்கள் பெயரிலேயே ஒரு கவிஞர் இருக்கிறார். அவர் 5,6கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார். என்னோடு தொலைக்காட்சியிலும் பேசியிருக்கிறார். அவர்தானோ என்று உங்கள் பெயரைப் பார்த்து குழம்பிப் பின்னர் தெளிவடைந்தேன். தங்கள் பணிகள் சிறக்கவும், இம்மடலைத் தங்கள் பார்வைக்கு வைக்க உதவிய தங்கை ஞா.கலையரசியின் இப்பதிவிற்கும் எனது நன்றியும் வணக்கம்.

      Delete
    2. நன்றி, முத்துநிலவன் ஐயா. என் மேற்குறித்த புத்தகமும் உங்கள் பார்வையில் பட வேண்டும். ஒரு நூற்றாண்டு தமிழ் எழுத்துலகைப் பற்றிய நினைவு கொள்ளல் அந்த நூல்.

      பொதுவாக இடதுசாரி இயங்கங்களில் தொடர்பு கொண்டிருந்தோரை அவர்களின் ஆங்கில இன்ஷியல் கொண்டே தோழர்கள் அழைப்பது வழக்கம். அந்தப் வழக்கமான பழக்கத்தில் இப்படியான இன்ஷியல்களே பெயர்களாய்ப் போன நிறைய தோழர்கள் உண்டு. என் பதிவொன்றில் அந்தக் கவிஞர் தோழரைப் பற்றியும் நினைவு கொண்டிருக்கிறேன்.

      தங்கள் அன்பிற்கும் விசாரிப்புக்கும் மிக்க நன்றி, முத்துநிலவன் ஐயா!

      Delete
    3. வணக்கம் ஜீவி சார்! நம் வலையுலகப் பதிவர்கள் நம் இலக்கிய முன்னோடிகளைக் கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு உங்கள் நூல் வழிகாட்டும் என்பதால் தான் என் பதிவில் சுட்டியைக் கொடுத்தேன். அந்த நூலை வாசித்துத் தான் உங்கள் வாசிப்புத் திறனை நான் அறிந்து கொண்டேன். கருத்துக்கு மிகவும் நன்றி ஜீவி சார்!

      Delete
    4. முத்து நிலவன் ஸார், ஜீவி ஸார்,

      நீங்கள் குறிப்பிடும் கவிஞர் ஜீவி அவர்களின் படத்தையும் 'எங்கள் ப்ளாக்' பதிவில் இணைத்திருக்கிறேன். அது ஜீவி ஸாரின் கதை வெளியானதற்கு முந்தைய வாரப் பதிவு. கீழே சுட்டி க்டுத்துள்ளேன்.

      http://engalblog.blogspot.com/2015/12/blog-post_22.html

      Delete
  6. சிறந்த பகிர்வு

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஐயா! சிறந்த பகிர்வு என்ற பாராட்டுக்கு மிகவும் நன்றி!

      Delete
  7. //வலையுலகப் பிதாமகன் என்றழைக்கப்படும் திரு. கோபு சாரின் கதைகளில் என்னை மிகவும் கவர்ந்தவை:-

    தாயுமானவள்
    உடம்பெல்லாம் உப்புச்சீடை//

    ஆஹா, இதைத்தங்கள் வாயிலாகக் கேட்க தன்யனானேன். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோபு சார்! தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி!

      Delete
  8. //இணையத்தமிழ் வளர்ச்சியில், இவரின் பங்களிப்பு மிக அதிகம். தமிழில் விமர்சனக்கலை இன்னும் முழு வளர்ச்சியடையாத நிலையில், விமர்சனப்போட்டி என்ற ஒன்றை அறிவித்து, 2014 ஜனவரி துவங்கிப் பத்து மாதங்கள் செம்மையாக நடத்திப் பதிவர்களிடம் ஒளிந்திருந்த விமர்சனத் திறமையை வெளிக்கொணர்ந்து, விமர்சன சக்ரவர்த்திகளையும், வித்தகிகளையும் உருவாக்கிய பெருமை இவரையே சாரும்.//

    வலையுலக எழுத்தாளர்களுக்கு உற்சாகம் அளித்து, ஊக்குவித்து, பதிவுகளை ஆழ்ந்து வாசிக்கவும், வாசித்ததைப் பற்றி அவர்களின் கருத்துக்களை விமர்சனங்களாக எழுதவும் வைக்க, ஏதோ என்னால் மேற்கொண்ட மிகச்சிறிய இலக்கியப்பணி என்று இதனைச் சொல்லலாம்.

