நல்வரவு

வணக்கம் !

Wednesday 2 September 2020

சிறார் இலக்கியம் குறித்துக் கலந்துரையாடல்


அனைவருக்கும் வணக்கம்.

வட அமெரிக்காவிலிருந்து வெளியாகும், வலைத்தமிழ் மொட்டு எனும் சிறார் மின்னிதழுக்காக, அவர்களது வலைத்தமிழ் டிவியில், சிறார் இலக்கியம் குறித்து, நெறியாளர் பிரவீணாவுடன், 30/08/2020 மாலை மணி 6 முதல் 7 மணிவரை, கலந்துரையாடும் வாய்ப்புக் கிடைத்தது


சிறார் இலக்கியத்தில் தற்போது தான், அடியெடுத்து வைத்திருக்கிறேன் என்றாலும், அனுபவங்களின் அடிப்படையில், என் கருத்துக்களை முன்வைத்தேன்.

அண்ணா நினைவு சிறார் சிறுகதை போட்டி 2020 க்காக, அமேசான் கிண்டிலில், நான் வெளியிட்டிருக்கும்ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு,’ என்ற தொகுப்பின் இணைப்பு இங்கே:-   https://www.amazon.in/dp/B086YW54L4

முயல், ஆமை போன்ற பழைய கதைகளைக் காலத்துக்கேற்றபடி, எந்த மாற்றமும் செய்யாமல், அப்படியே சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை என்பதை எடுத்துரைத்தேன்

இந்த அவசர உலகில், ஒரு நொடி தாமதித்தால் கூட, வெற்றி வாய்ப்பை இழந்துவிட நேரும் காலக்கட்டத்தில், ஆமை மெதுவாகப் போனாலும், வென்று விட முடியும் என்ற கருத்தை, வலியுறுத்தும் கதைகள், காலாவதியாக வேண்டும்காலத்துக்கேற்றபடி, மாற்றிக் கதைகள் சொல்ல வேண்டும்; மேலும் போட்டியில் பங்குக் கொள்பவர்கள் இருவரும், சமபலம் உள்ளவர்களாக இருக்க வேண்டும்; அது தான் சமூக நீதி என்பதை, அமேசான் கிண்டிலில் நான் வெளியிட்டிருக்கும் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு,’ என்ற தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் புதிய  முயல், ஆமை கதையைச் சொல்லி, விளக்கினேன். இக்கதை பிரதிலிபி நடத்திய அம்புலி மாமா சிறார் கதைப்போட்டியில், முதல் பரிசு பெற்றது.

அம்புலி மாமா சிறார் கதைப்போட்டி

அண்ணா நினைவு சிறுவர் சிறுகதைப் போட்டியில் கலந்து கொண்டதன் வாயிலாக, திருமதி வித்யா செல்வம் அவர்களை ஆசிரியராகக் கொண்டு, பெண்கள் பலரும் சேர்ந்து, சிறுவர்களுக்காகப் பூஞ்சிட்டு மின்னிதழை 15/07/2020 ல் துவக்கியிருப்பதைச் சொன்னேன்

https://www.poonchittu.com/

கார்ட்டூன்களிலும், இணையத்திலும்  நேரத்தைச் செலவழிக்கும் குழந்தைகளுக்கு, வாசிப்பில் நாட்டத்தை ஏற்படுத்தும் வழிகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடினோம்.

ஆங்கில சிறார் இலக்கியத்துடன் ஒப்பிடும்போது, இன்றைய நம் தமிழ்ச் சிறார் இலக்கியத்தின் போதாமைகள் குறித்துப் பேசினோம். மேலும்  கலந்துரையாடலில் சொல்லப்பட்ட கருத்துகளுள் சில:-.

தமிழ்ச் சமுதாயத்தில் வாசிப்புப் பழக்கம், மிகவும் குறைவுஇன்றைய சிறார்கள் தாம், நாளைய குடிமக்கள்குழந்தைகளுக்குச் சிந்தனை வளரவும், பன்முகத்திறமை பெருகவும், வாசிப்பு அவசியம்

பிள்ளைகளுக்குப் பெற்றோர் தாம் முன்மாதிரிஎனவே குழந்தைகளுக்கு வாசிப்புப் பழக்கம் ஏற்பட வேண்டுமென்றால், பெற்றோர் முதலில் வாசிக்க வேண்டும்.

புத்தகங்கள் வாங்குவதைப் பெற்றோர், அறிவுக்கான முதலீடாகப் பார்ப்பதில்லை; குழந்திகளின் பிறந்த நாளின் போது, ஆயிரக்கணக்காகச் செலவு செய்து, கேக், ஐஸ்கிரீம், உடைகள் வாங்கும் பெற்றோர் நூறு ரூபாய் கொடுத்து, புத்தகம் வாங்க யோசிக்கிறார்கள்.

புத்தகக் காட்சியில் பாடப்புத்தகங்களுடன், சம்பந்தப்பட்ட புத்தகங்களையே வாங்கிக் குழந்தைகளுக்குக் கொடுக்கிறார்கள்கதைப்புத்தகம் வாங்கித் தர மறுக்கிறார்கள்.

பள்ளிகளில் ஆசிரியர்கள் கதைகள் சொல்லி, பாடப்புத்தகத்துக்கு வெளியேயான வாசிப்பை, மாணவர்களிடம் ஊக்குவிக்கவேண்டும்.  ஆசிரியர்கள் வாசிப்புப் பழக்கம் உள்ளவராக இருத்தல் அவசியம்.

வாரம் ஒரு முறையாவது, நூலக வகுப்பு இருக்க வேண்டும்நூலகத்துக்கு அழைத்துச் சென்று, அவர்கள் விரும்புகிற புத்தகங்களை, எடுத்து வாசிக்க அனுமதிக்க வேண்டும்.

வீட்டில் பெரும்பான்மையான நேரம், குழந்தைகளோடு செலவழிக்கும் பெண்கள், ஏன் சிறார் இலக்கியத்தில், பெரும்பான்மையாக இல்லை என்பது குறித்துக் காரணங்களை அடுக்கினேன்.

இன்னும் விரிவாக, கலந்துரையாடலை அறிந்து கொள்ள விழைவோருக்காகக் காணொலியின் இணைப்பை, மேலே  பகிர்ந்திருக்கிறேன்

நன்றி.


2 comments: