நல்வரவு

வணக்கம் !

Sunday, 29 December 2019

உடலெனும் வெளி- (பெண்ணும் மொழியும், வெளிப்பாடும்) –அம்பை




உடலெனும் வெளி- (பெண்ணும் மொழியும், வெளிப்பாடும்) –அம்பை
கிழக்குப் பதிப்பகம் - விலைரூ 140/-

தமிழில் பெண்ணெழுத்து பற்றியும், பெண்ணியம் எப்படி வெளிப்பட்டது அதற்கு எதிர்வினை எப்படியிருந்தது என்பதைப் பற்றியும், பெங்களூரில் உள்ள கூவேம்பு பாஷா பாரதி பிரதிகாரா எனும் அமைப்பு, ஒரு புத்தகம் வெளியிட விரும்பி, எழுத்தாளர் அம்பையிடம் கேட்க, அதற்காக அவர் எழுதிய நீண்ட கட்டுரை, ‘உடலெனும் வெளி,’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது.


ஆசிரியர் தம் முன்னுரையில், “உடல் பற்றிய பிரக்ஞையுடன் தான், பெண் எழுதுகிறாள்;  பண்பாட்டின் அனைத்துக் கூறுகளும், ஏற்றப்பட்ட உடல் அவளுடையது;  அந்த உடலை எவ்வாறு காலமும், சரித்திரமும் தொடுகின்றன? உடலை எப்படி எழுதுகிறாள்? எப்படி உடலை ஒரு வெளியாக்குகிறாள்? என்பதைக் கூற விழையும் முயற்சி தான், இந்தப் புத்தகம்,” என்று கூறுகிறார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து, தற்காலம் வரை, பெண்கள் பெயரில் வெளியாகியிருக்கும் பத்திரிக்கைகள், படைப்புகள் குறித்த விபரங்களை, ஆசிரியர் தேடித் தொகுத்து, ஆவணப்படுத்தியிருக்கிறார்.  இதற்குக் கடுமையான உழைப்புத் தேவைப்பட்டிருக்க வேண்டும். அலைந்து, திரிந்து பழைய இதழ்களைச் சேகரித்திருப்பதுடன், அந்தக்காலப் படைப்புகள் முழுவதையும் வாசித்து, அவை பற்றிய கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டுமிருக்கிறார்.  அந்த வகையில், பெண்ணியக் கருத்துகள், தமிழிலக்கியத்தில் இடம்பெற்ற வரலாற்றை அறிந்து கொள்ள உதவும், முக்கிய ஆவணம் இந்நூல் என்று சொல்லலாம்.  

19 ஆம் நூற்றாண்டின் இறுதியில், வெளியான பெண்களுக்கான பத்திரிக்கைகளாகக்பெண்மதி போதினி’, ‘கிருகலட்சுமி’, ‘ஹிதகாரிணி’, ‘தமிழ்மாது’, ‘புதுமைப்பெண்,’ ஆகியவற்றை ஆசிரியர் குறிப்பிடுகின்றார். இவற்றின் பெயர்களைக் கூட, இதுவரை நான் கேள்விப்பட்டதில்லை.,
அப்பத்திரிக்கைகளில் உள்ள கட்டுரைகள், பெண்கள் பெயரில் இருந்தாலும், அவற்றிலுள்ள அறிவுரைகளைப்(!) பார்த்தால், ஆண்கள் புனைபெயர்களில் எழுதியிருக்கலாம்  என்று யூகிக்கிறார்.

1905 ‘சக்ரவர்த்தினி,’ பத்திரிக்கையை ஆரம்பித்த பாரதியார், இங்கிலாந்தில் 1906 ல் வாக்குரிமை கோரும் பெண்களைக் குறித்து, “இத்தகைய அரசியல் உரிமைகளைக் கோரும் பெண்கள், அழகற்றவர்கள், திருமணமாகாதவர்கள்,” என்று எழுதியிருக்கிறாராம்!  துவக்க காலத்தில், பாரதிக்குப் பெண்களைப் பற்றி, இப்படியொரு எண்ணம் இருந்திருக்கிறது என்றறிய, எனக்கு அதிர்ச்சி தான்! 

அழகற்ற மனக்குலைவுற்ற, திருமணமாகாத பெண்கள்தாம், சுதந்திரம் கோருபவர்கள் என்ற உணர்வு, பெண்களுக்கு ஊட்டப்படுகின்றது.  அழகான நல்ல படித்த பெண்கள், கல்வி கற்பது, கணவனை மகிழ்வித்து, அவனை  எந்தவிதத்திலும், துன்புறுத்தாமல் இருக்கத்தான்  (பக் 23)
1905ல் பாரதி சிஸ்டர் நிவேதிதாவைச் சந்தித்த பிறகே, நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையும் கொண்ட பாரதியின் புதுமைப்பெண் வருகின்றாள் என்று ஆசிரியர் குறிப்பிடுகின்றார். 