    யாரும் இதுவரை இதுபோலச் செய்ய முன்வராத கால கட்டத்தில் அதனை, முதன்முதலாக ஒரு சோதனை முயற்சியாக மட்டுமே நான் செய்ய ஆரம்பித்தேன்.

    அந்த நாற்பது வாரங்களின் இடையில் எந்த ஒரு விக்னமும் ஏற்படாமல், இலக்கிய அந்தஸ்துடன் கூடியதோர் போட்டியாகவும், ஓர் வரலாற்று சிறப்புமிக்க சாதனையாகவும், மாபெரும் வெற்றிகரமாகவும் அது அமைந்ததுதான் எனக்கே மிகப்பெரிய ஆச்சர்யமாக இருந்தது. இதில் தாங்கள் உள்பட அனைவரின் ஒத்துழைப்புகளும் அடங்கியுள்ளன. என் நன்றி அறிவிப்பினை இதுவரை படிக்காதவர்கள் படித்து மகிழட்டும்.

    http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_7.html

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் சார்! நாற்பது வாரங்கள் என்பது மிக நீண்ட காலம்! அதில் எந்தத் தடையும் வராமல், குறித்த நேரத்தில் கதைகளை வெளியிட்டு, விமர்சனங்களைப் பெற்று, முடிவுகள் அறிவித்து எனத் தொடர்ச்சியாக உழைத்திருக்கிறீர்கள். நினைத்துப் பார்த்தால் மலைப்பாக இருக்கின்றது. உண்மையில் பதிவுலகில் யாரும் செய்யாத ஒரு சாதனையைத் தான் நீங்கள் சாதித்துக் காட்டியிருக்கிறீர்கள். இதை மிகச்சிறிய இலக்கியப் பணி என்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். இது மிக உயர்ந்த இலக்கிய சேவை என்று சொல்வதே பொருத்தமாயிருக்கும். பாராட்டுக்கள் கோபு சார்!

      Delete
  9. //மாத ஓய்வூதியம் இல்லாத நிலையிலும், சொந்தப் பணத்தைத் தாராளமாகச் செலவழித்து, ஒவ்வொரு போட்டிக்கும் மூன்று பரிசுகள் கொடுத்ததுடன், போனஸ், ஹாட்டிரிக், ஆறுதல் என்ற பெயர்களில் பல்வேறு பரிசுகள் உடனுக்குடன் கொடுத்துப் பதிவர்களை எழுத ஊக்குவித்தவர்.//

    தமிழ் இலக்கியங்களின் வளர்ச்சிக்காக, நம்மால் முடிந்த ஏதேனும் ஒன்றை, நம் வாழ்நாளுக்குள் செய்துமுடிக்க வேண்டும் என எனக்குள் ஆசைப்பட்டேன்.

    இந்த என் ஆசையை ’மூன்று முடிச்சுகள்’ என்ற என் பழைய பதிவு ஒன்றில்கூட நான் தெரிவித்துள்ளேன். http://gopu1949.blogspot.in/2011/07/blog-post_18.html

    அதன்படி, வணிக + வியாபார நோக்கம் கொஞ்சமும் இன்றி, மூன்று சிறுகதைத் தொகுப்பு நூல்கள் இதுவரை நான் வெளியிட்டு, அவற்றில் ஒவ்வொன்றிலும் 300 பிரதிகள் வீதம் நானே விலை கொடுத்து வாங்கி, என் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும், அன்பளிப்பாக மட்டுமே, என் கையொப்பமிட்டு வழங்கியுள்ளேன்.

    மேற்படி நூல் அன்பளிப்புகளுக்கும், 2014 + 2015 ஆகிய ஆண்டுகளில் நான் என் வலைத்தளத்தில் நடத்தியுள்ள ’சிறுகதை விமர்சனப் போட்டிகள்’ மற்றும் ‘100% பின்னூட்டமிடும் போட்டிகள்’ ஆகியவற்றிற்கும் சேர்த்து இதுவரை சுமார் ரூ. 1,20,000/- (ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல்) நான் செலவழித்துள்ளேன்.

    ஏதோ இதுவரை என்னால் ஆனது இதுமட்டுமே. இன்னும் புதுமையாக எவ்வளவோ செய்யலாம் என்று என் மனதில் அடிக்கடி ஏதாவது தோன்றிக்கொண்டே இருக்கும். எதற்கும் ஓர் கொடுப்பிணை, ஆயுள், ஆரோக்யம், அதிர்ஷ்டம், தெய்வத்தின் துணை எல்லாம் கூடி வரவேண்டும். பார்ப்போம்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. அடேங்கப்பா! நம்மைப் போன்ற நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு 120000/- என்பது மிகப்பெரிய தொகை தான் கோபு சார்! உங்களுக்குத் தாராள மனசு தான். அதுவும் ஓய்வூதியம் இல்லாத போது! மூன்று முடிச்சுகள் என்ற பதிவை விரைவில் வாசிக்கிறேன். உங்கள் வாழ்நாளுக்குள் பெரிய சாதனையைச் செய்து விட்டீர்கள். இன்னும் புதுமையாக பல சாதனைகள் நிகழ்த்த நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும், அதிர்ஷ்டமும், உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்!

      Delete
  10. //சிலர் விமர்சனம் என்ற பெயரில் கதையை அப்படியே வரிக்கு வரி ஒப்பிப்பார்கள். ஆனால் கதையின் ஒரு வரியைக் கூடச் சொல்லாமல் விமர்சனம் செய்து அசத்தியவர், தீதும் நன்றும் பிறர் தர வாரா திரு ரமணி சார் அவர்கள்.

    ’சுடிதார் வாங்கப் போறேன்’ என்ற கோபு சார் கதைக்கு, இவர் எழுதிய விமர்சனம் என்னை மிகவும் கவர்ந்தது.//

    என்னையும் அது மிகவும் கவர்ந்தது. மீண்டும் ஒருமுறை இன்று அதனைப் படித்துப் பார்த்தேன். ஒரு விமர்சனம் என்றால் அது எப்படி எப்படியெல்லாம் மாறுபட்ட வகையில் எழுதப்படலாம் என்பதை பலருக்கும் உணர்த்திய பெருமை நம் திரு. ரமணி சாருக்கு உண்டு. இதைப்பற்றிகூட அவருக்கு நம் ‘ஜீவீ-வீஜீ விருது’ வழங்கியபோது நான் என் பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.

    http://gopu1949.blogspot.in/2014/11/part-1-of-4.html

    அதேபோலவே தாங்கள் முதன்முதலாக ’சிறுகதை விமர்சனப் போட்டி’யில் கலந்துகொண்டு ’காதலாவது கத்திரிக்காயாவது’ என்ற என் கதைக்கு எழுதி அனுப்பி முதல்பரிசு பெற்ற விமர்சனமும் என்னை மிகவும் கவர்ந்தது என்று சொல்லுவேன்.

    http://gopu1949.blogspot.in/2014/03/vgk-05-01-03-first-prize-winners.html

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. என் விமர்சனமும் முதற்பரிசு பெற்று உங்கள் கையால் பரிசு வாங்கியது நான் பெற்ற பெரிய பேறு! அது உங்களைக் கவர்ந்தது என்ற வார்த்தைகளை உங்கள் வாயால் கேட்கும் போது இன்னும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. மிகவும் நன்றி கோபு சார்!

      Delete
  11. ’சிறுகதை விமர்சனப் போட்டி’யின் நடுவராகப் பொறுப்பேற்று மிகச்சிறப்பாகவும், நடுநிலை தவறாமலும் அரும்பணியாற்றிய நம் திரு. ஜீவி சார் அவர்கள்,

    ’விமர்சனச் சக்ரவர்த்தி’ பட்டம்பெற்ற நம் திரு. ரமணி சார் அவர்கள்,

    தாங்களும் பரிந்துரைத்து, நாம் எல்லோருமே ஏகமனதாக ‘விமர்சன வித்தகி’ என்று சிறப்பித்துப் பாராட்டி பட்டமளிக்கப்பட்ட சாதனையாளர் ஆட்ட நாயகி திருமதி. கீதா மதிவாணன் அவர்கள்,

    2015 அக்டோபரில் புதுக்கோட்டையில் பதிவர்களை ஒருங்கிணைத்து உலகமே வியக்கும் வண்ணம், சிறப்பாகப் பதிவர் விழா நடத்திய நம் அன்புக்குரிய பிரபல மேடைப்பேச்சாளர் நா.முத்துநிலவன் அவர்கள்

    ஆகிய எழுத்துலக ஜாம்பவான்களின் பல்வேறு சிறப்புப்பதிவுகளுடன், மிகச் சாதாரணமானவனாகிய அடியேனின் ஆக்கங்களில் சிலவற்றையும் சேர்த்து, ‘என்னைக் கவர்ந்த பதிவுகள் - 2 தொடர் பதிவு’ என்ற தலைப்பினில் கொண்டு வந்து சிறப்பித்துள்ளதற்கு, என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

    நன்றியுடன் கோபு

    ReplyDelete
  12. நீங்களும் பெரிய எழுத்துலக ஜாம்பவான் என்பதால் தான் உங்களையும் இத்தொடரில் இணைத்திருக்கிறேன். தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் இட்டு என் பதிவைச் சிறப்பித்தமைக்கு மிகவும் நன்றி கோபு சார்!

