நல்வரவு

வணக்கம் !

Monday, 20 July 2015

பெருகி வரும் ஏ.டி.எம். கார்டு மோசடிகள் – உஷார்!




முன்னெப்போதும் இல்லாத அளவில், தற்போது ஏ.டி.எம் கார்டு மோசடிகள் அதிகரித்து விட்டன.  இதில் வேடிக்கை என்னவென்றால்,  காவல் துறை உயர் அதிகாரிகள் கூட இம்மோசடிப் பேர்வழிகளிடம் ஏமாந்து, பணத்தைப் பறி கொடுத்திருப்பது தான்.

கடந்த ஏப்ரல் மாதம் கர்நாடகா டி.ஜி.பி,  ஓம் பிரகாஷ்  அவருக்கு வந்த கைபேசி அழைப்பு, வங்கியிலிருந்து வந்ததாக நம்பி, ஏ.டி.எம். கார்டு  மற்றும்  அதன் ‘பின்’ (PIN – PERSONAL IDENTIFICATION NUMBER) எண்களைச் சொல்லி, ரூபாய் பன்னிரண்டாயிரத்தை இழந்தார்.  அதே போல் திண்டுக்கல் காவல் துறை கண்காணிப்பாளரும், பதினான்காயிரம் ரூபாயைப் பறிகொடுத்தார். 

Friday, 17 July 2015

மரங்களைக் காப்பாற்றுங்கள்



இன்றைய காலக்கட்டத்தில்  மரக்கன்றுகளை நடுங்கள் என்று குரலெழுப்புவதற்குப் பதிலாக, இருக்கின்ற மரங்களையாவது காப்பாற்றுங்கள் என்று கூக்குரலிடுவது அவசியத் தேவையாயிருக்கிறது; அவசரமும் கூட.
 .
காலநிலை மாற்றத்திற்கும், மரங்களுக்கும் உள்ள பிணைப்புப் பற்றியும், சுற்றுச்சூழலுக்கும், மரங்களுக்கும் இடையேயான நெருங்கிய உறவு பற்றியும், வாய்கிழிய பேசுகின்றோம்; மரமின்றி மழையில்லை, மழையின்றி  நீரில்லை;  சுட்டெரிக்கும் கத்திரி வெயிலால் இவ்வாண்டு அதிகளவில் மரணம் என்றெல்லாம் புலம்புகின்றோம்.
     
ஆனாலும் ஆண்டுதோறும் புயல், மழை, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களுக்குப் பலியானது போக, எஞ்சி நிற்கின்ற மரங்கள் சாலை விரிவாக்கம், வீடு கட்டுதல், தூசி விழுதல், கடத்தல் போன்ற காரணங்களுக்காகத் தொடர்ந்து வெட்டப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.
       
தமிழகத்தில் போராட்டம் என்ற பெயரில் ஒரு கட்சி, தெருவோரங்களில் இருந்த தொன்மையான மரங்களை எல்லாம் வரலாறு காணாத வகையில், ஒரே இரவில் வெட்டிச் சாய்த்துப் போக்குவரத்தைத் தடுத்து நிறுத்திப் புதிய சாதனை படைத்தது!

இன்னொரு கட்சி தமிழுக்குச் செம்மொழி மாநாடு நடத்துகிறேன் என்று சொல்லிக் கோவையிலிருந்த பல நூறு மரங்களை வெட்டி, ஊரைப் பொட்டல் திடலாக ஆக்கியது.    

பிரும்மாண்ட தட்டிகளை வைத்து விளம்பரங்கள் செய்தல், அரசியல் வாதிகளுக்குக் கண்ட கண்ட இடங்களில் வரவேற்பு நுழைவாயில்கள் அமைத்தல், தோரணங்கள்  மாட்டுதல் போன்ற பல காரணங்களுக்காகப் பெரிய பெரிய கிளைகளைத் துண்டாடி மரத்தை மொட்டையடித்து மூளியாக்குகின்றனர்.  இதனால் மரம் பட்டுப் போய்விடுகின்றது. 

போதாக்குறைக்கு அவ்வப்போது நடத்தப்படும் மரம் நடு விழாக்களும், எஞ்சியிருக்கின்ற மரங்களுக்குச் சாவு மணி அடிக்கின்றன என்பது தான் வேதனையான உண்மை. 

எழுத்தாளர் கி.ராஜ்நாராயணன் எழுதியது இது.  மந்திரி தலைமையில்  மரம் நடு விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு, நூறு மரக்கன்றுகள் நடப்பட்டதாம்.  சில மாதங்கள் கழித்து, நட்டவற்றில் எத்தனை பிழைத்திருக்கின்றன என்று கேட்டதற்கு  

'நட்டது நூறு,  செத்தது  நூத்தியொன்னு,' என்றாராம் உதவியாளர்.  'அதெப்படி?'  என்று விழித்தவருக்கு, கன்றுகள் நடுவதற்கு நூறு
போத்துகள்  வெட்டியதில், இருந்த ஒரு மரமும் செத்து விட்டது என்றாராம்.  எனவே அரசியல்வாதிகள் நடத்தும் மரம் நடு விழாக்கள், இப்படித்தான் இருக்கின்ற மரத்தையும்  சாகடிக்கும் கேலிக்கூத்தாகயிருக்கின்றன. 


மரங்களை வளர்த்து இயற்கையைப் பேணுவதில் இவர்களுக்கு உண்மையான அக்கறையிருக்குமானால், கோலாகலமாக விழா நடத்தி மரக்கன்று நடுவதுடன்,  அது வேர் பிடிக்கும் வரைத் தினமும் தண்ணீர் ஊற்றிக் கவனிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.   அல்லது மழைக்காலம் துவங்குவதற்கு முந்தைய மாதத்தில், இவ்விழாவை நடத்த வேண்டும்.  செய்வார்களா? 

ஒரு நாள் கூத்தாக கடுங்கோடையில் மரம் நடுவிழா நடத்திக் கன்றுகளை நடுவது போல் ‘போஸ்’ கொடுத்து பத்திரிக்கையில் பெரிய படம் போட்டு விளம்பரம் தேடிக்கொள்வதே அரசியல்வாதிகளின் உண்மையான நோக்கம்.

சுற்றுச்சூழல் பற்றியும் இயற்கையைப் பேணுதல் குறித்தும் நம்  எழுத்தாளர்களும் அவ்வப்போது குரலெழுப்பித் தம் பங்களிப்பைச் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.  காலச்சுவடு இதழின் நிறுவனர் மறைந்த எழுத்தாளர் திரு. சுந்தர ராமசாமியின் புகழ்பெற்ற நாவல் ‘ஒரு புளிய மரத்தின் கதை.’  இக்கதையின் கரு பற்றி ஆசிரியர் முதல் அத்தியாயத்தில் என்ன கூறுகிறார் கேளுங்கள்:-

”மறக்க முடியாத விஷயங்களும் சில உண்டு தானே? அதில் ஒன்று தான் புளியமரத்தின் கதையும்.

சொல்லப்போனால் புளியமரம் என்ன செய்தது? சும்மா நின்று கொண்டு தானே இருந்தது? மனிதனின் அலகிலா விளையாடல்களுக்கு மெளன சாட்சியாக நின்றதே அல்லாமல் எதிலாவது பங்கெடுத்துக் கொண்டதா? பட்டுக்கொண்டதா? மனித ஜாதிக்கு அது இழைத்த கொடுமை தான் என்ன? யாரைப் பார்த்துக் கை நீட்டிற்று? யாரை நோக்கிப் பல்லிளித்தது? யாருடனாவது சேர்ந்து கொண்டு, யாருக்கேனும் குழி பறித்ததா?
 

ஆனால் நாட்டையும், பணத்தையும் பெண்டுகளையும் அதிகாரத்தையும், புகழையும் காயாக வைத்து விளையாடிய மனிதன், புளியமரத்தை மட்டும் விட்டு வைக்கிறேன் என்கிறானா? அதையும் காயாக வைத்து விளையாடித் தீர்த்து விட்டான். புளியமரம் அழிக்கப்பட்டது.”
 

இதே கதையில் காற்றாடி மரத்தோப்பு அழிக்கப்பட்டு நவீன பூங்கா அமைக்கும் பணி விவரிக்கப்படுகிறது. தோப்பு மரம் ஒவ்வொன்றாக வெட்டப்பட்டு வீழ்வதைக் காணச் சகிக்காமல், முதியவர் ஒருவர், இளைஞனிடம் கேட்கிறார்:-

”தம்பி, எதுக்குடேய் மரத்தெ வெட்டிச் சாய்க்கிறாங்க?”

”செடி வைக்கப் போறாங்க” 

”எதுக்கு டேய், செடி வைக்கப் போறாங்க?”
”காத்துக்கு”

”மரத்தெக் காட்டிலும், செடியாடேய் கூடுதல் காத்துத் தரும்?”

”அளகுக்கு”

”செடிதான் அளகாட்டு இருக்குமோ?”

”உம்”

”செடி மரமாயுடாதோவ்?”

”மரமாட்டு வளராத செடி தான் வைப்பாங்க. இல்லை வெட்டி வெட்டி விடுவாங்க”

”வெட்டி வெட்டி விடுவாங்களா?”

”ஆமா”

”அட, பயித்தாரப் பசங்களா!” 

நவீனமயம் என்ற பெயரில் தோப்பை அழிக்கும் மனிதனின் பைத்தியக் காரத்தனத்தை இவ்வுரையாடல் மூலம், ஆசிரியர் எப்படிக் கிண்டல் செய்கிறார் பாருங்கள்!

எவ்வளவு தான் எடுத்துச் சொன்னாலும், இன்னும் நம் மக்களுக்கு
சுற்றுச்சூழலைப் பேணுவது குறித்தோ, மரங்களின் அருமை பற்றியோ போதிய விழிப்புணர்வு வந்தபாடில்லை.  புவி வெப்பமயமாதலைத் தடுக்க மரங்களைக் காக்க வேண்டியதன் அவசியத்தை இவர்கள் உணரும் வரை, நாமும் திரும்பத் திரும்ப இது பற்றிப் பேசிக் கொண்டோ, எழுதிக் கொண்டோ  இருக்க வேண்டியது தான்; வேறு வழியில்லை.

முடிவாக கவிஞர் தேனம்மை லெக்ஷ்மணன் எழுதிய ‘காயின் ருசி’ என்ற கவிதையிலிருந்து, என்னைக் கவர்ந்த சில வரிகள்:-

தூசி விழுகிறது, முகத்தில் கிளை இடிக்கிறது, பூச்சி வருகிறது  என்று    ஏதேதோ காரணம் சொல்லி மரமொன்றை வெட்டிச் சாய்த்து விடுகிறார்கள். நடு இரவில் கிளை தழைகளோடு, ஜன்னல் வழி வந்து   கன்னந் தழுவிய  நிலா, இப்போது மொட்டையாக….….
“காக்கைகளும், குருவிகளும்
வண்டுகளும் இல்லாமல்
கண்கள் காயும் வெளிச்சத்தில்
வறண்டு கிடந்தது சிமெண்ட் தரை.
இலையிழந்து, அழகிழந்து, களையிழந்து
மொட்டையடித்தது போல் நிலவு
நடுநிசி விழிப்பில், ஜன்னல் வழி அசைந்து
கன்னம் வருடும் சுகமிழந்து துக்கமாய்…. …..”


(நான்கு பெண்கள் இணைய இதழில் 17/06/2015 அன்று வெளியானது)

(படம் நன்றி இணையம்)

Monday, 6 July 2015

நூல் அறிமுகம்:- வண்ணத்துப்பூச்சிகள் அறிமுகக் கையேடு


நூல் அறிமுகம்:- வண்ணத்துப்பூச்சிகள்
அறிமுகக் கையேடு
ஆசிரியர்:- டாக்டர் ஆர்.பானுமதி
க்ரியா வெளியீடு
முதற் பதிப்பு – ஜனவரி 2015 
விலை ரூ.295.

வண்ணத்துப்பூச்சியைப் பற்றித் தமிழில் வெளியாகும் முதல் கையேடு என்ற சிறப்பைப் பெறும் நூலிது.

ஒரு வண்ணத்துப்பூச்சியைக் கண்டவுடன்,, அதன் இனம், குடும்பம், பண்பு, ஆங்கிலப்பெயர் ஆகியவற்றை அறிந்து கொள்ள, இந்நூல் பெரிதும் உதவுகிறது.  களத்திற்கு எடுத்துச் செல்ல வசதியாக, இது வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இதில் 90 இனங்களைப் பற்றிய விபரங்கள், நிழற்பட வல்லுநர்கள் எடுத்த 230 தெளிவான அழகான படங்களுடன் தொகுக்கப்பட்டுள்ளன. 

பக்கத்திற்கொன்றாக வண்ணத்துப்பூச்சியின் படம் வெளியிட்டு அதைப் பற்றிய குறிப்புகள், புழுக்களுக்கு உணவாகும் தாவரங்கள் போன்ற விபரங்களைக் கொடுத்திருக்கிறார்கள்.  என்றென்றும் குறிப்புப் பெட்டகமாகத் (reference book) நம்முடனே இருக்க வேண்டிய நூல் இது. 

இது நாள் வரையிலும், இப்பூச்சியினத்தின் அனைத்து வகைகளையும் வண்ணத்துப்பூச்சி என்ற ஒற்றை சொல்லிலேயே அழைத்து வந்திருக்கிறோம்.  ஒவ்வொன்றையும் சரியான முறையில் அடையாளங் காண தனித்தனிப் பெயர் இல்லை என்பது பெரிய குறை. 

இக்குறையைப் போக்கும் வண்ணம், பூச்சியின் இறக்கை நிறம், அதன் புழுக்களுக்கு உணவாகும் தாவரம், போன்றவற்றின் அடிப்படையில், கள ஆய்வாளர்களின் உதவி கொண்டு, ஒவ்வொன்றுக்கும் அழகிய தமிழில்  பெயர் சூட்டுவிழா நடத்தியிருக்கிறார் ஆசிரியர்!

வண்ணத்துப்பூச்சியைப் போலவே பெயர்களும் அழகாக இருக்கின்றன!
காட்டுக்குச் சில:-

நாமத்தாவி
வெளிர்சிவப்பு வெள்ளையன்
செஞ்சிறகன்
சாம்பல் வசீகரன்
பொன்னழகி
கத்திவால் அழகி
பறவைகளைக் கூர்ந்து கவனிப்பது போலவே, வண்ணத்துப்பூச்சிகளையும் கவனிப்பது பயனுள்ள பொழுது போக்கு.  இந்நூலில் நான் அறிந்து கொண்ட சுவாரசியமான சில தகவல்களை, உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்:-


  •   வண்ணத்துப்பூச்சி லிபிடோப்டெரா (Lepidoptera) என்ற வரிசையைச்     சேர்ந்த பூச்சியினம்;  இவ்வரிசையைச் சேர்ந்த இன்னொன்று அந்திப்பூச்சி (Moth).
  •  பருவகால மாற்றங்கள் காரணமாக, சில இனங்களின் இறக்கையில் உள்ள குறிகளில் மாற்றம் ஏற்படும்.
  • குளிர் இரத்த இனத்தைச் (cold blooded) சேர்ந்தது என்பதால், வெயிலில் குளிர் காயும்.
  • சுற்றுப்புற தட்ப வெப்ப நிலைக்கேற்ப, பறவைகள் போல் வலசை (migration) போகும்.
  • ஆயுட்காலம்: சிறிய பூச்சி:- ஒரு வாரம்.  பெரியது:-எட்டு மாதங்கள். 
  • ஆண்பூச்சிக்கு இனப்பெருக்கக் காலத்துக்குத் தேவையான உப்பு, புரதம்,  தாது பொருட்கள் ஆகியவற்றுக்காக பறவைகளின் எச்சம், விலங்குகளின் சிறுநீர், சாணம் ஆகியவற்றிலிருந்து நீர் உறிஞ்சும்.
  • உலகில் சுமார் 18000 இனங்கள் இருக்கின்றன.  இந்தியாவில் ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 1800 இனங்கள் உள்ளன.

