நல்வரவு

வணக்கம் !

Tuesday 27 December 2011

ஐரோப்பா பயண அனுபவங்கள்


ஒரு காலத்தில் வெளிநாட்டுக்குப் போய் வந்தவர்களைக் கண்களை மலர்த்தி நான் பார்ப்பதுண்டு. வெளிநாடு சென்று வருவது என்பது ஏதோ முற்பிறவியில் செய்த அதிர்ஷடம் என நான் நினைப்பேன். சாவதற்குள் ஒரு முறையேனும் கடல் கடந்து சென்று வெளிநாடுகளைக் கண்டுவந்து விடவேண்டும் என்ற தணியாத ஆவல் எனக்கிருந்தது.  ஆனால் இக்காலத்தில் வீட்டுக்கு ஒருவர் வெளிநாட்டில் இருக்கிறார். அயல்நாடுகளுக்குப் பயணம் என்பது நம் கிராமங்களிலுள்ள படிப்பறிவில்லாக் குப்பனுக்கும் சுப்பனுக்கும் கூடதற்போது சர்வ சாதாரண விஷயமாகிவிட்டது.

என் மகன் பிரான்சில் அப்போது மேற்படிப்பு படித்துக் கொண்டிருந்ததால், அவனது அழைப்பை ஏற்று 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மூன்று வாரங்கள் என் கணவருடன் ஐரோப்பா சென்று வந்தேன். 1950 களில் பாரீஸில் வேலையிலிருந்த என் தந்தை 50 ஆண்டுகளுக்குப் பிறகு பாரீஸைத் திரும்பவும் பார்க்க விருப்பப்பட்டு எங்க்ளுடன் பயணத்தில் கலந்து கொண்டார். பிரான்ஸ், இங்கிலாந்து, இத்தாலி மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளுக்கு நாங்கள் சென்று வந்தோம்.

ஐரோப்பா யூனியனில் அங்கம் வகிக்கும் நாடுகளுக்குச் செல்ல ஷென்கன் விசா (schengen visa) வாங்கவேண்டும். ஆனால் அதே யூனியனின் அங்கத்தினர்களான இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து நாடுகளுக்குச் செல்ல அப்போது தனி விசா வாங்க வேண்டும்.(இப்போது ஏதும் மாறியிருக்கிறதா எனத் தெரியவில்லை) பிரான்சின் தூதரகம் புதுச்சேரியிலேயே இருப்பதால் பிரான்ஸ் விசா வாங்குவதில் எங்களுக்குச் சிரமம் ஏதும் இருக்கவில்லை. விசாவிற்கான விண்ணப்பப் படிவமும் எளிமையாகத் தான் இருந்தது. விண்ணப்பம் கொடுத்த ஐந்து நாட்களுக்குள் எங்களுக்கு ஷென்கன் விசா கிடைத்து விட்டது.

அதற்குப் பிறகு தான் இங்கிலாந்து விசாவிற்கு விண்ணப்பித்தோம். அடேயப்பா! படிவத்தின் பத்துப் பனிரெண்டு பக்கங்களைப் பூர்த்தி செய்வதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது. நான்கு நாட்கள் லண்டன் போய்ச் சுற்றிப் பார்ப்பதற்காக விண்ணப்பித்திருந்தோம்.

'எங்கெங்கு பயணம் செய்யப்போகிறீர்கள்? எங்குத் தங்கப்போகிறீர்கள்? அந்த ஹோட்டலின் பெயர் மற்றும் முகவரி? உறவினர் வீடு என்றால் அவரது பெயர் மற்றும் முகவரி?' என்று கேள்வி மேல் கேள்வி கேட்டுத் துளைத்தெடுத்துவிட்டார்கள் கேள்வியின் நாயகர்கள்!

அதில் வரும் இன்னும் சில கேள்விகளைப் பாருங்கள்:-

'எப்போதாவது போர்க்குற்றம், மனித குலத்துக்கெதிரானப் போராட்டம், இனப்படுகொலை (war crimes, war against humanity, genocide) போன்ற நடவடிக்கைகளில் பங்கு கொண்டவராயிருந்தால் அது பற்றிய விபரங்கள்?

எந்த நாட்டிலாவது தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதுண்டா? தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவு கொடுத்த துண்டா? ஆம் எனில் அதன் விபரம்?'

எனக்கு ஒரு சந்தேகம். எந்தத் தீவிரவாதியாவது முறையாகப் பாஸ்போர்ட், விசா வாங்கிப் பயணம் செய்வானா?  அப்படியே செய்தாலும் இந்தக் கேள்விகளுக்கு 'ஆம் நான் ஒரு தீவிரவாதி தான் இந்தந்த நாடுகளில் நான் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டிருக்கிறேன் என்று உண்மையைச் சொல்வானா?'

சென்னையில் விசா விண்ணப்பப் படிவம் கொடுத்த போது கைரேகை, கண்கள் முதலானவற்றைப் பதிவு செய்து கொண்டார்கள். எல்லாவற்றையும் கொடுத்து மூன்று வாரங்களாகியும் விசா கிடைத்தபாடில்லை. கடைசி நேரத்தில்டென்ஷன் அதிகமானதுடன் நாங்கள் பதிவு செய்திருந்த விமானத்தை மேற்கொண்டு பணம் கொடுத்து ஒருவாரத்திற்கப்புறம் மாற்ற வேண்டியதாய்ப் போய் விட்டது. கடைசியில் வெறுத்துப்போய் லண்டன் போக வேண்டாம்,வேறு ஏதாவது ஊருக்குப் போகலாம் என முடிவெடுத்த சமயம் ஒரு வழியாக இங்கிலாந்து விசா கிடைத்தது. எனவே முதல் தடவையாக இங்கிலாந்து பயணம் செய்ய எண்ணுபவர்கள் ஓரிரு மாதங்களுக்கு முன்னதாகவே விசாவிற்கு விண்ணப்பித்தால் நல்லது.

சென்னையிலிருந்து ஏர் பிரான்ஸ் விமானத்தில் பாரீசில் இறங்கி விட்டுப் பின் அங்கிருந்து லண்டன் செல்வதாக ஏற்பாடு.  அப்போது ஏப்ரல் மாதம் தான் என்பதால் (என் மகனின் வார்த்தைகளை அலட்சியப்படுத்தி விட்டு) குளிர் அவ்வளவாக இருக்காது என்று எண்ணி புடவையிலேயே நான் சென்று அங்கு இறங்கிவிட்டேன். புடவையைத் தவிர வேறு உடை நான் உடுத்திப் பழக்கமில்லையென்பதும் ஒரு காரணம். காலை ஏழு மணிக்கு பாரிஸ் விமான நிலையத்தில் இறங்கிய போது குளிர் என்னை வாட்டியெடுத்து விட்டது. ஏழு டிகிரி வெப்பம் என்றார்கள்.

சிலு சிலுவென்று வீசிய காற்றில் பற்கள் தந்தியடிக்க, பருந்தைக் கண்ட கோழிக்குஞ்சுகள் பாய்ந்து சென்று இண்டு இடுக்குகளில் பதுங்கிக் கொள்ளுமே அது போன்ற பாய்ச்சலில் விமான நிலையக் கட்டிடத்திற்குள் தலை தெறிக்க ஓடி ஒரு மூலையில் தஞ்சம் புகுந்து கொண்டோம். முதல் வேலையாக ஜெர்கின்ஸை எடுத்துப் போட்டுக் கொண்ட பிறகு தான் நெஞ்சு வலி கொஞ்சம் குறைந்தது.

மேல்நாட்டினர் ஆண், பெண் என்கிற பேதமின்றி ஜீன்ஸ் ஏன் உடுத்துகின்றனர் என்ற உண்மை எனக்கு அப்போது தான் புரிந்தது. நான் புடவை உடுத்தியிருந்ததால் குளிர் என் எலும்புகளை ஊடுருவிப் போய்த் தாக்கிற்று. ஏப்ரல், மே மாதமே இப்படியென்றால், டிசம்பர், ஜனவரி மாதக் குளிர் எப்படியிருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. எனவே ஏற்கெனவே நாற்பது, நாற்பத்தி ஐந்து வயதுக்கப்புறம் எலும்பு மூட்டுப் பிரச்சினைகள் வந்து அவதிப்படும் என்னைப் போன்ற நடுத்தர வயதுப் பெண்கள் (அரைக்கிழம் என்று எழுத மனம்ஒப்பவில்லை) வெளிநாடு போகும் போது ஜீன்ஸ் போட முடியாவிட்டாலும் கால்களை மூடக்கூடிய சூடிதார் போன்ற உடைகளை அணிந்து செல்வது நலம்.

பாரீஸ் விமான நிலையத்திற்குள்ளாகவே ஒரு டெர்மினலிலிருந்து மற்றொன்றுக்கு ரெயிலில் தான் போக வேண்டும். அந்த ரெயில் வண்டிகள் சில நிமிடங்களே ஒவ்வொரு பிளாட்பாரத்திலும் நிற்கும். அதன் கண்ணாடிக்கதவுகள் மூடிக் கொண்ட பிறகு தான் வண்டி புறப்படும்.

நானும் என் மகனும் வண்டியில் ஏறிக்கொள்ள, பெரிய பெட்டியைத் தூக்கிக் கொண்டு என் கணவர் ரெயிலில் கால் வைத்து ஏறிக் கொண்டிருக்கும் போது கட கடவென கண்ணாடிக் கதவு மூடத்துவங்கியது. பெட்டியுடன் அவர் பாதியில் மாட்டிக்கொண்டு நிற்க, என் அப்பா இன்னும் ஏறாமல் பிளாட் பாரத்திலேயெ இருக்க, எனக்குப் படபடப்பு அதிகமானது. நானும் என் மகனும் என்ன செய்வது என்று தெரியாமல் லிப்டில் உள்ளது போல் கதவைத் திறப்பதற்கு வண்டியினுள் ஏதாவது ஸ்விட்ச் இருக்கிறதா எனத் தேடி பதட்டத்தோடு அங்கும் இங்கும் ஓட நல்லவேளையாக பாதி வரை மூடிய கதவிற்கு இடையில் தடை ஏற்பட்டதால், தானாக மறுபடியும் திறந்து கொண்டது. அவசர அவசரமாக தந்தையும் பெட்டியினுள் ஏறிக்கொள்ள வண்டி புறப்பட்டது. இந்தச் சம்பவம் ஏற்படுத்திய படபடப்பு குறைய கொஞ்ச நேரம் ஆனது.

முதல் நாள் மாலை பாரீஸிலிருந்து விமானம் மூலம் லண்டன் சென்றடைந்தோம். ஏற்கெனவே 'ஆன்லைன்' மூலம் தங்குமிடம் பதிவு செய்து வைத்திருந்தமையால் நேரே அந்த 'லாட்ஜி'க்குச் சென்றோம். அது வட இந்தியா அல்லது பங்களாதேஷை சேர்ந்தவரால் நடத்தப்படும் ஒரு 'லாட்ஜ்' தான். 'இந்தியாவிலிருந்து வந்திருக்கிறோம்' என்றதும் ஹிந்தியில் பேசினார். நாங்கள் ஹிந்தி தெரியாமல் ஆந்தை முழி முழிக்க, அதற்கப்புறம் எங்களை அவர் சட்டையே செய்யவில்லை.

அந்த 'லாட்ஜை'ச் சுற்றி இந்திய உணவு விடுதிகள் என்ற பெயரில் நிறைய இருந்தன. அவற்றை நடத்துபவர்கள் எல்லாரும் பாகிஸ்தான் அல்லது பங்களாதேஷ் நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் பாகிஸ்தான் பயங்கரவாதத்தோடு சம்பந்தப்படும் பெயர் என்பதால் வெள்ளைக்காரர்கள் யாரும் வந்து சாப்பிட மாட்டார்கள் என்ற காரணத்திற்காக இந்திய உணவு விடுதிகள் என்று பொய்யாகப் பெயர் வைத்திருப்பதாக என் பையன் சொன்னான். அவ்வுணவு விடுதிகளில் எப்போதும் பிரியாணி,  தந்தூரி அயிட்டங்கள் கிடைத்தன.

அன்றிரவு பக்கத்திலிருந்த ஓர் உணவு விடுதிக்குச் சென்று ஒரு வட்ட மேசையில் அமர்ந்து சாப்பிட வேண்டிய அயிட்டங்களை ஆர்டர் கொடுத்தோம். ஆர்டரை வாங்கிப் பார்த்த அந்த விடுதியின் மேனேஜர், அருகில் வந்து"குறைந்தபட்சம் 50 பவுண்டுகளுக்காவது சாப்பிட்டால் தான் ஹோட்டலுக்கு உள்ளே உட்கார்ந்து சாப்பிடலாம்;இல்லையேல் 'பார்சல்' வாங்கிக் கொண்டு வெளியில் தான் செல்ல வேண்டும்," என்று சொன்னார்.