பெண்கள் வெளியிட்ட பெண் பத்திரிக்கைகள் பல இருந்தாலும், அவை வழக்கமான சமையல் குறிப்புகள், நகை உடை பற்றிய குறிப்புகள், கைவேலைப்பாடுகள் என வரையறை மீறாமல், சந்தையின் தேவைகளை ஒட்டியே உள்ளன எனும் ஆசிரியர், காத்திரமான படைப்புகளுடன் பெண்ணிய நோக்குடன், பெண்களை ஆசிரியராகக் கொண்ட பத்திரிக்கைகள் இல்லை என்று கூறியிருப்பது, மறுக்க முடியாத உண்மை!
கவிஞர் குட்டி ரேவதியை ஆசிரியராகக் கொண்டபனிக்குடம்,’ பத்திரிக்கை 2002 முதல் 2007 வரை, வந்து நின்றுவிட்டது என்று அவர் சொல்லியிருப்பதும், எனக்குப் புதுச்செய்தி தான். . படைப்பிலக்கியம் தவிர, தீவிர இலக்கிய விவாதங்கள் உள்ளடக்கியதாக, ‘பனிக்குடம்,’ இருந்ததாகவும்,. அது போன்ற இன்னொரு பத்திரிக்கை இன்றில்லை என்றும், அவர் சொல்லியிருப்பது, வருத்தத்துக்குரிய விஷயம்!

அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு?’ என்ற மனநிலை இருந்த காலத்தில், பெண்கள் பத்திரிகை நடத்தியும், புனைகதைகள் எழுதியும் தங்கள் குரல்களை 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், ஒலிக்கச் செய்ததே ஒருவகை எதிர்ப்புத்தான்  (பக் 28) என்கிறார்.

கல்வி கற்கும் பெண், பண்பாட்டிலிருந்து வழுவ மாட்டாள் என்று கதைகளில் எழுதித் தாங்கள் செய்வது தவறல்ல என்ற நிரூபிக்க வேண்டிய கட்டாயம், அப்போது எழுதிய பெண்களுக்கு இருந்திருக்கிறது; அதனால் தான், பண்டிதை விசாலாட்சி அம்மாள், அன்பம்மாள் பால் அம்மாள்,எஸ்.ராஜாம்பாள் போன்றோர் படைப்புகளில், அத்தகைய கருத்து ஒலித்துக் கொண்டே இருந்தது எனக் குறிப்பிடுகின்றார்.

முதல் பகுதியில் மூத்த எழுத்தாளர்கள், கவிஞர்கள், அவர்தம் சிறந்த படைப்புகள் குறித்து விளக்குகிறார்.  இரண்டாம் பகுதியில் தற்காலத்தில் எழுதும் சிறந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள் ஆகியோரின் படைப்புகளில் இடம்பெற்றிருக்கும் பெண்ணியக் கருத்துக்கள் அடங்கிய கவிதை வரிகளை ஆங்காங்கே எடுத்துக் காட்டியிருக்கிறார்.. 

பெண்களின் எழுத்து, பெண் வெறுப்பு என்ற பொதுவான போக்கை எப்போதுமே எதிர்கொள்ள நேர்ந்திருக்கிறது.  இலக்கிய உலகில் பெண்ணுக்கு அளிக்கப்படும் இடம், எந்த வகையிலும் ஆணின் இடத்தைக் குலைக்கக் கூடாது; அது இரண்டாம் இடத்திலேயே இருக்க வேண்டும் என்ற எண்ணமும் தொடர்ந்து இருக்கும் ஒன்றுதான்,” என்பதை ஆதாரத்துடன் விளக்கியிருக்கிறார்.

சுருங்கக் கூறின், தமிழிலக்கியத்துக்கு, அன்றிலிருந்து இன்று வரை முக்கிய பங்காற்றிய பெண் எழுத்தாளர்களைப் பற்றியும், அவர்தம் குறிப்பிடத்தக்க படைப்புகள் பற்றியும், இலக்கியத்தில் அவர்கள் உருவாக்கிய பெண்மொழியின் வரலாற்றைப் பற்றியும், அறிந்து கொள்ள உதவும் நூல் எனலாம்..

அம்பைக்குத் தமிழ்ப் பெண்கள் சமுதாயம், மிகவும் கடமைப் பட்டிருக்கின்றது.  தமிழில் எழுதுபவர்கள், குறிப்பாகப் பெண்கள் இந்நூலை வாசிப்பது அவசியம் என்பது என் கருத்து. 

No comments:

Post a Comment