நல்வரவு

வணக்கம் !

Sunday, 29 December 2019

‘துயில்’ நாவல் - வாசிப்பனுபவம்


துயில்நாவல்ஆசிரியர் திரு. எஸ்.ராமகிருஷ்ணன்
முதல் பதிப்பு டிசம்பர் 2010
உயிர்மை பதிப்பகம்

ஒரு மாதகாலம் மருத்துவமனையில், தாம் தங்கியிருந்த போது, நோயாளியின் படுக்கை எவ்வளவு வலி நிரம்பியது என்பதைப் பூரணமாக உணர்ந்ததாக முன்னுரையில் குறிப்பிடும் திரு எஸ்.ரா அவர்கள், நோய்மையுறுதலின் நினைவுகளையும், அதன் விசித்திர அனுபவங்களையும், தமது புனைகளமாகக் கொண்டிருப்பதாகவும்; வாழ்வனுபவங்களும்., புனைவும் இணைந்து உருவானதே இந்நாவல் என்றும் கூறுகிறார்.


நோயாளிகள் மருத்துவரிடம் செல்வதைக் காட்டிலும், கடவுளிடமே தங்கள் நோய்மையைத் தீர்க்கச் சொல்லி, மன்றாடுகிறார்கள்; அதற்காகப் பயணம் செய்கிறார்கள்; உபவாசமிருந்து காணிக்கை தருகிறார்கள்;.  அந்த நம்பிக்கை உலகெங்கும், ஒன்று போலவே இருக்கிறது.  நோய்மையைப் பற்றிப் பேசாத மதமே உலகில் இல்லை,” என்று அவர் சொல்லியிருப்பது  மறுக்க முடியாத உண்மை!.

இந்திய பாரம்பரிய மற்றும் மேல்நாட்டு சிகிச்சை முறைகள், கல்வி அறிவின்மை காரணமாக மக்களிடம் நோய்மை குறித்தும், அதற்கான சிகிச்சை குறித்தும் தொன்றுதொட்டு நிலவும் மூடநம்பிக்கைகள், அன்பு, அனுசரணை இல்லாத உறவினர்களின் அவமதிப்பு காரணமாகத் தனிமைபடுத்தப்பட்டு, மனச்சிதைவுக்குள்ளாகும் நோயாளிகளின் பரிதாபநிலை, பிணி நீக்கத்தில் சாதி, மதம் மற்றும் கடவுள்களின் பங்கு எனப் பல்வேறு தளங்களில், நோய்மை குறித்து விரிவாகப் பேசுகிறது இந்நாவல்.

துயில் என்ற தலைப்பு இதற்குச் சாலப் பொருத்தம்.  நோய்க்கும் துயிலுக்கும் நெருங்கியத் தொடர்புண்டு.  எந்த நோய்க்கும், இயற்கை அளித்த மருந்து, தூக்கம்தான். நோய் வந்து படுக்கையில் விழுந்தாலே நாம் முதலில் தொலைப்பது, தூக்கத்தைத் தான்.  மனநலம் சார்நத பிரச்சினைகளுக்கு மருத்துவர் உடனடியாகப் பரிந்துரைப்பது, தூக்க மாத்திரையைத் தானே?.


நோயுற்ற மனது, கொந்தளித்துக் கொண்டேயிருக்கின்றது; நினைவுகளை அது இடைவிடாமல் நெய்கிறது; பிதற்றலைப் போல, அது முன்பின்னாக நிகழ்ச்சிகளை ஒன்று சேர்க்கிறது,”

தெக்கோடு என்ற சிறு கிராமத்தில் உள்ள துயில்தருமாதா ஆலயம்  உறக்கம் தொலைத்த நோயாளிகளைக் குணப்படுத்தி, அதிசயம் நடத்தும் அற்புதசக்தி வாய்ந்தது.   ஆண்டுதோறும் நடைபெறும் பத்துநாள் திருவிழாவுக்கு, ரோகிகள் பல்வேறு ஊர்களிலிருந்து, அதிகளவில் வந்து குவிவார்கள்.  அச்சமயம், மாதாவின் திருப்பவனி, திருப்பலி சடங்குகளுடன், நோயாளிகளுக்கான கூட்டுப் பிரார்த்தனை, ரோகம் தீர்த்த அற்புத நிகழ்வுகள், வாணவேடிக்கைகள் என ஊரே விழாக்கோலம் பூணும்
ஆட்டுக்கிடா சண்டை, ஆணிகளைப் பற்களால் மென்று தின்னும் போட்டி, தண்ணீருக்குள் மூச்சடக்கி மூழ்கியிருக்கும் நான்கு குள்ள ஜோடிகள்,  அரிசியில் பெயர் எழுதி லென்ஸ் வைத்துக் காட்டிச் சம்பாதிப்பவன், பேசும் மண்டையோடுகள்,  தாம்பாளத்தில் தண்ணீர் நிரப்பி, அதில் உமி கொண்டு இயற்கை காட்சி வரைபவன், வாத்து மற்றும் குடை வடிவிலான இராட்டினங்கள் போன்ற பல்வேறு திருவிழாக் காட்சிகளை நாவலில் விவரித்திருக்கின்றார் ஆசிரியர்.

இவ்விழாவில் மனைவி சின்னராணிக்குக் கடற்கன்னி வேஷம் போட்டு மக்களை நம்ப வைத்து, நிகழ்ச்சி நடத்திச் சம்பாதிக்கும் அழகர் தான், முக்கிய பாத்திரம்.  அவன் ஒரே குழந்தையின் பெயர் செல்வி.
இடுப்பு வரை மீன் செதில்களுடன் கூடிய விசேஷ உடையை உடுத்தி வாலை ஆட்டிக் கொண்டு, கண்ணாடித் தொட்டிலில் நாள்முழுக்கப் படுத்துக் கிடப்பது, சின்ன ராணியின் வேலை!  புரண்டு படுக்க முடியாது; இயற்கை உபாதைகளுக்கு எழுந்து போக முடியாது. கண்டவனும் வந்து நின்று, அவளை வெறித்துப் பார்ப்பது, கேலி பேசுவது அவளுக்கு வெறுப்பாக இருக்கிறது.

அலுமினிய பாத்திரம் விற்பதாகப் பொய் சொல்லித் தான், அவளைத் திருமணம் செய்து கொள்கின்றான் அழகர்.. கணவனிடம் வேறு ஏதாவது தொழில் செய்து, பிழைத்துக் கொள்ளலாம் என்று எவ்வளவோ கெஞ்சியும், அவன் ஒத்துக் கொள்ள மறுக்கவே, வேறு வழியின்றி, வேண்டா வெறுப்பாகத் தான், அவள் கடற்கன்னி வேஷம் போடுகிறாள்.
நாவலின் துவக்கத்தில் அழகரும் சின்னராணியும் தெக்கோடுக்குச் செல்லும் ரயில் பயணத்தின் போது, அவன் நினைவுகளின் வழியே, அவனது கடந்த கால வாழ்வு விவரிக்கப்படுகின்றது. 

தெக்கோட்டிற்கு மருத்துவ சேவைக்காகப் பணிமாற்றம் பெற்று வரும் கிறிஸ்துவ மிஷனரியைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஏலன் பவர், தன் ஞானத்தந்தை பாதிரி லகோம்பைக்கு எழுதும் கடிதப் போக்குவரத்து  மூலம் தெக்கோடு கிராமத்தில் நூறு ஆண்டுகளுக்கு முன் நடந்த பழைய நிகழ்வுகள் காட்சிப்படுத்தப்படுகின்றன.

தேவாலயம் சார்பாக வந்துள்ள என்னிடம் சிகிச்சை எடுத்துக் கொண்டால் மனதை மாற்றி, மதமாற்றம் செய்து விடுவேன்,” என்று மக்கள் பயப்படுவதாக ஞானத்தந்தைக்கு எழுதிய ஒரு கடிதத்தில் ஏலன் குறிப்பிடுகிறாள். மக்களின் நம்பிக்கையைப் பெற, அவள் படும் சிரமங்கள் அவளது கடிதங்களில் விவரிக்கப்படுகின்றன.

இதற்கும் முக்கிய கதாபாத்திரமான அழகர் காலத்துக் கதைக்கும், நேரடித் தொடர்பு ஏதும் இல்லை என்ற போதிலும், அக்காலத்தில் நோய்மை குறித்த மக்களின் கருத்து என்னவாக இருந்தது? கிறிஸ்துவ மிஷனரியின் நடவடிக்கைகளை மக்கள் எவ்வாறு எதிர்கொண்டனர்? அச்சமயம் நோய்மை மற்றும் அதன் சிகிச்சைகள் குறித்து, நிலவிய மூடநம்பிக்கைகள் என்னென்ன?  முதல் பெண் மருத்துவருக்கு இருந்திருக்கக் கூடிய எதிர்ப்பு, சவால்கள் முதலிய பல விபரங்களை அறிவியல் ரீதியாக விளக்க, இக்கடித உத்தியை ஆசிரியர் பயன்படுத்தியுள்ளார்.

தெக்கோடு செல்லும் வழியில், ரோகிகள் இளைப்பாறும் இடமாக இருக்கிறது, எட்டூர் மண்டபம்.  நோயாளிகளை இன்முகத்துடன் வரவேற்று உணவளித்து உபசரிக்கும், கொண்டலு அக்கா நாவலின்,  இன்னொரு முக்கிய பாத்திரம்.  இவளிடம் வரும் நோயாளி, ஒவ்வொருவரிடமும் ஒரு கதை இருக்கிறது.  இவளது அபரிமித அன்பாலும், தன்னலமில்லாத சேவையாலும், நெகிழ்ச்சியுறும் நோயாளிகள், தங்கள் கதைகளை  மறைக்காமல் விலாவாரியாகச் சொல்லி, மனப்பாரத்தை இறக்கி வைக்கின்றனர்.

கதையைக் கேட்டபிறகு, ஒவ்வொரு நோயாளிக்கும், அவள் சொல்லும் தேறுதல் வார்த்தைகள், சிந்தனை முத்துகள்:--

·      "  நமது கைகள் நமக்கு மட்டுமே உரியதில்லை.  அதை மற்றவருக்காகவும், பயன்படுத்த முடியும்.  அணைக்கவும் ஆறுதல்படுத்தவும், துணைசெய்யவும், தாங்கிப்பிடிக்கவும், கைகள் முன்வரவேண்டும்.  நீ நடைபழகும் குழந்தையைப் பார்த்திருக்கிறாயா?  அது நம்  கைகளை, எவ்வளவு உறுதியாகப் பற்றிக்கொள்கிறது? அந்தப் பிடிமானம் தான், கைகளின் தனித்துவம்;  நடந்து வளர்ந்த பிறகும், அந்த ஏக்கம் நமக்குள் இருந்து கொண்டேதானிருக்கிறது".  (பக் 275)

·         எத்தனை நாட்கள், நாய்களின் மீது கல்லெறிந்து விரட்டியிருக்கிறோம்?  அதற்கு வலிக்காது என்று அர்த்தமில்லை.  மனிதனைத் தவிர, எல்லா உயிர்களும், வலியைச் சகித்துக் கொள்ளப் பழகியிருக்கின்றன.   இருப்பதிலே நம்மைப் போன்ற மனிதர்கள் தான், பாவமான ஜென்மங்கள்.  விரல் நகத்தில் அடிபட்டால் கூட கத்திக் கூப்பாடு போடுகின்றோம்   (பக் 276)

·     "   நம்மை நாம் உணரத் தவறினால், அதன் இழப்பு, நமக்கு மட்டுமானதில்லை; உலகத்திற்கும் சேர்த்துத் தான்”. (பக் 282)

·         ஒவ்வொரு மனிதனும், தன்னால் சுமக்க முடியுமட்டும், கவலைகள், வேதனைகள், சொல்ல முடியாத தவிப்புகளைச் சுமந்து கொண்டுதானிருக்கிறான்.  அதை யார் இறக்கி வைப்பது?  தலைச்சுமையை இறக்கிவைக்க, சுமைதாங்கிக் கல்லை வைத்திருப்பார்கள்.  அப்படி மனதை இறக்கி வைக்க, எந்தச் சுமை தாங்கிக் கல் இருக்கிறது?” (பக் 318)


நாவலில் சின்னராணிக்கு ஏற்படும் முடிவு, சினிமாத்தனமாக வலிந்து புகுத்தியிருப்பதாக எனக்குத் தோன்றியது..  அது போலவே எட்டூர் மண்டபத்துக்கு வரும், சில நோயாளிகளின் சொல்லும் கதைகள் நம்பத் தகுந்தவையாக இல்லை.    

எடுத்துக்காட்டுக்கு இலஞ்சம் வாங்கிய ஒருவனுக்குக் கைகளில் இடைவிடாது வழிந்து, அலுவலகம் முழுக்க துர்நாற்றமடிக்கும் வேர்வை! 
அழகரின் குழந்தையான செல்வியிடம், “உன்னை ஒருநாள் தூக்கிட்டுப் போய்க் கண்ணை நோண்டி பிச்சைக்காரியா அலையவிடப் போறேன் பாரு,” என்று ஒரு பிச்சைக்காரன் நாவலின் துவக்கத்தில் சொல்கிறான் (பக் 56).

கடைசியில் செல்வி காணாமல் போகும் போது, அந்தப் பிச்சைக்காரனிடம் தான் மாட்டிவிட்டாள் போலும் எனப் பதற்றமாக இருந்தது.  ஆனால், மூன்று நாட்களுக்குப் பிறகு,  ஒரு வண்ணான் வீட்டின் முன் தூங்கிக் கொண்டிருந்த செல்வியை, அழகர் கண்டுபிடித்தான் என்று படித்த போது சப்பென்று ஆகிவிட்டது.

நோய்மையைக் குறித்துப் பல்வேறு கோணங்களில் சிந்திக்க வைத்த ஆசிரியருக்குப் பாராட்டுகள்! 

(நவம்பர் 2019 கனலி இலக்கிய மின்னிதழில் வெளியானது)





No comments:

Post a Comment