எங்களுக்கு அவமானமாக இருந்தது. மற்றவர்கள் அப்படி என்னதான் சாப்பிடுகிறார்கள் என்று சுற்றுமுற்றும் ஒரு நோட்டம் விட்டோம். எல்லோரும் விஸ்கி, பிராந்தி வகையறாக்களை வாங்கி மேஜை மேல் பரப்பி வைத்திருந்தனர். இது நமக்குச் சரிப்பட்டு வராது என்ற எண்ணத்தோடு பார்சலை வாங்கிக் கொண்டு மேஜையைக் காலி செய்துவிட்டு நடையைக் கட்டினோம்.

லண்டனில் முதல் நாள் நாங்கள் பார்த்தவை:- இங்கிலாந்தின் பாராளுமன்றக் கட்டிடம் (Palace of Westminister), Big Ben என்று சொல்லப்படும் மணிக்கூண்டு, தேம்ஸ் நதி அதன் பக்கத்தில் அமர்ந்திருந்த லண்டன் கண் என்று அழைக்கப்படும் London Eye ஆகியவை தாம்.

மணிக்கூண்டின் உள்ளே இப்போதுள்ள கடிகாரத்தின் எடை 13 டன்களாம். (13760 கிலோ). நிமிட முள்ளின் நீளம் 14அடிகளாம்.(4.26 மீட்டர்). 10/05/1941 அன்று ஜெர்மனி வீசிய குண்டுகளால் மேற்கூரையும் கடிகாரத்தின் சில பகுதிகளும் சேதமடைந்தாலும், துல்லியமான தன் இயக்கத்தைக் கடிகாரம் நிறுத்தவேயில்லையாம். இந்த மணிக்கூண்டின் 150 ஆம் ஆண்டு விழாவை 31/05/2009 அன்று வெகு விமரிசையாகக் கொண்டாடினார்கள்.

தொன்மை வாய்ந்த கட்டிடங்களுக்கு, பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதிலும் பாரம்பரியத்தைக் கட்டிக்காப்பதிலும் ஆங்கிலேயர்க்கு நிகர் ஆங்கிலேயரே. நம் நாட்டிலோ பாதுகாக்கப்பட வேண்டிய, 400 வருடத் தொன்மை வாய்ந்த பாபர் மசூதியை இடித்து விட்டு அதன் விளைவை இன்றும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

லண்டனின் புகழ் பெற்ற தேம்ஸ் நதி

                                             தேம்ஸ் நதிக்கரை ஓரத்தில் லண்டன் ஐ

தேம்ஸ் நதிப்பக்கம் நாங்கள் இருந்த போது மழை விட்டு விட்டுப் பெய்து கொண்டிருந்தது. பலமாக வீசிய காற்றில் குடையைப் பிடித்துக் கொண்டு நடக்கப் பிரம்மப்பிரயத்தனம் செய்ய வேண்டியிருந்தது. ஏற்கெனவே குளிர். அதோடு பக்கத்தில் நதியிலிருந்து வீசிய சிலு சிலுவென்ற காற்றுடன் மழையும் சேர்ந்து கொண்டதால் குளிர் தாங்க முடியவில்லை.    
 நல்லவேளையாக London Eye ல் ஏறி கண்ணாடி கூண்டுக்குள் அமர்ந்த பிறகு, நடுக்கியெடுத்த குளிரிலிருந்து கொஞ்ச நேரம் விடுதலை கிடைத்தது. லண்டன் கண்ணை ராட்சஸ இராட்டினம் என்று சொல்லலாம். மிகவும் மெதுவாக உச்சத்துக்குச் சென்று பின் இறங்குகிறது. லண்டன் செல்லும் சுற்றுலாவாசிகள் தவறாமல் வருகை புரியும் இடமாக இது இருக்கிறது. மார்ச் 2000 ஆண்டிலிருந்து இது இயக்கப்படுகிறதாம். ஆண்டிற்கு 3.5 மில்லியன் மக்கள் இங்கு வருகிறார்களாம். 

ஒவ்வொரு கூண்டிலும் 20 அல்லது 25 பேர் ஏறலாம். கண்ணாடி வழியாக ஒவ்வொரு திசையிலும் 40 கிலோ மீட்டர் அளவிற்குப் பார்க்கக்கூடியவாறு இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது. கண்ணாடி வழியாக லண்டன் மாநகரையும் அதைச் சுற்றியுள்ள கட்டிடங்களையும் தேம்ஸ் நதியையும் மழைச்சாரலையும் கண்டு ரசித்தோம். நடுவே அமர்வதற்குப் போடப்பட்டிருந்த இருக்கையில் எங்களைத் தவிர வெள்ளைக்காரர்கள் யாரும் வந்து அமரவில்லை. கடைசி வரை நின்று கொண்டே ஒவ்வொரு பக்கமாகப் போய்ப் பார்த்துப் புகைப்படம் எடுத்துத் தள்ளிக் கொண்டிருந்தார்கள். இறங்கப்போகுமுன் சுற்றி நின்றவர்கள் அனைவரும் நான், நீ என்று போட்டிப் போட்டுக் கொண்டு முகப்பில் வந்து நின்று கொண்டார்கள்.

இதைப் பார்த்ததும் எனக்குச் சின்ன வயதில் பார்த்த ஒரு காட்சி நினைவிற்கு வந்தது. சினிமா கொட்டகையில் அப்போதெல்லாம் படம் முடியும் போது தேசிய கீதம் இசைக்கப்படும். மூன்று மணி நேரம் அமைதியாகப் படம் பார்ப்பவர்கள் தேசிய கீதம் ஒலிபரப்பப்படும் போது அவசர அவசரமாக இடத்தைக் காலி செய்து விட்டு வீட்டுக்கு ஓடுவார்கள். நேரத்தை மிச்சப்படுத்துகிறார்களாம்! 

தேசிய கீதம் இசைக்கப் படும் போது எழுந்து நின்று மரியாதை தர வேண்டும் என்று எங்கள் தந்தை எங்களுக்குக் கற்பித்திருந்ததால் எங்கள் குடும்பம் மட்டும் நின்று அது முடியும் போது வெளியில் வந்தால் சினிமா கொட்டகையே காலியாகயிருக்கும். எல்லா ஊரிலும் இதே கதை தான் போலிருக்கிறது. பின் யாரோ ஒரு புண்ணியவான் தினந்தினம் தேசிய கீதம் இப்படி அவமதிப்புக்குள்ளாகும் விஷயத்தை அரசின் கவனத்திற்குக் கொண்டு வந்து, பின் சினிமா கொட்டகைகளில் தேசிய கீதம் ஒலிபரப்புவதை நிறுத்திவிட்டார்கள்.

எல்லோரும் இறங்கட்டும், நாம கடைசியாக இறங்கிக் கொள்ளலாம் என்றெண்ணி உட்கார்ந்திருந்த நான் "இறங்கிறதுக்கு ஏன் இவ்ளோ அவசரப்படுறாங்க? இவங்களும் நம்மளைப் போலத்தான் இருப்பாங்க போலேயிருக்கு," என்று சினிமா கொட்டகை விஷயத்தைப் பற்றி மகனிடம் சொன்னேன்.

"அவங்க சீக்கிரம் இறங்கிறதுக்காக அங்க போய் நிக்கலைம்மா. ஒவ்வொரு கூண்டும் இறங்கி வரும்போது ஒரு குறிப்பிட்ட இடத்தில கம்ப்யூட்டர் போட்டோ எடுக்கும். போட்டோவில விழறதுக்காகத் தான் எல்லாரும் அங்க போய் நிற்கிறாங்க. நாம ஏறும் போது மைக்கில சொன்னாங்களே நீங்க கேட்கலையா," என்றான் பையன்.

"அப்படியா," என்று அசடு வழிந்தேன். அவர்களது ஆங்கில உச்சரிப்பு எனக்குப் புரிந்தால் தானே?

கூண்டிலிருந்து இறங்கி வெளியில் வருகின்ற ஒரு சில நிமிடங்களுக்குள்(!) கம்ப்யூட்டர் எடுத்த புகைப்படங்களை பிரிண்ட் போட்டு பார்வைக்கு வைத்திருந்தார்கள். புகைப்படத்துக்கு 'போஸ்' கொடுத்தவர்கள் ஆர்வமுடன் காசு கொடுத்து அதை வாங்கிச் செல்வதைக் காண முடிந்தது. சுற்றுலாப் பயணிகளிடம் பணம் கறக்கும் விஷயத்தில் வெள்ளைக்காரர்கள் கில்லாடிகள்!

ராட்சஸத ராட்டினத்தை அடுத்து நாங்கள் சென்ற இடம் தேம்ஸ் நதியில் அமைந்துள்ள புகழ் பெற்ற லண்டன் பாலம் (Tower Bridge). தரைவழி, கடல் வழி இரண்டிற்கும் இதனைப்பயன் படுத்தும் விதத்தில் இப்பாலம் கட்டப்பெற்றிருப்பதே இதன் தனிச் சிறப்பு. தேம்ஸ் நதி வழியாக கப்பல்கள் செல்லும் போது, தரை வழி போக்குவரத்தை  நிறுத்தி விட்டு இந்தப்பாலத்தை மேலே தூக்கி கப்பல்கள் அந்த வழியாகப் போவதற்கு வழி விடுவர்.

                       லண்டன் டவர் பிரிட்ஜ்


இரண்டாம் நாள் நாங்கள் பார்க்கச் சென்றது பக்கிங்ஹாம் அரண்மனை. இது தான் ராணியின் இருப்பிடம். மூன்றாம் ஜார்ஜ் மன்னரால் தம் ராணிக்காக 1761 ல் வாங்கப்பட்டு, பின் அடுத்து வந்த மன்னர்களின் காலங்களில் பல்வேறு மாறுதல்களுக்குட்பட்ட இக்கட்டிடம் இன்று ஒரு கம்பீரமான தோற்றத்துடன் பார்வையாளர்களைக் கவருகிறது.

                      பக்கிங்ஹாம் அரண்மனை




இந்த அரண்மனைக்கு முன் காவல் காக்கும் வீரர் ஒருவர் நிற்கிறார். அவருக்கான பணி நேரம் முடிந்து அடுத்தவர் வந்து பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் நிகழ்ச்சி (Change of guard) தினமும் முற்பகல் வேளையில் பழைய சம்பிரதாயங்களோடு மணிக்கணக்காக நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியைப் பார்ப்பதற்கென்றே இரும்புக் கேட்டிற்கு வெளியே கூட்டம் பெருந்திரளாக நின்று கொண்டிருக்கிறது.

                        டிரெபால்கர் சதுக்கம்  

லண்டனில் சுற்றுலாப் பயணிகள் தவறாமல் வருகை புரியும் இடங்களில் ஒன்று டிரெபால்கர் சதுக்கம். (Trafalgar Square). டிரெபால்கர் போரில் (1805) நெல்சன் தலைமையில் ஆங்கிலேயரின் கப்பற்படை பிரெஞ்சு மற்றும்
ஸ்பெயின் படைகளை வென்றதன் நினைவாக இச்சதுக்கம் அமைக்கப்பட்டுள்ளது. இச்சதுக்கத்தின் நடுவே உள்ள தூணின் உச்சியில் இப்போரில் உயிர் நீத்த மாவீரரான நெல்சனின் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

அடுத்து நாங்கள் விஜயம் செய்தது லண்டனில் உள்ள புகழ் பெற்ற மதாம் துஸே (Madame Tusseau) மெழுகுச்சிலை காட்சியகம். அடேயப்பா! எவ்வளவு தத்ரூபமாக சிலைகளை வடிவமைத்திருக்கிறார்கள்! சிலைகளைப் பார்த்துக் கொண்டே வரும் போது, 'இதென்ன இந்த சிலை கண் சிமிட்டுகிறதே,' என்று வியப்புடன் நாம் உற்றுப்பார்த்தால் சிலைகளுக்குப் பக்கத்தில் சுற்றுலாவுக்கு வந்த வெள்ளைக்கார இளம்பெண்கள் சிலர், புகைப்படத்துக்காக 'போஸ்' கொடுத்துக் கொண்டு நிற்பது அப்போது தான் தெரிகிறது.அந்தளவுக்கு வேறுபாடு தெரியாதவாறு சிலைகள் அழகிய உயிரோவியங்களாக படைக்கப்பட்டு, பார்ப்பவர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொள்கின்றன.
மறைந்த புகழ் பெற்ற உலகத் தலைவர்கள், இன்றைய அரசியல் தலைவர்கள், அறிவியல், இலக்கியம், இசை, ஓவியம், விளையாட்டு, சினிமா போன்ற துறைகளில் குறிப்பிடத்தக்க அளவில் பங்களித்தவர்களின் சிலைகள் அங்கு வைக்கப்பட்டுள்ளன.
சினிமா, விளையாட்டு ஆகிய துறைகளில் பிரபலமானவர்களின் சிலைகளுக்குப் பக்கத்தில் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ள சுற்றுலாப்பயணிகளிடம் அதிக ஆர்வம் இருந்ததைக் காண முடிந்தது.