    ReplyDelete
  13. நல்ல அறிமுகங்கள். எல்லோருமே நண்பர்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஸ்ரீராம்! எல்லோருமே நண்பர்கள் என்றறிய மகிழ்ச்சி! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

      Delete
  14. பதிவுலகில் சிறப்பான பதிவர்களோடு என்னையும் குறிப்பிட்டமைக்கு மிகவும் நன்றி அக்கா.. கோபு சாரின் சிறுகதை விமர்சனப்போட்டிகள் எந்தக் காலத்திலும் எவராலும் முறியடிக்கப்பட இயலாத சாதனை என்பது மறுக்கமுடியாத உண்மை. பின்னூட்டத்தில் பரிசுகளுக்காக கோபு சார் குறிப்பிட்டுள்ள தொகையைக் கேட்டு எனக்கு மயக்கமே வந்துவிட்டது. நிச்சயம் அவருடைய பெருந்தன்மை போற்றுதற்குரியது. அவர் வாசிக்கும் ஒவ்வொரு நூலையும் அறிமுகம் & விமர்சனம் செய்யும் பாங்கு பிறரிலிருந்து வித்தியாசமாய் அமைந்து அனைவரையும் கவரும் வகையில் இருப்பது சிறப்பு. நிதானமாய் அடித்து ஆடி ரன்கள் குவிப்பது போல் ஜீவி சாரின் நூலை எவ்வளவு அழகாக ஒவ்வொரு எழுத்தாளராக அவர் அறிமுகப்படுத்துகிறார்.

    விமர்சனம் எப்படி எழுதுவது என்று தெரியாமல் கோபு சாரின் முதல் சில போட்டிகளைத் தவிர்த்திருந்தேன். பிறகு ரமணி சாரின் அற்புதமான விமர்சனங்களைப் பார்த்தபிறகே சிறுகதைகளுக்கான விமர்சனம் எழுதும் சூத்திரம் ஓரளவு பிடிபட்டது. அதற்குப்பிறகு அநேகப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசும் பெற்றேன். அதற்காக இவ்வேளையில் ரமணி சாருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    முத்துநிலவன் ஐயா அவர்களின் சிறப்பான படைப்புகளும், படைப்பாளிகளுக்குத் தரும் ஊக்கமும், நிகழ்வுகளை முன்னெடுத்து நடத்தும் உத்வேகமும், இணையத்தமிழ் வளர்ச்சியில் அவருடைய பங்கும் மிகுந்த பாராட்டுக்குரியவை. கவிதையின் கதை தளம் எனக்குப் புதியது. அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி அக்கா.

    நண்பர் செந்தில்குமார் அவர்களின் தளத்தின் பெயர்தான் கூட்டாஞ்சோறு ஆனால் ஒரு பல்சுவை விருந்தே பரிமாறிக்கொண்டிருக்கிறார். தவறாமல் வாசிக்கும் தளங்களுள் அவருடைய தளமும் முக்கியமானது. பல அறியாத தகவல்களை அறியத்தரும் கலைப்பொக்கிஷம் என்றே சொல்லலாம்.

    அற்புதமான படைப்பாளிகளின் வரிசையில் என்னையும் சுட்டியமைக்கு நன்றி. உறவினர் என்பதற்காக இல்லாமல் என் படைப்புகளுக்காய் என்னை சிலாகித்திருப்பது மிகவும் மகிழ்வளிக்கிறது. என்னையும் தொடர அழைத்திருப்பதற்கு நன்றி அக்கா. விரைவில் தொடர்வேன்.

    ReplyDelete
    Replies
    1. நீண்ட பின்னூட்டத்துக்கு மிகவும் நன்றி கீதா! அடுத்த வாரம் நான் முடித்தவுடன் உன்னைத் தொடர அழைப்பேன். தொடர்வதற்கு நன்றி கீதா!

      Delete
    2. கீத மஞ்சரி 29 March 2016 at 21:50

      //கோபு சாரின் சிறுகதை விமர்சனப்போட்டிகள் எந்தக் காலத்திலும் எவராலும் முறியடிக்கப்பட இயலாத சாதனை என்பது மறுக்கமுடியாத உண்மை. பின்னூட்டத்தில் பரிசுகளுக்காக கோபு சார் குறிப்பிட்டுள்ள தொகையைக் கேட்டு எனக்கு மயக்கமே வந்துவிட்டது. நிச்சயம் அவருடைய பெருந்தன்மை போற்றுதற்குரியது. அவர் வாசிக்கும் ஒவ்வொரு நூலையும் அறிமுகம் & விமர்சனம் செய்யும் பாங்கு பிறரிலிருந்து வித்தியாசமாய் அமைந்து அனைவரையும் கவரும் வகையில் இருப்பது சிறப்பு. நிதானமாய் அடித்து ஆடி ரன்கள் குவிப்பது போல் ஜீவி சாரின் நூலை எவ்வளவு அழகாக ஒவ்வொரு எழுத்தாளராக அவர் அறிமுகப்படுத்துகிறார்.//

      வாங்கோ மேடம். வணக்கம். என்னைப்பற்றிய தங்களின் இந்தக்கருத்துக்கள் எனக்கு மிகுந்த ஊக்கத்தையும், உற்சாகத்தையும், மன ஆறுதல்களையும் தருவதாக உள்ளன. தங்களுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      என்றும் பிரியமுள்ள கோபு

      Delete
    3. கீத மஞ்சரி 29 March 2016 at 21:50

      மேலேயுள்ள தங்களின் பின்னூட்டத்தின் சில வரிகளை மட்டும் என்னுடைய சமீபத்திய பதிவின் பின்னூட்டப்பகுதியில், மற்றவர்களின் தகவலுக்காகவும், என் நினைவுகளுக்காகவும் (for my own future references) வெளியிட்டுக்கொண்டுள்ளேன்.

      http://gopu1949.blogspot.in/2016/03/9.html

      தங்களுக்கு மீண்டும் என் அன்பான நன்றிகள், மேடம். - கோபு :)

      Delete
  15. வெளியான அன்றே இந்த பதிவை படித்து விட்டேன். சூழ்நிலை, அலைச்சல் காரணமாக, நான் கருத்துரை தராமல் போன பதிவுகளில் இதுவும் ஒன்று. தாமதத்திற்கு மன்னிக்கவும்.

    மூத்த வலைப்பதிவர்களான V.G.K மற்றும் கவிஞர் S.ரமணி இருவரும் தமிழ் வலையுலகிற்கு ஆற்றிவரும் பணி சிறப்பானது. இன்றும் பல இளம் பதிவர்கள் உற்சாகத்தோடு எழுதுவதற்கு இவர்கள் தந்த உற்சாகம்தான் காரணம். கவிஞர் .ரமணி அய்யா ஏனோ முன்புபோல்., பல பின்னூட்டங்கள் தருவதில்லை.

    எனக்குத் தெரிந்து ஆசிரியர் முத்துநிலவன் அவர்கள் செய்த முயற்சியால், இணையத்தில் ஃபேஸ்புக் மட்டுமல்ல வலைப்பதிவு என்ற ஒன்றும் உண்டு என்பது படித்தவர்கள் மத்தியில் பிரபலம் ஆனது. அய்யா முத்துநிலவன் அவர்கள் இப்போதெல்லாம் ஏனோ, பின்னூட்டம் தருவதில் வலைப்பதிவுகளை விட, வாட்ஸ்அப்பிற்கே ஆர்வம் காட்டுகிறார் என்று நினைக்கிறேன்.

    சகோதரி கீதமஞ்சரி அவர்களது பதிவுகளைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன்.
    நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். தொடர்கின்றேன்.

    ReplyDelete
    Replies
    1. மன்னிப்பெல்லாம் பெரிய வார்த்தை இளங்கோ சார்! தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்வளிக்கிறது. தொடர்வதற்கு மிகவும் நன்றி சார்!

      Delete
  16. ஏயப்பா ! எத்தனை யெத்தனை வலைச் சாதனையாளர்கள் ! மகிழ்ச்சியாக இருக்கிறது . அறிமுகப்படுத்தியமைக்குப் பாராட்டு .

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி!

      Delete
  17. மிகச் சிறப்பான பதிவர்களின் அருமையான பதிவுகளை எடுத்துக்காட்டி இருக்கின்றீர்கள் கலையரசி. அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் தேன்! தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி!

      Delete
  18. பதிவர்களை பற்றிய அறிமுகம் நன்று ! தொடருங்கள் ...

    ReplyDelete