மகரந்தச் சேர்க்கைக்கு மிகவும் உதவி செய்யும் வண்ணத்துப்பூச்சியின் நூற்றுக்கும் மேற்பட்ட இனங்கள், இரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளின் விளைவால் அழிந்துவிட்டன;  பல அழியுந்தருவாயில் உள்ளன..

மண்புழு போல விவசாயியின் நண்பனான இப்பூச்சியினத்தைப் பாதுகாக்க இந்நூல் சொல்லும் சில வழிமுறைகள்:-

  • வண்ணத்துப்பூச்சியைப் பற்றிப் பள்ளி, கல்லூரி மாணவரிடையே
  விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
  • புழுக்களுக்கு  உணவாகும் தாவரங்களைத் தோட்டம், வயல்வெளிகள், பூங்காக்களில் பயிரிடுதல்.
  • இவற்றுக்கான பூங்காக்கள் அமைத்தல்
  • இதன் வாழ்க்கை சுழற்சியை (life cycle) கள ஆய்வாக, மாணவர்க்கு அறிமுகப்படுத்துதல்.


பள்ளிப் போட்டிகளில் மாணவர்க்குப் பரிசளிக்க உகந்த நூல் இது.  குழந்தைகளின் பிறந்த நாளின் போது, பொம்மைக்குப் பதிலாக இதனைப் பரிசளித்து, இயற்கையை நேசிக்கக் கற்றுக்கொடுங்கள்.

(நான்கு பெண்கள் தளத்தில் 17/06/2015 வெளியானது)

Saturday, 20 June 2015

தந்தையர் தினம் - 21/06/2015

’அப்பா என்றால் அறிவு’
’தந்தை சொல் மிக்க மந்திரமில்லை,’
’அவையத்து முந்தியிருக்கச்
செய்பவன் தந்தை,’யென
அனைவரும் ஏற்கெனவேயறிந்த
அப்பாவின் அருமை பெருமைகளை
அடுக்குவதல்ல என் விருப்பம்..

தந்தை என்கிற தகைசால் உறவு
எனக்குள் உண்டாக்கிய பிம்பங்களை
என்னுள் ஏற்படுத்திய மாற்றங்களை
எடுத்துரைப்பதே என் நோக்கம்..

இனி என் தந்தையைப் பற்றி:-

  
ஞானத்தின்பால் நீங்கள் கொண்ட
அளவிலா வேட்கையினை ஊகித்துத்தான்
ஞானப்பால் குடித்தவரின் பெயரைச்
சூட்டினாரோ உம் பெற்றோர்?


அன்று உங்கள் விரல் பிடித்தெழுதி
அரிச்சுவடி கற்றுக் கொண்டேன்.
இன்று உங்கள் வாழ்வைப் படித்தறிந்து
உலகம் கற்றுக் கொள்கிறேன்.

கீழே விழுந்து அடிபட்டவனைப் பார்த்து
விழுந்து விழுந்து நான் சிரித்த போது
’துன்பத்தில் இருப்பவனைப் பார்த்துச் சிரிப்பது
மனித நேயமன்று,’ எனக் கற்றுக் கொடுத்தீர்!

பணமென்றால் பிணமும் வாய் திறக்குமாம்
அப்பணத்தைத் துச்சமென மதித்து
மாற்றாந்தாய் மகனாக மறுத்து
அயல்நாட்டுக் குடியுரிமையைத்
தூக்கியெறிந்த செயல் அறிந்து உமது
தாய்நாட்டுப் பற்றைப் புரிந்து கொண்டேன்..

நோயாளியாகி படுத்த படுக்கையான
துணைவிக்குச் செவிலித் தாயாக
நீவிர் புரிந்த சேவகம் கண்டு
வாழ்க்கைத் துணைக்காற்ற வேண்டிய
பொறுப்புக்கள் உணர்ந்தேன்.

அன்று இறகுப் பேனாவில்
மை தோய்த்து எழுதிய விரல்கள்
இன்று கணிணி விசைப்பலகையில்
தமிழ்த் தட்டச்சு செய்கின்றன!
’கற்பதற்கு வயது ஒரு தடையில்லை,’யென்கிற
உண்மையை அல்லவா அவையெனக்கு
உணர்த்தி நிற்கின்றன?

புத்தாண்டு துவக்கத்தில்
பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லும்
ஒவ்வொரு முறையும்
இது கடைசி வாழ்த்தாக
இருந்து விடக்கூடாதேயென
மனதின் ஒரு மூலையில்
பதைபதைப்பு இருக்கத் தான் செய்கிறது!

அன்பு ஆசானே! அருமை தந்தையே!
அன்னைக்குப் பிறகு தாயுமானவரே!
’பணம் மட்டுமே வாழ்க்கையில்லை,’யென்ற
உண்மையை வாழ்ந்து காட்டியவர் நீங்கள்!
அடுத்தபிறவி என்ற ஒன்று எனக்கிருந்தால்
உம் செல்ல மகளாகவே
மீண்டும் பிறக்க விரும்புகின்றேன்!
   


Thursday, 18 June 2015

பசுமைப் புரட்சியின் வன்முறை - நூல் அறிமுகம்

பசுமைப் புரட்சியின் வன்முறை
ஆசிரியர் வந்தனா சிவா
முதற்பதிப்பு டிசம்பர் 2009
இரண்டாம் பதிப்பு:- டிசம்பர் 2013
வம்சி/பூவுலகு வெளியீடு
விலை ரூ 140/-

டெல்லியில் வசிக்கும் சுற்றுச்சூழல் ஆர்வலரும், உலகமயமாக்கலுக்கு எதிரான எழுத்தாளருமான முனைவர் வந்தனா சிவா எழுதிய The Violence of the Green Revolution (1992)  என்ற நூலின் மொழிபெயர்ப்பு இது. 
நூலாசிரியரைப் பற்றி வேம்புக்கான காப்புரிமையைப் பன்னாட்டு நிறுவனத்திடமிருந்து மீட்ட போராளி என்று மட்டும் பின்னட்டையில் குறிப்பிட்டிருக்கிறார்கள்;  அவரைப் பற்றி வேறு எந்த விபரமும் இல்லை.  மொழி பெயர்ப்பாளர் யார் என்றும் தெரியவில்லை.



வந்தனா சிவாவைப் பற்றித் தெரியாதவர்களுக்காக, சிறு அறிமுகம்:-   
கனடா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையில் குவாண்டம் கோட்பாட்டில் முனைவர் பட்டம் பெற்ற இவரின் கவனத்தை,1984ல் ஏற்பட்ட பஞ்சாப் கலவரமும், போபால் விஷ வாயுக்கசிவு விபத்தும், வேளாண்மை பக்கம் திருப்பின.

தற்போது இயற்கையைப் பாதுகாக்கவும், இயற்கை வளங்களின் மீதான நம் மக்களின் உரிமையைக் காக்கவும் போராடிவரும் இவர், இரண்டாம் பசுமைப்புரட்சி என்ற பெயரில் மரபணு மாற்றப்பட்டு அறிமுகம் செய்யப்படும் பி.டி. கத்தரிக்காயைத் தீவிரமாக எதிர்க்கிறார்.  முன்பிருந்த இரசாயன பூச்சிக்கொல்லி, உரத்தொழிற்சாலைக்குப் பதிலாக செடியே இப்போது விஷக்கொல்லி ஆலையாகிவிட்டது என்பது இவர் எதிர்ப்புக்குச் சொல்லும்  காரணம்.

‘நவதான்யா,’ என்ற அமைப்பை நடத்தும் இவர், நம் நாட்டு வேளாண் உணவு உற்பத்தியிலும், பதப்படுத்துவதிலும் பெண்களின் பங்கு கணிசமானது என்கிறார்.

தொழிற்சாலையில் பதப்படுத்தும் வேலை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது’; ஆனால் பாரம்பரிய முறையில் வீட்டில் ஊறுகாய் போன்றவற்றைத் தயாரித்துப் பதப்படுத்துவதில்  செலவிடப்படும் பெண்களின் உழைப்பு வேலையாகவே கருதப்படுவதில்லை என்பது இவர் ஆதங்கம். 

இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை இவர் எழுதியிருக்கிறார்.  இவரைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள:-- http://vandanashiva.org/

1960 களில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப் பட்ட பசுமைப் புரட்சிக்குப் பிறகு, அபரிமித வளத்திற்குப் பதிலாக,  மிஞ்சியதெல்லாம் நோயால் பீடிக்கப்பட்ட மண்ணும், பூச்சியால் தாக்கப்பட்ட பயிர்களும் பெருங்கடனாளியாகியுள்ள, திருப்தியற்ற விவசாயிகளுமே என்கிறார்  ஆசிரியர்.

இந்நூலிலிருந்து முக்கிய கருத்துக்கள் மட்டும், உங்கள் பார்வைக்கு:-

  •  1950 களில் நார்மன் போர்லாக் என்பவர் குட்டையான உயர் விளைச்சல் கோதுமை ரகத்தை உருவாக்கியபோது பசுமைப்புரட்சி என்ற புதிய மதம் பிறந்தது.  அற்புத விதைகள் மூலம் அதிக உற்பத்தி என்ற தாரக மந்திரத்தை அது பரப்பியது.

·         1970 ல் இவருக்கு அமைதி நோபெல் பரிசு வழங்கப்பட்டது.  இவர் கண்டுபிடித்த மாயவிதை,  அபரிமித உற்பத்தி மற்றும் அமைதிக்கான ஆதாரமாக நோக்கப்பட்டது  இந்தியாவில் பஞ்சாபில் வெற்றிகரமாக வெள்ளோட்டம் விடப்பட்டது.


·         இந்தியாவிற்குள் பசுமைப்புரட்சியின் முக்கிய ஆதரவாளர்களாக இருந்தவர்கள் 1964 ல் வேளாண்மை அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியனும், 1965ல் இந்திய வேளாண்மை ஆய்வு நிறுவன இயக்குநர் எம்.எஸ்.சுவாமிநாதனும் ஆவர்.

·         20 ஆம் நூற்றாண்டின் இறுதியில் நஷ்டம் தாங்க முடியாமல் லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். 1960 களில் பட்டினியை விரட்டுகிறேன் என்ற பெயரில், நம் அரசு நடைமுறைப்படுத்திய பசுமைப் புரட்சி தான் இதற்குக் காரணம்.


·         இரண்டாம் உலகப்போரில் போருக்காகப் பன்னாட்டு நிறுவனங்கள்  உற்பத்தி செய்த பாஸ்பேட், நைட்ரேட், பொட்டாஷ் போன்ற வேதிப்பொருட்கள் பெருமளவு எஞ்சின; அவற்றை விற்றுத் தீர்ப்பதற்காகவே நவீன வேளாண்முறையைக் கொண்ட பசுமைப்புரட்சி உருவாக்கப்பட்டது.

·         மூன்றாம் உலக நாட்டு விவசாயிகளுக்கும், அறிவியல் அறிஞர்களுக்கும் தங்கள் நாட்டு வேளாண்மையில் மேம்பாடு செய்வதற்கான திறனில்லை என்று ராக்பெல்லர் நிறுவன அறிஞர்கள் கருதினர்.  அதிக உற்பத்திக்கான விடை, அமெரிக்க பாணி வேளாண்மை அமைப்பில் இருப்பதாக அவர்கள் எண்ணினர்..

·         பல நூற்றாண்டுகளாக உருவாக்கப்பட்டுத் தலைமுறை தலைமுறையாக உள்ளூரில் பயிர் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான தாவர வகைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டுப் புதிய ரகங்களை உருவாக்கினர்.  புதிய ரகங்களுக்கு அதிகளவில் செயற்கை வேதி உரங்கள், பூச்சிக்கொல்லிகள், மற்றும் நீர் தேவைப்பட்டது.  வேளாண் செலவு பன்மடங்கு அதிகரித்தது.

·         உயரமான பாரம்பரிய இனங்கள் வயலில் இடப்படும் உரச்சத்துக்களைத் தாவரத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்குப் பயன்படுத்திக்கொண்டன.  ஆனால் குட்டை ரகங்கள் அவற்றைத் தானிய மணிகளாக மாற்றும் திறன் படைத்திருந்தன. முதலாவதில் கால்நடைக்குத் தேவையான வைக்கோல் கிடைத்தது.  ஆனால் புதிய முறையில் வைக்கோல் பற்றாக்குறை ஏற்பட்டது.


·         செயற்கை உரம், பூச்சிக்கொல்லி மருந்து இல்லாவிட்டால் புதிய ரகங்கள், உள்ளூர் ரகங்களை விடக் குறைவான விளைச்சலையே தரும்.  விளைச்சலால் கிடைக்கும் லாபம், இடுபொருட்களின் செலவை விட மிகக் குறைவாகவே உள்ளது என்கிறார் டாக்டர் பால்மர். 

·         பசுமைப்புரட்சிக்குப் பிறகு வேதி உரங்களின் உபயோகம் 30 மடங்கு அதிகரித்தது.  பஞ்சாபில் கொடுக்கப்பட்ட வேளாண் கடன்களில் 64% உரங்கள் வாங்கச் செலவிடப்பட்டன.


·         பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழக ஆய்வுகள் வேதி உரங்கள் தழையுரத்துக்கு ஈடாகாது என்று நிரூபித்துள்ளன.  கால்நடைப்பண்ணை உரங்களும் வேதியுரங்களை விடச் சிறப்பாகச் செயல்படுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

·         பசுமைப்புரட்சிக்குப் பின்னர் கோதுமை, சோளம், பயறு வகைகள் எண்ணெய் வித்துக்கள் ஆகியன கலந்த மாற்றுப்பயிர் முறை ஒழிக்கப்பட்டு, கோதுமை மற்றும் நெல் ஆகியவற்றின் ஓரினப்பயிர் முறை பரவலாக்கப்பட்டது.


·         சர்வதேச வல்லுநர்களும், இந்திய ஆதரவாளர்களும் தொழில்நுட்பம் நிலத்துக்கு மாற்று என்றும், வேதியியல் உரங்கள் தழைச்சத்திற்கு மாற்று என்றும் தவறாக நம்பியதால், பல நூற்றாண்டுகளாகப் பாதுகாக்கப்பட்ட நம் மண்வளம், பசுமைப்புரட்சிக்குப்பின்  கடுமையாகப் பாதிக்கப்பட்டு நாசமாகிவிட்டது.


இடையிடையே கருத்துத் தெளிவின்றிக் குழப்பம் ஏற்படுத்தும் நீண்ட வாக்கியங்கள்,   மொழிபெயர்ப்பில் போதிய கவனம் செலுத்தப்படவில்லை என்பதைப் பறைசாற்றுகிறது.  பலவிடங்களில் கூறியது கூறல் சலிப்பை ஏற்படுத்துகிறது.    

இரண்டாம் பசுமைப்புரட்சி என்ற பெயரில் மரபணு மாற்றப்பட்ட காய்கறிகளை நம் தலையில் திணிக்க அரசு முயலும் இந்நாளில்,  முதல் பசுமைப்புரட்சியின் விளைவால் நம் மண்ணுக்கு ஏற்பட்ட மோசமான விளைவுகளையும், சூழலியல் பாதிப்புக்களையும் விலாவாரியாக விளக்கி, மக்களிடையே விழிப்புணர்வூட்ட இந்நூல் உதவும் என்பதால் மொழிபெயர்ப்பில் குறைகள் இருந்தாலும், வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. அட்டையில் இடம் பெற்றிருக்கும் தற்கொலை செய்து கொண்ட விவசாயி மனைவியின் சோகம் ததும்பும் முகம் மனதைக் கனக்கச் செய்கிறது.                                                       (01/06/2015  அன்று  நான்கு பெண்கள் தளத்தில் வெளியான கட்டுரை)
(வந்தனா சிவா படம் – நன்றி இணையம்)