ஜேம்ஸ் பாண்ட், ஹாரி பாட்டர் சிலைகள் பக்கத்தில் இருந்த கூட்டத்தில் பாதி கூட, இருபதாம் நூற்றாண்டின் அறிவியல் மாமேதை ஐன்ஸ்டீன், சர் ஐசக் நியூட்டன் போன்ற அறிவியல் அறிஞர்களின் சிலைகள் பக்கத்தில் இல்லை. நம் தேசப்பிதா காந்திஜி, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆகியோரின் சிலைகளில், காந்தியின் சிலை அந்தளவுக்கு சிறப்பாக இல்லை. சிலையின் அமைப்புக்கேற்ற உயரம் இல்லை.

நடிகர்களில் ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன், சாரூக்கான் ஆகியோரின் சிலைகளைப் பார்த்தோம். ஐஸ்வர்யா சிலைசுமார் தான். அமிதாப்பச்சன் பரவாயில்லை. ஷாரூக்கான் சிலை பிரமாதம். ஜெம்ஸ் மிட்டாயினால் அல்லது அது போன்ற ஒரு மணியினால் உருவாக்கபட்டிருந்த மர்லின் மன்றோ படம் நன்றாயிருந்தது.

மதாம் துஸே மெழுகுச்சிலை கூடத்தில்:-
    மர்லின் மன்றோ









அரசியல் தலைவர்களில் டோனி பிளேர் சிலை சூப்பர்! புஷ் அவ்வளவு சரியில்லை. தூங்குகின்ற ஒரு பெண்ணின் உடல் பார்த்துப் பிரமித்தோம். அவ்வளவு இயற்கையாய் தூங்குவது போலவே இருந்தாள் அப்பெண். மன்னிக்கவும். இருந்தது அச்சிலை. நெஞ்சில் மூச்சு ஏறி இறங்குகிற மாதிரி உள்ளுக்குள் ஏதோ செய்திருக்கிறார்கள். 'இது மதாம் துஸேவின் சிலை' என்று பார்த்ததாக நினைவு.

எல்லாவற்றையும் சொல்லிவிட்டு எனக்குப் பிடித்த மரஞ்செடிகளைப் பற்றிச் சொல்லாமல் விட்டாமல் எப்படி?நாங்கள் போன சமயத்தில் அங்கிருந்த பெரும்பாலான மரங்களில் இலையோ, பூவோ இல்லை. மொட்டையாக நின்ற மரங்களில் ஆங்காங்கே துளிர்களை மட்டும் காணமுடிந்தது.

மே மாதம் தான் அங்கு வசந்த காலம். பாதையோரப் பூங்காக்களில் டாபோடில்ஸ் (Daffodils), டியுலிப்ஸ் (Tulips) பூக்கள்  இருந்தன. பல வண்ண நிறங்களில் கண்ணைக் கவரும் டியுலிப்ஸ் மலர்த்தோட்டத்தைப் பார்க்க விரும்புவர்கள்நெதர்லாந்து தான் போக வேண்டும்.

டாபோடில்ஸ் மலர்கள் தாம் வசந்த காலத்தைக் கட்டியம் கூறி வரவேற்பவை என்பதால் இம்மலர்களை மகிழ்ச்சியின் குறியீடாக இம்மக்கள் நினைக்கிறார்கள். மானாவாரியாக ஆங்காங்கே வளர்ந்து கிடக்கும் இந்தச் செடிகளில் தங்க மஞ்சள், வெள்ளை ஆகிய இரு நிறங்களில் பூக்கள் இருந்தன.

                        டாபோடில்ஸ் மலர்கள்
வெள்ளை நிறத்தை விட மஞ்சள் நிறமே அழகாகயிருக்கிறது. ஒரே ஒரு பூவைப் பார்க்கும் போது ரோஜா போலக்கண்ணைக் கவரும் மலர் இது என்று சொல்ல முடியாவிட்டாலும், வயல் வெளியில் கூட்டமாக இதனைப் பார்க்கும் போது நிச்சயமாக தங்க வயல் போலவே காட்சியளிக்கும்.

டாபோடில்ஸ் என்றவுடன் கவிஞர் வோர்ட்ஸ்வொர்த் (Wordsworth) தான் என் நினைவுக்கு வருகிறார். வசந்த காலத்தில் வேகமாகக் காற்று வீசிய ஒரு தினத்தில் தன் இளைய தங்கை டொரோத்தியுடன் (Dorothy) ஓர் ஏரிப்பக்கம் போன போது அவர் இதனை எழுதினாராம்.


இம்மலரைப் பற்றிய அவரது கவிதையிலிருந்து சில வரிகள்:-

I wander’d lonely as a cloud
That floats on high o’er vale and hills,
When all at once I saw a crowd,
A host of golden daffodils:
Beside the lake, beneath the trees,
Fluttering and dancing in the breeze..

Continuous as the stars that shine
And twinkle on the milky way,
They stretched in never-ending line
Along the margin of a bay:
Ten thousand saw I at a glance,
Tossing their heads in sprightly dance.

தென்றலில் மேலும் கீழுமாக அம்மலர்கள் அசைந்தாடிய போது, தன் மாநகருக்கு வருகை தந்திருக்கும் எங்களைஅம்மலர்கள் "வாருங்கள், வாருங்கள்" என்று தலையை ஆட்டி வரவேற்பதாகவே எனக்குத் தோன்றியது.

லண்டனில் முக்கியமாக பார்க்கப்பட வேண்டிய இடங்கள் பற்றிச் சொல்லிவிட்டேன். இரண்டு நாட்களில் இந்த இடங்களை நாங்கள் பார்த்து விட முடிந்தது. இந்த இடங்களுக்குச் சென்று வர அரசு மற்றும் தனியார் பேருந்துகள் பல இயக்கப்படுகின்றன. 

                  லண்டனில் சுற்றுலாப் பேருந்து


விக்டோரியா ரயில் நிலையத்திலிருந்து நடக்கக் கூடிய தூரத்தில் தான் பக்கிங்ஹாம் அரண்மனை இருக்கிறது. அங்கிருந்து நடந்தே போய் பிக் பென், லண்டன் கண் ஆகியவற்றைப் பார்க்க முடிந்தது. மறு நாள் மற்ற இடங்களைச் சுற்றிப்பார்க்க பக்கிங்ஹாம் அரண்மனை சாலையிலிருந்த் பிக் பஸ் (Big Bus) அலுவலகத்திற்குச் சென்று டிக்கெட் வாங்கிக் கொண்டோம். அதன் இணைய தள முகவரி. (http://www.bigbustours.com/eng/london/default.aspx)

டெல்லிக்கு ஒரு தடவை சுற்றுலா போயிருந்த போது, பணிக்கர் பேருந்தில் டிக்கெட் வாங்கியிருந்தோம். நாம் எந்தப் பேருந்தில் ஏறுகிறோமோ அதிலே தான் கடைசி வரை பயணம் செய்ய வேண்டும். ஒவ்வொரு இடத்திலும் இறக்கி விடும் போது பத்து நிமிடங்கள், அல்லது அரை மணி நேரம் அதற்குள் வந்து விட வேண்டும் என்று சொல்வார்கள். 

பேருந்தில் பயணம் செய்வோர் அனைவருக்கும் ரசனை ஒரே மாதிரியாகயிருக்காது. சில இடங்களில் நாம் அதிக நேரம் சுற்றிப் பார்க்க ஆசைப்படுவோம். அவசர அவசரமாக எங்கே பேருந்து நம்மை விட்டுச் சென்று விடுமோ எனப் பயந்து பார்த்தது பாதி, பார்க்காதது பாதி என ஓடித் திரும்பி வர வேண்டியிருக்கும்.

நம்மூர் டூரிஸ்ட் பேருந்தில் நம் இஷ்டத்துக்கு நேரத்தைச் செலவு செய்யும் வசதி இல்லை. ஆனால் லண்டனில் இப்படியில்லை. நாம் ஒரு கம்பெனியைச் சேர்ந்த பேருந்தின் டிக்கெட் வாங்கினால் அவர்களுடைய எந்தப் பேருந்தில் வேண்டுமானாலும் ஏறலாம். காலையிலிருந்து இரவு எட்டு மணி வரை எத்தனை முறை வேண்டுமானாலும் ஏறி இறங்கிப் பயணம் செய்யலாம். 
கால் மணி நேரத்திற்கு ஒருமுறை இந்தக் கம்பெனியைச் சேர்ந்த பல பேருந்துகள் முக்கிய சுற்றுலாத் தளங்களைச் சுற்றிச் சுற்றி வந்துக் கொண்டிருக்கும். நாம் ஒவ்வொரு இடத்திலும் நம் ரசனைக்கேற்றாற் போல் நேரத்தைச் செலவிட்டு விட்டு வந்து, அச்சமயத்தில் வரும் பேருந்தில் ஏறி அடுத்த இடத்துக்குச் செல்லலாம்.

மொத்தம் நான்கு நாட்கள் லண்டனுக்காக ஒதுக்கியிருந்தோம். இந்தியாவிலிருந்து கிளம்பி லண்டன் வந்து சேர ஒரு நாள், சுற்றிப் பார்க்க இரண்டு நாட்கள் என்று இனிதே முடிந்தது எங்களது லண்டன் பயணம். நான்காம் நாள் இங்கிருந்து இத்தாலியின் வெனீஸ் நகருக்கு விமானம் மூலம் பயணம்.

விமானத்தில் லண்டன் கேட்விக் (Gatewick) விமான நிலையத்திலிருந்து வெனீஸீக்கு இரண்டு மணி நேரப்பயணம்மட்டுமே. ஆனால் பயண நேரம் குறைவாகயிருந்தாலும் விமானப்பயணத்தில் இருக்கும் சோதனைகளுக்கு ஆகும் நேரம் தான் அதிகம். நாங்கள் வெனீஸ் செல்வதற்காக கேட்விக் விமான நிலையத்தை அடைந்த போது, நாம் கையில் எடுத்துச் செல்லும் பையில் (Hand luggage) திரவம்(liquid) ஏதும் இருக்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் வாசகங்கள்  எழுதப்பட்ட அட்டைகளைச் சுமந்த வண்ணம் விமான நிலைய பணியாளர்கள் சிலர் நின்றனர்.

"கைப்பையில் நீங்க எதுவும் வைக்கவில்லை அல்லவா?" என்றான் மகன் என்னைப்பார்த்து."ஒன்றும் இல்லை" என்றேன் நான்.

என் பையை ஸ்கேன் செய்தவர்கள் சோதனை செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டனர். மகன் என்னைப் பார்த்து முறைத்தான். நான் ஒன்றும் புரியாமல் பார்த்துக்கொண்டிருந்தேன். என் கைப்பையைத் திறந்து அதில் இருந்த பொருட்களை எல்லாம் வெளியில் எடுத்த பணியாளர், ஒரு பெரிய ஜாம் பாட்டிலை எடுத்து அப்படியே குப்பைக்கூடைக்குள் போட்டு விட்டு இனி நீங்கள் போகலாம் என்றார்.

எனக்கு மனசே ஆறவில்லை. இன்னும் சீல் கூடப் பிரிக்கப்படாத புதிதாக வாங்கியிருந்த ஜாம் பாட்டில் அது.

"அடப்பாவி! ஜாம் பாட்டில் என்பது கூடவா அவனுக்குத் தெரியாது? அப்படியே தூக்கிக் குப்பையில் போட்டு விட்டானே எனப் புலம்பிக் கொண்டிருந்தேன்.

"வழியில் அத்தனை முறை எச்சரித்தும் நீங்கள் பண்ணிய காரியத்துக்கு அபராதம் விதிக்காமல் விட்டானே எனச் சந்தோஷப்படுங்கள்," என்றான் பையன். "சோதனை செய்து அவர்கள் எதையாவது எடுத்துக் குப்பை தொட்டியில்போடும் போது அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடாமல், மௌனமாக இருப்பதே நல்லது; இல்லையேல் அபராதம்  விதித்துவிடுவார்கள்" என்று வேறு பயமுறுத்தினான். அதற்குப் பிறகு நான் ஏன் வாயைத் திறக்கிறேன்?

திரவம் என்றால் அதுவரை நான் தண்ணீர் பாட்டிலை மட்டும் தான் நினைத்திருந்தேன். ஜாம், டூத்பேஸ்ட், தைலங்கள் எல்லாமே இந்த லிஸ்டில் தான் அடங்குமாம். எனவே வெளிநாடு செல்பவர்கள் எந்த விமானத்தில் பயணம் செய்ய எண்ணுகிறார்களோ அவர்களது வலை தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளைப் படித்துப் பார்த்து எவற்றையெல்லாம் கைப்பையில் (Hand luggage) எடுத்துச் செல்லக் கூடாது என்பதை அறிந்து, அதற்கேற்ப பொருட்களை எடுத்துச் சென்றால் பிரச்சினைகளைத் தவிர்க்க இயலும்.

