தமிழிலக்கியத்தில்
நகைச்சுவை எழுத்து, மிகவும் குறைவே. ஆனால் கரிசல் இலக்கியத்தின் பிதாமகன், கி.ராஜநாராயணன் அவர்களுக்கு நகைச்சுவை கலந்து எழுதுவது, கைவந்த கலை!
மெல்லிய
நகைச்சுவை இழையோட, அவர் எழுத்தில் ஆங்காங்கே வெளிப்படும் கிண்டல், கேலி,
நையாண்டி சில இடங்களில் நம்மை வாய்விட்டுச் சிரிக்க வைக்கிறது. அவர் மொழியில் சொல்வதானால்,
‘சிரிப்பாணி அள்ளிக் கொண்டு போகும்!’
இயல்பிலேயே, அவர் நகைச்சுவை உணர்வு நிரம்பியவர்
என்பதை நண்பர்களுக்கு, அவர் எழுதிய கடிதங்கள் மெய்ப்பிக்கின்றன.
I - கடிதங்களில் நகைச்சுவை :-
நண்பர்
துளசிதாஸுக்கு கி.ரா எழுதிய பதிலில்,
வெளிப்படும் நகைச்சுவையைப் பெரிதும் ரசித்துச் சிரித்தேன்:-
“தெலுங்கு ‘மூலம்’, மலையாள
‘மூலம்,’ என்று தான் சொல்லிக் கொண்டிருந்தீர்கள்.
இப்போ அசல் ‘மூலமே’ வந்துவிட்டது
போலிருக்கு. அற்புதமான
மருந்துகளும், வைத்தியங்களும் இருக்கிறதினால், துளியும் பயப்பட வேண்டியதில்லை.” (கி.ரா. கடிதங்கள் பக் 30)
வடுகை
மணிசேகரன் அவர்களுக்கு எழுதியது இது:-
“உங்கள் கடிதங்களில், எழுத்து முத்து முத்தாக அல்லவா இருக்கிறது?
கையெழுத்து நல்லா இருந்தா, தலையெழுத்து நல்லா இருக்காது
என்கிறது சொலவம். இந்த
சொலவத்தைக் கேள்விப்பட்டதிலிருந்து, என அத்யந்த நண்பர்
(எழுத்தாளர்) கோழி கிண்டியது போல், எழுத ஆரம்பித்துவிட்டார்! நீங்களும், அப்படி ஆரம்பித்துவிட வேண்டாம்”. (கி.ரா.கடிதங்கள்- பக் 23)
தனுக்கோடி
ராமசாமி அவர்களுக்கு எழுதியதில்,
சில வரிகள்:-
“ஆனந்தா அகாடமியில் எனக்குக் கொடுத்த பேனா இது. இன்று தான் முதன்முதலில் எழுதுகிறேன்
உங்களுக்கு. புதுப்பேனாவுக்கு,
இன்று தான் கன்னி கழிகிறது! ……………………………
‘பிஞ்சுகளை’ நகல் செய்வதற்காக, இந்தப்
பேனாவை எடுத்தேன். தொட்ட
இடம் எல்லாம், மை அழிகிறது. “பேராலம் பெத்த செல்லப் பிள்ளை எலும்பு
எலும்பாய்க் கழிகிறது!” என்று ஒரு சொலவடை சொல்லுவார்கள். அந்த மாதிரி இருக்கு”. (கி.ரா கடிதங்கள்
- பக் 36)
சுப
கோ. நாராயணசாமிக்கு
எழுதிய கடிதத்தில்……
“நூலக விழாக்களில், புஸ்தகங்களை அறிமுகப்படுத்திப் பேசுவது
என்பது நல்ல விஷயம். இங்கே எல்லாம், நூலக விழாக்களில் பட்டிமன்றம் தான். ‘தண்ணீரில் அம்மி மிதக்குமா,
குளவி மிதக்குமா,’ என்று! குளவி கட்சிக்காரர்கள், ‘அம்மி மிகவும் கனமுள்ளது, மிதக்காது, அது மூழ்கிவிடும்,’ என்பார்கள். அம்மி கட்சிக்காரர்கள், ‘யார் சொன்னது, ஆயிரம் டன் இரும்புள்ள கப்பலே தண்ணீரில்
மிதக்கும் போது, அம்மி ஏன் மிதக்காது’ என்று
கேட்பார்கள். இந்த ஜனங்களும்
கை தட்டி, பேஷ்! பேஷ்! என்பார்கள்! ஆக, நூலகத்திலிலுள்ள புஸ்தகங்களை எல்லோரும் மறந்துவிடுவார்கள்”.
(கி.ரா கடிதங்கள் - பக்
104)
II - சிறுகதைகளில் நகைச்சுவை:-
நான் வாசித்த
கி.ரா கதைகளில்,
என்னை மிகவும் கவர்ந்தது, முழுக்க முழுக்க நகைச்சுவையால்
நிரம்பிய ‘நாற்காலி’. சிறுகதை.
கிராமத்தில்
முதன்முதலாக, கதைசொல்லியின் வீட்டில் யாருமே அதுவரை பார்த்திராத, நாற்காலி
செய்கிறார்கள். ஊர் முழுக்க
செய்தி பரவி, பெருங்கூட்டம் இவர்கள் வீட்டின் முன் கூடி,
அதை வேடிக்கை பார்க்கிறது.
சில நாட்கள் கழித்து, ஊரில் யார் இறந்தாலும்,
நாற்காலியை இரவல் வாங்குவது, தொடர்கதையாகிறது. இழவு வீட்டுக்குப் போய்விட்டு,
வந்த நாற்காலியில், அமர்வதற்குக் குழந்தைகள் முதல்
பெரியவர்கள் வரை, அனைவருமே பயப்படுகின்றார்கள். இந்தச் சம்பவங்களைக் கதை நெடுக,
நகைச்சுவையுடன் விவரித்திருக்கிறார் கி.ரா.
நீங்களும்
ரசிக்க ‘நாற்காலி,’
கதையிலிருந்து கொஞ்சம்:-
“துட்டி’ வீட்டில் போய்ப் பார்த்தால்……….… எங்கள் வீட்டு நாற்காலியில் தான் இறந்து போன அந்தப் ‘பிரமுகரை,’ உட்கார்த்தி வைத்திருந்தார்கள்.
இதற்கு
முன், எங்கள்
ஊரில் இறந்து போனவர்களைத் தரையில் தான் உட்கார்த்தி வைப்பார்கள். உரலைப் படுக்க வைத்து, அது உருண்டு விடாமல், அண்டை கொடுத்து, ஒரு கோணி சாக்கில் வரகு வைக்கோலைத் திணித்து, அதைப் பாட்டுவசத்தில்
உரலின் மேல் சாத்தி அந்தச் சாய்மானத் திண்டுவில் இறந்து போனவரை, சாய்ந்து உட்கார்ந்திருப்பது போல் வைப்பார்கள்.
இந்த நாற்காலியில்
உட்காரவைக்கும், புது மோஸ்தரை, எங்கள் ஊர்க்காரர்கள், எந்த ஊரில் போய்ப் பார்த்து விட்டு வந்தார்களோ, எங்கள்
வீட்டு நாற்காலிக்குப் பிடித்தது வினை.
(தரை டிக்கெட்டிலிருந்து நாற்காலிக்கு வந்துவிட்டார்கள்!)”
இதே
கதையில் கதைசொல்லியின்
தாய்மாமனார், பாக்கு போடும் காட்சியும், கி.ரா.வின் நகைச்சுவைக்குச் சிறந்த எடுத்துக்காட்டு:-
“களிப்பாக்கை எடுத்து, முதலில் முகர்ந்து பார்ப்பார். அப்படி முகர்ந்து பார்த்து விட்டால்,
‘சொக்கு’ ஏற்படாதாம். அடுத்து,
அந்தப் பாக்கை ஊதுவார்! அதிலுள்ள கண்ணுக்குத் தெரியாத,
பாக்குப் புழுக்கள் போக வேண்டாமா, அதற்காக. ஆரம்பத்தில் மெதுவாக ஆரம்பிக்கும்,
இந்த முகர்ந்து பார்த்தலும், ஊதலும் வர வர வேகமாகி,
ஒரு நாலைந்து தடவை மூக்குக்கும், வாய்க்குமாகக்
கை மேலும், கீழும் ‘உம் உஷ்’, ‘உம் உஷ்’ என்ற சத்தத்துடன் சுத்தமாகி, டபக்கென்று வாய்க்குள் சென்றுவிடும்!”
அடுத்து
‘புறப்பாடு,’ என்ற சிறுகதையில்,
அண்ணாரப்பக் கவுண்டர் சாவுத்தேதி குறித்த பண்டிதனின் கணிப்புப் பற்றி,
கி.ரா எழுதியிருக்கும் விபரங்கள், சுவாரசியம் மிக்கவை:-
“முதல் காரியம், கிடப்பவனைக் கட்டிலிலிருந்து,
கீழே இறக்கிப் போடுவார்கள்.
கட்டிலில் படுத்துக்கொண்டு, உயிரைவிடக்கூடாது;
அப்புறம் அந்த ஆவி, கட்டிலையே சுற்றிச் சுற்றி,
வந்து கொண்டிருக்கும் என்று நம்பிக்கை. பண்டிதன் சொன்ன பிறகு, அண்ணாரப்பக் கவுண்டரையும், கட்டிலிலிருந்து இறக்கிப்
போட்டார்கள்,
அமாவாசை, பாட்டிமை எல்லாம் கழிந்தது. கவுண்டர் ஒரு நாள் திடீரென்று கண்விழித்துப்
பார்த்தார்
“எவண்டா, என்னை கட்டில்லெ இருந்து, கீழே எறக்கிப் போட்டது,” என்று சத்தம் போட்டுவிட்டுக்
கட்டிலில் ஏறிப் படுத்துக் கொண்டு விட்டார்!......... பண்டிதன் சம்முகம் போட்ட ‘தவணை,’ யைத் தாண்டியதில்லை, அதுவரை
யாரும், ‘இந்தப் பவரணை
தாண்டாது,’ என்பான். சொல்லி வச்ச மாதரி,
பெளர்ணமியோ, முதல் நாளோ கூட, ஆட்கள் ‘புறப்பட்டு’ இருக்கிறார்கள்.
ஆனால்
கவுண்டர் விஷயத்தில், பண்டிதனின் கணிப்பு ஒன்றும் பலிக்கவில்லை”.
III – குறுநாவலில் நகைச்சுவை
‘கிடை,’
குறுநாவலில் வரும் ராமக்கோனார், நேர்த்திக்கடனைச்
செலுத்த முதன்முறையாக ரயிலில் பயணம் செய்து, திருச்செந்தூர் செல்கிறார். வானம் பார்த்த பூமியான கரிசல் காட்டில்
வாழ்பவர், கடலையும், அப்போது தான்,
முதல் தடவையாகப் பார்க்கிறார்! அவருடைய எதிர்வினையை, நகைச்சுவை இழையோட கி,ரா வெளிப்படுத்தியிருக்கும் விதம்,
ரசித்து இன்புறத்தக்கது!
“நேர்த்திக்கடனைச் செலுத்தவே, அவர் திருச்செந்தூர் போனார். அவருடைய பொண்டாட்டி, அவருக்கு மாவுருண்டை செய்து கொடுத்தாள். வாழ்க்கையிலேயே அன்று தான்,
அவர் முதல் முறையாகவும், கடைசி முறையாகவும் ரயில்
ஏறியது……………..
ரயிலில்
மாவுருண்டைத் தின்று கொண்டிருக்கும் போது,
டிக்கட் பரிசோதகர் வந்து, டிக்கெட்டுக்காக கையை
நீட்ட, அவர் தம்முடைய நார்ப்பெட்டியிலுள்ள உருண்டைகளில்,
பெரிதான நல்ல மாவுருண்டையாகப் பார்த்து எடுத்து, மரியாதையோடு டிக்கட் பரிசோதகரின் கையில் வைத்தாராம்!
அது கூட
அவ்வளவு பெரிசில்லை,
அவர் திருச்செந்தூரில் முதல் முதலாகக் கடலைப் பார்த்தபோது, ஒரே ஆனந்தக் கூக்குரலில், ‘யோவ், கோவால் நாயக்கரே, பார்த்தீரா! மழை
இங்கே சக்கைப்போடு போட்டிருக்கே; தண்ணீரைப் பாரும், எப்படிக் கெத்துக் கெத்தண்ணு கெட்டிக்கிடக்கு! என்று
சொன்னாராம்.” ( ‘கிடை’ – பக்
176)
IV – நாவலில் நகைச்சுவை:-
i) கோபல்ல கிராமம்
புலம்பெயர்தலின்
வலியைச் சொல்லும் இந்நாவலில்,
வெற்றிலையை நடுவில் ஓட்டையிட்டு, வேட்டி மேல் வைத்து,
அதைச் சுண்ணாம்பு போல் மற்றவரை நம்ப வைத்துக் குறும்பு செய்யும் ‘அக்கையா,’ என்ற நகைச்சுவை கதாபாத்திரத்தை உருவாக்கி,
கதை நெடுகிலும் உலவ விட்டிருக்கிறார் கி.ரா.
‘வாய் சிரிக்கவே செய்யாது என்றாலும், அந்தப் பையனின் கண்களில்
ஒரு குறும்புத்தனம்,’ என்று இப்பாத்திரத்தை அறிமுகம் செய்கின்றார்.
இக்கதையில்
பஞ்சாயத்துக்கு வருபவர்களின் தோற்றம்,
நடையுடை பாவனைகள் நேர்முக வர்ணனை போல், மிகவும்
துல்லியமாக விவரிக்கப் பட்டுள்ளதால், அக்கதை மாந்தர்கள்,
உயிர் பெற்றெழுந்து, இரத்தமும் சதையுமாக நம்முன்
நடமாடுகின்றனர். இவர்களின்
பட்டப்பெயர்கள், அவை
ஏற்பட்டதற்கான காரணங்கள் பற்றிய விளக்கத்தில், கிண்டலும் கேலியும்
கலந்த நகைச்சுவை இழையோடுகின்றது.
எடுத்துக்காட்டுக்கு
இரண்டு:-
(அ) படுபாவி செங்கன்னா
இதை அவருக்கெதிரில், யாரும் சொல்ல மாட்டார்கள். ஊரில் நாலைந்து செங்கன்னாக்கள் இருக்கிறார்கள். விசாரிப்பவர்களுக்குப் பளிச்சென்று
ஒரு தெளிவுக்குத் தான் இதெல்லாம். …………………………
செங்கன்னாவின்
குடும்பத்தில், ஒரு பாகப்பிரிவினை ஏற்பட்ட போது, காய்ந்து போன உபயோகமில்லாத,
ஒரு சுண்ணாம்புக்கலயம் மிஞ்சியது. அதை அவர் தாயாதிக்குக் கொடுக்க மனசில்லாமல்,
அந்த மண்கலயத்தை உடைத்துப் பகிர்ந்து கொடுத்தாராம்! அதிலிருந்து ஜனங்கள், அவரைப் படுபாவி செங்கன்னா என்று அழைத்தார்கள்.. (பக்
129)
(ஆ) - எளவுப்பெட்டி ராமய்யா.
இவர் வேலைக்குப்
போய்விட்டு வந்து, குளித்து முடித்தவுடன் நெற்றிக்கு இட்டுக்கொள்ளாமல், சாப்பிட மாட்டார். அதுக்கென்றே, சிறிய அழகிய மரவேலைப்பாடுகள் அமைந்த திருநாமப்பெட்டி,
ஒன்று செய்து வைத்திருக்கிறார்.
இவர் கொஞ்சம்
போஜனப்பிரியர் . பெண்டாட்டி முதுகு தேய்க்கும்போதே ‘சின்னக்குட்டி,
இன்னைக்கு என்ன சமையல்?’ என்று விசாரிப்பார். அவருக்குப் பிடித்தமான பாகங்கள் இருந்தால்,
உடம்பு துவட்டிக் கொண்டிருக்கும்போதே, “சின்னக்குட்டீ,
அந்த திருநாமப்பெட்டியை எடுத்துக்கொண்டு வா!” என்று
உற்சாகமாகக் கூவுவார். சமையல் அவர் நினைத்த மாதிரி, ஒன்றும் சரியில்லையென்றால், “அடியே, அந்த எளவுப்பெட்டியை எடுத்துக்கிட்டு, வந்து தொலை!”
என்று கத்துவார். (பக் 144)
ii) கோபல்லபுரத்து மக்கள்
இந்தியாவில்
பிரிட்டிஷ் ஆட்சி வந்ததன் விளைவால்,
கிராமத்தில் ஏற்பட்ட மாற்றங்களைச் சொல்வது, ‘கோபல்லபுரத்து
மக்கள்,’ நாவல்.
முதல்
உலகப் போர் துவங்கிய பிறகு,
பட்டாளத்துக்கு உயரமான ஆள் பிடிக்க வந்த போதும், அம்மை குத்த வந்தபோதும், ஓடி ஒளிந்த மக்கள், டார்ச் லைட் வந்த பிறகு, காணாமல் போன பேய்கள், ரயிலைக் கண்டுபிடித்த வெள்ளைக்காரனுக்குக்
கிடைத்த அர்ச்சனை(!) எனச் சுவை மிகுந்த விபரங்கள் ஏராளம்,
இந்நாவலில்.
இந்நாவலிலிருந்து
கொஞ்சம்:-
சுண்டக்கறி
கிட்னக்கோனார்:-
“வெள்ளக்காரன் வந்தாலும் வந்தான், நாடு குட்டிச்செவராப்
போச்சி,” என்றார், சுண்டக்கறி கிட்னக்கோனார்.
முக்கியமாக
வெள்ளைக்காரன் கொண்டு வந்த ரயில் பேரில்,
அவருக்குத் தீராப்பகை ஏற்பட்டிருந்தது. அது வரும்போதெல்லாம், அவருடைய ‘செம்பிலி’ ஆடுகள்,
கந்து கந்தாய்க் கலைந்து ஓடும். அதுகளைத் திருப்பிக் கொண்டு வந்து,
ஒருமுகப்படுத்துவதற்கு முன்னால், அவர்பாடு
‘தவிடு தாங்கிப்’ போகும். அப்போது, அந்த
வெள்ளைக்காரனுடைய ஆத்தா, அக்கா பெண்டாட்டி பிள்ளைகளுக்குச் சுண்டக்கறியின்
வாயிலிருந்து வரும் ‘அர்ச்சனைகள்’ சொல்லும்
தரம் இல்லை! ரயில் கண்டுபிடித்த,
அந்த வெள்ளைக்காரனுக்கு, ஏழு ஜென்மத்துக்கும் போதும்! (பக் 97)
V – கட்டுரைகளில் நகைச்சுவை
கதைகளில்
தாம் என்றில்லை; கி.ரா.வின் கட்டுரைகளிலும் நகைச்சுவைக்குப்
பஞ்சமில்லை.
‘ஒரு பிரயாண அனுபவம்,’ என்ற கட்டுரையில், போய்க்கொண்டே இருந்த பேருந்தைச் சட்டென்று ‘சடன்பிரேக்,’
போட்டு நிறுத்துகிறார் டிரைவர். அவர் கண்ணில், பொடி விழுந்துவிட்டதாம்!
‘எவன்டா பொடி போட்டது? அது யாரென்று தெரியாமல்,
வண்டி ஒரு இம்மி கூட நகராது,’ என்று கறாராகச் சொல்கிறார்.
கட்டுரை இறுதியில், அது யாரென்று தெரியும் போது, நம்மையும் சிரிப்பு தொத்திக்
கொள்கிறது.
பேருந்து
செல்லும் போது, அடிக்கிற பேய்க்காற்றில் ஒவ்வொருவரின் தலைமுடி படும் பாட்டை நகைச்சுவையாய்
விவரிக்கும்
அக்கட்டுரையிலிருந்து, ஒரு சிறு பத்தி:-
“ஒருத்தருக்கு உச்சந்தலை பூராவும் சரியான பொட்டல்! காதோரங்களிலும், பிடரியிலும் மட்டுமே முடி.
ஜோராக கிராப்பு வெட்டி வலது பக்கக் காதோரமுள்ள முடியை மட்டிலும்,
ஒரு சாண் நீளத்துக்கு வளர்த்து, அதை உச்சிப் பொட்டலின்
மீது படுக்க வைத்து, பொட்டலே தெரியாமல், திருத்தமாகச் சீவி விட்டிருந்தார். பாவம், அவருக்கு
நம்முடைய ‘ஐயோ!”.
விரிவஞ்சி
இக்கட்டுரையில் நான் பகிர்ந்திருக்கும் நகைச்சுவை பகுதிகள், மிகவும் கொஞ்சமே.
கி.ராவின் பல்வேறு படைப்புகளை விரிவாகவும்,
ஆழமாகவும் வாசிக்கும் போது தான், அதில் பயின்று
வருகின்ற நகைச்சுவை பகுதிகளை ரசித்துச் சிரித்து, முழுமையான வாசிப்பின்பம்
பெற முடியும்!
(கி.ரா அவர்களின் 95 ஆம் பிறந்த நாளின் போது, வெளியிடப்பட்ட கட்டுரை தொகுப்பு நூலில் இடம் பெற்றுள்ள என் கட்டுரை)
வாசிக்கின்ற போது சுவாரசியமாக இருக்கின்றது. மிக்க நன்றி
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
Deleteமிகவும் ரசிக்க வைக்கிறது...
ReplyDeleteவாருங்கள் தனபாலன் சார்! தங்கள் பாராட்டுக்கு மிகவும் நன்றி!
Deleteதொடர்ந்து பகிருங்கள்... நன்றி...
ReplyDeleteதொடர்ந்து பகிரத்தான் நினைத்திருக்கிறேன் சார்! நன்றி.
Deleteவெகு மாதங்களுக்குப் பிறகான தங்கள் பதிவு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. கி.ரா. அவர்களின் படைப்புகளுக்குள் இருக்கும் நகைச்சுவை உணர்வை வெகு அழகாக எடுத்துக்காட்டி ரசிக்கவைத்திருக்கிறீர்கள். கி.ரா. அவர்களின் பிறந்தநாள் கட்டுரைத்தொகுப்பு நூலில் தங்கள் கட்டுரையும் இடம்பெற்றிருப்பதற்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
ReplyDeleteஆம் கீதா. வலைப்பூவுக்கு வந்து ஓராண்டுக்கு மேலாகிவிட்டது, இடைப்பட்ட காலத்தில் எழுதியவற்றைச் சேமித்து வைப்பது என் முக்கிய நோக்கம். பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி கீதா!
Deleteஎன்னையும் சிரிக்க வைத்துவிட்டீர்கள் நன்றி!
ReplyDeleteதங்கள் வருகைக்கும் ரசித்தமைக்கும் மிக்க நன்றி!
ReplyDelete