நல்வரவு

வணக்கம் !

Sunday 29 December 2019

கடித இலக்கியத்தில் கி.ரா.வின் பங்களிப்பு - கட்டுரை



தமிழின் மூத்த படைப்பாளியான கி.ராஜநாராயணன் அவர்கள், தமிழிலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு அளப்பரியது.  சிறுகதை மற்றும்  நாவலாசிரியர், கட்டுரையாளர், நாட்டுப்புறக்கதை மற்றும் கரிசல் வட்டார வழக்கு அகராதியின் தொகுப்பாளர், பல்கலைக்கழகச் சிறப்புப் பேராசிரியர் என்ற பன்முகங்கொண்ட கி.ரா, கடித இலக்கியத்திலும், தம் முத்திரையைப் பதித்துள்ளார்.


சம காலத்துத் தமிழிலக்கிய படைப்பாளிகளுக்கு, இவர் எழுதிய கடிதங்கள்  கி.ராஜநாராயணன் கடிதங்கள்,’  என்ற தலைப்பிலும், அவர்களின் மறுமொழிகள், ‘அன்புள்ள கி.ரா.வுக்கு,’ என்ற தலைப்பிலும், நூலாக்கம் பெற்றுள்ளன.  கு.அழகிரிசாமி கடிதங்கள்,’ என்ற தனிநூலும் வெளிவந்துள்ளது. 

கடிதங்கள் எழுதுவதிலும், கடிதங்களைப் படிப்பதிலும் உள்ள சந்தோஷம் புஸ்தகங்களில் இல்லை,” என்று குறிப்பிடும் கி.ரா, முப்பது வயதுக்குப் பிறகே கதைகள் எழுதத் துவங்கியதாகவும், அதற்கு முன் எழுத்தாளர் நண்பர்களுக்குப் பக்கம் பக்கமாகக் கடிதங்கள் எழுதிக் குவித்ததாகவும்,  ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். ஆகவே அவரிடமிருந்த எழுத்துத் திறமையை வெளிக் கொணர்ந்து, எழுத்தை அவர் வசப்படுத்திய பெருமை, கடிதங்களையே  சேரும்.

