நல்வரவு

வணக்கம் !

Sunday 29 December 2019

நூல் அறிமுகம் - ’மறுவாசிப்பில் செவ்வியல் இலக்கியப் படைப்புகள்’ -


நூல் அறிமுகம் - மறுவாசிப்பில் செவ்வியல் இலக்கியப் படைப்புகள்’ -
(பழந்தமிழர் வாழ்வியல் பதிவுகள்)
ஆசிரியர்:-திரு.ந.முருகேசபாண்டியன்.
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பி லிட்
சென்னை 044-26251968

செவ்வியல் இலக்கியம் குறித்து, அறிய விழைவோர்க்குப் பயனுள்ள புத்தகமிது.  மரபு ரீதியிலான விமர்சனத்துக்கு மாற்றாக, பின் நவீனத்துவ விமர்சன அணுகுமுறையில் அமைந்த 13 கட்டுரைகள், இதில் இடம்பெற்றிருக்கின்றன.
 
முதலாவது சங்க இலக்கியத்தில் பாலியல் - ஆண் பெண் உறவுநிலை குறித்து, ஆய்வு செய்யும் கட்டுரை.

ஆணும் பெண்ணுக்குமிடையிலான உடலுறவை இயல்பானதாகக் கருதும் போக்கு, சங்க காலத்தில் இருந்தது; பின்னர் மதங்கள் தமிழர் வாழ்வில் ஆதிக்கம் செலுத்தத் துவங்கிய பின்னர் தான், பாலியல் எதிர்மறை அம்சமாகிவிட்டது;

சிற்றின்பம் என்று இழிவுபடுத்தப்பட்ட பாலியல் புறக்கணிப்பு மனிதர்களை அதிகாரத்துக்குட்பட்ட வெறும் உடல்களாக மாற்றிவிட்டது.  பாலியல் பற்றிய தவறான புரிதலைப் புறந்தள்ளிவிட்டு, அதை இயற்கையானதாக கருதி வரவேற்கும் மனநிலை இன்று தேவைப்படுகின்றது., என்ற ஆசிரியரின் கூற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டிய நேரமிது..

காதலைப் பற்றிய கொண்டாட்டத்தினை முன்னிறுத்தும், சங்கக் கவிதைகளில் பெண்கள் தங்களுடைய காதல், காமத்தை வெளிப்படையாகக் கூறக் கூடாது என்பது சங்க மரபு.  இம்மரபினை ஆண் படைப்பாளர்கள் பின்பற்றியிருக்கும் நிலையில், பெண் கவிஞர்கள் துணிச்சலுடன் மரபை மீறியுள்ளனர்.   இன்று நவீன பெண் கவிஞர்கள் கவிதையில் பயன்படுத்தும் யோனி, முலை போன்ற சொற்களை சங்க காலத்திலேயே பெண்கவிஞர்கள் துணிச்சலுடன் பயன்படுத்தி யுள்ளனர் (பக் 18) என்று டித்த போது, வியப்பாக இருந்தது.

சங்கப் பாடல்கள் குறிப்பிடுகின்ற சூர், அணங்கு, சூலி, முருகு, பேய் போன்ற இயற்கை இகந்த சக்திகளைத் தான் தமிழர்கள் வணங்கியிருக்கிறார்கள்; விண்ணில் இருக்கும் தெய்வஙக்ள் பற்றிய் கற்பிதங்கள், தமிழர் வாழ்க்கையில் பெரிய அளவில் ஊடுருவவில்லை (பக் 43) என்று ஆசிரியர் சொல்லியிருப்பதை,
எண்ணிப் பார்த்துப் பக்தி என்ற பெயரில், இன்று இயற்கைச் சூழலுக்கு நாம் செய்யும் பாதகங்களை, உடனடியாக நிறுத்த வேண்டும்.   

பெண்கள் தாங்கள் வாழுகின்ற சமுதாயத்தின் நலனுக்காகவும், குறுநில மண்னர்களின் ஆதிக்க அரசியலான போர்களில் வீரத்துடன் போரிடுவதற்காக ஆண் குழந்தைகளைப் பெற்றுத் தருவதுடன் (ஈன்று புறந்தருதல் எந்தலைக் கடனே!) அவர்கள் போரில் கொல்லப்படும்போது, மகனின் இழப்புக்காக வருந்தாமல் பெருமிதம் அடைவது தான் சிறப்பு எனச் சங்க இலக்கியப் பிரதிகள் புனைந்துரைக்கின்றன என்பதற்கு ஆதாரமான பாடல்களை எடுத்துக் காட்டியிருக்கிறார் ஆசிரியர். (பக் 53)

சங்க இலக்கியத்தில் பெண்குழந்தை பற்றிய பதிவு ஏதுமில்லை என்பதும்,  இன்று நாம் காக்கைக்குச் சோறு வைக்கும் பழக்கம், சங்க காலத்திலேயே தோன்றியிருக்கிறது என்பதும், எனக்குப் புதுச்செய்திகள்.

கார் காலத்தில் வருவேன் என்று சொல்லிச் சென்ற தலைவன் வரவில்லை; கொடியில் மலர்ந்திருக்கும் முல்லைப் பூக்கள் பற்களைக் காட்டி நகைக்கின்றன என்ற ஒக்கூர் மாசாத்தியாரின் பாடலை வெகுவாய் ரசித்தேன்.   

ஒவ்வொரு அதிகாரத்திலும், பத்து அறக்கருத்துக்களைச் சொல்ல முயன்றிருப்பது தான் திருக்குறள் நூலின் பலவீனமான அம்சம்.  ஒரு குறிப்பிட்ட தலைப்பினில் கட்டாயம் பத்து அறக்கருத்துக் களைக் குறிப்பிட வேண்டுமென்ற நிர்ப்பந்தம் காரணமாகச் சாதாரணமான கருத்தமைந்த குறள்களும் இடம்பெற்றுள்ளன. 
(பக் 102)

உலகப் பொதுமறை என்ற கருத்தே கானல் நீர் போன்றது; பண்டிதர்களின் உச்சக்கட்ட புனைவு. அப்படியொரு நூல் இருக்க சாத்தியமே இல்லை; விமர்சனமற்ற வெற்றுப் புகழுரைகள் திருக்குறளுக்குத் தேவையில்லை, (பக் 104) என்று ஆய்வுநோக்கில் அமைந்த ஆசிரியரின் கூற்று, வரவேற்கத்தக்கது.

கூறியது கூறல் தான், இந்நூலில் உள்ள மிகப்பெரிய குறை; வெவ்வேறு காலக்கட்டங்களில் பல்வேறு இதழ்களில் எழுதப்பட்ட கட்டுரைகள் என்பதால், கூறியது கூறலைத் த்விர்க்க முடியவில்லை என்று ஆசிரியர் முன்னுரையில் சொல்லியிருப்பது, ஏற்கக் கூடியதாய் இருக்கின்றது..



No comments:

Post a Comment