எனக்கடுத்து வந்த பெண் கையில் குழந்தையுடன் வந்தார். குழந்தையின் கையில் பால் பாட்டில். பாலை எடுத்துப் போகக் கூடாது என்றனர். குழந்தை பால் பாட்டில் வேண்டும் என அடம் பிடித்தது.  உடனே அந்தப் பணியாளர் என்ன செய்தார் தெரியுமா? அந்தப் பாலைக் குழந்தைக்குப் புகட்டச் சொன்னார். பத்து நிமிடங்கள் வரை குழந்தை குடிப்பதைப் பார்த்த பிறகே, அதை எடுத்துப் போக அனுமதித்தார்.

அதற்கடுத்து பாதுகாப்பு சோதனையின் போதும் எனக்குப் பிரச்னை தான். 'சோதனை மேல் சோதனை! போதுமடா சாமி!'என்று சிவாஜி ஸ்டைலில் உரக்கப் பாட வேண்டும் போலிருந்தது. மெட்டல் டிடெக்டர் வைத்து என்னைச் சோதனை செய்த போது, கருவி கிரீச் கிரீச் என்று கத்தியது. அது ஏன் கத்துகிறது என்று எனக்கும் புரியவில்லை. 

என்னைச் சோதனை செய்த பெண், 'வயிற்றைச் சோதனை செய்ய வேண்டும்,' என்று சொல்லித் தனியாக அழைத்துச் சென்றார். விமானத்தைத் தகர்க்க வயிற்றில் வெடிகுண்டைக் கட்டி வந்திருக்கும் தீவிரவாதி என்று என்னை நினைத்திருப்பார் போலும்! 

வயிற்றுப் பகுதியைச் சோதனை செய்து விட்டுக் அது கத்துவதற்கான காரணம் அறியாது குழம்பிப் போனவர், பின்னர் ஒரு வழியாகக் கண்டுபிடித்தார். என் புடவையில் ஆங்காங்கே வெள்ளி நிறத்தில் ஜிகினாவினால் ஆன ஜரிகைகள் இருந்தன. அவை தான் அக்கருவி கத்துவதற்கான காரணம் என்று கண்டுபிடித்தவர், சிரித்தபடியே, 'சாரி, நீங்கள் போகலாம்,' என்றார்.

வெனீஸ் நகருக்கு விமானம் போய்ச் சேரும் போது இருட்டி விட்டது. மார்க்கோ போலோ விமான நிலையத்தின் பக்கத்திலிருந்த ஹோட்டலில் தங்கிவிட்டு மறு நாட் காலை கடலால் சூழப்பட்டுள்ள நகருக்குப் பேருந்தில் சென்றோம்.
பேருந்தில் ஏறி டிரைவரிடம் டிக்கெட் கேட்டோம். (அங்கெல்லாம் கண்டக்டர் கிடையாது). ஏறுவதற்கு முன்பே டிக்கெட் வாங்க வேண்டும் என்றும், பேருந்தில் டிக்கெட் கொடுக்கப்பட மாட்டாது என்றும் அவர் சொல்லி விட்டார். புதிய ஊர் என்பதால் எங்கு இறங்கி டிக்கெட் எடுப்பது என்றும் தெரியவில்லை.

"ஏறிவிட்டோம். ஆனது ஆகட்டும். வழியில் டிக்கெட் செக்கர் ஏறினால் நிலைமையைச் சொல்லி டிக்கெட் வாங்கிக் கொள்ள லாம்," என்று மகன் சொன்னாலும், எனக்கு உள்ளூரப் பயம் தான். அவர் நம்மை நம்ப வேண்டுமே! டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தமைக்குத் தண்டனை ஏதும் கொடுத்து விட்டால்? நல்ல வேளையாக ஊர் சென்று இறங்கும்வரை பயந்த மாதிரி எதுவும் நடக்கவில்லை. 

டிக்கெட் இல்லாமல் பயணம் செய்கிறோம் என்று அறிந்திருந்த டிரைவர், இடையில் எங்களை இறங்கச் சொல்லாதது மட்டுமின்றி கடைசி வரை எங்களிடம் எதுவும் கேட்கவுமில்லை. நம் ஊராக இருந்திருந்தால், "சரி எங்கிட்ட பணம் கொடுங்க" என்று டிரைவர் டிக்கெட் கொடுக்காமல் பணத்தை மட்டும் வாங்கிக் கொண்டு கம்பி நீட்டிருப்பார்.

வெனீஸ் நகரம் கால்வாய்களுக்குப் பெயர் பெற்றது. உப்பங்கழியில் (lagoon, sea backwaters) அமைந்துள்ள இந்நகர் 118 தீவுகளால் ஆனது. இங்குள்ள கால்வாய்களின் என்ணிக்கை 177. இத்தீவுகளின் மேல் கட்டப்பட்டுள்ள பாலங்களின் எண்ணிக்கையோ 455. இக்கால்வாய்களின் வழியாகத் தான் போக்குவரத்து நடைபெறுகிறது. கோண்டோலா (Gondola) எனப்படும் வெனீஸ் நகரின் பாரம்பரியப் படகுகள் தாம் முற்காலத்தில் நீர்வழிப் போக்குவரத்துக்குப் பயன்பட்டன. தற்போது இவை பெரும்பாலும் சுற்றுலாப் பயணிகளால் வாடகைக்கு அமர்த்தப்படுகின்றன.


நகரின் பல இடங்களுக்குப் போய் வர தண்ணீர் கார், பேருந்துகள், (Water taxi, water buses) பொதுமக்களுக்காக இப்போது இயக்கப்படுகின்றன. சுற்றுலாப் பயணிகளும் இந்தப் பேருந்துகளில் பயணம் செய்கின்றனர். சில வீடுகளின் பின் பக்கத்தில் கம்புகளை நட்டு படகுகளைக் கட்டி வைத்திருப்பதைக் காண முடிந்தது. நாம் ஸ்கூட்டர், கார் வைத்திருப்பது போல அவர்களது சொந்த உபயோகத்துக்குப் படகுகள் வைத்திருப்பார்கள் போலிருக்கிறது. உலகத்தில் ஸ்கூட்டர், கார், ஓடாத ஒரே நகரம் வெனீஸாகத்தான் இருக்கும். நம் சாலைகளுக்குப் பதிலாக அங்கு கால்வாய்கள் ஓடுகின்றன. நம்மூர் தெருக்களில் குழந்தைகள் கிரிக்கெட் விளையாடுவது போல் அங்கு விளையாட முடியாது.

நாங்கள் போய் இறங்கிய போது மழை பெய்து கொண்டிருந்தது. கடலால் சூழப்பட்டுள்ள நகரம் என்பதால் குளிரும் அதிகமாக யிருந்தது. சூடாக ஒரு தேநீர் குடித்தால் தேவலாம் என்றிருந்தது. நாங்கள் இறங்கிய பேருந்து நிலையத்தைச்சுற்றிச் சுற்றி வந்தோம். தேநீர்க் கடை எதுவும் கண்ணில் படவில்லை.

குளிர் காலத்தில் நம்மூர் டீக்கடைக்குச் சென்று, 'ஸ்ட்ராங்கா ஒரு டீ போடுப்பா,' என்று சொல்லி, கடைக்காரர் கிளாசில் இரண்டு ஸ்பூன் சர்க்கரை போட்டு, கொதிக்கின்ற பாலில் இரண்டு கரண்டி எடுத்து ஊற்றி, டிகாஷனைக் கலந்து அதைச்சடாரென்று மேலே ஒரு தூக்கு தூக்கிச் சிந்தாமல் சிதறாமல் லாவகமாக ஒரு தடவை ஆற்றிவிட்டு, கிளாசில் நுரையுடன்  ஊற்றிக் கொடுத்தவுடன் கொஞ்சங் கொஞ்சமாக உறிஞ்சிக் குடிப்போமே, அந்தச் சுகத்துக்கு ஈடு இணையேது?

பிறகு ஒரு வழியாக ஒரு கடையைக் கண்டுபிடித்தோம். ஆனால் அங்கு தேநீர் கிடைக்கவில்லை. "துருக்கிய கறுப்பு காபி தான் கிடைக்கிறது. ஆனால் அது ரொம்ப கசக்கும். நீங்க குடிக்க மாட்டீங்க வாங்க போகலாம் வழியில வேற எங்கேயாவது டீ கிடைக்குமான்னு பார்ப்போம்," என்றான் மகன்.

"இப்ப சூடா எதையாவது குடிச்சே தீரணும், பரவாயில்ல அதை வாங்கிக் கொடு, நான் குடிப்பேன்" என்று சின்னக் குழந்தை போல அடம்பிடித்தேன். வேறு வழியின்றி அதை வாங்கிக் கொடுத்தான் பையன். கோப்பையில் கொஞ்சமாகத் தான் இருந்தது அந்தக் காபி. துளியூண்டு வாயில் வைத்த அடுத்த கணம், ஏண்டா குடித்தோம் என்றாகிவிட்டது. சரியான கசப்பு! குடிக்கவே முடியவில்லை.

அவ்விடத்தை விட்டு மெல்ல நகர்ந்து குடிப்பது போல் பாவ்லா பண்ணிவிட்டு குப்பைத் தொட்டியில் யாருக்கும் தெரியாமல் அதை ஊற்றிவிட்டு நல்ல பிள்ளையாக கோப்பையைக் கொண்டு வந்து மகனிடம் கொடுத்துவிட்டேன்.

பிறகு தண்ணீர்ப் பேருந்தில் டிக்கெட் வாங்கிக் கொண்டு நாள் முழுக்க வெனீஸ் நகரின் முக்கிய கால்வாய்களில் உலா வந்தோம். சில தீவுகளில் இறங்கி ஏறினோம். வெனீஸ் செல்லும் சுற்றுலாப்பயணிகள் தவறாமல் வருகை புரியும் இடம் ரோமன் கத்தோலிக்கர்களின் புனித வழிபாட்டுத் தலமான செயிண்ட் மார்க் சர்ச் (St Mark's Basilica) ஆகும். ஐந்து பெரிய வளைவுகள் (arches) ஐந்து பிரும்மாண்டமான வளைமாடங்களைத் (domes)தாங்கி நிற்பது போல் கட்டப்பட்டுள்ள இது இவர்களது சிறந்த கட்டிடக்கலைக்கு ஓர் எடுத்துக்காட்டு.


இதற்குப் பின்பக்கத்தில் வெனீஸ் நகரை ஆண்ட மன்னர்களின் இருப்பிடமாகத் திகழ்ந்த டோஜ் அரண்மனை (Doge's Palace) உள்ளது. இதுவும் இந்நகரின் மிகவும் புகழ் பெற்ற ஒருகட்டிடம். இதற்கு முன்பக்கத்தில் செயிண்ட் மார்க் சதுக்கம் உள்ளது. இச்சதுக்கத்தில் தான் மதச் சம்பந்தப்பட்ட விழாக்கள் நடக்குமாம். வெனீஸீன் பெரிய கால்வாயில் (Grand Canal) அமைந்துள்ள ரியால்டோ பாலம் (Rialto Bridge) மிகவும் பழமையான பாலம் ஆகும். வெனீஸ் என்றாலே இப்பாலத்தைத் தான் அடிக்கடி காட்டுவார்கள்.

                          ரியால்டோ பாலம் 

வெனீஸ் கடைகளில் பல வண்ணங்களில் வெவ்வேறு வடிவங்களில் முகமூடிகள் விற்கப்படுகின்றன. விசாரித்ததில் இம்முகமூடிகள் வெனிஸ் கலாசாரத்தின் ஓர் அங்கமாகத் திகழ்ந்த விஷயம் தெரிய வந்தது. பழங்காலத்தில் அந்நகரில் நடக்கும் மத விழாக்களில் (Venice carnival) கலந்து கொள்பவர்கள், இந்த முகமூடியை அணிந்து கொண்டு தாங்கள் யார் என்பதை மறைத்துக் கொண்டு சமுதாயத்தின் மற்ற பிரிவினரோடு கலந்து பழகுவார்களாம். எனவே இந்நகரத்தில் வாழ்ந்த மேல் தட்டுப் பிரிவினரும் தம் அந்தஸ்தையும் பதவியையும் சில மணி நேரங்கள் மறந்து விட்டு சமுதாயத்தின் கீழ்தட்டு மக்களுடன் கலந்து பழகுவதற்கு இந்த முகமூடி ஒரு கருவியாகப் பயன்பட்டிருக்கிறது..

                        வெனிஸ் முகமூடிகள்

கடலின் மேல் அமைந்துள்ள நகரம் என்பதால் வேறெந்த நகருக்கும் இல்லாத சிறப்பு வெனீஸுக்கு இருக்கிறது. மற்றபடி ஒரு நாளைக்கு மேல் அங்குத் தங்கிப் பார்ப்பதற்கு விசேஷமாக ஏதுமில்லை. எனவே மறுநாள் அங்கிருந்து கிளம்பி விமானத்தில் பாரீஸ் வந்து சேர்ந்தோம்.

பாரீசில் எங்களது உறவினர்கள் அதிகம் பேர் வசிக்கிறார்கள். கிரிஞியில் (Grigny) வசிக்கும் உறவினர் அவர் வீட்டில் தான் நாங்கள் வந்து தங்க வேண்டும் என்று அன்புக்கட்டளையிட்டார். ஏற்கெனவே அவர் வீட்டில் மூன்று குழந்தைகள், அவரது பெற்றோர் என இருந்ததால் அவரது வீட்டில் தங்க முடியா நிலைமையை விளக்கி, கிரிஞி ரெயில் நிலையத்திற்கு அருகிலேயே எங்களுக்குத் தங்குமிடம் ஏற்பாடு செய்து கொண்டோம்.

வெனீசிலிருந்து புறப்பட்டு நாங்கள் கிரிஞி வந்து சேரும் போது இரவு ஒன்பதரை மணிக்கு மேல் ஆகிவிட்டது. நாங்கள் வந்து இறங்கும் போது அந்த ரயில் நிலையம் ஆளரவமின்றி வெறிச்சோடியிருந்தது.

சக்கரம் வைத்த பெட்டிகளைச் சாலையில் உருட்டிக் கொண்டு அந்த நடுங்கும் குளிரில் நடந்தே ஹோட்டல் போய்ச் சேர்ந்தோம். மறுநாட் காலை அந்த உறவினர் வீட்டுக்குச் சென்று விட்டு பாரிசைச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டோம். அவரும் எங்கள் கூட ரயில் நிலையம் வந்து வழியனுப்பினார். வழியில் அவருடைய நண்பரைச் சந்தித்தவர் எங்களுக்கும் அவரை அறிமுகப்படுத்தி வைத்தார்.

"எப்போது வந்தீர்கள்?" என்று எங்களைக் கேட்ட அவரது நண்பர், முதல் நாள் இரவு அந்த ரயில் நிலையத்திற்குப் பக்கத்தில் ஒன்பது மணியளவில் ஆப்பிரிக்க கறுப்பின இளைஞர் சிலர், ரயிலிலிருந்து இறங்கிய வெள்ளைக்காரர் ஒருவரைக் கடுமை யாகத் தாக்கிவிட்டு அவரது உடைமைகளைப் பிடுங்கிக் கொண்டு ஓடிவிட்டனர் என்ற தகவலைச் சொன்னார். எங்களுக்கு அதிர்ச்சியாகயிருந்தது. .இதுபோல் அந்த ஏரியாவில் அடிக்கடி நடக்கும் என்று எங்கள் உறவினரும் சொன்னார்

சம்பவம் நடந்த அரைமணிநேரம் கழித்துத் தான் நாங்கள் அங்கு வந்து இறங்கி எங்கள் இருப்பிடத்திற்குச் சென்றிருக்கிறோம். அது எங்களுக்கு நடந்திருந்தால் என்னாகியிருக்கும்? என்று யோசிக்கவே பயமாகயிருந்தது. அதற்குப் பிறகு தினமும் மாலையில் சீக்கிரமாகவே இருப்பிடத்துக்குத் திரும்புவதை வழக்கமாக்கிக் கொண்டோம். நல்லவேளை நாங்கள் அங்குத் தங்கியிருந்த ஒரு வாரமும் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை.

முதல் நாள் நாங்கள் பார்க்கச் சென்றது கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தேவாலயமான நோத்ரு தாம் (Notre Dame de Paris- Our Lady of Paris). இது மேரி மாதாவுக்குச் சமர்ப்பணம் செய்யப்பட்ட ஆலயம்.ஏற்கெனவே நான் நிறைய தேவாலயங்களைப் பார்த்திருந்தாலும் இந்த ஆலயத்தின் பல வண்ணக் கண்ணாடி ஜன்னல்கள் (stained glass) என்னை மிகவும் ஈர்த்தன. ஒவ்வொரு கண்ணாடியிலும் வெவ்வேறு வண்ணக் கலவைகளுடன் இருந்த ஓவியங்கள் காண்போரைக் கவரும் தன்மையன. பாரீசுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் தவறாமல் வருகை தரும் ஆலயம் இது. 

                   பாரிசின் புகழ் பெற்ற தேவாலயம்


பிரெஞ்சுப் புரட்சியின் போது சேதமுற்றிருந்த இந்த ஆலயத்தை மறு சீரமைப்பு செய்து அழகுபடுத்தி 02/12/1804 அன்று மாவீரர் நெப்போலியனும் அவரது மனைவி ஜோஸ்பீனும் சக்ரவர்த்தியாகவும், சக்ரவர்த்தினியாகவும் இங்கு தான் முடி சூட்டிக் கொண்டார்கள். அந்த வைபவத்தின் போது ரோமிலிருந்து வந்திருந்த போப்பாண்டவர் ஏழாம் பயஸ் (Pope Pius VII) நெப்போலியனுக்கு முடி சூட்டும் முன்பாகவே, அவரது கையிலிருந்த கிரீடத்தை வாங்கி நெப்போலியன் தாமே முடி சூட்டிக்கொண்டதாகக் கேள்வி.

நெப்போலியன் அரசராகப் பதவியேற்கும் நிகழ்ச்சியை வரைவதற்காக அழைக்கப்பட்டிருந்த புகழ் பெற்ற ஓவியர் டேவிட் வரைந்த பென்சில் மாதிரி சித்திரம் (Sketch) இதைச் சித்தரிக்கின்றது.

                                                               பென்சில் ஸ்கெட்ச்



ஆனால் டேவிட், தம் மாணவரும் ஓவியருமான பிரான்சுவா ஜெரார்டுவின் யோசனைப்படி, இந்த பென்சில் மாதிரி ஓவியம், முழுச் சித்திரமாக முடிவுறும் நேரத்தில், அந்த சித்திரத்தை நீக்கிவிட்டு, நெப்போலியன் தம் முன்னே மண்டியிட்டுக் குனிந்து வணங்கும் மனைவி ஜோஸ்பீனுக்கு முடி சூட்டும் நிகழ்ச்சியை ஓவியமாகத் தீட்டினாராம்.


                           நெப்போலியன் ஜோஸ்பீனுக்கு முடி சூட்டும் ஓவியம்



 இந்த அழகோவியம் தற்போது பாரிசு லூவ்ரு அருங்காட்சியத்தில் இடம் பெற்று பார்ப்போரைப் பரவசப்படுத்துகின்றது. இது பிரஸ்ஸல்ஸ் ஓவியர் ஒருவரால் மறுபடியும் நகலெடுக்கப்பட்டு, அது தற்போது வெர்செயில்ஸ் அரண்மனையில் இருக்கிறது.

அதற்கடுத்து என் தந்தை 1950 களில் தாம் வேலை செய்த அலுவலகத்தைப் பார்க்க விரும்பியதால் நடந்தே பல தெருக்களைக் கடந்து சென்றோம். ஐந்தாறு ஆண்டுகள் கழித்துச் சென்றாலே நாம் பிறந்து வளர்ந்த ஊரில் நம்மால்  அடையாளம் காண முடியாத அளவிற்கு மாற்றங்கள் ஏற்பட்டு விடும் போது வெளிநாடுகளில் அதுவும் பாரிசு போன்ற  பெரும் நகரங்களில் ஐம்பது ஆண்டுகளில் எத்தனை மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும் 
அவரது அலுவலகம் இருந்த தெருவை, அலுவலகக் கட்டிடத்தை என் தந்தையால் அடையாளம் கண்டுபிடிக்க முடியுமா என்று எங்களுக்குச் சந்தேகம். ஆனால் என்ன ஆச்சரியம்! வழியில் எதிர்ப்பட்ட அத்தனை தெருக்களின் பெயர்களையும் வரிசையாகச் சொல்லிக் கொண்டே வந்து கொஞ்சங் கூடச் சிரமப்படாமல் எளிதாக அந்தத் தெருவை மட்டுமல்ல, கட்டிடத்தையும் கண்டுபிடித்து விட்டார் அப்பா. அவருடைய ஞாபகச் சக்தி எங்களைப் பிரமிக்க வைத்தது. ஏன் தெரியுமா? அப்போது என் தந்தையின் வயது 82!

இன்னோர் ஆச்சரியம்! அந்தக் கட்டிடம் சிறிது கூட மாற்றப்படாமல் அப்போது அவர் பார்த்த மாதிரியே இருந்தது தான். ஆனால் இப்போது அது அலுவலகமாகயில்லாமல் யாருடைய வீடாகவோ ஆகிவிட்டிருந்தது. அந்த இடம் வெறும் கல், சிமெண்டினால் ஆனக் கட்டிடமாக இல்லாமல், அவருடைய உணர்வுகளுடன் ஒன்றறக் கலந்திருப்பதை அப்பா வாஞ்சையுடன் அந்தக் கட்டிடத்தைப் பார்த்த பார்வையிலிருந்து அறிந்து கொள்ள முடிந்தது.

நாங்கள் அங்கு நின்றிருந்த போது கதவைத் திறந்து கொண்டு வெள்ளைக்காரர் ஒருவர் வெளியே சென்றார். உள்ளுக்குள்ளேயும் போய்ப் பார்க்க அப்பாவுக்கு ஆசைதான். ஆனால் அது குடியிருப்பாக இருந்ததினால் அந்த ஆசை நிறைவேறவில்லை. அந்தக் கட்டிடத்திற்குப் பக்கத்தில் அப்போது இருந்த கடைகள் பற்றியும் அவற்றின் உரிமையாளர்கள் பற்றியும் அப்பா சொன்னார்.

அவர்கள் எல்லாரும் இப்போது உயிருடன் இருப்பார்களா? அப்படியே இருந்தாலும் அப்பா அவர்களை ஞாபகம் வைத்திருப்பது போல் அவர்களுக்கு அப்பாவைப் பற்றி ஞாபகம் இருக்குமா என்று யோசித்துப் பார்த்தேன். 50 வருடங்கள் என்பது அரை நூற்றாண்டுக்காலம் அல்லவா? அவர்களுக்கெங்கே ஞாபகம் இருக்கப்போகிறது?
அந்தக் கட்டிடத்திற்கு மட்டும் பேசும் சக்தி இருந்திருந்தால் ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு தன்னையும் ஒரு பொருட்டாக மதித்து, பார்க்க விரும்பி எண்பத்திரண்டு வயதில் பல்லாயிரக்கணக்கான மைல்கள் பயணம் செய்து வந்திருந்த என் தந்தைக்கு ஆனந்தக் கண்ணீர் பெருக கைகுலுக்கி நன்றி தெரிவித்திருக்கும்! கட்டிடத்திற்கு முன்பாக நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார் அப்பா. பிறகு அந்த வீட்டிற்குப் பிரியாவிடை கொடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினோம்.

அந்தத் தெருவிற்குப் பக்கத்துத் தெரு முனையில் ஓர் இடத்தைக் காட்டி, "இங்கு தான் 21 ஆம் நம்பர் பஸ் நிற்கும். இங்கு தான் தினமும் நான் வந்து பஸ் ஏறுவேன்," என்று அவர் சொல்லி வாயை மூடவில்லை. ஒரு பேருந்து வந்து நின்றது. அதன் எண் 21!

                                                          பாரிஸ் பேருந்து



எங்களுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை! ஐம்பது ஆண்டுகளாக தெரு, கட்டிடம் மாறாதது மட்டுமின்றி பேருந்து நிறுத்தமும் மாறவில்லை; அந்த வழித்தடத்தில் இயக்கப்படுகின்ற பேருந்தின் எண்ணும் மாறவில்லை!

மறு நாட் காலை சேன் நதியின் அருகில் அமைந்துள்ள ஈபில் டவரைப் (Eiffel Tower) பார்க்கச் சென்றோம். இந்தியாவின் சின்னமாக தாஜ்மகால் இருப்பது போல் பிரான்சின் சின்னமாக இந்த ஈபில் டவர் இருக்கிறது.

1889 ஆம் ஆண்டு பிரெஞ்சுப் புரட்சியின் நூற்றாண்டு விழா கொண்டாடுவதற்காக உலகளவிலான ஒரு கண்காட்சிக்குப் பிரான்சின் தலைநகர் பாரிசில் ஏற்பாடு செய்யப்பட்டது. அக்கண்காட்சியில் இடம் பெறுவதற்காக கட்டிட வரைபட போட்டி வைத்து எழுநூறு மாதிரி வடிவங்கள் பெறப்பட்டன. அப்போட்டியில் கஸ்தாவ் ஈபில் சமர்ப்பித்திருந்த இந்த ஈபில் டவர் வடிவம் தான் பெரும்பான்மை யோரால் தேர்ந்தெடுக்கப்பட்டது.

ஆனால் இது கட்டப்படுவதற்கு துவக்கத்தில் முந்நூறு பேர் எதிர்ப்புத் தெரிவித்தார்களாம். அந்த முன்னூறு பேரில் பிரெஞ்சிலக்கியத்தில் சிறுகதை மன்னர் எனப் போற்றப்படும் மொப்பசான் (Mauppasant), புகழ் பெற்ற பிரெஞ்சு நாவலாசிரியர் எமீல் சோலா (Emile Zola) ஆகியோரும் அடக்கமாம். பிற்காலத்தில் இது தங்களது நாட்டின் புகழ் பெற்ற ஒரு சின்னமாகப் போற்றப்படப் போகிறது என்று அவர்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.

இதனை வடிவமைத்து உருவாக்கிய இஞ்சீனியர் கஸ்தாவ் ஈபில் (Gustav Eiffel) பெயரையே கொண்டுள்ள இது 1930 வரை உலகின் மிக உயர்ந்த கட்டிடம் என்ற பெருமையைப் பெற்றிருந்தது. 986 அடி உயரமுள்ள இந்த டவர் மூன்று தளங்களைக் கொண்டுள்ளது.

நாங்கள் போயிருந்த சமயம் எக்கச்சக்க கூட்டமிருந்ததால் மூன்றாம் தளத்திற்கு லிப்ட் போகாது என்று சொல்லிவிட்டனர். ஆகவே லிப்டில் இரண்டாம் தளம் வரை தான் போக முடிந்தது. வரிசையில் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் நிற்க வேண்டியிருந்தது. அங்கிருந்த டிக்கெட் கவுண்டரில் தான் டிக்கெட் வாங்க வேண்டும். ஆன்லைனில் வாங்கும் வசதியில்லை. என்ன தான் கூட்டமிருந்தாலும், நான், நீ என்று முண்டியடித்துக் கொண்டு இடையில் புக முற்படாமல், அமைதியாக ஒருவர் பின் ஒருவராக வரிசையில் நிற்கும் வெள்ளைக்காரர்களின் இந்தச் சிறந்த பண்பினை நம்மவர்கள் கற்றுக் கொள்ளவேண்டும்.

அக்கட்டிடத்தின் மேலிருந்து பார்க்கும் போது பக்கத்திலிருக்கும் சேன் நதியும், பாரிசு நகரும் எவ்வளவு அழகு!

                    ஈபிள் டவரிலிருந்து பாரீஸ்



                     ஈபிள் டவரிலிருந்து சேன் நதி 


மூன்றாம் நாள் பாரிசிலிருந்து 16 கிலோ மீட்டர் தூரத்திலிருக்கும் வெர்செயில்ஸ் அரண்மனையைப் பார்க்கச் சென்றோம். பாரீசு செல்பவர்கள் தவறாமல் காண வேண்டிய அரண்மனை இது. இதற்கென்று தனியாக ஒரு நாளை ஒதுக்கிவிட வேண்டும். அப்போது தான் இந்த மிகப் பெரிய அரண்மனையையும் இங்குள்ள கலைச்செல்வங்களையும் பக்கத்திலுள்ள தோட்டத்தையும் ஆற அமர ரசித்து வர முடியும்.

பதின்மூன்றாம் லூயி மன்னரின் காலத்தில் வெர்செயில்ஸ் கிராமமாக இருந்திருக்கிறது. வேட்டைக்குச் செல்லும் மன்னர்கள் இளைப்பாறும் இடமாகயிருந்த இந்தப் பங்களாவை பெரிய அரண்மனையாக விரிவாக்கம் செய்த பெருமை பதினான்காம் லூயி மன்னரையே சாரும். இவர் கி.பி.1682 ஆம் ஆண்டில் பாரிசிலிருந்து இந்த அரண்மனைக்குக் குடி பெயர்ந்த பின்னர் வெர்செயில்ஸ் பிரெஞ்சு அரசியலில் முக்கியத்துவம் பெறலாயிற்று. பின்னர் பதினாறாம் லூயி மன்னர் காலம் வரை இந்தஅரண்மனை தான் அரசர்களின் இருப்பிடமாகத் திகழ்ந்தது.

பதினான்காம் லூயி கலைகளில் மிகுந்த நாட்டம் கொண்டவர் என்பதால் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் எண்ணற்ற கலைப் பொக்கிஷங்களை சேகரித்து இங்கு வைத்திருக்கிறார்.

                     வெர்செயில்ஸ் அரண்மனை



இந்த அரண்மனையில் என்னைக் கவர்ந்த பகுதி கண்ணாடி மண்டபம் (Mirrir Hall) தான். அப்பப்பா! எவ்வளவு அழகு! 

                          கண்ணாடி மண்டபம்  


இந்தக் கண்ணாடி மண்டபத்தைக் காணக் கண் கோடி வேண்டும்! 239 அடி நீளமும் 34 அடி அகலமும் 40 அடி உயரமும் கொண்ட இம்மண்டபத்தின் நடுவில் மேலிருந்து வரிசையாகத் தொங்க விடப்பட்டுள்ள கண்ணாடியாலான சரவிளக்குகள்(Chandelier) இந்த ஹாலின் அழகுக்கு மேலும் மெருகூட்டுகின்றன.

இந்த காலக் கட்டத்தில் ஆண்ட பிரெஞ்சு மன்னர்கள் எந்தளவுக்கு பகட்டும் ஆடம்பரமும் கொண்ட வாழ்க்கை வாழ்ந்துள்ளனர் என்பதைப் பறைசாற்றும் சின்னமாக இந்த அரண்மனை விளங்குகிறது. இந்த அரண்மனைக்கு மேற்குப்பக்கத்தில் அமைந்துள்ள அரண்மனைத் தோட்டமும் அங்குள்ள நீருற்றுகளும் கண்களுக்கு விருந்தளிக்கின்றன.

இந்தத் தோட்டத்தை இந்தக் கண்ணாடி கூடத்திலிருந்து காண வசதியாக பதினேழு ஜன்னல்கள் அமைந்துள்ளன. இவற்றின் வழியாக வரும் இயற்கை வெளிச்சத்தைப் பிரதிபலிக்கும் வகையில் பதினேழு கண்ணாடிகள் அந்த ஜன்னல்களுக்கு எதிர்ப்புறமுள்ள சுவரில் அமைக்கப்பட்டுள்ளன. இக்கூடத்தின் மேற்கூரையில் பதினான்காம் லூயி மன்னரின் ஆரம்ப கால ஆட்சியைக் கொண்டாடும் விதமாக ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. முதல் உலகப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெர்செயில்ஸ் ஒப்பந்தம்(1918) இங்கு தான் கையெழுத்தானது.

அடுத்து நாங்கள் சென்றது உலகப் புகழ் பெற்ற லூவ்ரு (Louvre) அருங்காட்சியகம். பிரும்மாண்டமான இந்த அருங்காட்சியகத்தை ஒரு நாளில் சுற்றிப்பார்ப்பதென்பது இயலாத காரியம். எல்லாப்பகுதிகளையும் பொறுமையாகச் சுற்றிப்பார்க்க குறைந்தது மூன்று நாட்களாகவது ஆகும். மேலும் காட்சியகம் முழுவதையும் சுற்றி வரத் தேவையான தெம்பு எங்கள் கால்களுக்கு இல்லையென்பதால் எங்களுக்குப் பிடித்த சிற்பம், ஓவியம் இடம்பெற்றுள்ள பகுதியை மட்டும் சுற்றிப் பார்ப்பதென முடிவு செய்தோம். அங்கு வைக்கப்பட்டுள்ள வரைபடத்தைப் பார்த்து நாங்கள் போக வேண்டிய பகுதியைக் கண்டுபிடித்தோம்.

ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட வண்ண ஓவியங்கள் இங்குள்ளதாம். புகழ் பெற்ற இத்தாலி ஓவியர்களான ரபேல் (Raphel), மைக்கேல் ஏஞ்சலோ (Michel Angelo), லியோனார்டோ டாவின்சி(Leonardo da Vinci) ஆகியோர் வரைந்த சித்திரங்கள்இக்காட்சியகத்தின் சுவர்களை அலங்கரிக்கின்றன. டாவின்சி வரைந்த புகழ் பெற்ற மோனாலிசா ஒரிஜினல் ஓவியம் இங்கு தான் உள்ளது.
                 கண்ணாடிக் கூண்டுக்குள் மோனாலிசா


இதனைப் பார்க்கவும் புகைப்படம் எடுக்கவும் கூட்டத்தினரிடையே தான் எவ்வளவு ஆவல்! உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து தம்மைத் தரிசிக்க வரும் ரசிகர்களின் மேல் கவர்ந்திழுக்கும் தம் தெய்வீகப் புன்னகையைச் சிந்திய வண்ணம் கம்பீரமாக வீற்றிருக்கிறார் மோனாலிசா!

யார் இந்த மோனாலிசா? பிளாரன்சைச் சேர்ந்த பட்டு வியாபாரியும் மிகப் பெரிய பணக்காரருமாகிய பிரான்செஸ்கோ தம் மனைவி லிசா ஜெரார்டினியின் (Lisa Gherardini, wife of Francesco del Giocondo) உருவத்தைத் ஓவியமாகத் தீட்டச் சொல்லி டாவின்சியைக் கேட்டுக் கொண்டதாகச் சொல்கிறார்கள். அது உண்மையோ பொய்யோ நமக்குத் தெரியாது. ஆனால் 500 வருடங்கள் கடந்த பின்னரும் இன்றும் அழகின் இலக்கணமாய், கவிஞர்களின் கற்பனைக்கு வற்றாத ஊற்றுக்கண்ணாய் இப்படைப்பு மிளிர்கிறது என்றால் அது மிகையில்லை.


1911 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 ஆம் தேதி வின்சென்சோ பெருகியா (Vincenzo Peruggia) எனும் பெயர் கொண்ட இத்தாலியர், (ஏற்கெனவே இந்த அருங்காட்சியகத்தில் வேலை பார்த்தவருங் கூட) இந்தக் கட்டிடத்துக்குள் மறைந்திருந்து  மறு நாள் காலை திறக்கப்படும் போது, இந்த ஓவியத்தின் சட்டங்களைக் கழற்றிவிட்டுத் தம் உடம்புக்குள் மறைத்து வெளியே எடுத்துச் சென்றுவிட்டாராம். காட்சியக ஊழியரின் சீருடையை அவர் அணிந்திருந்ததால் யாருக்கும் அவர் மேல் சந்தேகம் வரவில்லை. அதை எடுத்துக் கொண்டு இத்தாலி திரும்பியவர், இரண்டு வருடங்கள் கழித்து பிளாரன்சில் சித்திரக் காட்சி சாலை வைத்திருந்த ஒருவரை அணுகிய போது போலிசிடம் பிடிபட்டு கைதானராம்.

நெப்போலியனால் திருடப்பட்டு இத்தாலியிருந்து பிரான்சு கொண்டு வரப்பட்ட ஓவியம், தம் தாய்நாடான இத்தாலியிலுள்ள அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும் என்பதற்காகவே இதனைத் திருடியதாக பெருகியா சொன்னாராம். என்னே அவரது நாட்டுப்பற்று!

ஆனால் உண்மையில் டாவின்சி அதைத் தாமே எடுத்துச் சென்று பிரான்சு மன்னருக்குப் பரிசாகக் கொடுத்திருந்தமையால், இத்தாலியில் பிடிபட்ட ஓவியம் மறுபடியும் பாரிசுக்குக் கொண்டு வரப்பட்டு இங்குக் காட்சிக்கு வைக்கப்பட்டது.

1956 ஆம் ஆண்டு ஒரு நாசக்காரக் கும்பல் ஒன்று இதன் மேல் திராவகத்தை (acid) ஊற்றியதில் இந்தச் சித்திரத்தின் கீழ்ப்பகுதி சேதமுற்றதாம். 1974 ஆம் ஆண்டு பெண்ணொருத்தி இந்த அருங்காட்சியகத்தின் மேலிருந்த கோபத்தில் சிவப்பு கலர் திரவத்தை இதன் மீது ஊற்றிப் பாழ்படுத்த முயன்றாராம். இவர்களைப் போன்ற அழிவு சக்திகளிடமிருந்து இந்த அரிய கலைப் பொக்கிஷத்தைக் காப்பாற்றவே, இந்த உயிரோவியத்தைத் துப்பாக்கி துளைக்காத கண்ணாடிக் கூண்டுக்குள் சிறை வைத்திருக்கின்றனர்.

இந்த அருங்காட்சியகத்திற்குப் போகுமுன்பே டிக்கெட் வாங்கி விட்டால், நுழை வாயிலில் இருக்கும் நீண்ட கியூ வரிசையை நாம் தவிர்த்து விடலாம்.

அதற்கான வலை முகவரிகள்:-
http://www.louvre.fr/llv/pratique/tarifs.jsp?tarif=4
http://www.ticketweb.com
http://www.ticketnet.fr/shop/fr/resu...&idtier=138989
http://louvre.fnacspectacles.com/
(இது தான் நாங்கள் டிக்கெட் வாங்கிய முகவரி)
http://www.parismuseumpass.com/en/home.php

பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும் வெண்மை நிற சலவை கற்களாலான ஆயிரக்கணக்கான சிலைகளில் கிரேக்க கடவுளான வீனஸ் சிலை (Venus de Milo) மிகவும் தலை சிறந்த படைப்பு என்று போற்றப்படுகிறது. இரண்டு கைகளும் உடைந்த நிலையில் இருக்கும் இக்கிரேக்கச் சிலையின் காலம் கி.மு.100 ஆக இருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. அடுத்து மைக்கேல் ஏஞ்சலோவின் அடிமை (Slave) சிலையும் மிகவும் பிரபலமான ஒன்று.

