நல்வரவு

வணக்கம் !

Sunday 29 December 2019

ரோலக்ஸ் வாட்ச் நாவல் - வாசிப்பனுபவம்




ரோலக்ஸ் வாட்ச் நாவல் -  வாசிப்பனுபவம்
ஆசிரியர் - திரு சரவணன் சந்திரன்

2016 ஆம் ஆண்டு உயிர்மை வெளியிட்டுள்ள ரோலக்ஸ் வாட்ச் திரு சரவணன் சந்திரன் என்கிற சரவணக்குமார் எழுதிய இரண்டாவது நாவல்.  இவரது முதல் நாவல், ஐந்து முதலைகளின் கதை, பரவலான வாசக கவனத்தைப் பெற்றது.


முன்னுரையில் எழுத்தாளர் தமிழ்மகன், “அரசியல் சதுரங்கத்தில் தாயம் உருட்டும் நிழல் மனிதர்களைக் கதாபாத்திரம் ஆக்கியிருக்கிறார், சரவணன் சந்திரன்.  அவருடைய அரசியல், பத்திரிக்கை அனுபவமும், தொழில் அனுபவமும் அவருக்குக் கற்பித்த பாடம், வரிக்கு வரி தெரிகிறது.  வரிகளுக்கு இடையேயும் அறிய முடிகிறது.  அசலான 21 ஆம் நூற்றாண்டின் கதையைச் சரவணன் சந்திரன் சொல்கிறார்,என்று சொல்லியிருப்பது, மிகவும் சரி.

அரசியல் மற்றும் அதிகார வர்க்கத்தினரின் கதைகள்  பல திரைப்படங்கள் மூலம், நமக்கு ஏற்கெனவே பரிச்சயம் ஆனவை தாம்.  ஆனால் இந்த இரு வர்க்கத்தினருக்குமிடையே தரகர்களாக, கமிஷன் ஏஜண்டுகளாக செயல்படும் நிழல் மனிதர்கள், நம்மிடையே வாழ்ந்து கொண்டிருந்தாலும், இவர்களைப் பற்றி, இவர்களது இருட்டு வாழ்க்கை பற்றி, இதுநாள் வரை, இவ்வளவு விரிவாய் அறிந்ததில்லை.

முதல் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம் வரை, பிரதான பாத்திரமாக இருந்து, தன் நண்பர்கள் பலரைப் பற்றி விவரிக்கும் கதைசொல்லி தான், இந்நாவலின் முக்கிய நாயகன்.

செல்வாக்கு மிகுந்த அரசியல் பிரமுகர்களுக்கும், சாமான்யர்களுக்குமிடையே உலவும் நிழல் மனிதனான இவனுக்குக் குறுக்கு வழியில், பணம் சம்பாதிப்பது ஒன்று மட்டுமே, குறிக்கோள். 

“பணம்தான் என்னுடைய ஆக முக்கியமான பிரச்சினை.  என் குடும்பம், என் வாழ்வு எல்லாவற்றிலும் பணம் தான் பிரதான பிரச்சினை.  அந்தப் பணத்தை வென்றெடுக்கத் தான், நான் எல்லாரிடமும் ஒட்டிக் கொண்டிருக்கிறேன்.  ஒரு சிறு கயிறு கிடைத்தால் கூடப் போதும்.  அதைப் பிடித்து மேலேறி விடுவேன். (பக் 31)

அவன் மிகவும் மதிப்பு வைத்திருந்த பேராசிரியர்,  ஒரு முறை, 
“உன்னைப் போல் பணத்தைத் தேடியலைபவர்களால், அதைப் புரிந்து கொள்ள முடியாது; குறிப்பாக உன்னால் புரிந்து கொள்ள முடியாது, (பக் 112) என்று முகத்துக்கு நேராகவே குற்றஞ் சாட்டுகிறார்.

பிஞ்சிலேயே பழுத்து வெம்பிய, நண்பர்களின் நடவடிக்கைகள்  குறித்த கதைசொல்லியின் விவரிப்பை வாசிக்கையில், நம் இளைய சமுதாயம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்ற எண்ணம், வாசிப்பது நாவல் தான் என்ற உண்மையை மறக்க வைத்து, நம்மை அதிர்ச்சியடையச் செய்கிறது!     
உடன் நடித்த நடிகை, பாத்ரூமில் குளிப்பதை வீடியோ எடுத்து இணையத்தில் உலவவிட்ட விக்னேஷ் என்கிற இளம் நடிகன் சொல்கிறான்:-

என்னண்ணே செய்றது?  நான் பிஞ்சிலேயே பழுத்திட்டேன்.  பிறந்தப்லருந்து, எல்லா விஷயங்களும் கிடைச்சிருச்சு.  வேற என்ன? வேற என்ன?ன்னு மனசு தேடிக்கிட்டே இருக்கு.  அன்னைக்கு வீடியோ எடுக்கணும்னு தோணிச்சு.  எடுத்தேன்.  நெட்ல போடணும்னு தோணிச்சு. போட்டேன்.  (பக் 24) 
மகனைத் தேடி, மேன்சனுக்கு வரும் சொந்த அம்மாவையே பெரியம்மா என நண்பர்களிடம் அறிமுகப்படுத்துகிறான், இன்னொரு நண்பன்;

கல்லூரியில் பேரழகி ஒருத்தியை, விரட்டி விரட்டிக் காதலித்துவிட்டு, அவள் கை சொர சொரப்பாய் இருக்கிறது என்ற காரணத்தினால், காதலைப் பாதியில் கைவிடுகிறான், பட்டாசு தொழில் அதிபரின் மகன்;

ஆசிரியர் வேலை பார்ப்பவன், புகழ் பெற்ற கல்லூரியில் பி.ஈ படிப்பதாகப் பெண்ணிடம் பொய் சொல்லி ஏமாற்றிக் காதலிப்பதுடன், கவட்டையில் கல் கொண்டு அடிப்பதைப் போலக் காதலை எண்ணி, வாத்தி வச்ச குறி தப்பாது! எனப் பீற்றியும் கொள்கிறான்;  நகைக்கடை அதிபரின் மனைவியுடன், தகாத உறவு வைத்து அவளுடைய தாலிக்கொடியைத் திருடி வருகிறான் இன்னொருவன்;

இப்படிப்பட்ட நண்பர்கள், குற்றவுணர்வு சிறிதுமின்றி, சமுதாய சீர்கேடுகளின் பிரதிநிதிகளாக, கதை நெடுகிலும் வளைய வருகிறார்கள்.  தவறான காரியங்கள் என்று இந்த உலகில் என்னவெல்லாம் இருக்கின்றனவோ, அவற்றையெல்லாம் துணிந்து செய்கிறார்கள்.

கதைசொல்லி விவரிக்கும் வேறு சிலரின் கதைகள், கதையோட்டத்துக்குச் சிறிதும் தொடர்பில்லாமல், நாவலின் பக்கங்களைக் கூட்ட மட்டுமே, உதவி செய்திருக்கின்றன என்பது ஒரு குறை.

கதை சொல்லிக்கும், திருமணமான திவ்யாவுக்குமிடையேயான தகாத உறவு, அவள கணவன் எச்சரித்த பின் கூட, எவ்விதத் தயக்கமுமின்றித் தொடர்கிறது.  பிஎம்டபிள்யூ கார் வாங்கக் கூடிய பொருளாதார நிலைக்கு அவன் உயரும் போது, அவள் வாங்கிக் கொடுத்த, மிகவும் பிடித்த மாருதி கார் மீது வெறுப்பு தோன்றுகிறது.  அவள் உறவும் கசக்கிறது. துவக்கியது  போலவே எந்தக் குற்றவுணர்ச்சியுமின்றி, உறவைத் துண்டித்துக் கொண்டு, சமாதானமாகப் பிரிகின்றனர், இருவரும்.  

துரோகம் பண்ணக் கிளம்பிட்ட இல்லையா? நீயும் என்னை மாதிரி தெருவுக்குத் தான் வருவ,  (பக் 96) என்று சந்திரனின் மாமா, கதைசொல்லியிடம் கோபமாக உரைக்கும் இடம் அருமை!

நம் தமிழ்க் கலாச்சாரம், பண்பாடு, இவற்றிற்கு வேட்டு வைக்கும் குடி, போதை, சிகரெட், நள்ளிரவு விருந்து, திருமணத்துக்கு வெளியேயான தகாத உறவு போன்றவற்றிற்கு, ஆண்களுக் கிணையாக, இளம் பெண்களும், பழி பாவத்துக்கு அஞ்சாமல்,  எவ்விதத் தயக்கமோ, குற்றவுணர்ச்சியோ இன்றி, ஈடுபட்டுத் தம் வாழ்வைத் தொலைத்துச் சீரழிகின்றனர் என்பதைத் திவ்யா என்ற  பாத்திரத்தின் மூலம், வெளிப்படுத்துகிறார் ஆசிரியர். 