சோதனை முயற்சியாகஊஞ்சல்,’ என்ற கையெழுத்துக் கடித பத்திரிக்கையையும் துவங்கினார்.  இது பற்றி, அவர் நண்பர் கிருஷ்ணன் நம்பி அவர்களுக்கு, எழுதிய கடிதம் :-
இந்தக் கடிதப் பத்திரிக்கை, இங்கிருந்து முதலில் உங்களுக்கு வரும்.  நீங்கள் வாசித்தபிறகு, கடிதங்களும், பதில் கடிதங்களும் எழுதி, சுந்தர ராமசாமியிடம் சேர்த்து, தார்க்குச்சி போட்டு, அவரிடம் எழுதி வாங்கி நீங்களே தீப.நடராஜனிடம் அனுப்பிவிட வேண்டும்.
அது அங்கிருந்து, தி.க சிவசங்கரனிடம் போகும். அப்புறம் முறையே வல்லிக்கண்ணன், கு.அழகிரிசாமி, நா.பார்த்தசாரதி, இங்கெல்லாம் போய் இவர்கள் எல்லார் எழுத்துக்களையும் தாங்கிக் கொண்டு, என்னிடம் வந்து சேரும்.  மீண்டும் இதே ரீதியில்,  இது சுற்றி வந்து கொண்டே இருக்கும்”. 
எழுத்தாளுமைகள் பலரிடம், இவர் கொண்டிருந்த நெருக்கமான நட்பும், அன்பும், அவர்களுக்கிடையே நிலவிய ஆரோக்கியமான இலக்கியச் சூழலும், இவர் கடிதங்களில் வெளிப்படுகின்றன.  தமிழ் இலக்கிய உலகின் கோஷ்டிப்பூசலையும், விருது சண்டையையும் பார்த்து, நொந்து  போயிருக்கும் நம் மனதுக்கு, இக்கடிதங்கள் ஆறுதலாக அமைகின்றன.
உடல் நலம் குறித்த விசாரணை, குடும்பத்தினர் குறித்த தகவல் பரிமாற்றம் ஆகியவை மட்டுமின்றி, அக்கால இலக்கிய நிகழ்வுகள்,  சமூக சிந்தனை, எழுத்தாளர்களின் மனவோட்டம், ராயல்டியை எதிர்பார்த்து ஏங்கும் வறுமையான வாழ்க்கைச் சூழல், தனிப்பட்ட குணாதிசயங்கள், நுட்பமான அனுபவங்கள்,  வாசித்த பல்வேறு படைப்புகள் குறித்த விமர்சனங்கள்  போன்ற அரிய விபரங்களும், உண்மைகளும் இக்கடிதங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளமையால், இவை வரலாற்று ஆவணங்களாகப் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டியவை.
பள்ளி நண்பர்கள் தங்களுக்குள் பகிர்ந்து கொள்ளும், மலரும் நினைவுகளை வாசிக்கும் ஒவ்வொருவரும், தன் பால்யத்துக்குச் சென்று, மீள்வது உறுதி.  
எடுத்துக்காட்டுக்கு, மிக முக்கிய படைப்பாளி கு. அழகிரிசாமி, கி.ராவுக்கு எழுதிய கடிதத்திலிருந்து, சில வரிகள்:-
ஊருக்கு வந்து 10 நாட்களாவது இருக்க வேண்டும் என்றிருக்கிறது.  அவ்வளவுக்கு லீவு எடுக்க முடியாதே!  ரோட்டுக்கடையில் காப்பி சாப்பிட்டு, வண்ணான் துறைக்கு உலாவப் போவதையும், புது வீட்டில் இலக்கியம் பேசுவதையும், அந்தக் காலத்தில் நடந்த பஜனைக் கோவில் திருநாட்களையும், அடிக்கடி நினைத்து ரஸிப்பேன்.  அந்தக் காலமும் போய்விட்டது; அந்த ஊரும் இப்போது இல்லை.  ஊர் ஜனங்கள் அப்போது எவ்வளவு செளக்கியமாகவும், சந்தோஷமாகவும், செளஜன்யமாகவும் இருந்தார்கள்! இப்போது ஒரு குடும்பம், பல குடும்பங்களாகி வருமானம் பெருகுவதற்கு வழியின்றி, ஊரே உள்ளூறச் செத்துக் கொண்டிருப்பது போலத் தோன்றுகிறது.  பரிதாபம்.  கிராமியப் பொருளாதாரம், அவ்வளவு சீர்கேட்டுக்கு வந்துவிட்டது.  மீட்சியும், சுபிட்சமும், எப்போது எந்த உருவத்தில் வருமோ தெரியவில்லை.”

தீப. நடராஜன் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில், கு.அழகிரிசாமி பற்றிக் கி.ரா சொல்லும் தகவல்கள், சுவையானவை:-
செகாவ்வைப் போல், கதை எழுதும் திறமை படைத்தவன்.  சிறுவயதிலிருந்தே நாங்கள் தோழர்கள்.  என் பக்கத்து வீடு ரொம்ப கஷ்டமான குடும்பம்.  கஷ்டப்பட்டு படிக்க வைத்தார்கள்.  படிப்பில் மிகவும் கெட்டிக்காரன் அவன்.  வகுப்பிலே இவன் தான் முதல்.  கொஞ்சம் பயந்த சுபாவம்.  சிறுவயதில் அவனுக்கு விளையாட்டு என்றால் உயிர்.  அதனால் தன்னுடைய இடது கையை, இரண்டு தடவை ஒடித்துக் கொண்டான்.  இதனால் அந்தக்கை முடமாகவே போய்விட்ட்து.  நொண்டிக்கை என்றும்லார்டு இர்வின்,’ என்றும், கேலி செய்தார்கள்.  இந்தக் கை தான், எனக்கு அதிர்ஷ்டம் தந்த கை,” என்று சொல்லுவான்.  அது ரொம்பவும் வாஸ்தவம்! 
நொண்டியாக இருப்பதனால், குலத்தொழில் செய்யமுடியாது;  ஏதாவது படித்து, உத்தியோகம் பார்த்துப் பிழைத்துக் கொள்ளட்டும் என்று படிக்க வைத்தார்கள்.  கை ஒடியவில்லையென்றால், எத்தனையோ தரித்திரம் பிடித்த தட்டார்களைப் போல், அவனும் எங்கோ ஒரு மூலையில், தங்க வேலை செய்து கொண்டிருப்பான்! ……………………………………..
அவனுடைய கதைகள் பத்திரிக்கை ஆபீஸ்களிலிருந்து, திரும்பி வந்ததே கிடையாது.  அவ்வளவையும் ஆசிரியர்கள், கைநீட்டி வாங்கிப் பிரிசுரித்தார்கள்.  இப்படியாக தமிழ் இலக்கிய வானிலே, ஒரு புது நட்சத்திரம் பிரகாசிக்க ஆரம்பித்தது”. 
கற்பனை கலந்த புனைவுகளை விடவும், கடிதங்கள் வாயிலாகத் தான் படைப்பாளியின் உண்மையான முகத்தை, நம்மால் அடையாளம் காணமுடியும் என்பது முற்றிலும் உண்மை.  
எனவே தான், கி.ரா எழுதிய கடிதங்களின் வழியே, இவரின் மனப்போக்கு, சிந்தனைகள், குணாதிசயங்கள், கொள்கைகள், நம்பிக்கைகள் ஆகியவற்றைத் தெளிவாக, நாம் அறிந்து கொள்ள முடிகிறது.  
 ரசிகமணி டி.கே. சிதம்பரநாதன் அவர்களிடம், கி.ரா கொண்டிருந்த அபரிமிதமான பக்தியையும், அன்பையும், நேசத்தையும், பல கடிதங்கள் பறைசாற்றுகின்றன.   டி.கே.சி.யின் மறைவுக்குப் பின்னர், அவர் பேரன் தீப.நடராஜன் அவர்களுக்குக்  கி.ரா மனவேதனையுடன் எழுதிய கடிதம், இதற்கு ஒரு சான்று:-
ஐந்தருவிச் சாலையிலுள்ள அந்த டி.கே.சி இல்லம், ஒரு சர்வகலாசாலை.  அந்த சர்வகலாசாலைக்கு, உங்கள் தாத்தா துணைவேந்தர் (வைஸ்சான்ஸ்லர்) ஆக இருந்தார். எத்தனை விதமான மாணவர்கள் வந்தார்கள்.  எத்தனையோ விஷயங்கள், தெரிந்துகொண்டு போனார்கள்.  அவர்களுக்குள் அங்கே அரசியல் வேற்றுமைகள் இல்லை; மத வேற்றுமைகள் இல்லை.  இத்தகைய கலாசாலையை, உலகத்தில் எங்கேனும் பார்க்க முடியுமா?  கலாசாலை இப்பொழுது இருக்கிறது; மாணவர்களும் இருக்கிறார்கள்.  ஆசிரியர் எங்கே?
சூரியன் அஸ்தமித்துவிட்டான்.
ஒளிவரும் என்ற நம்பிக்கை போய்விட்டது.
கொழு ஓடக் கொம்பில்லை
பற்றிக் கொள்ள படி இல்லை
ஊன்றிக் கொள்ள கோல் இல்லை
நாம் அனாதைகள் ஆகிவிட்டோம்”.

சக மனிதரின் துன்பங்கண்டு துடிக்கும், இவர் மனநிலையைப் பல கடிதங்கள் எடுத்தியம்புகின்றன.  வானம் பார்த்த பூமியான கரிசல் மக்களின் வாழ்க்கைப் பாட்டையும், மழையின்றிப் படும் துன்பத்தையும், கொஞ்சங் கொஞ்சமாக விவசாயம் அழிந்து வருவதையும், பல கடிதங்களில் இவரும் ஒரு விவசாயி என்பதால், உணர்வுபூர்வமாகப் பதிவு செய்திருக்கிறார்,  ஒவ்வொரு கடிதத்தின் முடிவிலும், அப்போதைய விவசாயப் பணிநிலவரம் குறித்து, எழுதத் தவறவில்லை.      

இங்கே இந்த தீபாவளிக்கு, ஜனங்கள் அரிசி வடிக்கவில்லை; கண்ணீர் வடித்தார்கள்.
உணவுப் பற்றாக்குறை நீங்கினால், அறிவுப்பற்றாக்குறையும், தானாக நீங்கிவிடும்.  புண் ஆறிவிட்டால், பொருக்கு தானாகவே, விழுந்துவிடும்  மாதரி.  சோற்றுக்குள்ளே இருக்கான், சொக்கநாதன்”.
இவர் கடிதங்களிலேயே  என்னை மிகவும் பாதித்தது, ஜடாயு கதை பற்றி, வாசகர்கள் எழுதிய கடிதமொன்றுக்கு, இவர் அளித்த பதில் தான்.  .
தடைசெய்யப்பட்ட ஒரு அரசியல்கட்சியின் அங்கத்தினராக, இவர் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த ஓர் இரவொன்றில் கயவர்களிடம் சிக்கி, அபயக்குரல் கொடுத்த அபலைப் பெண்ணைக் காப்பாற்ற வழியின்றித் தவித்த உண்மைச் சம்பவத்தை எண்ணி, மனம் நொந்து வேதனைப்பட்டவர்,  குற்றவுணர்ச்சியுடன்  ஜடாயு கதையில் தம்மையே தாத்தைய நாயக்கர் என்ற கதாபாத்திரமாகப் படைத்துக் முடிவில் சாகடித்துத் தமக்குத் தாமே தண்டனை வழங்கிக் கொள்கிறார் என்ற உண்மை, மனதை மிகவும் நெகிழச் செய்தது.
அன்று அந்தப் பெண்ணை, என்னால் காப்பாற்ற முடியவில்லை.  அதற்குப் பிராயச்சித்தமாக, நானே தாத்தைய நாயக்கராகி, கதையில் மடிகிறேன்.  இப்பொழுது நினைத்தாலும், பகீர் என்கிறது நெஞ்சு.  ஒரு கிராமமாக இருந்தால், அப்படி நடக்கவிடுவார்களா?  அந்தப் பெண்ணின் ஓலம் இப்பவும் கேட்டுக் கொண்டே இருக்கிறது, என்னில்”. 
பாமர மக்களின் பேச்சு, பாட்டு, வசவு, தாலாட்டு, விளையாட்டு, நாடோடிக்கதைகள் ஆகியவற்றில் தாம், நம் மொழி உயிர் மூச்சுடன் விளங்குகிறது என்பதிலும், நாடோடிப் பாடல்களும், காட்டுப் பாடல்களும் இலக்கியத்தில் வைக்க வேண்டிய சமதையுடையவைகள் என்பதிலும் இவருக்கு அசைக்க முடியாத நம்பிக்கை.
சோளம் விதைக்கயிலே
சொல்லீட்டுப் போன மச்சான்
சோளம் பயிராச்சே
சொன்ன சொல்லும் பொய்யாச்சே!

 பெண்ணின் காதல் ஏக்கத்தை அழகாகவும், எளிமையாகவும் வெளிப்படுத்தும், இந்த நாடோடிப் பாடலை எடுத்துக் காட்டி, ஷேக்ஸ்பியரையும், விக்டர் ஹுயுகோவையும் கரைத்துக் குடித்தவர்களால், இப்படி ஒரு பாடல் எழுத முடியுமா?” என்று கேட்கிறார்.
முதல் முயற்சியாக கரிசல் வட்டார வழக்கு சொல்லகராதியை அரும்பாடுபட்டுத் தொகுத்தற்கான காரணத்தை, ஒரு கடிதத்தில் இப்படிச் சொல்கிறார்:-
பாமரனுக்கு ஒரு ஏட்டுச்சொல் புரியாத போது, அந்த அகராதியைப் புரட்டிப் பார்ப்பான்; பண்டிதனுக்கு ஒரு பேச்சுச் சொல் புரியாதபோது, இந்த அகராதியைப் புரட்டிப் பார்ப்பான்! எப்படியோ மக்கள் பேசும் மொழிக்கு, ஒரு அகராதி தயாரித்துக் கொண்டுவிட்டோம் ஒரு வட்டார அளவுக்கேனும்”. 

எந்த ஒரு காட்சியையும் நேர்முக வர்ணனை போல், துல்லியமான விவரங்களுடன்  விவரிப்பதில் கி.ரா வல்லவர்.  மலை மாட்டின்  துஷ்ட நடவடிக்கைகளை, நாம் நேரில் பார்ப்பது போல் துல்லியமாக விவரித்து, அதை வம்பு செய்யும் மனதுக்கு ஒப்பிட்டிருப்பது, புதுமை.  மனம் ஒரு குரங்கு என்று  சொல்வதைத் தான், இதுவரை நாம் கேட்டிருக்கிறோம்.  
கடிதங்களில் ஆங்காங்கே கவித்துவமான வரிகளுக்கும் பஞ்சமில்லை.  தண்ணீரைப் பற்றிய அழகான வர்ணனை இது:-
எத்தனை நிறப் பிறப்புகளில் தான், இந்தத் தண்ணீர் விளங்குகிறது!
வெள்ளி நுரையாக வழியும் குற்றால அருவித் தண்ணீர், பச்சை நிறமாக விளங்கும் திருச்செந்தூர் அலைகடல், நீலக்கம்பளத்தில் வெள்ளியால் ஆங்காங்கே ஜரிகைப் புட்டா இட்டது போலத் தெரியும் குமரிக்கடல், யானைக்கலரில் தெரியும், கரிசல் குளத்தின் புதுவெள்ளம்,  இப்படி எத்தனை?”
இயல்பிலேயே இவர் நகைச்சுவை உணர்வு மிக்கவர் என்பதை, இவர் புனைவுகள் மட்டுமின்றிக் கடிதங்களும் உறுதிபடுத்துகின்றன. ஆங்காங்கே மெல்லிய நகைச்சுவை இழையோட, இவர் எழுதும் கடிதங்கள், ரசித்து இன்புறத்தக்கவை.
அன்பர் தீ.ராமசாமி அவர்களுக்கு, உடற்பயிற்சி சொல்லும் கடிதம், இதற்கு ஓர் உதாரணம்.
பிறந்தமாத வயதுடையகுழந்தைகள் கால்களால் காற்றை உதைத்துக் கொண்டு அழுகிறது, ஏன் தெரியுமா?  வயிறு நிறைய உண்ட பாலை ஜீரணிப்பதற்குத் தான்.  நான் சொல்லும் பயிற்சியும், இதிலிருந்து உண்டானது தான்.  மல்லாந்து படுத்துக் கொண்டு, கால்களை உயர்த்தி சைக்கிளை பெடல் செய்வது போல்கொஞ்சம் நிதானமாக, அப்புறம் வேகமாக செய்தால் போதும்.  (குழந்தை மாதிரி, குவா குவா என்று அழ வேண்டியதில்லை)
அலைபேசி, குறுஞ்செய்தி,  மெயில் போன்ற நவீன தகவல் தொழில்நுட்ப வசதிகள் பெருகி விட்ட இந்நாளில், கடிதம் எழுதும் பழக்கம் அறவே மறைந்து விட்டது. 
வீட்டை விட்டு வெகுதூரம் பிரிந்திருக்கும் போது, நெருங்கிய உறவுகளிடமிருந்து பாசத்தைக் கொட்டி எழுதப்பட்ட கடிதம் வராதா என்று தினந்தினம் தபால்காரரை எதிர்பார்த்துக் காத்திருந்த சென்ற தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்குத் தான், கடிதத்தின் அருமை புரியும்.  காலம் தொலைத்து விட்ட எத்தனையோ நல்ல விஷயங்களில்,, கடிதமும் ஒன்று.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, இத்தனை கடிதங்களையும் பலகாலம் பாதுகாத்து வைத்திருந்து, அதைத் தொகுப்பாக வெளியிட்ட கி.ரா அவர்களுக்கும், பதிப்பாளர்களுக்கும், தமிழ்ச் சமூகம் நன்றிக்கடன் பட்டிருக்கிறது.






4 comments:

  1. கடிதம் எழுதுவதும் இலக்கிய வகைப்பாட்டுக்குள் அடங்குகிறது என்றறிய வியப்பும் மகிழ்ச்சியும். கடித இலக்கி யத்தில் கி.ரா. அவர்களின் பங்களிப்பு பற்றி அறிய அறிய ஆச்சர்யம் மேலிடுகிறது. கடிதங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். வட்டார வழக்கு அகராதி பெரிய முயற்சி. கடித இலக்கியத்தில் கி.ரா. அவர்களின் பங்களிப்பு குறித்த ஆழமான அலசலுக்குப் பாராட்டுகள் அக்கா.

    ReplyDelete
    Replies
    1. ஆம் கீதா. கடிதமும் இலக்கியத்துள் ஒரு வகையாகச் சேர்த்திருக்கிறார்கள். இது நான் எப்போதோ எழுதியது. எல்லாவற்றையும் சேமிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இங்குச் சேர்த்திருக்கிறேன். நன்றி கீதா!

      Delete
  2. உங்கள் கட்டுரைகளையும் விமர்சனங்களையும் வலைப்பூவில் தொகுக்கத் தொடங்கியிருப்பது மகிழ்வளிக்கிறது. மற்றவற்றையும் விரைவில் வாசித்துக் கருத்திடுவேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆம் கீதா. வலைப்பூவுக்கு வராத காலத்தில் எழுதியவற்றைத் தொகுக்கத் துவங்கியுள்ளேன். நன்றி கீதா!

      Delete