                            வீனஸ் சிலை


நம்மூர்க் கோயில்களில் பெரும்பாலும் நேராக நிற்பது போலவோ அல்லது உட்கார்ந்து இருப்பது போலவோத் தான் சிலைகளைப் பார்த்திருக்கிறோம். ஆனால் அங்கு வெவ்வேறு தோரணைகளில் (pose) வடிக்கப்பட்டுள்ள சிலைகளைக் காணும் போது மேற்கத்திய சிற்பக்கலையைப் பற்றி நாம் ஓரளவு அறிந்து கொள்ள முடிகிறது. சிலைகளின் உடைகளில் உள்ள மடிப்புகள், சுருக்கங்கள் கூட நேரில் பார்ப்பது போல அவ்வளவு தத்ரூபமாக கல்லில் வடித்திருப்பதைக் கண்டு என்னால் வியக்காமல் இருக்க முடியவில்லை.


                        என் மனதைக் கொள்ளை கொண்ட சில சிலைகள்:-




 


பாரீசில் அடுத்து முக்கியமாகப் பார்க்க வேண்டிய இடம் வெற்றி வளைவு ( The Arc de Triomphe). இது நெப்பொலியனால் அவரது ராணுவ வெற்றிகளின் நினைவாக அமைக்கப்பட்டது. நெப்போலியன் ஆட்சியின் போது வெற்றி பெற்ற பிரெஞ்சுப் படைகளுக்குத் தலைமையேற்ற தளபதிகளின் பெயர்கள் இந்தக் கட்டிடச் சுவர்களில் பொறிக்கப்பட்டுள்ளன. 1921 ஆம் ஆண்டில் இதனடியில் பெயர் தெரியாத பிரெஞ்சு வீரர் ஒருவருக்குக் கல்லறை (The Tomb of the Unknown Soldier) கட்டப்பட்டது. இரண்டு உலகப் போர்களில் இறந்த மாவீரர்களை நினைவு படுத்தும் விதமாக அணையா தீபம் இங்கு ஏற்றப்பட்டுள்ளது.
பின் பாரீசிலிருந்து தாலீஸ் ரயில் (http://www.thalys.com) மூலம் பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் சென்று இரு நாட்கள் தங்கிவிட்டு மீண்டும் பாரிசு திரும்பினோம். பாரிசுக்கும் பிரஸ்ஸல்ஸுக்கும் ஒன்றரை மணி நேரமே பயணம். 

பெல்ஜியத் தலைநகரான பிரஸல்ஸில் (Brussels) நான் பார்த்த 'மினி ஐரோப்பா' என்னை மிகவும் கவர்ந்தது.  ஐரோப்பாவில் உள்ள எல்லா நாடுகளிலும் உள்ள புகழ் வாய்ந்த கட்டிடங்களை 'மினியேச்சர்' வடிவில் மிகவும் நேர்த்தியாக, அதே கலையம்சத்தோடு மிகச் சிறிய விஷயங்களிலும் கவனம் செலுத்தி நுணுக்கமாக வடிவமைத்திருக்கிறார்கள்.

                                             மினி ஐரோப்பா கட்டிட மாதிரிகள்












கட்டிடத்துக்கு முன்பு ஒரு மரம் இருக்கிறதென்றால் கூட அது எவ்வளவு உயரம் இருக்கிறதோ, அதே உயரத்துக்குச் செடிகளை நட்டுப் பராமரிக்கிறார்கள். அந்த மினி ஐரோப்பாவைச் சுற்றி வந்தாலே, ஐரோப்பா முழுமைக்கும் போய்ப் பார்த்து வந்த திருப்தி கிடைக்கிறது. இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள முக்கிய கட்டிடங்களை இதே பாணியில் 'மினி இந்தியா' என்ற பெயரில் நம் தமிழ் நாட்டில் அமைத்தால், நம் சுற்றுலாத் துறைக்கு நல்ல வருவாய் கிடைக்கும்.

இந்த 'மினி ஐரோப்பா' பக்கத்தில் 'அட்டாமியம்' (atomium) என்ற பெயரில், அணுவின் தோற்றத்தில் ஒரு கட்டிடத்தை நிறுவியிருக்கிறார்கள். மிகவும் வித்தியாசமாக இருக்கிறது.


                                                                  அட்டாமியம்


 
இதன் உள்ளே பிரஸ்ஸல்ஸ் நகரின் படிப்படியான வளர்ச்சியைப் பற்றிய புகைப்படங்கள், செய்திகள் இடம் பெற்றிருக்கின்றன. உள்ளே காண்பதற்கு விஷேசமாக ஒன்றும் இல்லை என்றாலும் அந்தக் கட்டிடத்துக்குள் போய், ஒவ்வொரு பிரும்மாண்டமான உருண்டைக்குள்ளும் 'எஸ்கலேட்டரி'ல் போய் வரக் கூட்டம் அலைமோதுகிறது. அந்நாட்டுச் சுற்றுலாத்துறைக்கு நல்ல வருவாய்.

அடுத்து ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் மாதக்கடைசியிலோ மே மாத முதல் வாரத்திலோ அங்குள்ள மன்னரின் அரண்மனைத் தோட்டம், ஒரு வாரம் மட்டும் பொதுமக்கள் பார்வைக்குத் திறந்து வைக்கப்படுவது வழக்கமாம். நாங்கள் போயிருந்த சமயம் அத்தோட்டத்தைப் பார்ப்பதற்கு வாய்ப்புக் கிடைத்தது. ஆகா! எவ்வளவு பெரிய தோட்டம்! கண்களைக் கவரும்
வண்ணங்களில் எத்தனை விதமான மலர்கள்!

                                       அரண்மனைத் தோட்டத்தில் சில மலர்கள்







ஐரோப்பா போனதிலிருந்து நம்மூர் சாப்பாட்டுக்கு நாக்கு ஏங்கித் தவித்தது. எங்குத் திரும்பினாலும் மெக்டொனால்ட்கடையிருந்தது. அங்கு போய் பிஸ்ஸா, பர்கர் தின்று தின்று நாக்கு செத்து விட்டது. காரசாரமாக வற்றல் குழம்பு வைத்துச் சாப்பிட மாட்டோமா என்று மனதுக்குள் ஓர் ஏக்கம். 

நம்மூரில் இருக்கும் போது "எப்போ பார்த்தாலும் இட்லி, தோசை தானா?" என்று அவ்வப்போது கோபித்துக் கொண்டு சாப்பிடாமல் சத்தியாக்கிரகம் செய்யும் கணவரும், எங்காவது நம்மூர் ஹோட்டல் இருக்காதா, தோசை கிடைக்காதா எனப் புலம்பத் துவங்கி விட்டார். எங்கள் புலம்பல்களைத் தாங்க முடியாமல் பாரிசில் தமிழர்கள் கடை அதிகம் இருக்கும் செயிண்ட் டெனிஸ்(Rue du faubourg Saint Denis)தெருவிற்கு மகன் ஒரு நாள் எங்களை அழைத்துச் சென்றான். கார் தி நோர் (Gare du Nord) என்ற ரயில்வே ஸ்டேஷனில் இறங்கினால், நடக்கும் தூரத்தில் தான் இத்தெரு இருக்கிறது.

அவ்வீதியில் நடந்த போது பாரிசில் இருக்கிறோம் என்ற உணர்வேயில்லாமல் சென்னையில் ஒரு கடைவீதியில் நடப்பது
போன்ற பிரமை ஏற்பட்டது. அந்தளவுக்குத் தெரு முழுக்க நம் தமிழரின் கடைகள். பெயர்ப் பலகைகள் தமிழிலேயே எழுதப் பட்டிருந்தன. ஹோட்டல் ஒன்று கண்ணில் பட்டதுமே, அவசரமாக உள்ளே நுழைந்து ரவா தோசையும் மசால் வடையும் சாப்பிட்டோம். சுவையும் தரமும் சுமார் தான் என்றாலும், பத்துப்பதினைந்து நாட்களாக வரக் வரக்கென்று ரொட்டியை மட்டுமே தின்று காய்ந்து கிடந்த நாக்குக்கு அது தேவாமிர்தமாக இனித்தது.

இந்தப் பயணத்தில் என்னைக் கவர்ந்த விஷயம் மேல்நாட்டினர் சுற்றுப்புறத் தூய்மையைப் பேணும் விதம். நாள் தோறும் ஆயிரக் கணக்கான பயணிகள் வந்து போகும் சுற்றுலாத் தளங்கள் கூட படு சுத்தமாகக் காட்சியளிக்கின்றன. மேலும் யாருமே காட்சிக்குவைக்கப்பட்டிருக்கும்ஓவியங்களையோ, சிலைகளையோ தொடுவதில்லை. பக்கத்தில் நின்று புகைப்படம் மட்டுமே எடுத்துச் செல்கிறார்கள்.

நம் நாட்டிலோ மக்கள் சுற்றுலாத் தளங்களுக்கு வீட்டில் சாப்பிடுவது போல் வகை வகையாக சாப்பாடு பொட்டலம் கட்டி எடுத்துக் கொண்டு போய் சாப்பிட்டு விட்டு பாலீதீன் கவர்களைக் கண்ட கண்ட இடங்களில் வீசிவிட்டு, மிச்சம்மீதியையும் அங்கங்கே கொட்டி விட்டு சுற்றுப்புறத் தூய்மையைக் கெடுப்பதைப் பற்றியோ, பொது இடங்களை அசுத்தம்
செய்வதைப் பற்றியோ துளிக்கூட கவலைப்படாமல் நடந்து கொள்கின்றனர்.

பழங்கால அரிய கலைப் பொக்கிஷங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற சிந்தனையும் நம் மக்களிடையே மிகவும் குறைவு. உதாரணத்திற்கு நம் நாட்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் ஒன்றான மாமல்லபுரத்துக்குப் போய்ப் பாருங்கள்.

அங்குள்ள சுவர்களிலும் பாறைகளிலும் கற்களாலும் கூரான ஆயுதங்களாலும் தங்களது பெயர்களைப் பொறித்து வைப்பது,
ஏற்கெனவே சரியாகப் பாதுகாக்கப் படாமையாலும், பருவ நிலை மாறுபாட்டாலும் சிதிலமடைந்திருக்கும் யானை, குதிரை போன்ற சிலைகளின் மேல் குடும்ப முழுதும் ஏறி அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்வது என அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அட்டகாசம் செய்கிறார்கள். இதே நிலைமை அங்குத் தொடர்ந்தால் பாறைகளைக் குடைந்து உருவாக்கப்பட்ட அந்த அரிய வகை பல்லவர் காலச் சிற்பங்கள், உடைந்து விழாமல் இன்னும் எவ்வளவு காலம் தாக்குப் பிடிக்கும் என்று சொல்வதற்கில்லை.

நம்மூரில் ஆறு ஆறரைக்குள் சூரியன் மறைவதைப் பார்த்துப் பழகியிருந்த எனக்கு, இரவு எட்டரை மணி வரை சூரியன் மறையாமல் வெயில் அடித்துக் கொண்டிருந்த காட்சி மிகுந்த வியப்பை ஏற்படுத்தியது. கொசு, , போன்ற பூச்சிகளை எங்கும் பார்க்காததும் ஓர் ஆச்சரியமே!

எங்கள் பயணம் இனிதே முடிந்து ஊருக்குக் கிளம்பும் நாள் வந்தது. பதினெட்டு நாட்கள் எங்களுடன் சுற்றிக் கொண்டு மலர்ச்சியாக இருந்த மகனின் முகம், பிரியும் நேரம் வந்ததும் மிகவும் வாடி கண்கள் கலங்கி விட்டன. என்ன செய்வது? பிரியும் நேரம் வந்தால் பிரிந்து தானே ஆக வேண்டும்! பாரிசு விமான நிலையத்தில் பையனுக்கு டாட்டா சொல்லி விட்டு ஏர் பிரான்ஸ் விமானத்தில் பயணம் செய்து சென்னை வந்து சேர்ந்தோம்.

இது வரை என்னுடனே பயணித்து என் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட உங்களுக்கு என் நன்றி.

மீண்டும் அடுத்த பயணத்தில் சந்திப்போம். பயணங்கள் முடிவதில்லை.

(மூன்றாம் கோணம் பயணக்கட்டுரைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றது)

20 comments:

  1. வணக்கம்
    இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரிhttp://blogintamil.blogspot.com/2014/01/blog-post_25.html?showComment=1390607435662#c947129308205581039
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. வலைச்சரத்தில் அறிமுகமான விஷயத்தை தெரிவித்தற்கு மிகவும் நன்றி ரூபன் சார்!

    ReplyDelete
  3. ஆஹா, எவ்வளவு பெரிய மிக நீண்ண்ண்ண்ண்ட பயணக் கட்டுரை. வரிக்குவரி, ரசித்து ருசித்து மனதில் ஏற்றிக்கொண்டு நான் படித்து முடிக்க எனக்கு முழுசாக மூன்று நாட்கள் ஆனது.

    நானாக இருந்தால் இதையே ஒரு 20-25 பகுதிகளாகப் பிரித்து வெளியிட்டிருப்பேன். :)

    படங்கள் அத்தனையும் அழகோ அழகு.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. என் பழைய பதிவைத் தேடி மூன்று நாட்கள் பொறுமையுடன் வாசித்துப் பாராட்டியதற்கு மிக்க நன்றி கோபு சார்! 2008 ல் ஐரோப்பிய பயணம் போய் வந்த சமயத்தில் நான் தமிழ்மன்ற உறுப்பினராயிருந்தேன். என் அனுபவங்களை எழுதச்சொல்லி நண்பர்கள் வற்புறுத்தினார்கள். அவர்கள் வற்புறுத்தலின் பேரிலேயே இக்கட்டுரையைத் துவங்கினேன். அவர்கள் கொடுத்த அளவுக்கதிகமான ஊக்கமும், உற்சாகமும், பாராட்டும் தொடர்ந்து பல வாரங்கள் என்னை அனுபவித்து எழுத வைத்தது. இப்போது என்னால் இது போல் ஒரு பயணக்கட்டுரை எழுத முடியுமா என்பது சந்தேகமே. பின்னர் மூன்றாம் கோணம் பயணக்கட்டுரை போட்டி வைத்தார்கள். ஏற்கெனவே மன்றத்தில் எழுதியதைத் தொகுத்து அங்கு அனுப்பினேன். எனக்கு இரண்டாம் பரிசு கிடைத்தது. முதல் பரிசு பெற்றவர் தாமரை ராஜேஸ்வரி மேடம் தான்!. கண்டிப்பாக முதல் பரிசுக்கு அவர் தகுதியாவரே. மூன்றாண்டுகள் கழித்து ஊஞ்சல் வலைப்பூ துவங்கிய போது என் எழுத்தை ஒரே இடத்தில் சேமிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரே பதிவாக எடுத்து வெளியிட்டேன். அறிமுகப்பதிவர் நான் என்பதால் உங்களைப் போல் பகுதி பகுதியாகப் பிரித்து வெளியிட்டாலும் யாரும் படிக்க மாட்டார்கள் என்பதும் ஒரு காரணம். எனக்கு நகைச்சுவையாக எழுதுவதும் வாசிப்பதும் மிகவும் பிடித்த விஷயம். என் ஆரம்ப கால எழுத்தில் சொந்த அனுபவங்களை நகைச்சுவை கலந்தே எழுதினேன். நகைச்சுவை எழுத்தில் வித்தகராகிய உங்களிடமிருந்து மனந்திறந்த பாராட்டுக் கிடைத்ததில் உச்சி குளிர்ந்து தான் போகிறேன். மிகவும் நன்றி கோபு சார்!

      Delete
    2. :) மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான ஒவ்வொரு பதில்களுக்கும் என் நன்றிகள். வேறொரு முக்கியமான ஆராய்ச்சிக்காக, நம் பதிவர்களில் சிலரின் பழைய பதிவுகள் பக்கம் நான் பயணம் மேற்கொள்ள நேர்ந்தபோது, தங்களை ஐரோப்பாவில் நான் சந்திக்க சந்தர்ப்பம் கிடைத்தது. அது ஏன் அந்த ஆராய்ச்சி என்பதுபற்றி 31.05.2015 இரவுக்குள் தங்களுக்குத் தெரிவிக்கப்படும் :)

      நன்றியுடன் கோபு

      Delete
    3. உங்கள் ஆராய்ச்சி இல்லையேல் என் பழைய பதிவு உங்கள் கண்ணில் பட்டிருக்க வாய்ப்பில்லை. இதுவும் நல்லதுக்குத்தான். ஏன் அந்த ஆராய்ச்சி என்று அறிந்து கொள்ள வெகு ஆவலாயிருக்கிறேன்! 31/05/2015 வரை பொறுத்திருக்க வேண்டும். நன்றி சார்!

      Delete
  4. பல இடங்களில் தாங்கள் கூறியுள்ள பல விஷயங்கள் மிகவும் நகைச்சுவையாகவும் ரசித்துச் சிரிக்கக்கூடியவையாகவும் இருந்தன. என் மனைவியுடனும் நான் மிகுந்த மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டேன்.

    உதாரணமாக சில:

    புடவை அணிந்து சென்றதால், சுலபமாக உள்ளுக்குள் ஊடுருவிய வெட வெடக்கும் குளிர்ந்த பனி அனுபவங்கள். :)

    பஸ்ஸில் டிக்கெட் வாங்காமல் திக் திக் என்ற பயத்துடன் பயணம் செய்தது. :)

    தங்கள் வயிற்றுப்பகுதிக்குள் வெடிகுண்டு இருக்கிறதா என்று சந்தேகத்துடன் அவர்கள் மேற்கொண்ட சோதனைகள் :)

    ரெயில் பெட்டியில் கண்ணாடிக் கதவுகள் மூடாமல் இடையே லக்கேஜுடன் அவர் சிக்கிக்கொண்டு .... வயதான தங்கள் தந்தையும் வண்டியில் ஏறமுடியாமல் வெளியே நின்றபடி ..... தாங்கள் மிகவும் டென்ஷன் ஆனது. :)

    தத்ரூபமான மெழுகுச்சிலையுடன் போட்டோக்கள். அதில் அநியாயமாகக் குள்ளமாக்கப்பட்டுள்ள நம் மஹாத்மா ! :)

    பார்ஸல் வாங்கிக்கொண்டு வெளியே எங்கோ போய் சாப்பிட நேர்ந்த கொடுமை. :)

    ஒரு பெரிய ஜாம் பாட்டிலை எடுத்து அப்படியே அவர்கள் குப்பைக்கூடைக்குள் போட்டு விட்டது. :)

    மற்றொரு பெண்ணின் குழந்தைக்கான பால் புட்டியைக்கூட அவர்கள் 10 நிமிடங்களுக்கு மேல் சந்தேகப்பட்டது etc., etc.,

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. கட்டுரையை ஊன்றிப்படித்துப் பல விஷயங்களை நினைவு கூர்ந்து நீங்கள் எழுதியிருக்கும் நீண்ட பின்னூட்டம் என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துகிறது. உங்கள் மேடத்துடன் கட்டுரையின் அம்சங்களைப் பகிர்ந்து ரசித்ததும் மகிழ்வளிக்கிறது. பார்த்த இடங்களைப் பற்றி விலாவாரியாக எழுதுவதை விடவும் ஐரோப்பியப் பயணம் போகின்றவர்களுக்கு உதவக்கூடும் என்பதால் என் அனுபவங்களுக்கு இக்கட்டுரையில் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறேன். நான் மறந்து போன பல விஷயங்களை உங்கள் பின்னூட்டம் நினைவுப்படுத்தியதால், மறுபடியும் ஐரோப்பிய பயணம் சென்று மீண்டேன். மிகவும் நன்றி கோபு சார்!.

      Delete
    2. //நான் மறந்து போன பல விஷயங்களை உங்கள் பின்னூட்டம் நினைவுப்படுத்தியதால், மறுபடியும் ஐரோப்பிய பயணம் சென்று மீண்டேன். //

      :) மிகவும் ரஸித்தேன். மிக்க நன்றி, மேடம். :)

      Delete
    3. என் பதிலை ரசித்துக் கருத்து சொன்னதுக்கு மிக்க நன்றி சார்!

      Delete
  5. புதிதாக இதுபோன்ற நாடுகளுக்கு பயணம் செய்ய நினைப்போருக்கு இந்தத்தங்களின் அருமையான கட்டுரை ஒரு எச்சரிக்கையையும், விழிப்புணர்வினையும் தரக்கூடும். மிகவும் அட்வான்ஸ் ஆக விசா வுக்கு மனுச்செய்வது உள்பட.

    பகிர்வுக்குப் பாராட்டுகள். வாழ்த்துகள். நன்றிகள்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சார்! கண்டிப்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே என் குறிக்கோள். குறிப்பாக என்னென்ன பொருட்களை எடுத்துச் செல்லக் கூடாது என்பதில் கவனம் எடுத்துக் கொண்டால் அதனால் ஏற்படக்கூடிய பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நெஞ்சார்ந்த நன்றி சார்!

      Delete
  6. மூன்றாம் கோணம் பயணக்கட்டுரைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற தங்களுக்கு என் மனம் நிறைந்த இனிய பாராட்டுகள். வாழ்த்துகள்.

    முதல் பரிசே தரப்பட வேண்டிய மிக அருமையான கட்டுரையாக இதை நான் உணர்ந்தேன்.

    எனினும் மிக்க மகிழ்ச்சி :)

    -=-=-=-=-=-

    ReplyDelete
    Replies
    1. முதல் பரிசு ராஜேஸ்வரி மேடம் பெற்றார்! கண்டிப்பாக என்னை விட அவர் முதற்பரிசுக்குத் தகுதியானவர் தாம்! பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மீண்டும் என் நன்றி சார்!

      Delete
  7. அன்புடையீர்,

    வணக்கம். தங்களின் வலைப்பதிவுகளில் சில, இன்றைய வலைச்சரத்தில், வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்களால் பாராட்டிப் புகழ்ந்து, அடையாளம் காட்டப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    பாராட்டுகள். வாழ்த்துகள்.

    இணைப்பு:http://blogintamil.blogspot.in/2015/06/4.html

    ReplyDelete
  8. வாங்க ஆதி! தங்கள் வருகைக்கும் வலைச்சர அறிமுகம் பற்றிய செய்தியை அறிவித்தமைக்கும் என் சிரந்தாழ்ந்த நன்றி! பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் மீண்டும் என் நன்றி!

    ReplyDelete
  9. வலைச்சரத்தில் கண்டேன். வாழ்த்துக்கள். எனது வலைத்தளங்களைக் காண அன்போடு அழைக்கிறேன்.
    http://www.drbjambulingam.blogspot.com/
    http://www.drbjambulingam.blogspot.com/

    ReplyDelete
  10. திரு V.G.K அவர்கள் சொல்வது போல நீண்ட …. கட்டுரையே என்றாலும் படிக்கப் படிக்க சுவாராஸ்யமே.

    // எனக்கு ஒரு சந்தேகம். எந்தத் தீவிரவாதியாவது முறையாகப் பாஸ்போர்ட், விசா வாங்கிப் பயணம் செய்வானா? அப்படியே செய்தாலும் இந்தக் கேள்விகளுக்கு 'ஆம் நான் ஒரு தீவிரவாதி தான் இந்தந்த நாடுகளில் நான் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டிருக்கிறேன் என்று உண்மையைச் சொல்வானா?' //

    தங்களின் இந்த கேள்வி நியாயமான ஒன்று. நடைமுறை என்ற பெயரில் நிறையவே தொல்லைகள்.

    கதவுகள் உள்ள ரெயில் படிக்கட்டு வழியே ஏறி இறங்குவது சிரமம்தான். லிப்ட்டில் கூட சில சமயம் இதே தொல்லைதான்.

    தியேட்டரில் தேசியகீதம் நினைவுக்கு வருகின்றது. நானும், என்னைப் போன்ற சிலரும் , படம் முடிந்ததும் போடும் தேசியகீதத்திற்காக மரியாதை கொடுப்போம். எங்களை கேலியாக பார்த்துக் கொண்டே செல்வார்கள்.

    Daffodils: என்றாலே வேர்ட்ஸ்வொர்த் கூடவே வருவது இயற்கை. கவிதை நினைவுக்கு பாராட்டுக்கள். பள்ளிப் படிப்பின் போது மனப்பாடமாக நான் வைத்திருந்த கவிதை. இபோது கொஞ்சம் தடுமாற்றம்.

    வெனீஸ் முகமூடிகளில் மறைந்து கிடக்கும் ஒரு சித்தாந்தம். புதிய தகவல். தங்கள் தந்தைக்கு இருக்கும் நினைவாற்றல், கடவுள் தந்த கொடை.

    ( பெரிய கட்டுரை என்பதால், இது வெளியான அன்று, அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று வைத்து விட்டென் என்று நினைக்கிறேன். தங்களின் நினைவூட்டலுக்கு நன்றி. நேற்று இரவு பாதி, இன்று காலை பாதி என்று படித்து முடித்தேன். ’மூண்றாம் கோணம்’ தந்த இரண்டாம் பரிசைப் பெற்றமைக்கு வாழ்த்துக்கள்’ )

    ReplyDelete
    Replies
    1. என் வேண்டுகோளை ஏற்று பொறுமையாகப் படித்து விளக்கமாகக் கருத்திட்டமைக்கு மிகவும் நன்றி இளங்கோ சார்! இதை ஒரு தொடராக எழுதியதால் மிக நீண்ட கட்டுரை தான். சுவாரசியமாக இருந்தது என்பதை அறிய மகிழ்ச்சி சார்! மீண்டும் என் நன்றி!

      Delete
  11. ஒரு புத்தகமே போட்டுவிடலாம் ... அத்துணை நீண்ட கட்டுரை ... ஆனாலும் சுவாரஸ்யம் குறையவில்லை ! ... அருமை !!

    ReplyDelete