அவள் கணவன் நல்லவன்.  நல்ல அந்தஸ்தில் இருப்பவன்.  கதைசொல்லியை விடப் பேரழகன்.  பெரும் பணக்காரன். பின் அவனுக்கும், அவளுக்கும் என்ன தான் பிரச்சினை?  அவள் ஏன், அவனுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்ய வேண்டும்?.

காரணம், அவளே சொல்வது:- 
அவன் என்னை, அவன் அம்மா போல், பணிவிடைகள் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறான், 
இது போன்ற உப்பு பெறாத அற்பக் காரணங்களுக்காகத் தான், இந்நாளில் பெரும்பாலான திருமண முறிவுகள் நடக்கின்றன.
மேல்நாட்டு கலாசாரத்தை, அப்படியே காப்பியடித்து, அது தான் சிறந்தது  என்று நிறுவ முற்பட்டிருக்கும், இளந்தலைமுறை யினரை  நினைக்கையில், . என்று மடியும், எங்கள் மேல்நாட்டு மோகம்? என்று வேதனையுடன் சொல்லத் தோன்றுகிறது.     

நாட்டில் அங்கிங்கெனாதபடி, எங்கும், எதிலும் நீக்கமற நிறைந்து, புரையோடிப் போயிருக்கும் லஞ்ச லாவண்யம், ஊழல் குறித்த பலவேறு புதுச்செய்திகளை, இந்நாவல் விவரிப்பதால், புது வாசிப்பனுபவம் கிடைக்கின்றது. 
ரோலக்ஸ் பற்றிய செய்தி, எனக்குப் புதுசு.
இலாப நோக்கின்றிச் செயல்பட்டு, தான தருமங்கள் செய்யும் ரோலக்ஸ் கைக்கடிகாரத்தில் மட்டும், டூப்ளிகேட் தயாரிப்பதில்லை என்று பாங்காக் மற்றும் துபாயில் உள்ள டூப்ளிகேட் சக்கரவர்த்திகள் தொழில் தர்மம்(!) வைத்திருக்கிறார்களாம்! எனவே ரோலக்ஸில் அசல், நகல்  கண்டுபிடிப்பது மிகவும் கஷ்டமாம். 
 தமிழக அரசு டாஸ்மாக் கடை நடத்திக் குடிமக்களைக் குடிகாரராக மாற்றிக் கொண்டிருப்பது, நாம் ஏற்கெனவே அறிந்த செய்தி.  கதைசொல்லியின் நண்பன் சொல்வதாக, நாவலில் வரும் இச்செய்தி, நாம் இதுவரை அறியாதது:- 
உங்கள் அரசு மக்களின் கல்லீரலைத் தெரிந்தே அழித்துக் கொண்டிருக்கிறது.  ஒரு சரக்கு தயாரிக்கப்பட்டவுடன், குறைந்தது பதினைந்து நாட்களுக்காவது குளிர்விக்கப்பட வேண்டும்.  அப்போது தான், அதிலுள்ள நச்சுக்கள் கொஞ்சமாவது மட்டுப்படும்.  ஆனால் தமிழகத்தில், நேற்றிரவு தயாரிக்கிற சரக்கு மறுநாளே சந்தைக்குச் சுடச்சுட வந்துவிடுகிறது.  இது மிகவும் ஆபத்து”.

பட்டு தயாரிப்பு நிறுவனத்துக்கு, ஒவ்வோர் ஆண்டும் மத்திய அரசு வழங்கும் பாரம்பரிய மிக்க விருதைக் கூட, லஞ்சம் கொடுத்து வாங்குவார்கள் என்ற உண்மை, என்னை அதிர்ச்சியடையச் செய்து,  இதுநாள் வரை, விருதுகளின் மேல் வைத்திருந்த மதிப்பை, அதல பாதாளத்துக்குக் கீழிறக்கியது. 
மிக எளிமையான நடையில், கதை சொல்லப்பட்டிருப்பதால், வாசிப்பதற்கு விறுவிறுப்பாயிருக்கிறது.  இடையிடையே இழையோடும், நகைச்சுவையும் ரசிக்கும்படியாயிருக்கிறது. 
காட்டு 1:-

மத்திய அரசின் பட்டு தயாரிப்பு நிறுவனத்துக்கு அளிக்கும் விருதுக்கான பணத்தை அடுத்த ஆண்டு கொஞ்சம் ஏற்றித் தருமாறு அதிகாரிகள் கேட்க, உங்களை மாதிரி ஆட்களை மகிழ்விக்கும் வர்க்கத்தின் பிரதிநிதி நான்! என்று கதை சொல்லி பதிலளிக்கும் இடத்தில், வரும் வரிகள் இவை:-

எல்லோரும் மகிழ்ந்து போனார்கள்.  ஓர் அதிகாரி ஓடிப்போய்  முடியப்போகும் வருடத்திற்கான டயரியை எடுத்து வந்து கொடுத்ததோடு, அதில் வாழ்த்தி எழுதிக் கையெழுத்திட்டுக் கொடுத்தார்.  இவர்களை மட்டும் அனுப்பினால் போதும். பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தி, காஷ்மீர் பிரச்சினையை முடித்துத் தந்துவிடுவார்கள்.  உடம்பு முழுக்க, அத்தனை நெளிவு சுழிவுகள்!  (பக் 106).

நண்பனாக வரும் சந்திரன்,  கதைசொல்லியின் வளர்ச்சிக்குக் காரணமாக இருப்பதோடு, அவனை வழிநடத்தும், நல்ல மேய்ப்பனாகவும் இருக்கின்றான்.  ஆனால் நண்பனுடைய தலையீடும், கண்காணிப்பும் கதைசொல்லிக்கு இடையூறாகவும், பெண்களுடனான சகவாசத்துக்கு இடைஞ்சலாகவும் இருக்கின்றது.   

என்னுடைய பிரச்சினையே அவன் தான்.  அதே சமயம் எனது காவல் தெய்வமும் அவன் தான்.  அவன் பறக்கத் தயாராகிக் கொண்டிருக்கிற பறவையைப் பொத்திப் பாதுகாப்பது போல பாதுகாத்தான்.  பறக்கத் தயாராகிவிட்ட பிறகும், பாதுகாத்தால் எப்படி?  நான் சுதந்திரமானவன்,  என்னால் இப்போது மிகப் பெரிய உயரத்துற்குப் பறக்க முடியும்.  அவனைப் பொறுத்தவரை நான் தனியாகப் பறப்பதற்கான் ஆள் இல்லை.  வழி தவறி வேறு தேசத்தினுள் புகுந்து அல்லாடி விடுவேன் என்று நினைக்கிறான்.  (பக் 47) 

துணை பாத்திரமாக வந்தாலும், சந்திரன் தான் உண்மையான நாயகன் என்ற உண்மையை நாவல், இறுதியில் நமக்கு அறுதியிட்டு உரைக்கின்றது.  பணம் இருப்பதால் மட்டுமே, ஒருவன் கதாநாயகன் ஆக முடியாது.  கதைசொல்லிக்கும் செல்வாக்கு மிகுந்த நண்பர்கள் மத்தியில் மரியாதை இருக்கின்றது.  ஆனால் சந்திரனுக்கு கிடைக்கும் மரியாதையாக அது இல்லை. அவன் வந்தவுடன் இவன் இருப்பு, கீழ் அடுக்கிற்கு நகர்ந்துவிடுகின்றது.    

மனைவிக்குப் பொது இடத்தில் கிடைக்கும் அங்கீகாரத்தைச் சின்னவீடு தள்ளி நின்று வெறுப்பதைப் போல, என் நிலைமை இருந்தது”. (பக் 26) 
தலைப்பும் மிகப் பொருத்தம்.  கதைசொல்லி நல்லவனா, கெட்டவனா?

அவன் அணிந்திருக்கும் ரோலக்ஸ் வாட்ச் ஒரிஜினலா, டூப்ளிகேட்டா?  ஒரு வேளை டூப்ளிகேட்டாக இருக்கக்கூடும்.. இதில் வித்தியாசம் கண்டுபிடிப்பது மிகவும் சிரமம். 
தன்னைத் தானே, மூன்றாம் நபராக விலகியிருந்து பார்த்துச் சுய மதிப்பீடு செய்து கொள்ளும் வரி,  என்னை மிகவும் கவர்ந்தது.  
நான் காரை வேகமாக ஓட்டிக்கொண்டிருந்த போது, என்னையும் அறியாமல், அந்த வார்த்தை வந்து விழுந்தது
யார்றா நீ?

நான் யார்? என்ற இந்தத் தேடல் குறித்த ஞானம் கதை சொல்லிக்கு வந்த பின், நல்ல மேய்ப்பனும், வழிகாட்டியுமான சந்திரனிடம்  முழுவதுமாக தன்னை ஒப்புவித்து, வாழ்வில் நேர்மையான வழியில் முன்னேறுவான் என்ற நம்பிக்கையை நாவல் ஏற்படுத்துகிறது..



2 comments: